`ஆளும்கட்சியே அதைச் செய்துவிட்டால்…’; உற்சாகத்தில் எடப்பாடி – விவசாயக் கடன் தள்ளுபடி பின்னணி

எதிர்பார்த்த ரியாக்‌ஷன் கிடைக்க ஆரம்பித்திருப்பதால், எடப்பாடி ஏக குஷியில் இருக்கிறார். வரும் சட்டமன்றத் தேர்தலில் எல்லாரும் சொல்வதுபோல எளிதாக தி.மு.க வெற்றி பெற்று விடாது என்று உறுதியாக நம்புகிறார்.

தமிழக முதல்வராக நான்கு ஆண்டுகளை வெற்றிகரமாக கடத்திச்சென்று, வரும் சட்டமன்றத் தேர்தலிலும் முதல்வர் வேட்பாளராகக் களத்தில் நிற்கிறார் எடப்பாடி பழனிசாமி. சசிகலா விடுதலைக்குப் பிறகு எடப்பாடிக்கு சிக்கல் வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சசிகலா தரப்புடன் ஒருபோதும் இணக்கமாகப் போக மாட்டோம் என்று டெல்லியில்வைத்து சொன்னவர், சொன்னதுபோலவே சசிகலாவுக்கு செக் வைக்கும் வேலையில் தீவிரமாக ஈடுபட்டுவருகிறார்.

மற்றொருபுறம், வரும் சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என்று கருத்து கணிப்புகள் வெளியானது எடப்பாடியை பெரிதும் யோசிக்கவைத்துவிட்டது. கடந்த நான்கு ஆண்டுகளாக, தான் செய்த திட்டங்கள் எதுவும் மக்களிடம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்பதை அறிந்துகொண்டார். அதன் பிறகே சில நாள்களுக்கு முன்பாக தனக்கு நெருக்கமான அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளிடம் எடப்பாடி ஆலோசனை நடத்தியிருக்கிறார். அந்த ஆலோசனையில் சொல்லப்பட்ட விஷயம், கிராமப்புறங்களை நாம் சரி செய்தாலே வெற்றியை எளிதாகப் பெற்றுவிடலாம் என்று பலரும் சொல்லியிருக்கிறார்கள்.

தன்னை ஒரு விவசாயி என்று மேடைக்கு மேடை முழங்கிவரும் எடப்பாடி பழனிசாமி, அதையே தனக்குச் சாதகமான அஸ்திரமாக மாற்றத் திட்டமிட்டார். உடனடியாக அப்போது தலைமைச் செயலாளராக இருந்த சண்முகத்திடம் தனிப்பட்ட முறையில் நீண்டநேரம் ஆலோசனை நடத்தினார். அந்த ஆலோசனைக்குப் பிறகுதான் தி.மு.க அறிவித்த திட்டத்தைவைத்தே தி.மு.க-வுக்கு செக் வைக்க முடிவானது. அதன்படி தமிழக கூட்டுறவு வங்கிகளிலுள்ள விவசாயக் கடன்களை முற்றிலும் தள்ளுபடி செய்யலாம் என்கிற முடிவுக்கு வந்தனர்.

தி.மு.க., தான் ஆட்சிக்கு வந்தால் விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்வதாக அறிவித்திருக்கிறது. ஆனால், ஆளும்கட்சியே அதைச் செய்துவிட்டால் எதிர்கட்சிக்கு வேலையிருக்காது என்று இன்று சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ், 12ஆயிரம் கோடி மதிப்பிலான விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்து அறிவிப்பு வெளியிட்டிருக்கிறார் எடப்பாடி. அதோடு, “நாங்கள் சொல்வதையெல்லாம் செய்துவருகிறோம். தி.முக சொல்ல மட்டுமே செய்யும், எதையும் செய்யாது” என்று தி.மு.க-வையும் சாடியிருக்கிறார்.

இந்த அறிவிப்பு வெளியானதுமே, விவசாய சங்கங்கள் பலவும் முதல்வருக்கு நன்றி தெரிவித்து பேட்டி கொடுத்த தகவலும் முதல்வரின் காதுக்கு சென்றிருக்கிறது. `நான் எதிர்பார்த்த ரியாக்‌ஷன் நடந்துவிட்டது’ என்று சிரித்துக்கொண்டே சொல்லியிருக்கிறார் முதல்வர். முதல்வரின் இந்த அறிவிப்பு தி.மு.க தரப்பை அப்செட் செய்துவிட்டது என்கிறா்கள்.

%d bloggers like this: