அரசு வேலையும் உயர் பதவியும் வேண்டுமா? ரத சப்தமியில் மறக்காமல் இதை செய்யுங்கள்

அரசு வேலை வேண்டும் என்று பலரும் ஆசைப்படுவார்கள். எல்லோருக்கும் அரசு வேலையும் உயர்பதவியும் கிடைத்து விடாது. சூரியபகவானின் அருள் இருந்தால் அரசு வேலையும், அரசியல்வாதிகளுக்கு

செல்வாக்கும் பதவிகளும் தேடி வரும். சூரிய ஜெயந்தி எனப்படும் ரத சப்தமி கொண்டாடப்படும் இந்த நாளில் விரதம் இருந்து சூரியனை வணங்க அரசு வேலை கிடைக்கும்.

ரதசப்தமி நாளில் தான் சூரிய தேவன் பிறந்ததாகக் புராண கதைகள் கூறுகின்றன. இந்த நாளில் சூரியனுக்கு விசேஷமான ஒளிபிறப்பதாலும், இன்றைய தினத்தில் விரதம் கடைப்பிடித்து சூரிய பகவானை வழிபடுபவர், தங்களுடைய பாவங்களில் இருந்து விடுபடும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும்.

நம் நாட்டில் நம்மை வாழவைத்து கொண்டிருக்கும் அனைத்து தெய்வங்களுக்கும் ஜெயந்தி தினம் கொண்டாடி மகிழ்கின்றோம்.

நாராயணனின் அம்சம் சூரியன்

ஆயுள், ஆரோக்யம் தரும் விரதங்கள் ஆண்டில் பல வந்தாலும் அனைத்திலும் சிறந்ததாக சொல்லப்படுவது ரதசப்தமி விரதமே. நம் பாவங்கள் விலகி பகலவனைக் கண்டு பனி மறைவது போல மறைந்து போகும். புண்ணிய பலன்கள் பெருகும் என்பது ஐதிகம்.
நாராயணனின் அம்சமே சூரியன் என்பதால் ரதசப்தமி நாளில் பெருமாள் ஆலயங்களில் சூரிய பிரபையில் எம்பிரான் எழுந்தருள்வார். ரத சப்தமி விரதம் இருப்பது நீடித்த ஆயுளும், குறையாத ஆரோக்யமும் அளிக்கும் என்பது நம்பிக்கை. இவ்விரதம் இருப்பது சுமங்கலித்துவம் நிலைக்கச் செய்யும் எனவும் சிலர் கூறுவர்.

சூரிய ஜெயந்தி புராண கதை

காஷ்யப மகரிஷியின் மனைவி அதிதி கர்ப்பமாக இருந்த நேரத்தில் கணவருக்கு உணவு பரிமாறிக்கொண்டிருந்தாள். அந்த நேரத்தில் ஒரு அந்தணர் வந்து உணவு கேட்டார். கணவருக்கு பரிமாறியபின்னர் மெதுவாக நடந்து அந்தணருக்கு உணவு எடுத்து வந்தாள் அதிதி. இதனால் கோபம் கொண்ட அந்தணர், தர்மத்தை புறக்கணித்துவிட்டு கர்ப்பத்தை பாதுகாப்பதற்காக மெதுவாக நடந்து வந்த அந்த கர்ப்பம் கலைந்து போகட்டும் என்று சாபமிட்டார்.

அந்தணரின் சாபம் கேட்டு அதிர்ச்சியடைந்த அதிதி தன் கணவரிடம் நடந்தவற்றை விளக்கினாள். இதைக்கேட்ட காஷ்யப முனிவர், கவலைப்படாதே! அமிர்தம் நிறைந்த உலகில் இருந்து என்றைக்கும் அழிவில்லாத மகன் நமக்கு கிடைப்பான் என்று வாக்களித்தார். அதன்படி ஒளி பொருந்திய புத்திரன் ஒருவர் அவர்களுக்கு கிடைத்தார். அவரே உலகைக் காக்கும் சூரியன்.

புனித நீராடல்

சூரியன் பிறந்த நாள் திதிகளில் ஏழாவது நாளான சப்தமி திதி ஆகும். அந்த நாளிலேயே சப்தமி விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது.
இந்த இனிய நாளில் சூரிய உதயத்தில் எழுந்து புண்ணிய தீர்த்தங்களில் நீராடுவது சிறப்பு சேர்ப்பதாகும். புனித நதிகளுக்கு சென்று நீராட முடியாதவர்கள் இயலாதவர்கள் வீட்டில் சூரிய ஒளிபடும் இடத்தில் நின்றபடி நீராட வேண்டும். ஏழு எருக்கம் இலைகள், மஞ்சள் பொடி கலந்த அட்சதையுடன் பெண்கள், ஆண்கள், குழந்தைகள் உள்பட அனைவரும் தங்கள் தலைக்கு மேலே வைத்துக்கொண்டு நீராடுவது நல்லது.

சூரியனை வணங்குவோம்

இத்தனை சிறப்புகள் வாய்ந்த ரத சப்தமி நாளான பிப்ரவரி 19ஆம் தேதியன்று அதிகாலையில் எழுந்து எருக்கன் இலைகளை தலையில் வைத்து நீராடி சூரியனை வணங்குவோம். பார்வைக்குத் தெரியும் பகவானை, பகலவனை ரதசப்தமி தினத்தில் வழிபடும்போது சூரியனை நோக்கி, “ஓம் நமோ ஆதித்யாய.. ஆயுள், ஆரோக்யம், புத்திர் பலம் தேஹிமே சதா!” என்று சொல்லி வணங்கலாம்.

சூரிய காயத்ரி மந்திரம்

ஓம் பாஸ்கராய வித்மஹே
திவாகராய தீமஹி
தன்னோ சூர்யஹ் ப்ரசோதயாத்

சூரிய பகவான் மந்திரம்

காசினி இருளை நீக்கும் கதிரொளியாகி எங்கும்
பூசனை உலகோர் போற்றப் புசிப்பொடு சுகத்தை நல்கும்
வாசி ஏழுடைய தேர்மேல் மகாகிரி வலமாய் வந்த
தேசிகா எனைரட்சிப்பாய் சேங்கதிரவனே போற்றி

அறிவு, ஆற்றல், ஆரோக்யம், ஆயுள் என யாவற்றிலும் சிறந்து விளங்கும் அனுமனுக்கு அந்த ஆற்றலை குருவாக இருந்து அளித்தவர் சூரியன். சூரியனை பொங்கலன்றும், ரத சப்தமி நாளிலும் மட்டும் வழிபடாமல் தினமுமே வணங்கலாம். ஆதவனை வழிபடுவோர் வாழ்வில் தீவினை இருள் விலகி நன்மை ஒளி பரவும் என்பது நிச்சயம்! அரசு வேலை வேண்டும் அரசில் உயர் பதவி வேண்டும். சிறந்த அரசியல்வாதிகளாக வேண்டும் என்று நினைப்பவர்கள் நாளை ரத சப்தமி நாளில் விரதம் தொடங்கலாம். ஞாயிறுக்கிழமைகளில் அதிகாலையில் குளித்த பின்னர் இந்த மந்திரங்களை உச்சரித்து சூரியனை வணங்க நல்ல பலன்கள் கிடைக்கும்

%d bloggers like this: