கமல் இனி வாய்ப்பில்லை… தி.மு.க கூட்டணியில் எந்தக் கட்சிக்கு எவ்வளவு இடம்?

அ.தி.மு.க கூட்டணியில் எந்தக் கட்சிக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்கப்படவிருக்கின்றன என்பது குறித்து கடந்த கட்டுரையில் பார்த்தோம். இப்போது, தி.மு.க கூட்டணியில் அங்கம்வகித்திருக்கும் கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகளை ஒதுக்க தி.மு.க தலைமை முடிவு செய்திருக்கிறது என்பது குறித்து இந்தக்

கட்டுரையில் காண்போம்.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மாபெரும் வெற்றியைப் பதிவு செய்தது தி.மு.க தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி. தற்போது, அந்தக் கூட்டணியில், தி.மு.க., காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், ம.தி.மு.க., கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், இந்திய ஜனநாயகக் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி ஆகிய கட்சிகள் இடம்பெற்றிருக்கின்றன.

இவற்றில், தமிழக வாழ்வுரிமைக் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி தவிர, மற்ற கட்சிகள் அனைத்தும் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டன. அவற்றில், தி.மு.க 20 இடங்களிலும், காங்கிரஸ் கட்சி 10 இடங்களிலும், இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலா இரண்டு இடங்களிலும் போட்டியிட்டன. தவிர, ம.தி.மு.க., இந்திய ஜனநாயகக் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தலா ஒரு இடத்திலும் போட்டியிட்டன. அதில், காங்கிரஸ் கட்சியின் சார்பில் தேனியில் போட்டியிட்ட ஈ.வி.கே.எஸ் இளங்கோவனைத் தவிர மற்ற அனைவரும் வெற்றி பெற்றனர்.

தேர்தலைத் தொடர்ந்து தற்போது வரையிலும் இந்தக் கூட்டணி சுமுகமாகவே செல்கிறது. கூட்டணிக் கட்சிகள் ஒருங்கிணைந்து பல போராட்டங்களையும் முன்னெடுத்தன. உள்ளாட்சித் தேர்தலின்போது, தி.மு.க-வுக்கும் காங்கிரஸுக்கும் சில உரசல்கள் ஏற்பட்டு, சோனியா காந்தி தலைமையிலான அனைத்துக் கட்சிக் கூட்டத்தை தி.மு.க புறக்கணித்தது.

ஆனால், உடனடியாக, தி.மு.க தலைவர் ஸ்டாலினை தமிழக காங்கிரஸ் தலைவர்கள் சந்தித்து அதைச் சரிசெய்தனர். கடந்த சில நாள்களுக்கு முன்பாக பாண்டிச்சேரியில் காங்கிரஸ் கட்சிக்கும் தி.மு.க-வுக்கும் இடையே சில விரிசல்கள் ஏற்பட்டாலும், அதனால் தமிழகக் கூட்டணிக்கு எந்த பாதிப்பும் இல்லை என விளக்கம் தரப்பட்டது. மக்கள் நீதி மய்யத்துடன் காங்கிரஸ் கூட்டணி அமைப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக அவ்வப்போது செய்திகள் வெளியாகின. ஆனால், எங்கள் கூட்டணிக்குத்தான் அழைத்தோம். தி.மு.க கூட்டணியில்தான் தொடர்கிறோம் என காங்கிரஸ் கட்சியினர் விளக்கமளித்தனர். அடுத்ததாக, இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகள் தேர்தலில் தொடங்கி தற்போதுவரை தி.மு.க-வுடன் மிக இணக்கமாகவே இருக்கின்றனர்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மதுரையில் நடைபெற்ற மாநாட்டில் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் அனைவரும் கலந்துகொண்டனர். தி.மு.க தலைவர் ஸ்டாலின் சிறப்புரையாற்றினார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் ஆரம்பம் முதலே தி.மு.க-வுடன் இணக்கமான போக்கையே கடைப்பிடித்துவருகிறது. தவிர, பா.ஜ.க., பா.ம.க இருக்கும் கூட்டணியில் ஒருபோதும் நாங்கள் அங்கம்வகிக்க மாட்டோம் எனப் பலமுறை வெளிப்படையாக அறிவித்திருக்கிறார், அந்தக் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன்.

ஒருவேளை, பா.ம.க., தி.மு.க கூட்டணிக்குள் வரும்பட்சத்தில், திருமா கூட்டணி மாறுவதற்கான வாய்ப்பிருப்பதாகப் பார்க்கப்பட்டது. ஆனால், அதற்கான வாய்ப்பு இனி இல்லை என்பதே அரசியல் விமர்சகர்களின் கருத்தாக இருக்கிறது. ம.தி.மு.க-வைப் பொறுத்தவரை, அந்தக் கட்சிக்கு சட்டமன்றத் தேர்தல் காலம் என்றாலே மிகவும் நெருக்கடியான காலகட்டம்தான்.

தி.மு.க-விலிருந்து வெளியேறி மிகுந்த நம்பிக்கையோடு, இரண்டு திராவிடக் கட்சிகளுக்கு மாற்று நாம்தான் என வைகோ நம்பியிருந்த வேளையில், காங்கிரஸிலிருந்து பிரிந்து தனிக்கட்சி தொடங்கினார் மூப்பனார். தி.மு.க – த.மா.கா கூட்டணி அந்தத் தேர்தலில் மாபெரும் வெற்றியைப் பெற்றது. ரஜினி தி.மு.க – த.மா.கா கூட்டணிக்கு ஆதரவு தெரிவிக்க, அது கூடுதல் பலமாக அமைந்தது. அதற்கடுத்து, 2001 தேர்தலிலும் அதுவரை, தி.மு.க உள்ளிட்ட தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம்வகித்த ம.தி.மு.க., கடைசி நேரத்தில் கூட்டணிப் பங்கீட்டில், எதிர்பார்த்த மூன்று தொகுதிகளை ஒதுக்காததால் வெளியேறியது.

211 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட்ட அந்தக் கட்சி ஒரு இடங்களில்கூட வெற்றி பெறவில்லை. தொடர்ந்து, 2006 தேர்தலில், அ.தி.மு.க கூட்டணியில், 35 தொகுதிகளில் போட்டியிட்டு ஆறு தொகுதிகளில் வெற்றிபெற்றது. ம.தி.மு.க-வினர் சட்டமன்ற உறுப்பினர்களாக பதவிவகித்த காலகட்டம் அதுமட்டும்தான். தொடர்ந்து 2011 தேர்தல் புறக்கணிப்பு, 2016 தேர்தலில் மக்கள் நலக் கூட்டணியில் 29 இடங்களில் போட்டியிட்டு ஓர் இடத்தில்கூட வெற்றிபெற முடியவில்லை என சட்டமன்றத் தேர்தல்களில் இதுவரை பல இறக்கங்களையே அந்தக் கட்சி சந்தித்திருக்கிறது.

`தேர்தலில் நமக்குக் குறைவான தொகுதிகள் ஒதுக்கப்படுவதற்கு வாய்ப்பிருக்கிறது. எதற்கும் தயாராக இருங்கள், ம.தி.மு.க-வுக்கும் ஒரு காலம் வரும்’ என உருக்கமாகப் பேசிவருகிறார் வைகோ. அதனால், இந்தத் தேர்தலில், தி.மு.க கூட்டணியில்தான் ம.தி.மு.க தேர்தலைச் சந்திக்கும் என்பது முடிவாகியிருக்கிறது. மேற்கண்ட கட்சிகளைத் தவிர, பண்ருட்டி வேல்முருகனின் தமிழக வாழ்வுரிமைக் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, பொன்.குமாரின் தமிழக விவசாயிகள் தொழிலாளர்கள் கட்சி ஆகிய கட்சிகளுக்கும் சீட் ஒதுக்க முடிவு முடிவு செய்யப்பட்டிருக்கிறது. அதேபோல, தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயகக் கட்சியும் இந்தமுறை தி.மு.க கூட்டணியில் இணைய வாய்ப்பிருப்பதாகச் சொல்லப்படுகிறது. இனி எந்தக் கட்சிக்கு எத்தனை இடம் என்பதைப் பார்ப்போம்.

ஸ்டாலின், கே.எஸ்.அழகிரி
கடந்த 2011 தேர்தலில் 63 இடங்கள் ஒதுக்கப்பட்டு 5 இடங்களில் மட்டுமே வெற்றிபெற்றது காங்கிரஸ் கட்சி. ஆனால், அந்தத் தேர்தலில் தி.மு.க-வும் 22 இடங்களில் மட்டுமே வெற்றிபெற்றது. அதனால், பெரிதாகக் கண்டுகொள்ளப்படவில்லை. ஆனால், 2016 தேர்தலில் 41 இடங்கள் ஒதுக்கப்பட்டு வெறும் எட்டு இடங்களில் மட்டுமே வெற்றிபெற்றது காங்கிரஸ் கட்சி. 89 இடங்களைப் பெற்றிருந்த தி.மு.க., காங்கிரஸ் கட்சிக்கு அதிகமான தொகுதிகளை ஒதுக்கியதும் தி.மு.க ஆட்சியைப் பிடிக்க முடியாமல் போக ஒரு காரணமாக அப்போது பார்க்கப்பட்டது. இந்தநிலையில் வரும் தேர்தலில் தி.மு.க கூட்டணியில் எந்தக் கட்சிக்கு எத்தனை இடங்கள் ஒதுக்கப்படவிருக்கின்றன. தி.மு.க வட்டாரத்தில் பேசினோம்,

`

“காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள் ஒதுக்க முடிவெடுக்கப்பட்டிருக்கிறது. ம.தி.மு.க., விடுதலைச் சிறுத்தைகள் தலா ஆறு இடங்களும், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா ஏழு இடங்களும் ஒதுக்கப்பட உள்ளன. உதிரிக் கட்சிகள் சேருவதைப் பொறுத்து இதில் சில எண்ணிக்கைகள் கூடலாம்.

அடுத்ததாக, மனிதநேய மக்கள் கட்சி, கொங்கு மக்கள் தேசிய கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் கட்சிகளுக்கு தலா இரண்டு இடங்களும், பச்சமுத்துவின் இந்திய ஜனநாயகக் கட்சி, பண்ருட்டி வேல்முருகனின் தமிழக வாழ்வுரிமைக் கட்சி ஆகிய கட்சிகளுக்கு தலா ஓர் இடமும் ஒதுக்க முடிவு செய்யப்பட்டிருக்கிறது. தவிர, பொன்.குமாருக்கு ஒரு தொகுதியும், தமிமுன் அன்சாரியுடன் கூட்டணி முடிவாகும் பட்சத்தில் அவருக்கு ஒரு தொகுதியும் ஒதுக்க முடிவு செய்யப்பட்டிருக்கிறது. மேலும், மூன்று தொகுதிகள் உதிரிக் கட்சிகளுக்கு ஒதுக்கியதுபோக, மீதமுள்ள 170 தொகுதிகளில் தி.மு.க போட்டியிடும்.

கொங்கு மக்கள் தேசியக் கட்சி, பச்சமுத்துவின் இந்திய ஜனநாயகக் கட்சி, பண்ருட்டி வேல்முருகனின் தமிழக வாழ்வுரிமைக் கட்சி ஆகிய கட்சிகளை உதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிடவைக்க பேச்சுவார்த்தை நடைபெறவிருக்கிறது. உதயசூரியன் சின்னத்தில் 170-180 பேர் நிச்சயம் போட்டியிடுவார்கள். கமலுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால், சுமுகமான முடிவு எட்டப்படவில்லை. அதனால் இனி அவர் எங்கள் கூட்டணிக்கு வருவதற்கு வாய்ப்பில்லை” என்கிறார்கள்.

%d bloggers like this: