டென்மார்க் உலகின் மகிழ்ச்சியான நாடுதானா… உண்மை நிலவரம் என்ன?!

ஐக்கிய நாடுகள் சபை ஒவ்வொரு ஆண்டும் ‘ஹேப்பினஸ் ரிப்போர்ட்’ என்கிற பெயரில் உலகின் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலை வெளியிட்டுவருகிறது. 2012-ம் ஆண்டு முதல் அறிவிக்கப்பட்டுவரும் இந்த ஹேப்பினஸ் ரிப்போர்ட்டில் எப்போதும் டென்மார்க், ஃபின்லாந்து, ஐஸ்லாந்து மற்றும் ஸ்வீடன் போன்ற நார்டிக் நாடுகள்தான் தொடர்ந்து முதல் வரிசைக்குப் போட்டி போடுகின்றன. 150-க்கும் மேற்பட்ட நாடுகள் பட்டியலிடப்படும் இந்த லிஸ்ட்டில் இந்தியாவின் மகிழ்ச்சி என்பது எப்போதும் சென்சுரியைத்தாண்டித்தான் இருக்கிறது!

டென்மார்க், ஃபின்லாந்து, நார்வே ஆகிய நாடுகள் எப்படி தொடர்ந்து முதலிடம் பிடிக்கின்றன… இங்கு மட்டும் எப்படி மக்கள் மகிழ்ச்சியாகவே இருக்கிறார்கள்?!

உலக மகிழ்ச்சி அறிக்கை (The World Happiness Report) என்பது ஐக்கிய நாடுகள் சபையின் உலகளாவிய மகிழ்ச்சி நிலையின் ஒரு முக்கிய கணக்கெடுப்பு. இதுவரை ஏழு ரிப்போர்ட்கள் வெளியாகி இருக்கின்றன. 2012, 2013 மற்றும் 2016-ம் ஆண்டுகளில் டென்மார்க்கும், 2015-ல் சுவிட்சர்லாந்தும், 2017-ல் நார்வேயும், இப்போது 2018, 2019 மற்றும் 2020-ம் ஆண்டுகளில் தொடர்ச்சியாக ஃபின்லாந்தும் முதல் இடத்தை பிடித்துவருகின்றன.

நம்மைப் பொறுத்தவரையில் சந்தோஷம் என்றால் என்ன? மகிழ்ச்சியின் அளவுகோல் ஒவ்வொருவரின் மனநிலைக்கும் ஏற்ப வேறுபடும் என்றாலும் திருப்தி, நிம்மதி, நிறைவு போன்ற உணர்வுகளால் வகைப்படுத்தப்படும் ஒரு உணர்ச்சி நிலையே மகிழ்ச்சி. மகிழ்ச்சிக்கு பலவிதமான வரையறைகள் இருந்தாலும், இது பெரும்பாலும் நேர்மறையான உணர்ச்சிகளையும், வாழ்க்கை திருப்தியையுமே பிரதானமாக உள்ளடக்குகிறது.

இந்த மகிழ்ச்சிக்கான வரையறைகளை எந்தக் குறையும் இன்றி தம் மக்களுக்கு வாரி வழங்கும் நார்டிக் நாடுகளில் ஒன்றான டென்மார்க்கில் என்னவெல்லாம் நடக்கிறது… மக்களின் மகிழ்ச்சியை அவர்கள் எப்படி உறுதிப்படுத்துகிறார்கள்?!

மிக அதிக வரி… ஆனால்?!
உலகிலேயே பணியாளர்களுக்கு அதிகமான ஊதியம் வழங்கக்கூடிய நாடு டென்மார்க். அதேப்போல உலகில் அதிகம் வரிவசூலிக்கக்கூடிய நாடும் டென்மார்க்தான். ஒருவர் தனது வருமானத்தில் கிட்டத்தட்ட பாதியை (45 சதவிகிதம்) வரியாக செலுத்தவேண்டும். இவ்வளவு வரி இருந்தால் வரி ஏய்ப்பு சர்வசாதாரணமாக நடக்கும்தானே…. ஆனால், அது அங்கே நடப்பதில்லை என்பதுதான் டென்மார்க்கின் பலம். இங்கு மக்கள் மகிழ்ச்சியாகவே வரி செலுத்துகிறார்கள். அதற்கும் காரணங்கள் இல்லாமல் இல்லை.

மகிழ்ச்சிமகிழ்ச்சி
டேனிஷ் வருமானவரி ஒரு முற்போக்கான வரி முறையை அடிப்படையாகக் கொண்டது, அதாவது நீங்கள் வருடத்திற்கு ஒரு குறிப்பிட்ட அளவுக்கு அதிகமாக வருமானம் ஈட்டினால் 7 சதவிகிதம் கூடுதல் வரி சேர்க்கப்படும். இது தவிர்த்து பொருட்களுக்கு 25 % மதிப்பு கூட்டப்பட்ட வரியையும், புதிய கார்களுக்கு 150 % வரை வரியையும், வியாபாரத்திற்கு இன்னும் அதிகமாகவும் வரி வசூலிக்கப்படுகிறது.

அதிக வரியால் மக்களுக்கு என்ன பயன்?!

மக்களிடம் வாங்கப்படும் வரிக்கு மாற்றீடாக உயர்தரமான சுகாதார சேவைகள் டென்மார்க்கில் இலவசமாக வழங்கப்படுகின்றன. ஐந்து நட்சத்திர ஹோட்டல்கள் போல் இருக்கும் மருத்துவமனைகளில் உயர்தர சிகிச்சை, சிறந்த மருத்துவக்குழுவினரைக் கொண்டு அளிக்கப்படுகிறது. அத்தியாவசியமற்ற அறுவை சிகிச்சைகள் (Cosmetic surgery), பல் பராமரிப்பு (18 வயது வரை இது இலவசம்) போன்ற சில நடைமுறைகளுக்கு மட்டுமே பணம் செலுத்த வேண்டும். மற்றபடி மருத்துவம் என்பது அனைவருக்கும் சமமான தரத்துடன் இலவசமாக வழங்கப்படுகிறது.
டென்மார்க்கில் அரச மருத்துவர்கள் எக்காரணம் கொண்டும் தனியார் சேவை (Private practice) செய்யக் கூடாது. அதேப்போல தனியார் மருத்துவர்கள் ஒரு மாதத்தில் அவர்களுக்கு வழங்கப்பட்ட அளவுமுறை முடிந்து விட்டால் அதற்கு மேல் அந்த மாதம் புதிய நோயாளிகளைப் பார்த்து சிகிச்சை அளிக்கக்கூடாது. மருத்துவத் துறையைச்சேர்ந்தவர்கள், விஞ்ஞானிகளுக்கு மிகச்சிறந்த ஊதியத்தை வழங்கி அவர்களுக்கு ஊக்கம் அளிக்கிறது டென்மார்க் அரசு!

பள்ளிக்கல்வி மட்டுமே இலவசமல்ல!

பள்ளிக் கல்வி மட்டுமல்ல பல்கலைக்கழக அளவில்கூட பல பட்டப்படிப்புகளுக்கு கல்விக் கட்டணம் இல்லை. டேனிஷ் மாணவர்களுக்கு மட்டுமல்லாது EU/EEA மற்றும் சுவிட்சர்லாந்து நாட்டு மாணவர்களையும் பெருந்தன்மையுடன் இத்திட்டத்தில் இணைத்திருக்கிறது டென்மார்க். இதுத்தவிர ஒவ்வொரு டேனிஷ் குழந்தையும் 18 வயது வரை மாதத்திற்கு சுமார் 900 டாலர்கள் (இந்திய மதிப்பில் 65,000 ரூபாய்) அம்மாநில அரசுகளிடம் இருந்து கல்வி நிதியாகப் பெறுகிறார்கள். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் பள்ளிக் கட்டணத்துக்காக லோன் வாங்கும் அவலம் டென்மார்க்கில் இல்லை. திறமைகளையும், கனவுகளையும் நிர்ணயிப்பது குழந்தைகளின் தனிப்பட்ட முயற்சியே அன்றி பெற்றோரின் பணப்பையின் கனம் அல்ல.

டென்மார்க்கில் ஆங்கில மொழி சர்வதேச பள்ளிகளும், பிரெஞ்சு மற்றும் ஜெர்மன் மொழி பள்ளிகளும் கட்டண அடிப்படையில் செயல்படுகின்றன. அனைத்து பள்ளிகளும் ஆரம்பக் கல்விக்கான தேசிய அரசாங்கத்தின் அடிப்படைத் தேவைகளைப் பின்பற்ற வேண்டும். பள்ளிக்கல்விக்குப் பிறகு பெரும்பாலான மாணவர்கள் பட்டப்படிப்பை இங்கேயே தொடர்கிறார்கள்.

உலகிலேயே தகுதிவாய்ந்த ஆசிரியர்களைக் கொண்ட நாடுகளுள் ஒன்று டென்மார்க். அதேப்போல் ஆசிரியப்பணிக்கு அதிக ஊதியம் வழங்கும் நாடுகளுள் முதன்மையானது டென்மார்க். தேர்ந்தெடுத்த சிற்பியால் வடிக்கப்படும் அபூர்வ சிற்பங்களாக இங்கே மாணவர்கள் செதுக்கப்படுகின்றனர்.

டேனிஷ் குழந்தைகள் 9 மாதத்திலிருந்தே Day Care-ல் கல்வியை ஆரம்பிக்கிறார்கள். டென்மார்க் பாடத்திட்டத்தில் பரிட்சைகளே இல்லை. கல்வியைவிட, மனித விழுமியங்கள், சமூகப் பொறுப்பு, தனி மனித ஒழுக்கம், சட்டத்தையும் ஒழுங்கையும் பின்பற்றுவது, சக மனிதனை புரிந்து மரியாதையோடு நடத்துவது என நடைமுறை வாழ்க்கைக்கு தேவையானவற்றுக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். மிகச்சிறு வயதிலிருந்தே குழந்தைகளுக்குள் தலைமைத்துவ பண்புகள் புகுத்தப்படுகின்றன.

அறிவியலோ, தொழில்நுட்பமோ, எதுவானாலும் ஏட்டுக்கல்வியாக இல்லாமல் நடைமுறை உதாரணங்களுடன் விளக்கப்படுகின்றன. வகுப்பு தரவரிசை (Grading and Ranking) மற்றும் முறையான பரிட்சைகள் இங்கே இல்லை. அதற்கு பதிலாக, மாணவர்கள் குழுக்களாக வேலை செய்கிறார்கள். ஒரு சவாலான விஷயத்தை எப்படி திறம்பட செய்து முடிப்பது என்று கற்பிக்கப்படுகிறார்கள். மனப்பாடம் பண்ணும் கல்வி முறை அறவே இல்லை.

நம்பிக்கையும் பாதுகாப்பும்!

நம் ஊரில் ஒரு கடைக்குள் நுழையும்போதே ஆயிரம் கேமராக்கள் கண்கொத்தி பாம்பாக நம்மையே மொய்க்கும். பிளாஸ்டிக் பைகளில் கை கால்களை கட்டி, நம்மையும் சுற்றிவைத்து உள்ளே அனுப்பாதது மட்டும்தான் பாக்கி. கையிலுள்ள எல்லாவற்றையுமே காவலாளியிடம் ஒப்படைத்து விட்டு நிராயுத பாணியாகத்தான் உள்ளே அனுமதிக்கப்படுகின்றோம். நம்பிக்கை என்றால் கிலோ என்னவென்று கேட்போம்.

டென்மார்க்டென்மார்க்
ஆனால், நம்பிக்கை எனும் அச்சாணியில் ஓடும் தேர் டென்மார்க். இவர்களைப்போல சக மனிதனை நம்பும் ஒரு சமூகம் உலகில் வேறு எங்கும் பார்க்கமுடியாது. ரயிலில் தவறவிட்ட பணமும் பையும் அப்படியே உரியவரிடம் சென்று சேர்க்கப்படுகின்றது. பொது இடங்களில் மறந்து விட்டுச்சென்ற தொலைபேசிகள் உரிமையாளர் வந்து எடுக்கும் வரை வாரக்கணக்காக அதே இடத்தில் கிடக்கும். எந்த CCTV கேமராவின் கண்காணிப்பும் இல்லாமல், பெரிய பெரிய சூப்பர் மார்கெட்டுகளில்கூட நம்பிக்கை மட்டுமே முதலீடாக்கப்படுகிறது. யாருமே கண்காணிக்காதபோதும் தாம் எடுத்த பொருட்களுக்கு சரியானப் பணத்தை செலுத்தி எடுத்துச் செல்கிறார்கள். பொது வெளிகளில் சிறு சிறு புத்தக அலுமாரிகளில் அடுக்கப்பட்டிருக்கும் புத்தகங்களை எடுத்துச்சென்று படித்துவிட்டு மீண்டும் அதேஇடத்தில் வைத்துவிட்டுப் போகிறார்கள். வணிகத்திலும் அரசு ஊழியர்களிடையேயும்கூட ஊழல் மிகவும் அரிதாகவே காணப்படுகிறது.

உலக நாடுகளுடன் ஒப்பிடும்போது டென்மார்க்கில் குழந்தைகளுக்கு அதிகப்படியான பாதுகாப்பு கிடைக்கிறது. 8 அல்லது 9 வயதிற்குட்பட்ட குழந்தைகள் பொதுப்போக்குவரத்தில் தனியாகப் பயணிப்பது இங்கு மிகவும் பொதுவானது. நள்ளிரவிலும் கும்மிருட்டிலும் பெண்கள் தனியே வீதிகளில் நடந்து செல்கிறார்கள். டென்மார்க்கின் தலைநகரான கோபன்ஹேகன் போன்ற பிரதான நகரங்கள் தவிர்த்து ஏனைய சிறு ஊர்களில் போலீஸ் ஸ்டேஷன்களை மாலை 4 மணிக்கே இழுத்து மூடிவிட்டு போலீஸார் வீட்டுக்குப் போய் விடுகிறார்கள். உடைக்கப்படாத நம்பிக்கையும், உட்சபட்ச பாதுகாப்பும் டென்மார்க் மக்களை நிம்மதியாக உறங்கச்செய்கிறது.

வரையறுக்கப்பட்ட வேலை நேரம்!

மிகக்குறைந்த சம்பளத்திற்காக ஒரு மனிதனை கசக்கிப் பிழியும் பணிச்சூழல் டென்மார்க்கில் இல்லை. இங்கு ஒரு முழுநேர வேலை வாரம் பொதுவாக ஐந்து நாட்களில் 37 மணிநேரம் மட்டுமே. நீண்ட நேரம் வேலை செய்வது பணி உயர்விற்கு ஒரு அடிப்படை தேவையாக கருதப்படும் நாடுகளுக்கு மத்தியில், ஒதுக்கப்பட்ட நேரத்திற்குள் ஒரு பணியை செய்ய முடியாதது இங்கே பலவீனமாக அர்த்தம் கொள்ளப்படுகிறது. பெரும்பாலான நிறுவனங்களில் ஊழியர்கள் மாலை 4 மணிக்கே வேலையை விட்டு வெளியேறுகிறார்கள். வெள்ளிக்கிழமைகளில் இன்னும் முன்னதாகவே வேலைகள் முடிக்கப்பட்டு மாலை நேரம் உறவுகளுக்காக ஒதுக்கப்படுகிறது. சனி, ஞாயிறுகளில் முழு விடுமுறை. பெரும்பாலான சூப்பர் மார்கெட்டுகள் கூட ஞாயிறு அன்று மூடப்படுகின்றன. முழுநேர ஊழியர்களுக்கு அவர்களின் நிலை, பணித் துறையைப் பொருட்படுத்தாமல் ஐந்து வார விடுமுறை உத்தரவாதம் அளிக்கப்படுகிறது. Work-life balance இவர்களின் மகிழ்ச்சிக்கு ஒரு முக்கிய காரணம். குடும்பம் என்ற கட்டமைப்பு பேணப்பட்டு, குடும்பத்திற்காக மக்கள் அதிக நேரத்தை செலவு செய்வதால் மகிழ்ச்சி தானாகவே வந்து ஒட்டிக்கொள்கிறது.

குறைந்தபட்ச ஊதிய உத்தரவாதம் உள்ளதால் சாதாரண வேலை (Blue-collar workers) செய்பவர்கள் கூட தமது அடிப்படை வசதிகளைப் பூர்த்தி செய்யக்கூடிய அளவுக்கு சம்பாதிக்கமுடிகிறது. ஓய்வு பெற்ற பிறகு ஒவ்வொரு டேனிஷ் குடிமகனுக்கும் அரசால் உத்தரவாத ஓய்வூதியம் அளிக்கப்படுகிறது. எனவே முதுமையின் சுமை இவர்களை அழுத்துவதே இல்லை.

நிலையான, ஊழல் அற்ற அரசாங்கம்!

2020-ம் ஆண்டிற்கான Corruption Perception Index-ன் படி டென்மார்க் 88 புள்ளிகளை பெற்று முதலிடத்தில் உள்ளது. நன்கு படித்த, தகுதியான அரசியல் தலைவர்கள், நிலையான பொருளாதாரம், அனைவருக்கும் சமமான வாய்ப்பு, ஆண் பெண் பாலியல் வர்க்க பேதமில்லாத சம உரிமை, பேச்சு கருத்து சுதந்திரம் இங்கே மக்களின் மகிழ்ச்சிக்கான அடிப்படைக் காரணிகள்.

தரமான போக்குவரத்து!

அரச பொது போக்குவரத்து மிகச்சிறந்த வகையில் பரமாரிக்கப்படுவதோடு, கட்டணமும் மிக மலிவாக இருப்பதால் பெரும்பான்மை மக்கள் பொதுப்போக்குவரத்தையே பயன்படுத்துகின்றனர். ரயில், மெட்ரோ, பஸ், ஃபெர்ரி என பல வகைப் போக்குவரத்தும் பயன்பாட்டில் உள்ளது. கார்களுக்கான வரி மிக மிக அதிகம் என்பதால் மக்கள் பொதுப் போக்குவாரத்தையும் சைக்கிளையுமே அதிகளவில் பயன்படுத்துகின்றனர். எல்லா பிரதான வீதிகளிலும் சைக்கிளுக்கென தனிப்பாதை இருக்கும். மிகப்பெரிய நிறுவனங்களின் சிஇஓ-க்கள்கூட இங்கே பொதுபோக்குவரத்தையே பயன்படுத்துகின்றனர். நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என இங்குள்ள மக்கள் மிகுந்த ஆரோக்கியமாக இருப்பதற்கான காரணங்களில் ஒன்று பெரும்பான்மையானவர்கள் சைக்கிளைப் பயன்படுத்துவதே!

மாசு இல்லாத இயற்கை

டென்மார்க் உலகின் மிகத் தூய்மையான நாடு என்பதற்கான சாட்சி அந்த நாட்டில் திரும்பிய திசைகளெங்கும் அழகாகத் தெரிகிறது. பூக்களால் அலங்கரிக்கப்பட்ட வீதிகள், வாகன நெரிசல் குறைந்த சாலைகள், நூற்றுக்கணக்கான காற்றாலைகள் நிறைந்த கிராமப்புறங்கள், உயிர்வாயு மற்றும் சூரிய ஆற்றல் போன்ற பிற மாற்று எரிசக்தி ஆதாரங்களினால் இயங்கும் தொழிற்சாலைகள், கொழுத்து செழித்த பசுக்கள் நிறைந்த பால் பண்ணைகள், சுத்தமான காற்று, விரிந்து பரந்த காடுகள், மரங்கள் நிறைந்த சாலைகள், தெளிந்த நீரோடை என மாசு இல்லாத இயற்கை இந்த மக்களின் மகிழ்ச்சியை நிலைத்து நீடிக்கச் செய்கிறது.

அரசு வசம் இருக்கும் பள்ளிகளும், மருத்துவமனைகளும், பொதுநிறுவனங்களும் எந்தவித செயல்திறனும் இல்லாத தேவையற்ற வெற்று விளம்பரங்கள் என்ற எதிர்மறை பிம்பம் நம் நாடுகளில் உள்ளது. அதனாலேயே தனியாரின் ஆதிக்கம் தலைதூக்கி அத்தியாவசிய தேவைகள்கூட அதிகப் பொருளீட்டும் வியாபாரமாகிவிட்டது. ஆனால் டென்மார்க்கும் பிற நார்டிக் நாடுகளும் இந்த எண்ணத்தை அப்படியே அடித்து நொறுக்கி, ஒரு அரசாங்கத்தால் நடத்தப்படும் அமைப்பால் அதன் மக்களுக்கு சமமான, தரமான, தகுதியான சேவையினை வழங்கமுடியும் என்பதனை நிரூபிக்கிறது.

சரி.. டென்மார்க்கில் வாழும் அனைவரும் மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறார்களா?

நூற்றுக்கு நூறு சதவிகிதம் உலகில் எல்லாமே, எல்லோருக்குமே நிறைவாகவே இருந்து விடுவதில்லை… உலகின் மகிழ்ச்சியான நாடுகளில் வாழும் அனைவரும் உண்மையிலேயே மகிழ்ச்சியாக இருக்கிறார்களா என்றால் இல்லை. இந்த நாடுகளில் உள்ள அனைத்து கட்டமைப்பும் உருவாக்கப்பட்டிருப்பது அந்த நாட்டின் நிரந்தரக் குடிமக்களுக்காக மட்டுமே. நீங்கள் இந்த நாட்டின் குடியுரிமை வைத்திருப்பவர் என்றால் மேலே குறிப்பிட்ட அனைத்து வசதிகளும் உங்களுக்கு கிடைக்கும். ஆனால் நார்டிக் நாடுகளில் குடியுரிமை எடுப்பது என்பது அவ்வளவு எளிதில்லை. அந்த நாட்டின் தாய் மொழியில் வைக்கப்படும் தேர்வு உள்பட பல கட்டங்களைத் தாண்ட வேண்டும். இங்கே உள்ள மக்கள் அனைவரும் ஆங்கிலம் பேசுவார்கள். எனினும் அவர்களது நாட்டு மொழி தெரியாவிட்டால் இங்கு நீண்ட காலம் தாக்குப்பிடிக்க முடியாது. மொழிப் பிரச்னையால் தமது படிப்புக்கும் அனுபவத்திற்கும் முற்றிலும் பொருத்தமற்ற வேலைகளை செய்து, குறைந்தபட்சம் விமான செலவையாவது மீட்டுச் செல்வோம் என்ற நிலைக்குத் தள்ளப்பட்ட பல டாக்டர்கள், இன்ஜினீயர்கள் இங்கே இருக்கிறார்கள்.

அகதிகளாக வந்து தஞ்சம் புகுந்தவர்கள் சிலர் இன்னும் ரயில் நிலையங்களிலும் நகரத்தின் பிரதான வீதிகளிலும் கையேந்திய வண்ணம்தான் இருக்கிறார்கள். ஒரு வீடு வாங்குவதற்கான வங்கிக்கடன் கூட, இந்நாட்டு நிரந்தர குடியுரிமை உள்ளவருக்கு 5 சதவிகித முன்பணத்துடனும், தற்காலிக விசாவில் வாழ்பவர்களுக்கு குறைந்தது 20 சதவிகித முன்பணத்துடனுமேதான் வழங்கப்படுகின்றன. வெளிநாட்டிலிருந்து வரும் மாணவர்கள் பல்கலைக்கழகங்களில் அதிக பணம் செலுத்தித்தான் கல்வி கற்கிறார்கள். இந்த நாட்டிலும் ஏமாற்று ஆசாமிகள் அதிகம்.

இருந்தாலும், மற்ற எல்லா உலக நாடுகளோடு ஒப்பிடும்போதும், அடிப்படை வாழ்க்கைத் தரத்திலும், சுகாதாரத்திலும், மருத்துவத்திலும், கல்வியிலும், ஆரோக்கியத்திலும், பாதுகாப்பிலும், மனித நேயத்திலும், சட்டம் மற்றும் ஒழுங்கிலும், தனி மனித சுதந்திரத்திலும், நிலையான பொருளாதார வளர்ச்சியிலும், மாசற்ற இயற்கையிலும் இவர்களை மிஞ்ச ஆளில்லை. அதனாலேயே இந்த நாட்டில் வாழும் பாக்கியம் பெற்ற குடிமக்கள் சந்தேகமே இல்லாமல் மிகவும் மகிழ்ச்சியானவர்களாக வாழ்கிறார்கள்.

கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்ட பூமியில் அத்தனையும் அழகே!

ஒரு மறுமொழி

  1. கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்ட பூமியில் அத்தனையும் மகிழ்ச்சியே!

%d bloggers like this: