ஒரு தொகுதி குறைந்தாலும் கூட்டணி வேண்டாம்!” – கறார் காங்கிரஸ்

கைகள் பிரிகிறதோ?’’ – கேள்வியுடன் என்ட்ரி கொடுத்தார் கழுகார். தட்டில் ரிப்பன் பக்கோடாவை நிரப்பிவிட்டு, ‘‘தி.மு.க – காங்கிரஸ் கூட்டணியைக் குறிப்பிடுகிறீரா… அவர்கள்தான் நகமும் சதையுமாக இருந்தார்களே?’’ என்றோம். பக்கோடாவைக் கொறித்தபடி, ‘‘அதெல்லாம் அந்தக் காலம். சத்தியமூர்த்தி பவனில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் தி.மு.க-வுக்கு எதிராக மூத்த தலைவர்கள் வெடித்துவிட்டார்களாம்’’ என்றபடி செய்திகளுக்குள் நுழைந்தார் கழுகார்.

‘‘பிப்ரவரி 24-ம் தேதி மாலை, காங்கிரஸ் மேலிடப் பார்வையாளர்கள் உம்மன்சாண்டி, சுர்ஜேவாலா, தமிழகப் பொறுப்பாளர் தினேஷ் குண்டு ராவ் உள்ளிட்டோருடன் காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகிகள் சத்தியமூர்த்தி பவனில் ஆலோசனை நடத்தினார்கள். வரும்போதே அவர்களுக்கு சார்ஜ் ஏற்றிவிட்டிருப்பார்கள்போல… அரங்கத்துக்குள் சுர்ஜேவாலா நுழைந்தவுடனேயே, ‘தி.மு.க கூட்டணியில் இருக்கலாமா, வேண்டாமா? முதலில் இதைச் சொல்லுங்கள்’ என்று வெடியைக் கிள்ளி எறிந்திருக்கிறார். அப்போது விருதுநகர் எம்.பி மாணிக்கம் தாகூர் எழுந்து, ‘2016 சட்டமன்றத் தேர்தலில் 41 இடங்களை தி.மு.க அளித்தது. இம்முறை அதில் ஒரு தொகுதி குறைந்தாலும் கூட்டணியில் நாம் இருக்க வேண்டாம்’ என்று வெடித்திருக்கிறார். அப்போது குறுக்கிட்ட திருச்சி எம்.பி திருநாவுக்கரசர், ‘நாம் பேசும் கருத்துகள் உடனடியாக தி.மு.க தலைமைக்கு எட்டிவிடுகிறது, தனித்தனியாக அழைத்து, கருத்து கேளுங்கள்’ என்றாராம். அதன் பிறகு தனித்தனியாகக் கருத்து கேட்கப்பட்டிருக்கிறது.’’

மிஸ்டர் கழுகு: “ஒரு தொகுதி குறைந்தாலும் கூட்டணி வேண்டாம்!” - கறார் காங்கிரஸ்

‘‘கதர்கள் என்ன சொன்னார்களாம்?’’

‘‘கார்த்தி சிதம்பரம், மாணிக்கம் தாகூர் உள்ளிட்ட தலைவர்களின் கருத்துகள் ஒருமித்த குரலாக ஒலித்திருக்கிறது. ‘தி.மு.க நம்மை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை. அவர்கள் கொடுப்பதை நாம் வாங்கிக்கொள்ள வேண்டும் என்று நினைக்கிறார்கள். தங்கள் வாரிசுகளுக்கு சீட் பெற்று ஜெயிக்க வைக்க வேண்டும் என்பதால், நம் தலைவர்கள் சிலரும் அதை ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் இருக்கிறார்கள். கே.எஸ்.அழகிரியை வைத்துக்கொண்டு கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்தினால் கட்சி விளங்கிவிடும்’ என்றனராம். இந்தக் களேபர கருத்துக் கேட்பு இரண்டு மணி நேரம் நடந்திருக்கிறது. அடுத்த நாள் பிப்ரவரி 25-ம் தேதி மேலிடப் பார்வையாளர்கள் மூவரோடு மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரியும், சட்டமன்றக் கட்சித் தலைவர் கே.ஆர்.ராமசாமியும் அறிவாலயத்துக்குச் சென்றனர். காங்கிரஸ் தரப்புடன் பேச்சுவார்த்தை நடத்த கனிமொழி, டி.ஆர்.பாலு, துரைமுருகன் ஆகியோர் காத்திருந்தனர்.”

“காங்கிரஸைக் கிண்டலடிக்கவே துரைமுருகன் காத்திருந்திருப்பாரே!”

“பொதுச்செயலாளர் ஆகிவிட்டார் அல்லவா… அணுகுமுறையை வெகுவாக மாற்றிவிட்டார். பேச்சுவார்த்தைக்குச் சென்ற காங்கிரஸ் தரப்பு ஒரு பட்டியலையும் நீட்டிவிட்டு, ‘54 தொகுதிகளின் பெயர்ப்பட்டியல் இருக்கிறது. இதிலிருந்து

41 தொகுதிகளை நாங்கள் எதிர்பார்க்கிறோம்’ என்றிருக்கிறார்கள். தி.மு.க தரப்பு விக்கித்து விட்டதாம். துரைமுருகன் சிரித்துக்கொண்டே, ‘கடந்தமுறை உங்களுக்கு 41 தொகுதிகளைக் கொடுத்து நாங்கள் ஆட்சியை இழந்தோம். இம்முறை 15-18 தொகுதிகள் வரை கொடுக்கவே தலைமை திட்டமிட்டிருக்கிறது’ என்று அமைதியாகச் சொல்லியிருக்கிறார். அதற்கு கதர் பார்ட்டிகள், ‘கடந்தமுறை வெற்றி வாய்ப்பில்லாத பல தொகுதிகளை எங்களிடம் தள்ளிவிட்டீர்கள். இம்முறை நாங்கள் வெற்றிபெற வாய்ப்புள்ள தொகுதிகளைத்தான் கேட்கிறோம்’ என்றிருக்கிறார்கள்.”

“ஓஹோ…”

‘‘அதற்கு தி.மு.க தரப்பு, ‘20-க்கு மேல் வாய்ப்பில்லை’ என்றுவிட்டதாம். இந்தத் தகவல் டெல்லிக்கும் சொல்லப்பட்டிருக்கிறது. ‘நாடாளுமன்றத் தேர்தலில் 10 தொகுதிகள் கொடுத்தோம். இம்முறை எங்களுக்கு விட்டுக்கொடுங்கள்’ என்பது தி.மு.க வாதம். ‘நாடாளுமன்றத் தேர்தலில் 10 தொகுதிகளில் நிற்கும் அளவுக்குச் செல்வாக்குள்ள கட்சிக்கு 20 எம்.எல்.ஏ தொகுதிகள் கொடுப்பது நியாயமா? அப்படியென்றால், நாம் வேறு வாய்ப்புகளைப் பார்க்கலாம்’ என மேலிடப் பார்வையாளர்களிடம் பொங்கினார்களாம் சில இளம் தலைவர்கள். மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்படலாம். அதை உத்தேசித்து மார்ச் 7-ம் தேதி தி.மு.க பொதுக்குழு கூடுகிறது. அதற்கு முன்பாக தொகுதிப் பங்கீடு விவகாரங்களை ஓரளவுக்காவது முடிக்க ஸ்டாலின் நினைக்கிறார்.”

மிஸ்டர் கழுகு: “ஒரு தொகுதி குறைந்தாலும் கூட்டணி வேண்டாம்!” - கறார் காங்கிரஸ்

“சரிதான்… ஐபேக் அலுவலகத்துக்கு தி.மு.க தலைவர் ஸ்டாலின் வந்திருந்தாராமே?”

“ஆமாம். பிப்ரவரி 24-ம் தேதி மாலை, சென்னை தேனாம்பேட்டையிலுள்ள ஐபேக் அலுவலகத்துக்கு ஸ்டாலின், சபரீசன் உள்ளிட்டோர் வந்திருக்கிறார்கள். பிரசாந்த் கிஷோரும் உடனிருந்திருக்கிறார். அங்கேயிருந்த ஊழியர்களிடம், ‘உங்களுடைய உழைப்பால் இன்று தி.மு.க வெற்றிமுகத்தில் உள்ளது. இன்னும் அர்ப்பணிப்போடு பணியாற்றுங்கள்’ என்றிருக்கிறார் ஸ்டாலின். அதன் பிறகு பிரசாந்த் கிஷோர், சபரீசன், ஸ்டாலின் ஆகியோர் மட்டும் தனியாக ஒரு மணி நேரம் அலுவலகத்தில் ஆலோசனை நடத்தினார்களாம்’’ என்ற கழுகாருக்குச் சூடாக ஃபில்டர் காபி கொடுத்தோம். காபியை ருசித்தபடி, ‘‘கிச்சன் கேபினெட் கடுகடுப்பில் இருக்கிறது தெரியுமா?” என்று அடுத்த செய்திக்குள் நுழைந்தார் கழுகார்.

‘‘சென்னை தொகுதி ஒன்றில், இரண்டு முறை போட்டியிட்டுத் தோற்ற தி.மு.க பிரமுகர் அவர். கட்டடத் தொழிலதிபர் ஒருவர் அவரை அணுகி, ‘தி.மு.க-வில் மாநிலங்களவை எம்.பி பதவி பெற்றுத் தாருங்கள்’ என்று அணுகியிருக்கிறார். இதற்காக இரண்டு ஸ்வீட் பாக்ஸ்களும் பேசப்பட்டதாம். தொழிலதிபரை அழைத்துக்கொண்டு பாக்ஸுடன் கிச்சன் கேபினெட்டை அணுகிய அந்தப் பிரமுகர், ‘நீங்க வெளியிலேயே உட்காருங்க. நான் உள்ளார போய் கொடுத்துட்டு வர்றேன். இன்னும் ஒரே மாசத்துல நீங்க எம்.பி’ என்றதாம். இதை நம்பி அந்தத் தொழிலதிபரும் அமர்ந்திருக்கிறார். உள்ளே சென்ற அந்தப் பிரமுகர், ‘எனக்கு வழக்கம்போல இந்தமுறையும் தொகுதியை வாங்கிக்கொடுங்க’ என தன் கணக்கில் காணிக்கையை எழுதிவிட்டாராம். இது தெரியாமல் அந்தத் தொழிலதிபர், ‘நானும் சீக்கிரமே எம்.பி-தாங்க’ என வட மாவட்ட தி.மு.க எம்.பி ஒருவரிடம் அப்பாவியாகச் சொன்னாராம்.’’

“2022, ஜூன் மாதம்தானே தமிழகத்தில் மாநிலங்களவை எம்.பி பதவி காலியாகிறது!”

“இதைத்தான் அந்த எம்.பி-யும் சொல்லியிருக்கிறார். ‘மொதல்ல ஸ்வீட் பாக்ஸைத் திருப்பி வாங்கற வழியைப் பாருங்க’ என்றாராம் அந்த எம்.பி. அரண்டுபோன தொழிலதிபர், அந்த தி.மு.க பிரமுகரைத் தொடர்பு கொண்டதற்கு, ‘உங்களுக்கு நான் சீட் வாங்கித் தர்றேன். ஏன் கண்டவங்க பேச்சைக் கேட்கறீங்க?’ என்று நழுவினாராம். விஷயத்தை கிச்சன் கேபினெட்டுக்குத் தொழிலதிபர் கொண்டுசென்றுவிட, அந்த தி.மு.க பிரமுகர் மீது கடுகடுவென வெடித்திருக்கிறது கிச்சன். விவகாரத்தைச் சத்தமில்லாமல் முடிக்கும்படி கண்டித்திருக்கிறதாம்.’’

‘‘வெட்டு வாங்கினாலும் வெட்ட வேண்டியதை வெட்டிவிடுகிறார்களே… சரி, அ.தி.மு.க செய்திகள் இருக்கின்றனவா?’’

மிஸ்டர் கழுகு: “ஒரு தொகுதி குறைந்தாலும் கூட்டணி வேண்டாம்!” - கறார் காங்கிரஸ்

‘‘தேவேந்திர குல வேளாளர் என்ற பெயரைப் பட்டியல் சமூக மக்களுக்கு வழங்குவதை, பிள்ளைமார் சமூக மக்கள் எதிர்த்துவருகிறார்கள். இதற்காகப் பல போராட்டங்களையும் தேனியில் நடத்தினர். இந்தநிலையில், பிள்ளைமார் சமூக மக்களின் வாக்குகளைக் கவர, போடி பழைய பேருந்து நிலையத்தில் வ.உ.சி-க்குப் புதிய வெண்கலச் சிலையை நிறுவியிருக்கிறார் ஓ.பன்னீர்செல்வம். அதைத் திறந்துவைக்க வந்தபோது, பிள்ளைமார் சமூக மக்கள் சிலர், சிலையை பன்னீர் திறக்க எதிர்ப்பு தெரிவித்ததோடு, ‘ஓ.பி.எஸ் ஒழிக!’ என்றும் கோஷமிட்டிருக்கிறார்கள். கடந்த பத்து ஆண்டுகளில், தனது சொந்தத் தொகுதியில் இப்படியொரு எதிர்ப்பைச் சந்திக்காத பன்னீர் ஆடிப்போய்விட்டாராம். இதற்கிடையே,

அ.தி.மு.க மீதான பிள்ளைமார் சமூக மக்களின் எதிர்ப்பை, தனக்குச் சாதகமாகப் பயன்படுத்த தங்க தமிழ்ச்செல்வன் திட்டமிடுவதால், தேனி அரசியல் தகிக்கிறது.”

மிஸ்டர் கழுகு: “ஒரு தொகுதி குறைந்தாலும் கூட்டணி வேண்டாம்!” - கறார் காங்கிரஸ்

‘‘பிரதமர் மோடி விசிட்டில் என்ன விசேஷம்?”

‘‘மோடி கடந்த முறை சென்னை வந்திருந்தபோது, ஓ.பி.எஸ்-க்குப் போதுமான முக்கியத்துவம் கொடுக்கவில்லை. இதனால், கோவை அரசு நிகழ்ச்சி அரங்கில் நுழையும்போதே ஓ.பி.எஸ் மகன் ரவீந்திரநாத், மோடியின் காலில் விழ முயன்றார். ஆனால், மோடி தடுத்துவிட்டார். நிகழ்ச்சி முடிந்து செல்லும்போது, மேடையிலிருந்த அமைச்சர் எஸ்.பி.வேலுமணியைத் தட்டிக்கொடுத்துவிட்டுச் சென்றார் மோடி. கூட்டம் வேலுமணியால் கூட்டப்பட்டிருந்ததால் அப்போது மக்களும் ஆரவாரம் செய்தனர். அவர்களுக்குப் பின்னால் தனியாக நடந்துவந்த எடப்பாடி பழனிசாமி அதை உற்று கவனித்தார்.’’

‘‘சசிகலா மீண்டும் பரபரப்பாகிவிட்டாரே?”

‘‘ஜெ., பிறந்த நாளில் அவரின் நினைவிடம் செல்ல விரும்பினார் சசிகலா. ஆனால், நினைவிடம் மூடப்பட்டிருந்த நிலையில் வீண் பரபரப்பு வேண்டாம் எனக் குடும்பத்தினர் தடுத்துவிட்டனர். அன்றுதான் தன் குடும்பத்தினரைத் தாண்டி மற்றவர்களைச் சந்தித்தார் சசிகலா. சரத்குமார், ராதிகா, சீமான், பாரதிராஜா, அமீர் உள்ளிட்டோர் சசிகலாவைச் சந்தித்தது பரபரப்பானது. `பா.ஜ.க-வால் கடும் இன்னலைச் சந்தித்துவிட்டீர்கள். அவர்கள் அ.தி.மு.க., அ.ம.மு.க இரண்டு கட்சிகளையுமே அழிக்கத்தான் செய்வார்கள். பா.ஜ.க எதிர்ப்பு மனநிலையில் மட்டும் உறுதியாக இருங்கள்’ என்றாராம் சீமான். சிரித்தபடி அதைக் கேட்டுக்கொண்டாராம் சசிகலா. அன்றைய தினம் ஜெயலலிதா நினைவிடத்தில் அருங்காட்சியகத்தைச் சத்தமில்லாமல் திறந்திருக்கிறது ஆளும்தரப்பு. விழா முடிந்ததும் நினைவிடத்தை இழுத்துப் பூட்டிவிட்டனர்’’ என்றபடி சிறகுகளை உலுப்பிக்கொண்டு கழுகார் ஜூட் விட்டார்.

%d bloggers like this: