அதுமட்டும் நடக்க கூடாது.. “ஸ்டிரிக்ட் ஸ்டாலின்”.. தொகுதி பங்கீட்டில் திடீர் கறார்.. இதுதான் காரணம்!

கூட்டணி பேச்சுவார்த்தையில் இதுவரை இல்லாத அளவிற்கு திமுக கறார் காட்டி வருகிறது.. கூட்டணி கட்சிகளுக்கு அள்ளி என்ன கிள்ளி கொடுக்கவே திமுக இந்த முறை யோசிக்கிறது.. திமுகவின் இந்த மாற்றத்திற்கு பின் முக்கிய காரணம் ஒன்றும் இருக்கிறது!

2021 சட்டசபை தேர்தலுக்காக திமுக நடத்தி வரும் கூட்டணி பேச்சுவார்த்தை இன்னும் முடிவிற்கு வரவில்லை.

கன்னித்தீவு கதை போல கூட்டணி பேச்சுவார்த்தை நீண்டு கொண்டே இருக்கிறது. லோக்சபா தேர்தலில் எளிதாக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தியது போல திமுகவால் இந்த முறை முடிவு எடுக்க முடியவில்லை.

காங்கிரஸ், மதிமுக, விசிக உள்ளிட்ட முன்னணி கட்சிகளுக்கு அதிக இடங்களை ஒதுக்க திமுக விரும்பவில்லை. எப்போதும் கூட்டணி கட்சிகளுக்கு தாராளமாக இடம் கொடுக்கும் திமுக இந்த முறை கூட்டணி கட்சிகளை முடிந்த வரை கட்டுப்படுத்த பார்க்கிறது.

காரணம்

திமுகவின் இந்த திடீர் மாற்றத்திற்கு அச்சம்தான் காரணம் என்கிறார்கள். கடந்த 2-3 வருடங்களில் பல்வேறு மாநிலங்களில் நடந்த சட்டசபை தேர்தல்களும், அதன் முடிவும்தான் இதற்கு காரணம். கர்நாடகா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்கள், பரபரப்புகள்தான் இதற்கு காரணம். ஆட்சியில் அமர்ந்துவிட்டு அதன்பின் ஆட்சியை பறிகொடுக்க கூடாது என்பதில் திமுக உறுதியாக இருக்கிறது.

ஏன்

மத்திய பிரதேசத்தில் ஆட்சிக்கு வந்த காங்கிரஸ், பின் ஆப்ரேஷன் கமலா காரணமாக ஆட்சியை இழந்தது. கர்நாடகாவில் காங்கிரஸ் கூட்டணி இதேபோல்தான் ஆட்சியை இழந்தது. ராஜஸ்தானில் கிட்டத்தட்ட ஆட்சியை இழக்கும் நிலைக்கு காங்கிரஸ் சென்றுவிட்டது. இந்த தொடர் மாற்றங்கள்தான் திமுகவை யோசிக்க வைத்துள்ளது.

பெரும்பான்மை

தேர்தலில் போட்டியிட்டு வெல்வது முக்கியம் இல்லை, அதன்பின் ஆட்சியை தக்க வைக்க வேண்டும் என்று திமுக நினைக்கிறது. இதனால் என்ன நடந்தாலும் தனிப்பெரும்பான்மை பெற வேண்டும். கூட்டணி கட்சிகளை நம்பி மட்டும் ஆட்சி இருக்க கூடாது என்று நினைக்கிறது. 118 இடங்களில் அல்ல குறைந்தது 130-140 இடங்களில் வென்றால்தான் 5 வருடம் முழுமையாக ஆட்சி அமைக்க முடியும் என்று திமுக நினைக்கிறது.

திமுக பிளான்

தமிழகத்தில் 140 இடங்களில் வெல்ல வேண்டும் என்றால் குறைந்தது 180+ இடங்களில் போட்டியிட வேண்டும். இதனால்தான் கூட்டணி கட்சிகளுக்கு அதிக இடங்களை கொடுக்க திமுக விரும்பவில்லை. தேர்தலில் வென்றபின் கூட்டணி கட்சிகள் கழன்று கொண்டால் அது சரியாக இருக்காது. அப்படிபட்ட விஷயங்களுக்கு இடம் கொடுக்க கூடாது என்று திமுக கருதுகிறது.

கறார்

அதேபோல் காங்கிரஸ் இதற்கு முந்தைய தேர்தல்களில் அதிக இடங்களில் போட்டியிட்டு குறைந்த இடங்களில் வென்று, திமுகவின் தோல்விக்கும் காரணமாக இருந்துள்ளது. இதுபோன்று மீண்டும் நடக்க கூடாது. காங்கிரஸ் உறுதியாக வெல்லும் என்று தெரிந்த தொகுதிகளை மட்டுமே அதற்கு கொடுக்கலாம் என்று திமுக நினைக்கிறது. இதுதான் திமுக இந்த முறை கறார் காட்ட காரணம்.

%d bloggers like this: