சசி ஒதுங்கியது ஏன்?

அரசியலை விட்டு ஒதுங்கி இருந்து, ஜெயலலிதாவின் பொற்கால ஆட்சி அமைய, இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்’ என, அறிக்கை விட்டு, தன் அரசியல் வாழ்க்கைக்கு, திடீரென முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் சசிகலா.இந்த முடிவால், சோர்வு அடைந்துள்ளதாக சொல்லி

இருக்கிறார் தினகரன். அவரைத் தவிர, அனைவரும் மகிழ்ச்சி அல்லது நிம்மதியுடன் சசிகலா விலகலை வரவேற்கின்றனர். நான்கு ஆண்டுகள், பெங்களூரு சிறைவாசம் முடிந்து சென்னை வந்தவருக்கு, தமிழக எல்லையில் இருந்து வழி நெடுக, பிரமாண்ட வரவேற்பு அளித்தது, தினகரனின், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்.அப்போது, பத்திரிகையாளர்களை சந்தித்த சசிகலா, ‘தீவிர அரசியலில் ஈடுபடுவேன்’ என்றார்.

பின்னர், ஜெ., பிறந்த நாளன்று தன் வீட்டில், ஜெ., படத்துக்கு மாலை அணிவித்து பேசிய போதும், ‘விரைவில் தொண்டர்களையும், பொதுமக்களையும் சந்திக்க வருவேன்’ என, சொல்லியிருந்தார்.இந்நிலையில், திடீரென அரசியலுக்கு முழுக்கு போட்டு ஒதுங்கியது ஏன் என, பல தரப்பு மக்களும், கட்சி தலைவர்களும் விவாதிக்கின்றனர். ‘சென்னை வந்ததும், அமைச்சர்கள் துவங்கி, அ.தி.மு.க., பிரபலங்கள் வரிசையில் வந்து வணக்கம் வைப்பார்கள்; அ.தி.மு.க.,வில் இ.பி.எஸ்.,சும், ஓ.பி.எஸ்.,சும் உருவாக்கி வைத்துள்ள, கட்டமைப்பு சடசடவென சரியும்; மீண்டும் கட்சியின் தலைமை பொறுப்பு தானாக உங்களை தேடி வரும்’ என, சசிகலாவுக்கு நெருக்கமாக இருந்தவர்களே, அவரை நம்ப வைத்திருந்தனர்.இதில், தினகரனின் பங்களிப்பு என்ன என்பது, சரியாக தெரியவில்லை. ஏனென்றால், அவர் எதார்த்தம் புரியாதவர் அல்ல. எனவே, இல்லாத ஒன்றை சொல்லி, போலி பிம்பத்தை சசி மனதில், அவர் உருவாக்கி இருப்பார் என்பதை நம்பமுடியவில்லை.

ஆனால், தினகரனை தவிரவும், இ.பி.எஸ்., – ஓ.பி.எஸ்., ஆதிக்கத்தை ஜீரணிக்காத வேறு பலரும், சசிக்கு நெருக்கமாக இருக்கிறார்கள். அந்த கோஷ்டியில் பல கட்சியினரும் உண்டு. அதையெல்லாம் நம்பி, சசிகலா காத்திருந்தது உண்மை. ஆனால், சிறு பதவியில் இருக்கும், அ.தி.மு.க., நிர்வாகி கூட தன்னை பார்க்க வரவில்லை என்பதில், அவருக்கு பெரும் அதிர்ச்சி.அப்போது தான், பெங்களூரு சிறையில் இருந்த நான்காண்டுகளில், கட்சியையும் தொண்டர்களையும், எந்த அளவுக்கு தன்னை விட்டு தொலைதுாரத்துக்கு இரட்டையர்கள் கொண்டு சென்று விட்டனர் என்பதை, அவர் உணர்ந்தார்.

அதன் தொடர்ச்சியாக, ஏனைய எதார்த்தங்கள், அவர் முன்னால் வரிசை கட்டி வந்தன. எவ்வளவு அழுத்தம் கொடுத்தும், சசியை மீண்டும் சேர்த்துக் கொள்ள, இ.பி.எஸ்., சம்மதிக்கவில்லை என்றதும், ‘இதற்கு மேல் எங்களால், எதுவும் செய்வதற்கில்லை’ என்று பா.ஜ., கைகழுவியது.சொத்துக்கள் தொடர்பாக, உறவுக்காரர்கள் பலரும் சந்தித்து, பல தகவல்களைக் கொடுத்துச் சென்றனர். ஏற்கனவே, 3,000 கோடி சொத்துக்களை அமலாக்கத் துறை முடக்கி இருக்கிறது. இது, 10 சதவீதமே.

மேலும், வழக்குகள் வந்தால், பினாமி தடுப்பு சட்டத்தின் கீழ் மீதியுள்ள, 90 சதவீத சொத்துகளுக்கும் ஆபத்து வரும் என்று, அவர்கள் எச்சரித்துள்ளனர்.மறுபடியும் சிறை செல்ல நேரலாம் என, அவரது சிறு வட்டத்துக்கு வெளியே உள்ள, சட்ட நிபுணர்கள் வாயிலாக, தெரிந்து கொண்ட போது, உண்மையில் சசிகலா ஆடிப் போனார். மொத்த சொத்துக்களையும் பறிகொடுத்து, மீண்டும் சிறை கைதியாக வாழும் சித்திரம் அவரை ரொம்பவே பாதித்தது.அ.ம.மு.க., என்பது, அ.தி.மு.க.,வை மீண்டும், எங்கள் கைக்கு கொண்டு வருவதற்காக தயாரித்த ஒரு கருவி தான் என, தினகரன் ஏற்கனவே பகிரங்கமாக தெளிவுபடுத்தி இருந்தார். ஜெயலலிதாவால் வளர்க்கப்பட்ட கட்சியை, அவரால் வளர்ந்த தானும், தன் குடும்பமும் அழிக்க முயல்வது, பெரிய பாவம் என்று உறவினர்களும், சமூக பெரியவர்கள் சிலரும் சுட்டிக் காட்டியதும், அவர் மனதை தைத்திருக்க வேண்டும்.எனவே தான், அரசியலுக்கு வராமலே ஒதுங்கும் முடிவை, ரஜினி பாணியில் அறிவித்துள்ளார். கட்சிகளுக்கு சம்பந்தம் இல்லாத, சில பிரபலங்களும், இதற்காக அவருக்கு பாராட்டு தெரிவித்தும், நன்றி கூறியும், மெசேஜ் அனுப்புகிறார்கள். எனவே, சரியான முடிவையே எடுத்திருக்கிறோம் என, சசிகலா திருப்தியாக இருக்கிறாராம்.ஆனால், ‘இதெல்லாம் தேர்தலுக்காக நடக்கும் நாடகம்; சசி மீண்டும் அரசியலுக்கு வரத்தான் போகிறார், பாருங்கள்’ என, சிலர் கூறிக் கொண்டிருக்கிறார்கள். ஜெயலலிதா மரணமே பொய் என்று சொல்பவர்களும் வாழும் நாட்டில், இது, ஒன்றும் ஆச்சரியம் இல்லை தானே.

%d bloggers like this: