சந்திராஷ்டமம் என்றால் என்ன? – அந்த நாளில் நல்ல காரியங்கள் செய்யலாமா?

சந்திராஷ்டமம் என்றால் என்ன? சந்திராஷ்டம நாட்களில் முக்கியமான பணிகளை செய்யக்கூடாது என்கிறார்கள். தவிர்க்க முடியாமல் செய்ய நேர்ந்தால் என்ன பரிகாரம் செய்வது?

கோள்களுக்கு உரிய பணியில் சந்திரனை மனோகாரகன் என நிர்ணயம் செய்திருக்கிறார்கள். நமது மன நிலையை (Mood) பராமரிப்பதே சந்திரனின் பணி. எட்டாம் இடம் என்பது அசுபமான பலன்களை உண்டாக்கக் கூடியது என்பதால் எட்டாம் இடத்திற்கு சந்திரன் (Moon) வருகின்ற அந்தக் குறிப்பிட்ட இரண்டரை நாட்கள் மனநிலை டென்ஷனாக (Tension) இருக்கும்.

அதனால் சந்திராஷ்டம நாட்களில் முக்கிய பணிகளைச் செய்வது சிலாக்கியமில்லை என்கிறார்கள். மனதை அடக்கி ஆளத் தெரிந்தவர்கள் சந்திராஷ்டமம் (Chandrashtam) பற்றி கவலைப்பட தேவையில்லை.

ஆனால், சாதாரண மனிதர்கள் அந்த நாட்களில் சற்று தடுமாற்றம் காண்பர். மனதில் குழப்பத்தைத் தோற்றுவிக்கும்படியான நிகழ்வுகள் நம்மைச் சுற்றி நடக்கும் என்பதால் சற்று எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. இதற்காகவே மாத ராசிபலன்களிலும், காலண்டர்களிலும் சந்திராஷ்டம நாட்களை பிரத்யேகமாகக் குறிப்பிடுகிறார்கள். ‘பதறாத காரியம் சிதறாது’ என்று சொல்வார்கள் அல்லவா, சந்திராஷ்டம நேரத்தில் ஒருவிதபதட்டத்தோடு செயல்படுவோம், அதனால் இறங்கிய காரியங்களில் எளிதான வெற்றி கிடைக்காது போகும், அல்லது அற்ப காரணங்களினால் இழுபறி உண்டாகும், இதனால் டென்ஷன் மேலும் அதிகரிக்கும், உடனிருப்பவர்களிடம் எரிந்து விழுவோம் அல்லது அவர்களின் எரிச்சலுக்கும் வசவுகளுக்கும் ஆளாவோம் போன்றவை சந்திராஷ்டம நாட்களில் உண்டாகும் பொதுவான பலன்கள்.
மனித உடற்கூறு இயலைப் பொறுத்தவரை சந்திரன் நம் உடலில் ஓடுகின்ற ரத்தத்தைக் குறிக்கிறார். சந்திராஷ்டம நாட்களில் உண்டாகும் பதட்டத்தின் காரணமாக ரத்தம் சூடேறும். டென்ஷன் அதிகமாகும். ரத்தக் கொதிப்பு நோய் உள்ளவர்கள் சந்திராஷ்டம நாட்களில் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். இதுபோன்ற காரணங்களால்தான் திருமணம், க்ருஹப்ரவேசம் போன்ற சுபகாரியங்களில் சந்திராஷ்டம நாட்களை விலக்குகிறார்கள்.

அதுபோன்றே அதிமுக்கியமான அறுவை சிகிச்சைகளை செய்யவிருக்கும் மருத்துவர்களும், செய்யப்பட உள்ள நோயாளிகளும் தங்களுடைய சந்திராஷ்டம நாட்களைத் தவிர்த்து விடுவார்கள். மருத்துவர் அன்றைய தினத்தில் தனக்கு உண்டாகும் பதட்டத்தின் காரணமாக ஏதேனும் தவறு செய்து விடலாம். நோயாளிக்கு ரத்த அழுத்தத்தில் மாறுபாடு தோன்றுவதன் காரணமாக அறுவை சிகிச்சை தோல்வியில் முடியலாம் என்பதே இந்நாட்களை தவிர்ப்பதற்கான காரணம்.

சந்திராஷ்டம நாட்கள் டென்ஷனை உண்டாக்கும் என்பது சரி, அதற்காக அந்த நாட்களில் பணி ஏதும் செய்யாமல், வெளியில் போகாமல் முடங்கிக் கிடக்க முடியுமா; விபத்தில் அடிபட்டு உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் மனிதருக்கும், சிகிச்சை செய்ய உள்ள மருத்துவருக்கும் சந்திராஷ்டம நாள் ஆயிற்றே என்று சிகிச்சை அளிக்காமல் சும்மா இருந்துவிட முடியுமா; இதற்குப் பரிகாரம் ஏதும் கிடையாதா என்றால் நிச்சயமாக பரிகாரம் உண்டு. சந்திரனுக்குரிய திரவமான பாலைக் குடித்துவிட்டு வேலையைத் துவக்கலாம்.

குளிர்ச்சியான பாதாம்பால் போன்றவையும் பதட்டத்தைக் குறைக்கும். (முதலிரவில் மணமக்கள் பால் அருந்தவேண்டும் என்ற பழக்கத்தை வைத்திருப்பதும் இதற்காகத்தான்.) சந்திராஷ்டம நாட்களை ஜோதிடர்கள் முன்னதாகவே குறித்துக்கொடுப்பது கூடுதல் கவனத்துடனும், எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும் என்பதற்காகத்தானே அன்றி பணி செய்யாமல் சும்மா இருப்பதற்காக அல்ல. சந்திரனுக்கு ப்ரீதியான பசும்பாலை உட்கொள்ளும்போது மனம் அமைதி அடைகிறது. மனம் அமைதி அடைந்தால் செய்கின்ற செயல் வெற்றி பெறுகிறது. ஆக சந்திராஷ்டம நாட்களில் முக்கியமான பணிகளைச் செய்ய நேர்ந்தால் பசும்பால் அருந்திவிட்டு பணியைத் துவக்கலாம்.

%d bloggers like this: