டீலா… நோ டீலா? கெடு விதித்த பன்னீர்… கொதித்தெழுந்த எடப்பாடி! – வேட்பாளர் பட்டியல் பஞ்சாயத்து

அ.தி.மு.க வேட்பாளர் பட்டியலை, பத்தாம் தேதி அறிவித்துவிட வேண்டும் என்கிற முனைப்பில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தீவிரம் காட்டி வந்த நிலையில், அதற்கு ஓ.பி.எஸ் தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டுவந்ததாக தகவல்கள் வெளியாகின.

தனக்கும் பிரதிநித்துவம் அளிக்கும் வகையில் 50 சதவிகித இடங்களை தன் ஆதரவாளர்களுக்கு வழங்கவேண்டும் என பன்னீர் போர்க்கொடி உயர்த்தியதே இழுபறிக்குக் காரணமாகச் சொல்லப்பட்டது. ஆனால், பலகட்ட சமாதானப் பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு தற்போது சுமுக நிலையை எட்டியிருப்பதாக ஆர்ப்பரிக்கிறது அ.தி.மு.க வட்டாரம்.

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை (தனி) அ.தி.மு.க வேட்பாளர் தேன்மொழி பிரசாரத்தை துவங்கினார்.

தமிழக சட்டமன்றத் தேர்தல் அடுத்த மாதம் 6-ம் தேதி நடைபெறவிருக்கிறது. இதையொட்டி ஆளுங்கட்சியான அ.தி.மு.க சார்பில் கடந்த மாதம் 24-ம் தேதி முதல் வேட்பாளர் விருப்ப மனு விநியோகிகம் தொடங்கப்பட்டு மார்ச் 3-ம் தேதி வரை மனுக்கள் பெறப்பட்டன. ஒட்டுமொத்தமாக 8,240 பேர் தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து விண்ணபித்திருந்தனர். அவர்களுக்கு ஒரேகட்டமாக சென்னை ராயப்பேட்டையிலுள்ள அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் 4-ம் தேதி நேர்காணல் நடைபெற்றது. அதே சூட்டோடு மார்ச் 5-ம் தேதி மதியம் முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலும் வெளியிடப்பட்டது. அந்தப் பட்டியலில் முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உட்பட ஆறு பேரின் பெயர்களும் அவர்கள் போட்டியிடும் தொகுதிகளும் இடம்பெற்றன.

ஐந்தாம் தேதி, வெள்ளிக்கிழமை சுக்ரனுக்கு உகந்த நாள் என்பதால் ஆறு பேர் மட்டும் சென்டிமென்ட்டாக அறிவிக்கப்பட்டிருப்பதாகச் சொல்லப்பட்டது. அதேபாணியில், திருவோண நட்சத்திரமும், நாள் முழுவதும் சித்தயோகமும் கூடிய தினமான வரும் பத்தாம் தேதி வேட்பாளர் பட்டியலையும் வெளியிட்டுவிட வேண்டும் என அ.தி.மு.க தரப்பில் கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் தீவிரமாக வேட்பாளர் தேர்வுக் கூட்டம் மாவட்டச் செயலாளர்கள் மத்தியில் நடைபெற்றது. ஏற்கெனவே தான் தேர்வு செய்தி வைத்திருந்த வேட்பாளர்களுக்கும் மாவட்டச் செயலாளர்கள் பரிந்துரைத்த வேட்பாளர்களுக்குமே பெரிய இடைவெளி இருந்ததால் கடுப்பில் இருந்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. இந்தநிலையில் பன்னீரும் தன் பங்கை சரியாகப் பிரித்துக் கொடுத்தால்தான் கையெழுத்திடுவேன் எனப் பிடிவாதமாக இருந்ததால் கோபத்தின் உச்சத்துக்கே முதல்வர் எடப்பாடி சென்றதாக அ.தி.மு.க வட்டாரத்தில் சொல்லப்பட்டது. இதுகுறித்துப் பேசும் சில முக்கிய நிர்வாகிகள் சிலர்,

அ.தி.மு.க
”முதல்வர் ஏற்கெனவே எந்தத் தொகுதியில் யாரை வேட்பாளராக நிறுத்தவேண்டும் என்கிற லிஸ்ட்டைத் தயார் செய்துவிட்டார். துணை முதல்வருடன் இணைந்து ஓகே செய்துவிடலாம் எனக் காத்திருந்தார். அந்தப் பட்டியலில் ஓ.பி.எஸ்ஸுக்கு மாறுபாடு இருக்கும் வேட்பாளர்கள் யாராவது இருந்தால் அது குறித்து விவாதிக்கலாம் எனவும் முடிவு செய்திருந்தனர். ஆனால், முதல்வரைப் போல, துணை முதல்வரும் ஒரு லிஸ்ட்டைத் தயார் செய்து வைத்திருக்கிறார். அதுமட்டுமல்ல, ‘நான் தான் கட்சியின் தலைமை பொறுப்பில் இருப்பவன்… நீங்க இணை ஒருங்கிணைப்பாளர்தான். எனக்கு சரிசமமாக வேட்பாளர் தேர்வில் உரிமை வேண்டும். குறிப்பாக தென்மாவட்டங்களில் பெரும்பாலான தொகுதிகளை எனக்கு ஒதுக்கிவிடவேண்டும்’ எனவும் போர்க்கொடி உயர்த்தியிருக்கிறார்.

ஆனால், எடப்பாடி தரப்பில் அதற்கு கடுகளவும் ஒப்புக்கொள்ளவில்லை. 15-20 தொகுதிகள் வேண்டுமானால் அவருக்கு விருப்பப்பட்ட தொகுதிகளை ஒதுக்கிக் கொள்ளட்டும். பாதிக்குப் பாதி எல்லாம் வாய்ப்பே இல்லை என மறுத்துவிட்டார். முதல்வரிடம் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணியும், ஓ.பி.எஸ்ஸிடம் அமைச்சர் ஆர்.பி உதயகுமாரும் சமரசம் பேசியிருக்கின்றனர். அதன் விளைவாக 60 : 40 என்கிற அளவில் டீல் முடிவுக்கு வந்திருக்கிறது” என்றவர்கள்,

அ.தி.மு.க -பன்னீர் – எடப்பாடி
”ஏற்கெனவே ஆறு பேரின் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில் சரிபாதியாகத்தான் தேர்வு இருந்தது. ஆனால், ஒட்டுமொத்தமாக சரிபாதியாகப் பிரித்துக் கொடுத்து, பன்னீரின் ஆதரவாளர்கள் அதிகமாக ஜெயித்துவிட்டால் எங்கே பன்னீர் கட்சியைத் தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துவிடுவாரோ என எடப்பாடி நினைத்தார். ஈ.பி.எஸ் ஆதரவில் ஜெயிப்பவர்களும் கூட தேர்தலுக்குப் பின்னால் பன்னீரின் பின்னால் போகமாட்டார்கள் என்பது என்ன உத்தரவாதம் எனவும் யோசிக்கிறார். அதனால்தான் பன்னீரின் 50 : 50 டீலுக்கு ஒப்புக்கொள்ளவில்லை. ஆனால், எடப்பாடியைப் போலவே பன்னீரும் விடாப்பிடியாக இருந்தார். நிலைமை இப்படியே போனால், கட்சிக்குள்ளேயே இரு பிரிவாகப் பிரிந்து, தேர்தல் நேரத்தில் ஒருவரை ஒருவர் தோற்கடிக்கக் கிளம்பிவிடுவார்கள். இதனால் அழிவு என்னவோ கட்சிக்குத்தான் என முக்கிய நிர்வாகிகள் எடப்பாடியிடம் அறிவுறுத்திய பின்னர்தான் முதல்வர் இறங்கி வந்தார். ஆனால், செயலளவில் இது எந்தளவுக்குச் சாத்தியம் என்று தெரியவில்லை” என்கிறார்கள் சந்தேகத்தோடு.

நேற்று காலை, கட்சி அலுவலகத்தில் நடந்த நிகழ்வுகளைப் புறக்கணித்த எடப்பாடி, பேச்சுவார்த்தை சுமுகமாக முடிந்த பின்னர்தான் தலைமை அலுவலகத்துக்கே வந்திருக்கிறார். அதனைத் தொடர்ந்துதான், குடும்பத் தலைவிக்கு மாதம் 1,500 ரூபாய். வருடத்துக்கு 6 சிலிண்டர்கள் இலவசம் ஆகிய அறிவிப்புகளையும் வெளியிட்டு மகளிர் தினத்துக்கான ஸ்பெஷல் அறிவிப்பு என விளக்கமும் கொடுத்திருக்கிறார்.

%d bloggers like this: