குஷ்புவுக்கு கல்தா? ஒதுங்கும் எல்.முருகன்? – பா.ஜ.க போட்டியிடும் தொகுதிகள் எவை?

அ.தி.மு.க கூட்டணியில் பா.ஜ.க-வுக்கு 20 சட்டமன்றத் தொகுதிகளும், கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதியும் ஒதுக்கப்பட்டது. நாடாளுமன்றத் தொகுதியின் வேட்பாளராக முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்ட சூழலில், பா.ஜ.க-வுக்கு ஒதுக்கப்படும் 20 சட்டமன்றத் தொகுதிகள் குறித்து இழுபறி நிலை நிலவி வந்தது.

அ.தி.மு.க வலுவாக இருக்கும் தொகுதிகளையே பா.ஜ.க-வும் எதிர்பார்த்ததால், சுமூகமான நிலைப்பாடு எட்டப்படவில்லை. இந்த நிலையில், மார்ச் 9-ம் தேதி இரவு தொகுதிப் பங்கீடு சம்பந்தமாக பேச்சுவார்த்தை நடத்த, பா.ஜ.க மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி, மாநில தலைவர் எல்.முருகன், பா.ஜ.க அமைப்பு பொதுச் செயலாளர் கேசவ விநாயகம் உள்ளிட்ட நிர்வாகிகள் அ.தி.மு.க தலைமை அலுவலகத்திற்கு வந்தனர்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, தங்கமணி உள்ளிட்டோர் பா.ஜ.க தரப்புடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், பா.ஜ.க-வுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் எவை என்பது முடிவானது. இரண்டு மணிநேரம் நடைபெற்ற இந்தப் பேச்சுவார்த்தை இரவு 11:30 மணிக்கு முடிவுக்கு வந்தது. எந்தெந்த தொகுதிகள் பா.ஜ.க-வுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து பா.ஜ.க வட்டாரங்களில் பேசினோம்.

அவர்கள் சொன்ன பட்டியக் இங்கே:

1. திருநெல்வேலி

2. நாகர்கோவில்

3. குளச்சல்

4. விளவங்கோடு

5. ராமநாதபுரம்

6. காரைக்குடி

7. மதுரை வடக்கு

8. விருதுநகர்

9. மொடக்குறிச்சி

10. அரவக்குறிச்சி

11. கோவை வடக்கு

12. திருவையாறு

13. தாராபுரம்

14. ஊட்டி

15. திருவண்ணாமலை

16. திட்டக்குடி

17. தளி

18. திருக்கோவிலூர்

19. ஆயிரம் விளக்கு

20. துறைமுகம்

எடப்பாடி பழனிசாமி – எல்.முருகன்
மேற்கண்ட 20 தொகுதிகள் தான் பா.ஜ.க-வுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் நம்மிடையே தெரிவித்தன. சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியை நடிகை குஷ்பு எதிர்பார்த்திருந்தார். சில தினங்களுக்கு முன்பிருந்து, இந்தத் தொகுதியில் வாக்கு சேகரிப்பு பணியிலும் அவர் தீவிரமாக செயலாற்ற ஆரம்பித்தார். இந்தச் சூழலில், அவர் எதிர்பார்த்த சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியை அ.தி.மு.க ஒதுக்க மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது. அதேபோல, ஆயிரம் விளக்கு தொகுதியை நடிகை காயத்ரி ரகுராம் எதிர்பார்த்திருந்தார். தொகுதி பா.ஜ.க வசம் ஒதுக்கப்பட்டிருந்தாலும், அவருக்கு சீட் தர கமலாலயம் மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இந்த இருவருமே கடைசி நேரம் வரையில், சீட்டுக்காக தலைமையுடன் மோதி வருகின்றனர்.

டீலா… நோ டீலா? கெடு விதித்த பன்னீர்… கொதித்தெழுந்த எடப்பாடி! – வேட்பாளர் பட்டியல் பஞ்சாயத்து

தான் போட்டியிடுவதற்காக ராசிபுரம் தொகுதியை எல்.முருகன் கேட்டிருக்கிறார். அந்தத் தொகுதியின் சிட்டிங் எம்.எல்.ஏ-வாக அமைச்சர் சரோஜா இருப்பதால், தொகுதியை விட்டுத்தர மறுத்த அ.தி.மு.க., அதற்குப் பதிலாக தாராபுரம் தொகுதியை அளித்திருக்கிறது. தாராபுரத்தில் பா.ஜ.க மாநில துணைத் தலைவர் வி.பி.துரைசாமியின் மகனுக்கு சீட் வழங்க கமலாலயம் முடிவெடுத்திருக்கிறதாம். இந்தத் தேர்தலில் முருகன் களமிறங்க மாட்டார் என்கிறார்கள். அரவக்குறிச்சியில் முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி அண்ணாமலையும், திருநெல்வேலியில் நயினார் நாகேந்திரனும், துறைமுகத்தில் வினோஜ் பி.செல்வமும் போட்டியிடுவது ஏறக்குறைய உறுதியாகியிருக்கிறது. ராஜபாளையம் தொகுதியை நடிகை கெளதமி எதிர்பார்த்திருந்த நிலையில், தொகுதியை விட்டுத்தர மறுத்த அ.தி.மு.க தலைமை, அதற்குப் பதிலாக விருதுநகர் தொகுதியை அளித்திருக்கிறதாம். இங்கு கெளதமி களமிறக்கப்படலாம் என்கிறார்கள். பா.ஜ.க-வுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகுதிகள், வேட்பாளர்கள் பற்றிய விவரங்கள் இன்று அல்லது நாளைக்குள் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

%d bloggers like this: