தமிழகம் போண்டி தான்!

அ.தி.மு.க.,வின் தேர்தல் அறிக்கை, தி.மு.க., அறிக்கைக்கு சரியான போட்டியாக இருக்கும் என்பது, எல்லோரும் எதிர்பார்த்த விஷயம்.

எடப்பாடியார் ஏமாற்றவில்லை. அறிக்கையில், பக்கத்துக்குப் பக்கம் பணமழை தான். மக்களைப் பணத்தால் அடித்தால், ‘ஓட்டிங் மெஷின்கள்’ இரட்டை இலையால், நிரம்பி வழியும் என்ற நம்பிக்கை தான்.

ஸ்டாலின், 8 அடி பாய்ந்தால் என்னால், 16 அடி பறக்க முடியும் என்று, இ.பி.எஸ்., காட்டிக் கொண்டிருக்கிறார். அறிவாலயத்தில் இருந்து வெளியாகும், ஒவ்வொரு அறிவிப்புக்கும், இலவசத்துக்கும், சலுகைக்கும், ‘எக்ஸ்ட்ரா பஞ்ச்’ சேர்த்து, அதை தன்னுடையதாக மாற்றி கொள்கிறார்.பத்தாண்டுகளாக ஆட்சியில் இருக்கும், அ.தி.மு.க., பல்வேறு பொருளாதார ஏற்ற இறக்கங்களை சந்தித்துள்ளது. தமிழகத்தின் நிதி வருவாய் எவ்வளவு, செலவுகள் எவ்வளவு, எவை எல்லாம் சாத்தியம், சாத்தியமில்லை என்பது நிச்சயம் ஆட்சியாளர்களுக்குத் தெரியும்.

ஒவ்வொரு ஆண்டும், நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும் போது, நிதிப் பற்றாக்குறையின் அளவு உயர்ந்துகொண்டே போவதும் தெரியும். இவ்வளவு விபரம் தெரிந்த ஒரு கட்சி, இன்னும் எதார்த்தமாக தேர்தல் அறிக்கை வெளியிட்டு இருக்கலாம். தமிழகத்தின் எதிர்கால நிதி நிலைமையை மனதில் கொண்டு உறுதிமொழி கொடுத்திருக்கலாம்.இதோ, இதையெல்லாம் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்:
சொந்த வீடு இல்லாதவர்களுக்கு, கிராமங்களில் அரசே இடம் வாங்கி, கான்கிரீட் வீடுகள் கட்டித்தரும். நகர்ப்புறங்களில் அடுக்குமாடி குடியிருப்புகள் இலவசமாக வழங்கப்படும். தமிழக மக்கள் தொகையில், முக்கால்வாசி பேருக்கு சொந்த வீடு கிடையாது. அதற்கு தான், ஒவ்வொரு குடும்பமும் ஆலாய்ப் பறக்கிறது; உழைக்கிறது. வங்கியில் கடன் வாங்குகிறது. அரசாங்கமே அனைவருக்கும், ‘விலையில்லாமல் வீடு’ கொடுக்கும் என்றால், என்ன அர்த்தம்? மாநில அரசுக்கு கரன்சி அச்சடிக்கும் அதிகாரம் கிடைத்தால் கூட, இவ்வளவு பிரமாண்டமான திட்டம் சாத்தியப்படுமா?

‘குல விளக்கு திட்டம்’ என்பதில், அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும், மாதா மாதம், 1,500 ரூபாய் வழங்கப்படும் என்கிறது அறிக்கை. ஆண்டுக்கு, 9,௦௦௦ கோடி ரூபாய் வேண்டும். ஐந்தாண்டுக்கு, 35 ஆயிரம் கோடி. 30 ஆண்டுகள் உழைத்த ஊழியர்களிடம், மாதம்தோறும் சம்பளத்தில் பிடித்தம் செய்த பணத்தையே, அவர்களுக்கு ஓய்வு பெறும் போது கொடுக்க முடியாமல், கோர்ட்டில் தவணை கேட்கும் அரசிடம் ஏது அவ்வளவு பணம்?

கடந்த ஆட்சியில் தான், ‘மிக்ஸி, கிரைண்டர்’ இலவசமாக கொடுக்கப்பட்டது. அதோடு, தமிழகத்தில், அந்த சாதனங்களை உற்பத்தி செய்யும் தொழிலே நசிந்து போனது. அது போதாது என, இப்போது முளைத்திருக்கிறது, ‘அம்மா வாஷிங் மெஷின்.’ சரி, தொழில் கிடக்கட்டும், ‘வாஷிங் மெஷின்’ இயக்க தேவையான தண்ணீரை யார் கொடுப்பார்கள். குடிநீருக்கே பல ஊர்களில் திண்டாடும் போது, இதற்கு எங்கே போவது? மின்சாரம் இல்லாத தமிழ்நாட்டுக்கு, தி.மு.க., அரசு இலவச, ‘டிவி’ வழங்கிய காட்சி தான் நிழலாடுகிறது.

புருவம் சுருக்க வைக்கும், இன்னொரு விஷயம், மாணவர் / பெற்றோர் நலன் காக்க, கல்வி கடன் தள்ளுபடி என்பது. விவசாயிகள் கடன் தள்ளுபடி போதாது என்று, அடுத்த சுமை அரசுக்கு. ஏற்கனவே இத்தகைய தள்ளுபடிகள் கூடாது என, ரிசர்வ் வங்கி கடுமை காட்டியிருக்கிறது.மேலும், கல்வி கடன் என்பது பொதுத்துறை வங்கிகளில் தான் அதிகம் பெறப்பட்டிருக்கும். உரிய காலத்தில் வங்கிக்கு, அரசு திரும்பச் செலுத்த வேண்டும். பா.ஜ., தயவு இருப்பதால்,மத்திய அரசு உதவி கிடைக்கும் என, முதல்வர் நம்புகிறார் போலிருக்கிறது.
‘குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும்’ என்பது, இலவச திட்டங்களைக் காட்டிலும், பெரும்பாலான மக்களை கவரக்கூடிய வாக்குறுதி என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால், இதையும் சாத்தியமா என சந்தேகப்பட காரணம், ஏற்கனவே காலி பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. அதற்கு காரணம், நிதி இல்லை என்பது தான். பணியாளர் செலவு, பட்ஜெட்டில் பெரும் பங்கு வகிக்கும் நிலையில், இது என்ன, ‘லாஜிக்’ என்று, புரியவில்லை. ஓய்வூதிய பலன்களை கொடுக்க, நிதி இல்லாமல் தானே ஓய்வு வயதையே உயர்த்தியது அரசு?

‘நுாறு நாட்கள் வேலைவாய்ப்பு திட்டம், 150 நாட்கள் வேலைவாய்ப்பு திட்டமாக விரிவாக்கப்படும்’ என்பது ஒரு தரப்பினருக்கு, ‘ஈசி இன்கமாக’ தெரிந்தாலும், மறுபக்கம் விவசாய தொழிலை ஒருவழி செய்து விடும்.இவை தவிர, பின்வரும் வாக்குறுதிகளை விவாதிக்காமலே அறிக்கையில் சேர்த்தார்களோ என்ற சந்தேகம் வருகிறது:
18 வயதான அனைவருக்கும் கட்டணம் இல்லாமல், இரு சக்கர வாகனம் ஓட்ட பயிற்சி அளித்து, ஓட்டுனர் உரிமம் வழங்கப்படும். தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கும், ஊதியத் தொகையை அரசே நிர்ணயம் செய்யும்.இது தவிர தி.மு.க., தேர்தல் அறிக்கையில் சொல்லிவிட்டார்களே என்பதற்காக, கச்சத்தீவு மீட்பு, ‘நீட்’ தேர்வு மறுப்பு போன்ற விஷயங்களைச் சேர்த்துள்ளது.

இவை சாத்தியமே இல்லாத வெறும் பேச்சு என்பதை, மக்கள் புரிந்து கொண்டுள்ளனர்.தமிழகத்தில் பொருளாதார வளத்தை ஏற்படுத்துவது, மக்களிடம் சுபிட்ச உணர்வை ஏற்படுத்துவது என்பது, தொழிலை பெருக்குவதிலும், வளர்ச்சி பணிக்குச் செய்யப்படும் முதலீடுகளில் இருந்து தான் கிடைக்கும். அது தான், நீண்டநாள் வளர்ச்சிக்கு உதவிடும்.மாறாக, அவர்களுக்கு கையில் பணம் கொடுப்பதோ, விலையில்லா பொருட்களை வாரி வழங்குவதோ, அவர்களை யாசகர்களாக கருதுவதாகவே பொருள்.’ஆத்துல போற வெள்ளம், அய்யா குடி, அம்மா குடி’ என்று அரசு கஜானாவை, இரு கட்சிகளுமே திறந்து விடப் போகின்றன. போண்டியாவதிலும், தமிழகம் முதல் இடம் பிடிக்க இதைவிட சிறந்த வழி கிடையாது.

%d bloggers like this: