சசிகலா நாடகம் அம்பலம்

அரசியலை விட்டு ஒதுங்குகிறேன் என சசிகலா அறிக்கை விட்டார்.அப்போதே பலர் அதை சந்தேகித்தனர். ஆனால் அ.தி.மு.க.,வின் வெற்றிக்கு இடையூறாக இருந்து விடக்கூடாதே என்ற காரணத்தால் ஒதுங்குவதாக அவர் சொன்னதை பெரும்பாலான மக்கள் நம்பினர். அதற்காக

அவரை பாராட்டவும் செய்தனர். அந்த அறிக்கை ஒரு நாடகம் என்பது, அடுத்தடுத்து நடக்கும் நிகழ்வுகளால் புலப்படுகிறது.சசிகலா பேச்சை கேட்காமல் தினகரன் செயல்படுவதாக ஒரு தோற்றம் உருவாக்கப்பட்டது. அ.ம.மு.க.,வை அவர் தேர்தல் களத்தில் இறக்கிய போதும் அப்படியே நினைத்தனர். ஆனால் கூட்டணி அமைத்து , அதில் அவர் சேர்த்த கட்சிகளை பார்த்த போது அந்த சாயம் கலைந்து போனது.அ.ம.மு.க., கூட்டணியில் சேர்ந்தவர்கள் யார்?

சமத்துவ மக்கள் கட்சியின் சரத்குமார், தே.மு.தி.க.,வின் பிரேமலதா விஜயகாந்த்,இருவருமே அ.தி.மு.க.,விடம் கேட்ட எண்ணிக்கையில், சீட் கிடைக்காததால் வெளியேறிவர்கள். சரத்குமார் முதலிலேயே , சசிகலாவை சந்தித்து பேசியவர், பிரேமலதா, அ.தி.மு.க., வின் இழுத்தடிப்பால் மாற்று ஏற்பாடு தேடும் போது சசியுடன் பேசியவர். இருவரையும் அ.ம.மு.க., சேர்த்தது ஏன்?ஜெயலிதா காலத்தில் போயஸ் கார்டன் வீட்டில் இருந்து சசிகலா சார்பாக அ.தி.மு.க.,வின் தேர்தல் பணிகளை நிர்வாகம் செய்த அனுபவம் தினகரனுக்கு உண்டு. ஆனால் முதல்வர் வேட்பாளராக தன்னையே முன்னிறுத்தி கூட்டணி அமைக்கும் துணிச்சல் அவருக்கு தானாக வந்திருக்க முடியாது.

கூட்டணியில் தேர்தல் செலவுக்கு தேவையான மிகப்பெரிய தொகையை தனியாக அவரால் திரட்ட முடியாது.சசிகலாவின் போயஸ் கார்டன் வாழ்க்கையின் போது, கோடீஸ்வரர்களாக மாறிய குடும்பத்தினரும், உறவினர்களும் கை கொடுத்தால் மாத்திரமே அது சாத்தியம். அவர்கள் சம்மதிக்க வேண்டுமானால், சசிகலாவின் கண்ணசைவு அல்லது கையசைவு அவசியம்.எனவே சசிகலாவின் ஆசியுடனும் வழிகாட்டுதலுடனுமே தினகரன் இருந்த கூட்டணியை உருவாக்கி இருக்கிறார் என்பது தெரிகிறது.அதிலுள்ள மூன்று கட்சிகளுக்கும் பொதுவான ஒரே நோக்கம் தங்களை இந்த நிலைக்கு தள்ளிய, இ.பி..எஸ்.,- ஒ.பி.எஸ்., மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது என்பது தான். தி.மு.க.வை கடுமையாக விமர்சனம் செய்து வந்த மூன்று பேரும், அ.திமு.க.,வை வீழ்த்த ஒன்று சேர்ந்துள்ளது தான் தேர்தல் விசித்திரம்.தினகரன் இன்னமும் சொல்கிறார் தீய சக்தியான , தி.மு.க.,வை படுதோல்வி அடைய செய்து புரட்சி தலைவி அம்மாவின் கனவை நனவாக்க உழைப்போம் என்று ஆனால், அவர் குறி வைப்பது இதுவரை கிடைத்து வரும் ஓட்டுகள், ஆகவே தான் அ.ம.மு.க.,வை தி.மு.க.வின் ‘பீடீம்’ என ஆரம்பம் முதலே சொல்லி வருகின்றனர். அமைச்சர்கள்.ஜெயலலிதாவால் வாழ்வும் வளமும் பெற்ற ஒரு சிறு கூட்டம்,கொஞ்சமும் நன்றி இல்லாமல்,, அவர் கட்டிக்காத்த கட்சிக்கும், அதன் ஆட்சிக்கும் முடிவு கட்ட அவர் கடைசி மூச்சுவரை எதிர்த்த தி.மு.க., வின் ஏவல்படையாக செயல்படுவது வரலாற்று அவமானம் என ஆவேசமாக சொன்னார் ஒரு சீனியர் அமைச்சர்.அ.ம.மு.க., கூட்டணி ஆட்சியை பிடிப்பதோ, தினகரன் முதல்வராவதோ நடக்காத காரியம்.

என்றாலும் ஒவ்வொரு தொகுதியிலும், அ.தி.மு.க.,வுக்கு விழக்கூடியதில் சில நூறு ஓட்டுகளையாவது தன் பக்கமாக திருப்பி விடும் ஆற்றல் அதனிடம் இல்லையென சொல்ல முடியாது. அவ்வாறு நினைத்தால் அது அசட்டு நம்பிக்கை என்றே சொல்ல வேண்டும்.கடந்த தேர்தலில் மக்கள் நலக்கூட்டணி குறித்து அப்படி அசட்டு நம்பிக்கை கொண்டிருந்ததால், ஆட்சியை பிடிக்கும் வாய்ப்பை தி.மு.க., பறிகொடுத்ததை இங்கே நினைவு கூறவேண்டும். போட்டி கடுமையாக இருக்கும் காலங்களில் ஒவ்வொரு ஓட்டும் முக்கியத்துவம் பெறும். வெற்றிக்கும், தோல்விக்கும் உள்ள இடைவெளி ஒரே ஒரு ஓட்டாக கூட இருக்கலாம்.கருணாநிதி போன்ற பெரிய தலைவரே, மிகக்குறைந்த ஒட்டு வித்தியாசத்தில் தோல்வியை தவிர்க்க முடிந்த சம்பவமும் குறிப்பிடத்தக்கது.இதெல்லாம் தெரிந்திருந்தும், ஸ்டாலின் செய்த தவறை இன்று இ.பி.எஸ்.,செய்கிறாரோ என எண்ணத்தோன்றுகிறது.தே.மு.தி.க.,- ச.ம.க., மட்டுமின்றி கிருஷ்ணசாமியின் புதிய தமிழகத்தையும் வளைத்து போட வாய்ப்பு இருந்தும், இ.பி.எஸ்., பயன்படுத்திக்கொள்ள தவறிவிட்டார்.

என அவரது கட்சியிலேயே முணுமுணுப்பு கேட்கிறது.வேறு சில சிறு கட்சிகளின் பெயரும்,அந்த விவாதத்தில் அடிபடுகிறது. ஒரு கட்சியை சேர்த்ததால் அது பிடிக்காமல் இன்னொரு கட்சி வெளியேறும் சாத்தியமும் இருப்பதால், கூட்டணி தலைமைகளுக்கு இது கயிற்றின் மேல் நடக்கும் வித்தை தான்.கருத்து கணிப்புகள் சில தி.மு.க.,வுக்கு சாதகமாக வருவதை சுட்டிக்காட்டி, முதல்வருக்கு சில தரப்பில் ஆலோசனை கூறப்பட்டுள்ளது. வேட்பு மனு தாக்கல் துவங்கி விறுவிறுப்பாக தொடரும் நேரத்தில் இனி என்ன திருத்தம் செய்ய முடியும் என்பது கேள்விக்குறி.எனினும் ஓட்டுப்பதிவு துவங்கும் நேரம் வரை எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்ற சட்ட சாத்தியம் தான். நம் தேர்தல் கட்டமைப்புக்கு கூடுதல் சூடும், சுவையும் சேர்க்கிறது என்பதை மறுக்க முடியாது.

%d bloggers like this: