அமைச்சர்களை காப்பாற்ற முயற்சி! – பந்தாடப்படும் வருமான வரித்துறை அதிகாரிகள்…

பிரீமியம் ஸ்டோரி
அலகில் ஃபைல்களைக் கவ்வியபடி வந்தார் கழுகார். சூடாக லெமன் டீயை அவருக்குக் கொடுத்தோம். அதை உறிஞ்சியபடியே, “தமிழக கட்சித் தலைவர்களின் மனுத்தாக்கல் தொடர்பான ஆவணங்களைப் பார்வையிட்டேன். முதல்வர் பழனிசாமி, எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின்

ஆகியோருக்குச் சொந்தமாக ஒரு கார்கூட இல்லையாம். உதயநிதி ஸ்டாலினுக்கு 1.35 லட்சம் ரூபாய் கடன் இருக்கிறதாம். துணை முதல்வர் பன்னீர்செல்வத்தின் மனைவிக்கு 65.55 லட்ச ரூபாயும், மகன் ரவீந்திரநாத்துக்கு 2.06 கோடி ரூபாயும் கடன் இருக்கிறதாம். முதல்வர் பழனிசாமியும் 15 லட்சம் ரூபாய் கடன் பெற்று இன்னும் திருப்பிச் செலுத்தவில்லை என்று குறிப்பிட்டிருக்கிறார். தமிழகம்தான் கடனில் தத்தளிக்கிறது என்றால், பாவம் தலைவர்களும் கடனில் தத்தளிக்கிறார்கள்’’ என்று நக்கலடித்தபடி செய்திகளுக்குள் நுழைந்தார் கழுகார்.

மிஸ்டர் கழுகு: அமைச்சர்களை காப்பாற்ற முயற்சி! – பந்தாடப்படும் வருமான வரித்துறை அதிகாரிகள்…
‘‘ஒரு மாதத்துக்கு முன்பு அ.தி.மு.க-வுக்கு மீண்டும் வாய்ப்பிருப்பதாக அதிகாரிகள் மத்தியில் பேச்சு இருந்தது. ஆனால், வன்னியர் உள் ஒதுக்கீட்டால் பிற சமூகத்தினரின் அதிருப்தி, கூட்டணியைக் கட்டமைப்பது மற்றும் சீட் பங்கீட்டில் நடந்த சொதப்பல்கள், வேட்பாளர் தேர்வுக்கு எழுந்த அதிருப்திகள் என அடுத்தடுத்த நகர்வுகளால் அக்கட்சியின் செல்வாக்கு சரிந்துவிட்டதாக அதிகாரிகள் இப்போது பேச ஆரம்பித்திருக்கிறார்கள். முதல்வருக்கு ஆலோசனைகளைக் கொடுத்துவந்த சீனியர் அதிகாரிகள் பலரும் இப்போது அவர் பக்கம் இல்லை. பல அதிகாரிகளின் பார்வை இப்போது தி.மு.க பக்கம் திரும்ப ஆரம்பித்துவிட்டது.”

‘‘பதவிக்காக இப்போதே துண்டுபோட ஆரம்பித்துவிட்டார்களா?”

‘‘அது வழக்கமானதுதானே… எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் உச்ச பதவிகளை வகித்துவரும் ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரியும், முதல்வர் அலுவலகத்திலுள்ள சில அதிகாரிகளும் சமீபத்தில் ஒரு விருந்தில் கலந்துகொண்டார்கள். அப்போது அடுத்த ஆட்சி குறித்த பேச்சு வந்திருக்கிறது. எடப்பாடிக்கு நம்பிக்கையான அந்த அதிகாரி, ‘நானும் எடப்பாடி மீண்டும் வந்துவிடுவார் என்றுதான் நினைத்தேன். அதற்கான வாய்ப்பு குறைவாகிவிட்டது. எதிரணி வந்தாலும் எனக்குச் சிக்கல் இல்லை. நான் ஒரு வருடமாக எதிரணியுடன் நல்ல தொடர்பில்தான் இருக்கிறேன்’ என்று சொல்லிவிட்டு, ‘தலைவரே’ என்று குறிப்பிட்டு தனது செல்போனில் ஒருவருக்கு அனுப்பிய மெசேஜ்களையும் காட்டியிருக்கிறார். அதிர்ச்சி விலகாத சக அதிகாரிகள், ‘இவரையா முதல்வர் முழுதும் நம்பினார்’ என்று முணுமுணுத்துள்ளனர்.’’

மிஸ்டர் கழுகு: அமைச்சர்களை காப்பாற்ற முயற்சி! – பந்தாடப்படும் வருமான வரித்துறை அதிகாரிகள்…
‘‘அரசியலில் மட்டுமல்ல… டபுள் கேம் விளையாட்டு அதிகாரிகளிடமும் இருக்கிறது!’’

‘‘ம்! ஆளுங்கட்சி கூட்டணியில் பா.ஜ.க-வுக்கு ஒதுக்கப்பட்ட சில தொகுதிகளில் அட்ஜெஸ்ட்மென்ட் நடந்திருக்கிறது. கிரிவலத் தொகுதியை பா.ஜ.க-வுக்கு ஒதுக்கியது அ.தி.மு.க. அங்கு தி.மு.க சார்பில் போட்டியிடுபவர் அந்தக் கட்சிக்கே கஜானாவாக இருப்பவர். தி.மு.க வலுவாக இருக்கும் தொகுதியை, தங்கள் கூட்டணியின் பலவீனமான கட்சிக்குத் தள்ளிவிட்டதன் பின்னணியில் முதல்வருக்கு இப்போது எல்லாமுமாக உள்ள ‘மூன்றெழுத்து’ நபரின் திருவிளையாடலே என்ற பேச்சு தி.மு.க-வுக்குள் வந்துள்ளது. கஜானா பிரமுகருக்கும் முதல்வருக்கு நெருக்கமான நபருக்கும் பழைய நட்பு இப்போதும் தொடர்கிறதாம். அந்தப் பாசத்தில் ‘எனது தொகுதியை பா.ஜ.க வசம் தள்ளுங்கள்’ என்று கஜானா பிரமுகர் வைத்த கோரிக்கையைக் கச்சிதமாக நிறைவேற்றியுள்ளார் அந்த மூன்றெழுத்து பிரமுகர்.”

“சரிதான்… ஆளும்கட்சியும் ஆள் பிடிக்காமலா இருக்கும்?”

“அவர்கள் எதிரணியில் ஆள்பிடிக்கச் சொன்னால், கூட்டணிக் கட்சிக்குள் ஆள் பிடித்திருக்கிறார்கள். தேசியக் கட்சியின் சார்பில் சென்னையில் போட்டியிடும் அந்த இளைஞருக்கு பலமாக சப்போர்ட் செய்வதே ஆளும்தரப்பின் மணியான அமைச்சர்தானாம். அமைச்சருக்கு அனுகூலமாக டெல்லியில் சில காரியங்களையும் அந்த இளைஞர் செய்து கொடுத்ததுதான் இதற்குக் காரணமாம். டெல்லியின் பவர்ஃபுல் மனிதர் தமிழக நிலவரம் குறித்துத் தன் கட்சியினருடன் நடத்திய ஆலோசனையை மொபைல்போனில் ரெக்கார்ட் செய்து மணியான அமைச்சருக்கு அனுப்பியிருக்கிறார் அந்த இளைஞர். இப்படிப் பல வகையிலும் தனக்காக உதவும் அந்த இளைஞரை வெற்றிபெற வைப்பது என் கடமை என்று களமாடிவருகிறாராம் அமைச்சர்.”

மிஸ்டர் கழுகு: அமைச்சர்களை காப்பாற்ற முயற்சி! – பந்தாடப்படும் வருமான வரித்துறை அதிகாரிகள்…
“தமிழக அமைச்சர்களைக் காப்பாற்ற பெரும் முயற்சி நடக்கிறதாமே?”

“தகவல் உமக்கும் வந்துவிட்டதா! வருமான வரித்துறை அதிகாரிகள் மத்தியில் இந்த விவகாரம் தான் இப்போது பெரிதாக விவாதமாகியுள்ளது. கடந்த 2016-ம் ஆண்டு பிரபல மணல் அதிபர் வீடு, அலுவலகம் என வருமான வரித்துறை ரெய்டு நடந்தது. அப்போது பல கோடி ரூபாய் பணம், கிலோ கணக்கில் தங்கம், ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. இது தொடர்பான சி.பி.ஐ வழக்கிலிருந்து அவர் தப்பிவிட்டார். அதேசமயம், வருமான வரித்துறை விவகாரம் அப்படியே இருக்கிறது. இதில் தமிழக அமைச்சர்கள் மற்றும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் சிலர் தொடர்பான ஆவணங்களும் சிக்கியுள்ளன. இது நிலுவையில் இருந்தால் எல்லோருக்கும் சிக்கல். இந்த விவகாரத்தில் மணல் அதிபர் தரப்பு அப்பீல் செய்வதற்கான காலக்கெடு வரும் ஏப்ரல் 30-ம் தேதியுடன் நிறைவடைகிறது.”

“ம்…”

“கடந்த வாரம் வருமான வரித்துறையில் இணை ஆணையர் அந்தஸ்திலுள்ள அதிகாரி ஒருவருக்கு மேலிடத்திலிருந்து, ‘ஃபைலை இந்த மாத இறுதிக்குள் குளோஸ் செய்துவிடுங்கள்’ என்று மணல் அதிபருக்குச் சாதகமாக அழுத்தம் கொடுத்துள்ளனர். ஆனால், இணை ஆணையரோ, ‘சிக்கல் வரும்’ என்று மறுக்கவே… அவரை மாற்றிவிட்டு, அந்த இடத்துக்கு இன்னொரு பெண் அதிகாரியை நியமித்துள்ளார்கள். அவரும் ‘முடியாது’ என்று சொல்லிவிட்டு மெடிக்கல் லீவில் சென்றுவிட்டார். இப்போது வேறு அதிகாரியை அந்த இடத்துக்கு இன்சார்ஜாக நியமித்துள்ளார்கள். அவரும் ஆழ்ந்த யோசனையில் இருக்கிறாராம். இப்படி மணல் பிரமுகரையும், தமிழக அமைச்சர்கள் சிலரையும் காப்பாற்ற நடக்கும் இந்த விவகாரத்தைச் சிலர் டெல்லி வரை புகாராக அனுப்பியுள்ளார்கள். அதேசமயம் இந்த விவகாரம் தி.மு.க தரப்புக்கும் கசிந்ததையடுத்து, இது தொடர்பான ஆவணங்களை இப்போதே திரட்ட ஆரம்பித்துள்ளது தி.மு.க.”

மிஸ்டர் கழுகு: அமைச்சர்களை காப்பாற்ற முயற்சி! – பந்தாடப்படும் வருமான வரித்துறை அதிகாரிகள்…
“தி.மு.க அழைப்புக்காக இப்போதும் காத்திருக்கிறாராமே அந்தக் கட்சியின் தலைவர்?”

“நடிகர் விஜய்யின் அப்பாவைத்தான் சொல்கிறீர்கள் என்று புரிகிறது. காமராஜர் அண்ணா மக்கள் கழகம் என்கிற பெயரில் மார்ச் முதல் வாரத்தில் கட்சி தொடக்க விழாவை அவர் நடத்துவார் என்று செய்தி பரவியது. இதற்காக, வெளி மாவட்டங்களிலிருந்து அவரின் ஆதரவாளர்கள் சென்னையில் குவிந்தனர். ஆனால், தேர்தல் ஆணையத்திடமிருந்து முறையான அனுமதி வரவில்லை என்பதால் நிர்வாகிகளுக்குப் பொறுப்புகளை மட்டும் அறிவித்தார் எஸ்.ஏ.சி. மார்ச் 10-ம் தேதி கட்சிக்கான அனுமதி கிடைத்துவிட்டது. ஆனால், ‘தேர்தல் நெருங்குவதால், இப்போது புதிய கட்சி அறிவிப்பை வெளியிட வேண்டாம்’ என்று சிலர் எஸ்.ஏ.சி-க்கு ஆலோசனை அளித்திருக்கிறார்கள். இப்படி கட்சி பெயரையே அறிவிக்காத நிலையில்தான் ‘தி.மு.க-வுக்கு ஆதரவாகப் பிரசாரம் செய்யத் தயார்’ என்று ஸ்டாலின் முகாமுக்குத் தூது விட்டிருக்கிறார். இதுவரை சிக்னல் வரவில்லை” என்றபடி சிறகுகளை உலுப்பிய கழுகார்,

“பெண் ஐ.பி.எஸ் அதிகாரி பாலியல் புகாரில், சுமார் 75 சாட்சிகளிடம் வாக்குமூலங்களை வாங்கிவிட்டது சி.பி.சி.ஐ.டி. மார்ச் 13-ம் தேதி சிறப்பு டி.ஜி.பி-யை நேரில் வரவழைத்து விசாரணை நடத்தினார் சி.பி.சி.ஐ.டி எஸ்.பி முத்தரசி. பொதுவாக இது போன்ற புகார்களில், பாதிக்கப்பட்டவரின் வாக்குமூலத்தை அடிப் படையாக வைத்தே குற்றம்சாட்டப்பட்ட வர்களைக் கைதுசெய்யலாம். ஆனால், மார்ச் 15-ம் தேதி வரை யாரும் கைது செய்யப்படவில்லை. புகாருக்குள்ளான சிறப்பு டி.ஜி.பி-யை சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என்று பெண் ஐ.பி.எஸ் அதிகாரிகள் போர்க்கொடி தூக்கியும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. இந்த வழக்கை சி.பி.ஐ-க்கு மாற்ற வேண்டும் என்று ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரி கே.ராஜேந்திரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருக்கிறார். விசாரணை என்கிற பெயரில் சி.பி.சி.ஐ.டி போலீஸார் காலதாமதம் செய்வதாக பெண் ஐ.பி.எஸ்-கள் மத்தியில் குமுறல் எழுந்துள்ளது” என்றபடி சிறகுகளை விரித்தார்.

%d bloggers like this: