கலர் மாறுகிறது.. ரூட் திரும்புகிறது.. எடப்பாடியார் பக்கம் அலை வீசுகிறது.. திமுகவின் தவறு இதுதான்!

போற போக்கை பார்த்தால், மறுபடியும் எடப்பாடியாரே ஆட்சியை பிடித்துவிடுவார் போல தெரிகிறது.. காரணம் திமுகவின் செயல்பாடுகள் சில இடங்களில் அதிருப்திகளை பெருமளவு ஈட்டி கொண்டிருக்கிறது.

இந்த முறை திமுகவும், அதிமுகவும் சமபலத்தில் களம் இறங்கி உள்ளன.. இந்த கட்சிகளின் இருபெரும் தலைவர்கள் இல்லாத நிலையில், தேர்தலை எடப்பாடி பழனிசாமியும், முக ஸ்டாலினும் சந்திக்கிறார்கள்..

மற்றொரு பக்கம், இவர்கள் 2 தலைவர்களும் இல்லாத நிலையில், அதிருப்திக்குள்ளானவர்கள் யார் வேண்டுமானாலும் எந்த கட்சிக்கு வேண்டுமானாலும் ஈஸியாக தாவுவதும், மாறுவதும், நடந்து வருகிறது.

திட்டங்கள்
4 வருட சாதனைகள், திட்டங்கள், அறிவிப்புகள் எல்லாவற்றிற்கும் மேலாக தன் மீதான நம்பிக்கையை மூலதனமாக கொண்டு எடப்பாடியார் தேர்தலை சந்திக்க உள்ளார்.. அதேபோல 10 வருட காலம் ஆட்சியை இழந்த திமுகவோ, ஆளும் தரப்பின் மீதான குற்றச்சாட்டுகளை முன்வைத்தும், இலவசமில்லாத தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டும் மக்களை சந்தித்து ஆதரவு திரட்டி கொண்டிருக்கிறது.

திமுக
இதற்கு நடுவில், பல கருத்து கணிப்புகள் வெளியாகின.. அதன்படி, திமுகவே அடுத்து ஆட்சியை பிடிக்கும் என்றும், அதிமுக இந்த முறை வெற்றி வாய்ப்பை இழக்கக்கூடிய வாய்ப்புகள் அதிகம் என்றும் சொல்லப்பட்டு வருகிறது.. இந்த பேச்சு சில மாதங்களாகவே தமிழக அரசியலில் நிலைகொண்டுள்ளது.. இது திமுகவுக்கு சற்று உற்சாகத்தையும் தந்து வருகிறது.

மிதப்பு
ஆனால், இதுவே ஓவர் டோஸ் ஆகிவிட்டது போலும்.. ஓவர் மிதப்பில் இருக்கிறதாம் திமுக.. பெரும்பாலான தொகுதிகளில் அசால்ட்டாக இருக்கிறார்களாம் நிர்வாகிகள்.. தாங்கள்தான் ஜெயிக்க போகிறோம் என்ற நினைப்பில், களப்பணியில் சரியாக வேலை பார்ப்பதில்லையாம்.. தங்கள் தொகுதிக்குள் ஓரளவுதான் செலவு செய்கிறார்களாம்.. இதெல்லாம் தலைமைக்கும் புகாராக போயுள்ளது போலும்..

மெத்தனம்
அதேசமயம், திமுகவின் இப்படி ஒரு மெத்தனத்தை அதிமுக சரியாக பயன்படுத்தி கொண்டு வருகிறது.. பம்பரமாக சுழன்று சுழன்று வேலை பார்க்கிறார்களாம்.. பணத்தை தண்ணீராகவும் இறைக்கிறார்களாம்.. அதுமட்டுமல்ல, மொத்த தென்மண்டலங்கள் தவிர, மத்திய, வட மாவட்டங்களின் சில தொகுதிகளில் அமமுக கூட்டணி பலம் பொருந்தி உள்ளது.. இதனால், திமுக மட்டுமல்ல அதிமுகவுக்கும் சற்று சிக்கல்தான்.. அப்படி இருந்தும், அதிமுக அந்த தொகுதிகளில் கூடுதல் கவனத்தை செலுத்த தொடங்கி விட்டது.

அலட்சியம்
எனவே திமுக தரப்பு சற்று அலட்சியத்துடன் இருபபதாக ஒரு பேச்சு எழுந்துள்ளது.. இப்படித்தான் கடந்த முறை தேர்தலிலும் கடைசி நேரத்தில் கோட்டை விட்டு விட்டார்கள்.. சுமார் 20 தொகுதிகளில் மட்டும் கூடுதல் கவனத்தை திமுக அன்று செலுத்தியிருந்தால், ஆட்சியை பறி கொடுத்திருக்காது.. அதிலும் ஒரு சதவீத வாக்கு சதவீதத்தில் நிச்சயம் பறி கொடுத்திருக்காது.. இதே தவறைதான் இப்போதும் செய்து வருகிறதோ என்ற ஐயம் ஏற்பட்டுள்ளது.

நிஜ கலவரம்
200-க்கு 200 என்று சொல்வதைவிட்டுவிட்டு, இனியாவது நிஜ கள நிலவரத்தை அறிய திமுக தலைமை முன்வர வேண்டும்.. “அடுத்து நாம் தான்” என்று சொல்லி கொண்டே இருப்பது, திமுகவுக்கே அது பலவீனப்படுத்திவிடும்.. இவ்வளவு காலம் பட்ட பாடும் கடைசி நேரத்தில் கைநழுவி விடும்.. அதுமட்டுமல்ல, அதிமுக, திமுக மீதே ஒரு சலிப்பு உண்டாகி, தமிழக மக்கள் வேறு முடிவு எடுக்கவும் இது வழிவகுத்துவிடும் என்பதையும் நம்மால் சொல்லாமல் இருக்க முடியவில்லை..!

%d bloggers like this: