ரவுண்டு கட்டும் பா.ஜ.க… திணறும் தி.மு.க!

ரெய்டு..!’ ஒருகாலத்தில் ஆளும்தரப்பை மிரட்டி வந்த இந்த ஒற்றை வார்த்தை, இப்போது எதிர்த்தரப்பைக் கதிகலங்கச் செய்திருக்கிறது. தி.மு.க தொடர்புடைய இடங்களில் அடுத்தடுத்து பாயும் ரெய்டு அஸ்திரங்களால், ஸ்வீட் பாக்ஸ்கள் முடங்க ஆரம்பித்திருக்கின்றன.
அ.தி.மு.க மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கான ‘சத்து

மாத்திரைகள்’ தமிழகம் முழுவதும் வளமாகவும் பத்திரமாகவும் சென்று சேர்ந்திருக்கும் நிலையில், பூத் கமிட்டிக்குக் கொடுக்கக்கூட பணம் இல்லாமல் திண்டாடு கிறது தி.மு.க தரப்பு. தொழிலதிபர்கள், முக்கியஸ்தர்களிடம் கொடுத்துவைத்திருந்த பணத்தை வெளியே எடுக்க முடியாதபடி வருமான வரித்துறை நெருக்குவதால், அறிவாலயத்தின் அலறல் சத்தம் அதிகமாகியிருக்கிறது. கீழ்மட்டத்து கான்ட்ராக்டர்கள் முதல் பெரிய பெரிய கஜானா பார்ட்டிகள் வரை எந்தெந்த வழிகளிலெல்லாம் தி.மு.க தரப்புக்கு சப்போர்ட் கிடைக்குமோ அத்தனை வழிகளிலும் செக்போஸ்ட் போட்டு மறிக்கிறது பா.ஜ.க. இந்த ராக்கெட் தாக்குதலை தி.மு.க எப்படிச் சமாளிக்கப்போகிறது என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வி!

அறிவாலயத்தில் பந்தா… தொகுதியில் திணறல்!

தி.மு.க வேட்பாளர்களுக்கான நேர்காணலின்போது, பங்கேற்ற அனைவரிடமும் கேட்கப்பட்ட முக்கியக் கேள்வி, “எவ்வளவு செலவு செய்ய முடியும்?” பலரும், “ஐந்து முதல் பத்து கோடி ரூபாய் வரையில் செலவழிக்க முடியும்” என்று சொல்லி தலைமையையே மிரளவைத்தனர். இப்படிச் சொன்னவர்களையே பெரும்பாலும் வேட்பாளர்களாகவும் களத்தில் இறக்கியது தி.மு.க. ஆனால், நேர்காணலில் பந்தா காட்டிய உடன்பிறப்புகள் பலரும் களத்தில் கரன்சி இல்லாமல் திணறுவதைக் கண்டு டென்ஷனிலிருக்கிறது தி.மு.க தலைமை.

தென் மாவட்டத்தைச் சேர்ந்த தி.மு.கழக எம்.எல்.ஏ ஒருவர், “நான் பத்துக் கோடி ரூபாய் சொந்தக் காசைச் செலவழிப்பேன்” என்று சவடால் விட்டுத்தான் சீட்டு வாங்கினார். வேட்புமனுத் தாக்கலன்று வண்டிக்கு தலா ஐந்தாயிரம் வேண்டும் என்று தொகுதி நிர்வாகிகள் கேட்க, “என்கிட்ட எங்க பணம் இருக்கு… ரெண்டாயிரம்தான் முடியும்” என்று குண்டை வீசியிருக்கிறார் அந்த எம்.எல்.ஏ. அரண்டுபோன நிர்வாகிகள், “நீங்க செலவு பண்ணுவீங்க ன்னுதானே சீட் கொடுத்தாங்க. இப்ப இப்படி கைவிரிக்குறீங்களே?” என்று கோபமாகக் கேட்க, “எனக்கு ஸ்பான்சர் செய்யறதா சொன்ன தொழிலதிபர், கைவிட்டுட்டார். ரெண்டு கோடி ரூபாயை மாவட்டச் செயலாளர்கிட்ட கொடுத்துட்டேன். அந்தப் பணமும் வரலை. என்கிட்ட பணம் இல்ல. தலைமை கொடுத்துச்சுன்னா, உங்களுக்குப் பிரிச்சுத் தர்றேன்” என்று கூலாகச் சொல்லிவிட்டாராம். பல தொகுதிகளிலும் இதே நிலைதான் என்று புலம்புகிறார்கள்.

“பூத் கமிட்டிக்குப் பணமில்லை!”

தேர்தல் களத்தில் மிகப்பெரிய செலவாகப் பார்க்கப்படுவது பூத் கமிட்டிக்குக் கொடுக்கப்படும் பணம்தான். அந்த விஷயத்தில் முந்திக் கொண்டிருக்கும் அ.தி.மு.க., முதல் ரவுண்டாக ஒவ்வொரு பூத்துக்கும் பத்தாயிரம் ரூபாய் கொடுத்துவிட்டார்களாம். தி.மு.க-வில் முன்னாள் அமைச்சர்கள், முக்கிய நிர்வாகிகளைத் தவிர பல வேட்பாளர்கள் பூத் கமிட்டிக்குத் தேவையான பணத்தைக் கொடுக்க முடியாமல் திண்டாடுகிறார்கள். நம்மிடம் பேசிய கொங்கு மண்டல தி.மு.க மாவட்டச் செயலாளர் ஒருவர், “பத்து வருஷமா நாங்க ஆட்சியில இல்லை… வேட்புமனுத் தாக்கல் செய்யவே பல தி.மு.க வேட்பாளர்கள் அடுத்தவரிடம் எதிர்பார்க்கும் நிலைதான் உள்ளது. தலைவர்கள் பிரசாரத்துக்கு வரும்போது 40 லட்சத்துக்குக் குறையாமல் செலவாகிறது. மாவட்டத்தில், ‘யார் இந்தச் செலவைப் பிரித்துக்கொள்வது?’ என்பதில் ஏகப்பட்ட முரண்பாடுகள், சர்ச்சைகள் வருகின்றன. பக்கத்துத் தொகுதிக்குத் தலைவர் வரும்போது, ஒட்டிக்கொண்டு நின்றுவிடலாம் என்று பலரும் கணக்கு போடுகிறார்கள். தேர்தல் அலுவலகம் அமைப்பதற்கே தலைமையை எதிர்பார்த்துக் காத்திருக்கும் நிலைதான் இருக்கிறது.

பேராசிரியர் அன்பழகனின் பேரன் வெற்றி அழகன், வில்லிவாக்கம் தொகுதியில் போட்டியிடுகிறார். மார்ச் 18-ம் தேதி வரை அவர் தேர்தல் அலுவலகம் அமைக்கவில்லை. இதுகுறித்து நிர்வாகிகள் அவரிடம் கேட்டபோது, ‘தலைமை யிலிருந்து செலவுக்கு ஏதும் வரவில்லை’ என்று புலம்பியிருக்கிறார். ஆனால், அவரை எதிர்த்துப் போட்டியிடும் அ.தி.மு.க-வின் ஜே.சி.டி.பிரபாகர், தேர்தல் அலுவலகம் அமைத்து ‘சத்துமாத்திரை’ விநியோகம் வரை வீரியமாகச் செயல்பட ஆரம்பித்துவிட்டார். தேர்தல் தேதி நெருங்க நெருங்க, கையில் பணம் இல்லாதது தி.மு.க வேட்பாளர்களைக் கதிகலங்க வைத்திருக்கிறது” என்று ஆதங்கத்தைக் கொட்டித் தீர்த்தார்.

உஷாரான தலைமை!

தி.மு.க வேட்பாளர்கள், நிர்வாகிகளின் புலம்பல் குறித்து, தி.மு.க தலைமை நிர்வாகி ஒருவரிடம் பேசினோம். “தேர்தலுக்கு இரண்டு நாள் முன்னதாகச் செய்யப்படும் ‘சத்து’மாத்திரை விநியோகத்தைக் கணக்கிட்டே தலைமையிலிருந்து கஜானா திறக்கப்படும். அதற்கு முன்பாக உள்ள செலவை வேட்பாளர்கள்தான் பார்த்துக்கொள்ள வேண்டும். முன்கூட்டியே ஸ்வீட் பாக்ஸ்களைக் கொடுத்தால் பலரும் பதுக்கிவிடுகிறார்கள். 2016 சட்டமன்றத் தேர்தலில் முன்கூட்டியே கொடுத்து, அது பதுக்கப்பட்டதால்தான் தி.மு.க ஆட்சியைப் பிடிக்க முடியாமல்போனது. இந்தமுறை அந்தத் தவறு நிகழ்ந்துவிடக் கூடாது என்பதில் தலைமை உஷாராக இருக்கிறது. தேர்தலுக்கு இரண்டு நாள்களுக்கு முன்பாக பாக்ஸுகளைக் கொடுத்தால் போதும் என்று தலைமை தெளிவாக இருக்கிறது” என்றார்.

சொந்தக் கட்சிக்காரர்கள் ஒருபுறம் என்றால், தி.மு.க கூட்டணியில் போட்டியிடும் வேட்பாளர்களும் ஸ்வீட் பாக்ஸ்களை எதிர்பார்த்து அறிவாலயத் தை நச்சரிக்கிறார்களாம். தன் வாரிசுக்கு சீட் வாங்கியுள்ள முன்னாள் கதர்ச்சட்டைத் தலைவர் ஒருவர், “என்னிடம் இப்போது 25 லட்சம் ரூபாய் மட்டுமே உள்ளது. தி.மு.க-விடம் சொல்லி செலவுக்குப் பணம் வாங்கித் தாருங்கள்” என்று ஓப்பனாகவே சத்தியமூர்த்தி பவனில் நடந்த கூட்டத்தில் கேட்டிருக்கிறார். இதைக் கேட்டுக் கடுப்பான காங்கிரஸ் மாநிலத் தலைமை, “சீட் வாங்கவே நம்மைப் படாதபாடு படுத்திவிட்டார்கள். இப்போது நோட்டையும் கேட்டால் நொங்கெடுத்துவிடுவார்கள். அவர்களாகக் கொடுத்தால் வாங்கிக் கொள்ளுங்கள்” என்று டோஸ்விட்டதாம்.

கஜானாவுக்குக் குறி… திணறும் தி.மு.க

தி.மு.க சந்தித்துள்ள இந்த நெருக்கடி, வேட்பாளர்களின் தவறான உறுதிமொழியால்தான் ஏற்பட்டிருக்கிறது என்பது ஒருபக்கம் இருந்தாலும், பல்வேறு இடங்களில் தலைமை கொடுத்துவைத்திருந்த ‘ஸ்வீட் பாக்ஸ்’களுக்கு பா.ஜ.க வேட்டு வைத்திருப்பதுதான் நெருக்கடிக்குப் பிரதான காரணமாகக் கூறப்படுகிறது.

மார்ச் 17-ம் தேதி, சென்னையிலுள்ள பிரபலமான தங்க நகைக்கடை உரிமையாளரின் வீட்டை சல்லடையிட்டிருக்கிறது வருமான வரித்துறை. சமீபத்தில் தி.மு.க-வின் மருமகன் தரப்பைச் சந்தித்த அந்த நகைக்கடை உரிமையாளர், தேர்தல் செலவுக்காக 25 ஸ்வீட் பாக்ஸ்கள் தருவதாக உத்தரவாதம் அளித்திருந்தாராம். நுங்கம்பாக்கத்திலுள்ள ஒரு சமூகத்தின் சங்கம் மூலமாக இந்த பாக்ஸ்கள் கைமாறினவாம். எப்படியோ இதை மோப்பம் பிடித்த வருமான வரித்துறை, சம்பந்தப்பட்ட நகைக்கடை உரிமையாளரின் வீடு, அலுவலகம், நகைக்கடைகளில் சோதனையால் புரட்டி எடுத்துவிட்டதாகச் சொல்கிறார்கள்.

அதேபோல, சிவகாசியில் பட்டாசு ஆலை வைத்திருக்கும் இரண்டு முன்னணி நிறுவனங்களிடமிருந்து தி.மு.க தரப்புக்கு ஸ்வீட் பாக்ஸ்கள் வர திட்டமிடப்பட்டிருந்ததாம். கடந்த ஒரு மாதமாக விருதுநகர் மாவட்டத்தில் சோதனைகளைத் துரிதப்படுத்தியிருக்கும் ஜி.எஸ்.டி புலனாய்வுப் பிரிவினர், சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் ரகசியங்களைத் தோண்ட ஆரம்பித்திருக்கிறார்கள். வெளிறிப்போன அந்தப் பட்டாசு நிறுவனங்கள், தற்போது தி.மு.க தலைமைக்கு உறுதியளித்திருந்த ஸ்வீட் பாக்ஸ்களைத் தருவதற்குத் தயங்குகின்றனவாம். அதேபோல, பிரபல ஜவுளி நிறுவனத்திடமும், ஜுவல்லரி நிறுவனத்திடமும் ஸ்வீட் பாக்ஸ் விநியோகத்துக்கு டீல் பேசியிருந்தது தி.மு.க. அவர்களும் கஜானாவைத் திறப்பதற்கு பயந்து நடுங்குகிறார்கள்.

கிஷண் ரெட்டி – பி.எல்.சந்தோஷ்
கிஷண் ரெட்டி – பி.எல்.சந்தோஷ்
“ஏன் பிரச்னையில சிக்குறீங்க?”

தி.மு.க-வுக்கு கஜானா சாவியைத் தரத் தயாராகும் தொழிலதிபர்கள், முக்கியஸ்தர்களைச் சுற்றிவளைத்து பா.ஜ.க ரவுண்டு கட்டுவதால், அச்சத்தில் சாவிக்கொத்துகள் ஒளிந்துகொள்ள ஆரம்பித்திருக்கின்றன. சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு தி.மு.க வேட்பாளருக்கு முழு செலவுத் தொகையையும் ஏற்றிருக்கிறது ஒரு சர்ச்சைக்குரிய நிறுவனம். அந்த வேட்பாளர் வெற்றிபெற்றால், தி.மு.க தலைமை மூலமாகச் சில அனுகூலங்களையும் சாதித்துக்கொள்ள அந்த நிறுவனம் திட்டமிட்டிருந்தது. சில நாள்களுக்கு முன்பு அந்நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியைத் தொடர்புகொண்ட டெல்லி உயர் ஐ.ஏ.எஸ் அதிகாரி ஒருவர், “ஏன் தேவையில்லாத பிரச்னையில சிக்குறீங்க… நீங்க அந்த வேட்பாளருக்கு உதவுறதெல்லாம் ‘நோட்’ போட்டு மத்திய உள்துறை வரைக்கும் வந்துவிட்டது. அதை வருமான வரித்துறைக்கு அனுப்ப திட்டமிட்டிருந்தாங்க. நான்தான் கஷ்டப்பட்டுத் தடுத்தேன். தேர்தல் முடியுற வரைக்கும் எதுவும் பண்ணாம அமைதியா இருங்க” என்று சற்று மிரட்டலாக அட்வைஸ் செய்திருக்கிறார். உஷாரான நிறுவனம், தி.மு.க வேட்பாளர் இருக்கும் திசையில்கூட இப்போது தலைவைத்துப் படுப்பதில்லையாம்.

இந்தத் தேர்தலில் தி.மு.க-வின் வெற்றிவாய்ப்பைத் தடுப்பதற்கான பிரதான ஆயுதமாக பா.ஜ.க கையிலெடுத்திருப்பதுதான் இந்த ‘கஜானா முடக்க அஸ்திரம்.’ மார்ச் 22-ம் தேதிக்குப் பிறகு, இந்தத் தாக்குதல் இன்னும் வீரியமடையும் என்கிறது கமலாலயம் வட்டாரம். நம்மிடம் பேசிய பா.ஜ.க மூத்த தலைவர் ஒருவர், “சட்டமன்றத் தேர்தலைப் பொறுத்தவரை ஸ்வீட் பாக்ஸ்களின் விளைவு என்பது கணிசமாக பாதிப்பை ஏற்படுத்தும். அந்தவகையில் தி.மு.க-வை முடக்குவதுதான் எங்களின் பிரம்மாஸ்திரம். தி.மு.க-விலிருக்கும் கஜானா நபர்களை நோட்டமிட தனித்தனி டீம்களைக் களத்தில் இறக்கியிருக்கிறது வருமான வரித்துறை. மத்திய உள்துறை இணையமைச்சர் கிஷண் ரெட்டிதான் தமிழகத் தேர்தல் பொறுப்பாளராக இருக்கிறார். அவர் மூலமாகவும், பா.ஜ.க தேசிய அமைப்புச் செயலாளர் பி.எல்.சந்தோஷ் மூலமாகவும் தி.மு.க-வுக்குச் செக் வைக்கும் வேலைகள் துரிதமாகியிருக்கின்றன. கடைசி நேர ‘சத்து’ மாத்திரை விநியோகத்துக்கு ஸ்வீட் பாக்ஸ்கள் இல்லாமல் தி.மு.க திண்டாடப் போவது நிச்சயம். அதையும் மீறி தி.மு.க-வினர் விநியோகித்தால், அந்தச் சில தொகுதிகளில் தேர்தல் ரத்துசெய்யப்பட்டாலும் ஆச்சர்யப் படுவதற்கில்லை” என்று குண்டை வீசினார்.

பா.ஜ.க-வின் இந்தத் தாக்குதலை உணர்ந்துதான், மார்ச் 18-ம் தேதி கோவில்பட்டியில் செய்தியாளர்களிடம் பேசிய தி.மு.க மகளிரணிச் செயலாளர் கனிமொழி, “வருமான வரித்துறை சோதனைகள் மூலம் எதிர்க்கட்சியினரை அச்சுறுத்துகிறது பா.ஜ.க. இதற்கெல்லாம் நாங்கள் பயப்படப்போவதில்லை” என்று பதிலளித்திருக்கிறார். தி.மு.க-வின் மிக மூத்த தலைவர் ஒருவரிடம் பேசினோம், “இந்த ரெய்டெல்லாம் வரும்னு தெரியாமலா அரசியல் செய்யுறோம்… எது எப்படி போய்ச் சேரணுமோ, அது அப்படி போய்ச் சேந்துரும்” என்று கண்சிமிட்டுகிறார். இந்தக் கண்ணாமூச்சி ஆட்டத்தில், தி.மு.க திணறப்போகிறதா… அல்லது பா.ஜ.க-வைத் திணறடிக்கப்போகிறதா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்!

*****

ரவுண்டு கட்டும் பா.ஜ.க… திணறும் தி.மு.க!
‘ஆபரேஷன் பூத்’ – அ.தி.மு.க ரூட்!

தமிழக முன்னாள் உளவுத்துறை ஐ.ஜி-யான சத்தியமூர்த்தி. பணி ஓய்வுக்குப் பிறகு முதல்வரின் நெருக்கமான ஆலோசகராக மாறிவிட்டார். ஆளுங்கட்சித் தரப்பில் ‘சத்து’ மாத்திரைகளை வாக்காளர்களுக்குக் கொண்டு சேர்க்கும் திட்டத்துக்கு ‘ஆபரேஷன் பூத்’ என்று பெயரிடப்பட்டிருக்கிறதாம். இதை மேற்பார்வையிடுவதே சத்தியமூர்த்திதான் என்கிறார்கள். இது பற்றி போலீஸ் அதிகாரி ஒருவர் நம்மிடம், “வாக்காளர்களின் தலைக்கு 500 சத்து மாத்திரைகள் வீதம் கொடுப்பதற்கு, 10 ஸ்வீட் பாக்ஸ்கள் தொகுதிவாரியாக ஆளும்தரப்பில் சென்று சேர்ந்திருக்கிறது. கோவையில் இரண்டு பெண் போலீஸ் அதிகாரிகள், அவர்களின் கணவர்கள் கொண்ட நாலு பேர் டீம்தான் கொங்கு மண்டலத்துக்கான ஸ்வீட் பாக்ஸ் சப்ளையைச் செய்கிறது. இந்த பாக்ஸ்களை போலீஸ் வாகனத்தில்தான் பாதுகாப்பாக எடுத்துச் சென்றிருக்கிறார்கள். மார்ச் 27-ம் தேதிக்குப் பிறகு, ஸ்வீட் பாக்ஸ்களை இடம் மாற்றிவைக்கத் திட்டமிட்டுள்ளனர். அப்போது, மினி கன்டெய்னர் லாரிகளை ஆங்காங்கே பின்தொடர்ந்து வர ஏற்பாடு செய்திருக்கிறார்கள். ஸ்வீட் பாக்ஸ் கொண்டு செல்லும் போலீஸ் வாகனத்தை எதிர்க்கட்சியினர் முற்றுகையிட்டால், உடனடியாக அந்த லாரிகளை ரோட்டின் குறுக்கே நிறுத்திவிட்டு ஓடிவிடுவார்கள். மக்களின் கவனம் திசை திரும்பியவுடன், அந்த களேபரத்தில் போலீஸ் வாகனத்தில் இருப்பவர்கள் தப்பி ஓடிவிட வேண்டும் என்பதுதான் திட்டம்” என்றார் விலாவரியாக.

*****

ரவுண்டு கட்டும் பா.ஜ.க… திணறும் தி.மு.க!
புதுச்சேரி மாநிலத்தில் நல்லெண்ணெய் வியாபாரத்தில் கொடிகட்டிப் பறக்கும் தி.மு.க பிரமுகரை, டெல்லியிலிருந்து வந்த இரண்டு ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் சமீபத்தில் சந்தித்திருக்கிறார்கள். பா.ஜ.க-வுக்கு ஆதரவான நிலைப்பாட்டைத் தேர்தலுக்குப் பிறகு எடுக்குமாறு அழுத்தம் கொடுத்திருக்கிறார்கள். அதற்கு தி.மு.க பிரமுகர் மறுக்கவும், ‘இப்பல்லாம் நல்லெண்ணெயில கலப்படம் அதிகமா வர்றதா புகார் வருதே!’ என்று பூடகமாகக் குண்டை வீசியதாம் ஐ.ஏ.எஸ்-கள் தரப்பு. அரண்டுபோன அந்த தி.மு.க பிரமுகர், “ஐயா, என் தொழில்ல கைவெச்சுறாதீங்க” என்று சரண்டராகிவிட்டதாகச் சொல்கிறார்கள். அதேபோல, அ.ம.மு.க தொடர்புடைய சென்னையின் பிரபல வைர வியாபாரியையும் தங்கள் கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டுவந்திருக்கிறது அந்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் தரப்பு. `தி.மு.க தரப்புக்குக் கொடுக்கப்படுவதுபோல நெருக்கடி வேண்டாம். அதேசமயம், இந்தத் தேர்தலில் தினகரனுக்கு எந்தச் சிறு உதவியும் செய்யக் கூடாது’ என்று மேலிருந்து உத்தரவிடப்பட்டிருக்கிறதாம்!

%d bloggers like this: