எபிலெப்சி: A – Z ; வாழ்வுக்கு சாவி கொடுப்போம், ‘வலிப்பு’க்கு அல்ல! – Dr. S. தினேஷ் நாயக்

இந்த நோயை சரி பண்ணிட்டு வந்தால் வா. இல்லைனா உன் அம்மா வீட்டிலேயே இருந்துடு’ என்று குழந்தை பிறந்த கையோடு கணவனால் விரட்டப்படுகிறார்

அனிதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). என்ன செய்வது என்று தெரியாமல் ‘கிளெனீகல்ஸ் குளோபல் ஹெல்த் சிட்டி’ மருத்துவமனை நரம்பியல் துறையை அணுகிய அவரைப் பரிசோதித்ததில், சிறு வயதில் ஏற்பட்ட மூளைக்காய்ச்சலால் இன்று வரை கை-கால் வலிப்பு (Epilepsy) வருகிறது என்பதைத் தெரிந்துகொண்டோம். ஒரு சிறிய சர்ஜரி, இப்போது பளிங்குமாதிரி பளிச் என்று ஆகிவிட்டது அனிதாவின் வாழ்க்கை. 20+ ஆண்டுகால வலிப்பு போயே போச்சு. இப்போது கணவரும் தன் தவற்றை உணர்ந்து மனைவியுடன் இணைந்துவிட்டார். ஆனால்…

இன்னும் ஒட்டிக்கொண்டிருக்கும் புரளிகள்…

அனிதா போலவே, எல்லா வலிப்பு நோயாளிகளுக்கும் தகுந்த டிரீட்மென்ட் கிடைத்துவிடுவதில்லை. இதனால் ஆயிரக்கணக்கான இளம் ஆண்களுக்கும் பெண்களுக்கும் கை-கால் வலிப்பு எனும் உடற்குறைபாட்டால் திருமண உறவில் குழப்பம் ஏற்படுகிறது. பலருக்குத் திருமணம் தள்ளிப்போகிறது. கை-கால் வலிப்புக்கும் திருமணத்துக்கும் சம்பந்தமே இல்லை!

வலிப்பு இருந்தால் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாது, ஸ்போர்ட்ஸில் கலந்துகொள்ள முடியாது, சாதாரண பள்ளியில் படிக்க முடியாது, வண்டி ஓட்ட முடியாது என்றெல்லாம் அடுக்கடுக்காக பல வதந்திகள் சமுதாயத்தில் நிலவி வருகின்றன. ஒரு பெரிய குப்பைத் தொட்டியில் இவற்றைத் தயவு செய்து எறிந்துவிடுங்கள்!

கை-கால் வலிப்பு என்றால் என்ன?

மூளை என்பது ஒரு எலக்ட்ரிக் சர்க்யூட் போல… மின்னணு சமிக்கைகள் மூலம் தொடர்ந்து உடலுக்குக் கட்டளைகளை அனுப்பிக்கொண்டே இருக்கிறது. மூளைக்குள் அங்கும் இங்கும் அலைபாயும் மின்சாரம் (நீங்கள் டி.வி போட்டு பார்க்கும் அளவு பெரிதல்ல) திடீரென கட்டுமீறி அதிகரித்தால், மூளை சிக்னல்கள் உடலின் பகுதிகளை தன்னிச்சையாகவும் ஆக்ரோஷமாகவும் இயங்கச் செய்கின்றன. அதிக மின்சாரம் பாய்ந்தால் எலக்ட்ரிக் சாதனங்கள் வெடிக்கின்றன அல்லவா? அதுபோன்றதொரு விளைவுதான் இங்கேயும் நடக்கிறது. வலிப்பு என்பது மூளை நரம்புகள் சார்ந்த ஒரு குறைபாடு.

கை கால்கள் இழுத்துக்கொண்டு வாயில் நுரை தப்புவது, திடீரென புத்தி பேதலித்தது போல ஆவது, கண்கள் இருட்டுவது அல்லது குவியத்தில் (Focus) மாறுபாடு, திடீரென எங்கிருக்கிறோம் என்ன செய்துகொண்டிருக்கிறோம் என்று புரிந்துகொள்ள முடியாமல் திகைத்துப்போவது – இவையெல்லாம் வலிப்புக்கான அடையாளங்கள். மூளையில் எந்தப் பகுதியில் பாதிப்பு இருக்கிறதோ, அதனுடன் தொடர்புள்ள உடல் பாகங்கள் வலிப்பின்போது கட்டுப்பாட்டில் இல்லாமல் போகின்றன…

ஏன்தான் வருகிறது?

மூளைக்குச் செல்லும் ஆக்ஸிஜன் குறைவது, ரத்த சர்க்கரை குறைவு, பிரசவத்தின்போது குழந்தைக்கு மண்டையில் ஏற்படும் அழுத்தம்/பாதிப்பு, பிறந்தவுடனே குழந்தை அழாமல் போவது, மூளை வளர்ச்சியில் குறைபாடு, தலையில் ஏற்படும் வலுவான காயங்கள், அதிர்ச்சி, மூளைச் செல்களில் ஏற்படும் நோய்த்தொற்று/அலர்ஜி, மூளைக் கட்டி, பக்கவாதம், மரபியல் – ஆகியவை வலிப்பின் முக்கிய காரணங்கள். இந்தக் குறைபாடு பாலினம் & வயது பாகுபாடு இல்லாமல் வரக்கூடியது. அதீத மன அழுத்தம், உளவியல் ரீதியான பாதிப்பு உள்ளவர்களுக்கு வலிப்பு ஏற்பட 7 மடங்கு அதிக வாய்ப்புள்ளது.

இன்னும் சாவி கொடுக்குறீங்களா?

வலிப்பு என்றால் இரும்புச் சாவியைத் தேடுகிறோம் நம்மில் பலர். சாவி கொடுக்க நோயாளி என்ன கடிகாரமா? அது வேண்டாம். சாதாரணமாக ஒருவருக்கு வரும் கை-கால் வலிப்பு அதிகபட்சம் இரண்டு நிமிடங்கள்தான் நீடிக்கும். அதுவரை பொறுங்கள். பாதிக்கப்பட்டவரின் உடல் இறுக்கமாக இருக்கும்போது அவர் கையில் எந்தவிதப் பொருளையும் திணிக்காதீர்கள், பக்கத்தில் உள்ள கூர்மையான சாமான்களைத் தள்ளி வையுங்கள், இதனால் எலும்பு முறிவு, தசைப்பிடிப்பு ஏற்படாமல் தவிர்க்கலாம்.

வலிப்பு அடங்கி உடல் சற்று தளர்ந்தவுடன், நோயாளியை ஏதாவது ஒருபக்கம் சாய்த்து, வாயில் உமிழ்நீர் இருந்தால் அதை விரல்விட்டு எடுத்து விடுங்கள். காரணம் இது தொண்டையில் அடைத்துக்கொள்ள வாய்ப்புண்டு. சற்று நேரத்துக்கு தண்ணீர், உணவு எதுவும் கொடுக்க வேண்டாம்.

இந்த வகை வலிப்பு மற்றும் மேலே குறிப்பிட்ட அறிகுறிகள் முதல்முறை ஏற்பட்டால், உடனே நரம்பியல் மருத்துவரை நாட வேண்டும். ஏற்கனவே வலிப்புக்கு மருந்துகள் எடுத்துக்கொள்பவர் என்றால், கொஞ்ச நேரம் பொறுங்கள். சில நிமிடங்களில் மீண்டும் வலிப்பு/அறிகுறிகள் ஏற்பட்டால், அப்போது உடனே டாக்டரை அணுகுங்கள்.

பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு இந்த நோய் மற்றும் முதல் உதவி குறித்து கற்பிக்க வேண்டும். இளம் வயதினருக்கு இப்பாதிப்பு இருப்பின், கவுன்சலிங் கொடுத்து அவர்களை உற்சாகப்படுத்த வேண்டும்.

பொதுவாக, வலிப்பு உள்ளவர்கள் எல்லா வேலையிலும் ஈடுபடலாம். மருந்து எடுத்துக்கொள்ளும் நோயாளிகளுக்கு 6 – 12 மாதங்கள் வரை வலிப்பு வரவில்லை என்று உறுதியானால், மருத்துவரின் ஆலோசனை பெற்று வாகனம் ஓட்டலாம்! மற்றபடி பைலட், பஸ், டிரெயின் போன்ற பொது வாகன ஓட்டுநர் போன்ற பணிகளை பொதுமக்களின் பாதுகாப்பு கருதி தவிர்க்க வேண்டும். ஆழமான மற்றும் ஆள் இல்லாத பகுதியில் நீச்சல் வேண்டாம். நைட் ஷிஃப்ட் வேண்டாம், வலிப்பு நோயாளிகளுக்கு இயற்கையான இரவுத் தூக்கம் மிக மிக முக்கியம் (இவர்களுக்கு மட்டுமல்ல எல்லோருக்கும்தான்!).

டிரீட்மென்ட்டில் என்ன நடக்கிறது?

கடந்த நூறு வருடங்களில் ஒற்றை இலக்கமாக இருந்து வந்தன வலிப்பு மருந்துகள், ஆனால் கடந்த 25 வருடங்களில் மட்டும் 17 புது மருந்துகள் ஆயுவுக்குட்படுத்தப்பட்டு நடைமுறைக்கு வந்துள்ளன. என் 50+ ஆண்டுகால அனுபவத்தில் சொல்கிறேன், தற்போதுள்ள மருந்துகளை வைத்து, 70% நோயாளிகளைச் சரி செய்யலாம்! மீதி நபர்களை அறுவை சிகிச்சை மூலம் சரி செய்யலாம். மிஞ்சிப்போனால் 1 – 2 % நோயாளிகள் சீரியஸாக பாதிக்கப்படலாம், இது பொதுவாக மிகக் குறைவு.

மருந்தா/அறுவை சிகிச்சையா என்பதை நோயாளியின் வரலாறு, வயது, நோயின் நிலை, பொருளாதாரப் பின்னணியை வைத்துதான் முடிவு செய்ய வேண்டும். அனிதாஅரசுக் காப்பீடு மூலம் இலவசமாக சர்ஜரி செய்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது கிளெனீகல்ஸ் குளோபல் ஹெல்த் சிட்டியின் எபிலெப்சி யூனிட்டில் அனுபவமிக்க நரம்பியல் வல்லுனர்கள், வலிப்பு சிறப்பு மருத்துவர்கள், அறுவை சிகிச்சை நிபுணர்கள், நரம்பியல் கதிர்வீச்சு நிபுணர்கள், உளவியல் மருத்துவர்கள், பேச்சுப் பயிற்சியாளர்கள் உள்ளனர். மேலும், EEG, MRI, PET போன்ற அனைத்து வகையான நவீன பரிசோதனை வசதிகள் இங்கு இருப்பது குறிப்பிடத்தக்கது.

எனவே, வலிப்பைப் பார்த்தெல்லாம் பயப்படாதீர்கள். ஒதுங்காதீர்கள், ஒதுக்காதீர்கள், உற்சாகமாக வாழ்ந்து, வாழ்க்கைக்கு சாவி கொடுங்கள், கைகளுக்கு அல்ல!

%d bloggers like this: