ஓ.பி.எஸ்., விளக்கம்; இ.பி.எஸ்., திருப்தி

அ.தி.மு.க.,வின் ஒருங்கிணைப்பாளராக ஓ.பி.எஸ்., இருந்தாலும், கட்சி சம்பந்தப்பட்ட முக்கியமான முடிவுகள் அனைத்தையும், முதல்வர் என்ற ரீதியில், இ.பி.எஸ்.,சே எடுத்து விடுகிறார். இதனால், இருவருக்கும் உரசல் இருந்து கொண்டே இருக்கிறது.

பிணக்குகள் மேலோங்கி, அது பிளவுக்கு இட்டுச் செல்லுமானால், தினகரனுக்கு வாய்ப்பாக அமைந்து விடும் என்பதை, இரு தரப்பும் புரிந்திருக்கிறது. அதனால், இருவரும் ஒருமித்துமுடிவெடுப்பது போல காட்டப்படுகிறது. சசிகலா விவகாரத்தில், இருவருக்குமான பூசல் வெளியே தெரிய ஆரம்பித்தது. சசிகலாவுக்கும், தினகரனுக்கும் இனிமேல், அ.தி.மு.க.,வில்நிச்சயமாக இடமில்லை என்பது, இ.பி.எஸ்., நிலைப்பாடு. பிரதமர் உள்ளிட்ட, பா.ஜ., தலைவர்கள் வற்புறுத்திய போதும், நேரடியாக எதிர்ப்பை சொல்லிவிட்டார்.

ஆனால், துணை முதல்வர் ஓ.பி.எஸ்., அப்படி நினைக்கவில்லை. தஞ்சை, திருவாரூர்,புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை, விருதுநகர், துாத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில், அதிகமுள்ள முக்குலத்தோரில் பலர், சசிகலாவுக்காக, அ.ம.மு.க.,வுக்கு ஓட்டளிக்கலாம் என, அவர் நினைக்கிறார். இதனால், இதுவரை மவுனம்காத்ததை கைவிட்டு, சசிக்கு சாதகமான கருத்துக்களை, பேட்டிகள் வாயிலாக வெளியிடஆரம்பித்துள்ளார். தென் மாவட்டங்களை மையமாக வைத்து, அரசியல் செய்யும் தனக்கு, இது உதவும் என்றும், அவர் நம்புகிறார்.
‘ஜெயலலிதா மரணத்தில், சசிகலா மீது எனக்கு சந்தேகம் இல்லை’ என்பது, ஓ.பி.எஸ்., ‘லேட்டஸ்டாக’ சொன்ன கருத்து. அப்படி என்றால், விசாரணை கமிஷன் கேட்டது எதற்காக? ‘சசிகலா மேல் சில பழிகள் விழுந்தன. அவற்றிலிருந்து அவர் மீண்டு, நிரபராதி என்று நிரூபிக்கத் தான், நீதி விசாரணை கேட்டேன். அவர் மீது, எனக்கு நல்லெண்ணம் தான் உள்ளது. அ.தி.மு.க., இப்போது ஜனநாயக முறைப்படி இயங்குகிறது. ‘ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற, இந்த முறையை சசிகலா ஏற்றால், அவர் அ.தி.மு.க.,வில் சேருவதைபரிசீலிக்கலாம்’ என, தந்தி ‘டிவி’ பேட்டியில் சொன்னார்.

இதை பார்த்து, இ.பி.எஸ்., அதிர்ச்சி அடைந்தார். ‘தேர்தலுக்குப் பின், சசிகலா பக்கம் ஓ.பி.எஸ்., போய்விடுவார்’ என, சிலர் எச்சரித்தது சரிதானோ என்ற, குழப்பம் ஏற்பட்டது. தொண்டர்களும் குழம்பினால், தேர்தலில் அது எதிரொலிக்கும் என, கவலை பட்டவர், பிரசாரத்திற்காக சேலம் வந்த ஓ.பி.எஸ்.,சை, நேரில் சென்று பார்த்தார். இருவரும் மனம் விட்டு பேசி, தெளிவு அடைந்துள்ளனர் என, இரு தரப்புக்கும் நெருக்கமானவர்கள் கூறினர். ‘கட்சி என்று வரும் போது, என்னுடைய விருப்பு வெறுப்புகளுக்கு, இடம் கொடுக்க மாட்டேன் என்பது, உங்களுக்கே தெரியும்.

தென் மாவட்டங்களில், 60 தொகுதிகள் இருக்கின்றன. ‘சசிகலாவுக்கு சாதகமாக, நாலு வார்த்தை சொன்னால், முக்குலத்தோர் நம்மை எதிரியாக பார்க்க மாட்டார்கள். அதனால் தான், அப்படி சொன்னேன். ஆனால், என் செயல்பாடுகளை கட்சிக்கானது என கருதாமல், சிலர் சந்தேகமாகவே பார்க்கின்றனர்’ என, ஓ.பி.எஸ்., விளக்கமாக பேசியிருக்கிறார். இதனால், இ.பி.எஸ்., திருப்தி அடைந்ததோடு, தன்னிடம் ஓ.பி.எஸ்., குறித்து எச்சரித்த, ‘சீனியர்’களுக்கும், இந்தசந்திப்பு குறித்து எடுத்துச் சொன்னார் என, நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

%d bloggers like this: