திடீர் திருப்பம்… அதிமுகவில் சசிகலா இணைப்பு தொடர்பான அறிக்கை எந்த நேரத்திலும் வெளியாகும்?

:சட்டசபை தேர்தல் களத்தில் புதிய திருப்பமாக அரசியலை விட்டு ஒதுங்கி இருக்கும் சசிகலாவை மீண்டும் அதிமுகவில் சேர்ப்பது தொடர்பான அறிக்கை எந்த நேரத்திலும் வெளியாகலாம் என்கின்றன அக்கட்சி வட்டாரங்கள்.

தமிழக சட்டசபை தேர்தலுக்கான பிரசாரம் களைகட்டி அனலடித்துக் கொண்டிருக்கிறது. சட்டசபை தேர்தல் கருத்து கணிப்புகள் பெரும்பாலும் ஒரே மாதிரியான முடிவுகளை வெளிப்படுத்துகின்றன.

இந்த கருத்து கணிப்புகள் பொதுவாக திமுக தலைமையிலான கூட்டணி ஆட்சி அமையும்; திமுக- அதிமுக கூட்டணிக்கு இடையேயான வாக்கு சதவீத வித்தியாசம் குறைந்தது 10% இருக்கலாம்; தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் மற்றும் மக்கள் நீதி மய்யம் ஆகக் குறைந்தது 8% வாக்குகளை பெறக் கூடும் என்றே தெரிவிக்கின்றன.

கருத்து கணிப்புகளும் அதிமுகவும்..
மேற்கு தமிழகத்தில் கொங்கு கவுண்டர்களின் வாக்குகளை அதிமுக கணிசமாக தக்க வைக்கும் என்பதாக இந்த கருத்து கணிப்புகள் சொல்லுகின்றன. அதேநேரத்தில் வடதமிழகத்தில் கை கொடுக்கக் கூடும் என நம்பிய வன்னியர் வாக்குகள் அதிமுக கூட்டணியைவிட்டுப் போகவே வாய்ப்புகள் என்பதையும் தென்தமிழகத்தில் அதிமுகவுக்கு பக்க பலமாக இருந்த முக்குலத்தோர் வாக்குகளை தினகரனின் அமமுக பிரித்து செல்லும் என்பதையும் இந்த கருத்து கணிப்புகள் வெளிப்படுத்தி வருகின்றன.

அதிமுக போட்ட கணக்கு
தமிழகத்தைப் பொறுத்தவரை வன்னியர்கள், கவுண்டர்கள், முக்குலத்தோர் ஆகியோர் பெரும்பாலான தொகுதிகளில் இயல்பாகவே நட்பு ஜாதியினராக இருக்கின்றனர். இவர்களில் கவுண்டர்கள், முக்குலத்தோர்தான் அதிமுகவின் ஆகப் பெரும் பலமாக இருக்கின்றனர். வன்னியர்களையும் சேர்த்து கொண்டால் வெற்றி நிச்சயம் என கணக்குப் போட்டது அதிமுக.

முக்குலத்தோர் அதிருப்தி
ஆனால் முக்குலத்தோர் ஜாதியை சேர்ந்த சசிகலாவுக்கு எதிராக இப்போது அதிமுக நிற்கிறது; அத்துடன் அதே ஜாதியை சேர்ந்த தினகரன், அ.ம.மு.க. எனும் தனிக்கட்சியுடன் களத்தில் நிற்கிறார். இதனால் அதிமுகவுக்கான முக்குலத்தோர் வாக்குகள் பிரிந்து செல்வது இயல்பு. அதைத்தான் கருத்து கணிப்புகளும் சொல்லிக் கொண்டிருக்கின்றன.

சேலம் ஆலோசனை
இதுவும் அதிமுக சந்திக்கப் போகும் பெரும் பின்னடைவுக்கு காரணமாக இருக்கும் என கருதுகின்றனர் அதிமுக தலைவர்கள். இதன் வெளிப்பாடாகத்தான் எந்த சசிகலாவுக்கு எதிராக ஓ. பன்னீர்செல்வம் தர்மயுத்தம் நடத்தினாரோ, அந்த சசிகலாவை அதிமுகவில் சேர்ப்பதற்கு அதே ஓ. பன்னீர்செல்வம் பச்சை கொடி காட்டி பேட்டி கொடுத்துள்ளார். அதேபோல் எந்த ஓ.பி.எஸ்ஸுடன் அவ்வபோது மனக்கசப்பு என செய்திகள் வருகிறதோ அதே ஓ.பி.எஸ். தங்கியிருந்த ஹோட்டலுக்கு நேரில் போய் சந்தித்து ஆலோசனை நடத்தி இருக்கிறார் ஈ.பி.எஸ்.

எந்த நேரத்திலும் அறிக்கை?
சேலத்தில் நடந்த இந்த ஆலோசனையில்தான் சசிகலாவை அதிமுகவில் இணைப்பது தொடர்பாக இருவரும் விவாதித்திருக்கின்றனராம். அதிமுக மீதான முக்குலத்தோர் ஜாதி அதிருப்தியை தற்காலிகமாக சமாதானப்படுத்தும் வகையில் சசிகலாவை அதிமுகவில் மீண்டும் சேர்ப்பதற்கான சிக்னல்களை அமைச்சர்கள் மூலம் பேச வைப்பது அல்லது ஈபிஎஸ்- ஓபிஎஸ் இணைந்து சசிகலா தொடர்பான ஒரு சாதகமான அறிக்கையை வெளியிடுவது என்பது எந்த நேரத்திலும் நடக்கலாம் என்கின்றனர் அதிமுக நிர்வாகிகள்

%d bloggers like this: