இலுமினாட்டி இருப்பது உண்மையா? – மர்மங்களின் கதை | பகுதி – 1

இலுமினாட்டிகள் பலவிதம்

இலுமினாட்டியைப் பற்றிப் பலவித விளக்கங்கள் இருக்கின்றன. உதாரணமாக ஒன்று…

`இலுமினாட்டி’ என்பது உலகின் 13 பணக்காரக் குடும்பங்களைக்கொண்ட ரகசியக்குழு. இந்த 13 பணக்காரக் குடும்பங்களும் 18-ம் நூற்றாண்டிலிருந்து உலகின் பல்வேறு நாடுகளுக்குப் பரவி, அரசியலிலிருந்து ஊடகம் வரை எல்லாவித சமூக

நிறுவனங்களையும் தங்கள் அதிகாரத்துக்குள் வைத்திருக்கின்றன. மக்களுக்குத் தேவையான பிரச்னைகளையும், நேரடியாக மக்களை பாதிக்கும் விஷயங்களையும் அவர்களுக்குத் தெரியாமல் லாகமாக வைத்திருக்க இயங்கும் குழு.

உதாரணமாக, உங்கள் வாழ்க்கையையே அழிக்கக்கூடிய ஒரு முக்கியமான செய்தி இன்று அரசியல்ரீதியாக நடந்தேறலாம்.

இலுமினாட்டி

ரகசியமான குழு என்றால் வலைப்பின்னலில் இருக்கும் தொடர்புகளை எப்படிச் சந்திக்கிறார்கள்?

குறிப்பிட்ட நாள்களில் அவர்கள் சந்திக்கிறார்கள். அவர்களுக்குத் துணைபுரியும் பிற அதிகாரம் நிறைந்தோரும் அந்தச் சந்திப்புக்குச் செல்கிறார்கள். அங்கு பல விஷயங்கள் விவாதிக்கப்படுகின்றன. முடிவுகள் எடுக்கப்படுகின்றன. அந்த முடிவுகளின்படியே உலக அரசியல் அரங்கேறுகிறது. போர்கள் நடக்கின்றன. ஆட்சிகள் கவிழ்க்கப்படுகின்றன. போராட்டங்கள் வெடிக்கின்றன. கொலைகள் நடக்கின்றன. விளையாட்டுப் போட்டிகள் நிர்ணயிக்கப்படுகின்றன. செய்திகள் உருவாக்கப்படுகின்றன. நல்லவர்கள் மேல் தீவிரவாத முத்திரை குத்தப்படுகிறது. கெட்டவர்கள் உத்தமர்கள் எனக் கொண்டாடப்பட்டு ஆட்சிபீடம் அளிக்கப்படுகிறது.

புதிய உலக ஒழுங்கு!

உங்கள் கண்களுக்கு முன்னால் நடக்கும் எல்லாமுமே ஏதோவொரு தனி சந்திப்பில் அதிகாரம் மிக்க சிலரால் தீர்மானித்து திட்டமிடப்பட்டு நடத்தப்படும் நாடகம். அந்த நாடகத்தை திரும்பத் திரும்ப உங்களுக்குக் காட்ட ஊடகங்கள் பயன்படுத்தப்படுகின்றன. நாடகத்தைப் பார்த்த பழக்கத்தில் நீங்களும் அதில் பங்குபெறத் தொடங்குகிறீர்கள். உங்களுக்கே தெரியாமல் அவர்களின் இயக்கத்துக்கு நீங்கள் ஆடத் தொடங்கிவிடுவீர்கள்.

இலுமினாட்டிpan>

இவர்களின் நோக்கம் `New World Order’ எனப்படும் புதிய உலக அமைப்பை உருவாக்குவதுதான். அந்தப் புதிய உலகில் மொத்த உலகமும் இணைந்திருக்கும். நாட்டின் எல்லைகளைக் கடந்து வணிகம் தழைக்கும். மொத்த உலகத்துக்கும் ஒற்றைத் தலைமை இருக்கும். அந்தத் தலைமை யதேச்சதிகாரத் தலைமையாக இருக்கும்.

தற்போது நடக்கும் விஷயங்களும் கிட்டத்தட்ட New World Order-ஐ நோக்கி நடப்பதுபோலவே இருக்கின்றன. ஒவ்வொரு நாட்டுக்கும் அரசு என ஒன்று இருந்தாலும், மொத்த நாட்டின் அரசுகளை இயக்குவது அமெரிக்கா என்ற ஒற்றை அரசுதான். இந்த உண்மை நம் எல்லாருக்குமே தெரியும். நாடுகளுக்கு தற்போது எல்லைகள் இருந்தாலும், பல நாட்டு நிறுவனங்கள் பிற நாடுகளுக்குள் சென்று கடைகள் விரிக்கின்றன. வணிகமும் பணமும் எல்லை பேதங்கள் இன்றி உலகமெங்கும் ஓடுகின்றன. New world order-க்கான எல்லா சாத்தியங்களையும் நெருங்குகிறோம்.

சரி, இப்போது கொஞ்சம் உண்மை என்னவெனப் பார்ப்போமா?

Principia Discordia என்ற பெயரில் ஒரு சிறு புத்தகம் 1960-களில் பரவியது. பிரின்சிபியா டிஸ்கார்டியா என்ற புத்தகம், அடிப்படையில் ஒரு `பகடி’ மதம். அதாவது மதத்தைப்போலவே புராண கதாபாத்திரங்களை உருவாக்கி, அவற்றைக்கொண்டு சமூகத்தின் எல்லாவற்றையும் புறக்கணிக்கச் சொல்லும் வேடிக்கை மதம். அவ்வளவுதான். அந்தப் புத்தகம் மூன்று பேரிடம் கிடைக்கிறது. அதற்குப் பிறகுதான் தற்போதைய இலுமினாட்டி என்ற கருத்தியல் உருவானது.

அந்த மூன்று பேர் ப்ராம்வெல், வில்சன் மற்றும் கெர்ரி தார்ன்லி.

பிரின்சிபியா டிஸ்கார்டியா புத்தகம்

`எல்லாம் இப்படித்தான் இருக்கும்!’

அந்த மூவரைப் பொறுத்தவரை உலக சமூகங்கள் எல்லாமும் ஓர் ஒருங்கிணைக்கப்பட்ட யதேச்சதிகாரத்துக்கு பழக்கப்பட்டிருந்தன. `எல்லாம் இப்படித்தான் இருக்கும்’ என்ற ஓர் அசமந்தமான மனநிலை மக்களிடம் இருந்தது. அரசுகள் யாவும் அதிகாரங்களை முழுமையாகப் பிரயோகித்து ஒடுக்கும்போதும் கேள்வி கேட்கவென எவரும் முன் வரவில்லை. சமூகங்களுக்குள் இருக்கும் கட்டுப்பாட்டைக் குலைக்க மூவரும் முடிவு செய்தனர். திரிக்கப்பட்ட செய்திகளாலும், மறைக்கப்பட்ட உண்மைகளாலும் மட்டுமே மக்களுக்கு விழிப்பு ஏற்படுத்த முடியுமென நம்புகின்றனர். அதற்கென அவர்கள் தேர்ந்தெடுத்ததுதான் இலுமினாட்டி பற்றிய செய்திகள்.

`ப்ளே பாய்’ என்ற பத்திரிகையில் வில்சன் வேலை பார்த்துக்கொண்டிருந்தார். இலுமினாட்டி பற்றிய கேள்விகளைக் கேட்டு வாசகர்கள் கடிதங்கள் அனுப்புவதைப்போல அவர்களே அனுப்பத் தொடங்கினார்கள். அந்தக் கடிதங்களுக்கு மறுப்பு தெரிவிக்கும் கடிதங்களையும் அவர்களே அனுப்பினார்கள். அந்த முயற்சியைப் பற்றி விவரிக்கையில் ப்ராம்வெல் இப்படிச் சொல்கிறார்:

“ஒரு தகவலைப் பற்றிப் பல முரணான விஷயங்களை தத்துவரீதியாகப் பொருந்துவதுபோல திரித்துக் கொடுக்கும்போது, மக்கள் சந்தேகம் அடையத் தொடங்குகிறார்கள். இதுநாள் வரை தாங்கள் நம்பிவந்த செய்திகள் மீது அவநம்பிக்கைகொள்கிறார்கள்.”

இலுமினாட்டி குழு

ராபர்ட் ஷியா என்பவருடன் சேர்ந்து வில்சன் மூன்று புத்தகங்களை எழுதினார். பெயர் Illuminatus Trilogy. இலுமினாட்டி குழுதான் புத்தகங்களின் அடிப்படை. பதினெட்டாம் நூற்றாண்டின் இலுமினாட்டி அல்ல; பதின்மூன்று குடும்பங்களே உலகத்தை ஆள்கின்றன எனச் சொல்லும் இலுமினாட்டி. அந்தப் புத்தங்களின் வழி வில்சன், தான் விரும்பிய திரிபு மற்றும் முரணான கருத்துகளை ஏற்கெனவே சமூகம் அறிந்திருந்த செய்திகள்மீது வைத்தார். ஜான் எஃப் கென்னடியின் கொலை, பிரெஞ்சு புரட்சி என நாமறிந்திருந்த எல்லா வரலாற்றுத் தகவல்களுக்கும் வேறொரு கோணத்தைக் கொடுத்தார்.

புத்தகங்கள் பெரும் வெற்றிபெற்றன. அவற்றைத் தழுவி நாடகங்கள் எடுக்கப்பட்டன. ஊடகங்களுக்குள் `பதின்மூன்று குடும்பங்களின் ரகசியக்குழு’ என்ற கதை பெரும் செல்வாக்கைப் பெற்றது. பல பிரபலங்கள் `இலுமினாட்டி முத்திரைகள்’ எனச் சொல்லப்படும் முத்திரைகளைப் பிரதிபலிக்கத் தொடங்கினர்.

அசமந்த நிலையிலிருந்து மக்கள் விழிப்படைந்து அதிகாரத்தைக் கேள்வி கேட்கும் வழியெனத் தொடங்கப்பட்ட விஷயம், அதை உருவாக்கியவர்களே விரும்பாத வேறொரு வடிவத்தை அடைந்தது.

Illuminatus Trilogy Book

2015-ம் ஆண்டில் நடத்தப்பட்ட ஒரு கணக்கெடுப்பில், அமெரிக்காவின் பாதி ஜனத்தொகை ஏதோவொரு இலுமினாட்டி பாணி கற்பனைக் கதையையேனும் நம்புவது கண்டறியப்பட்டது. எந்த அரசுகளை உலுக்க, எதிர்க்கேள்விகள் கேட்கும் பொருட்டு, ‘பதின்மூன்று குடும்பங்களின் இலுமினாட்டி குழு’ என்ற கட்டுக்கதை உருவாக்கப்பட்டதோ, அதே அரசுகள் தங்களை அதிகாரங்களில் இருத்திக்கொள்வதற்கு அவற்றைப் பயன்படுத்துவதுதான் நாம் வந்து சேர்ந்திருக்கும் இக்கட்டான நிலை.

மூவரில் ஒருவரான ப்ராம்வெல், ‘வில்சன் இன்று உயிரோடு இருந்தால், சந்தோஷப்படுவதைவிட, அவர் அதிர்ச்சியடைவதே அதிகமாக இருக்கும்’ என்கிறார்.

எல்லாவற்றையும் பொய் எனச் சந்தேகக் கண்ணோட்டத்துடன் மட்டுமே பார்க்கும் மக்களிடம் இன்று எது உண்மை எனச் சொல்ல வேண்டியிருக்கிறது. உண்மையைச் சொன்னாலும் அதை அவர்கள் ஆயிரம் முரண் செய்திகளைக்கொண்டே எதிர்கொள்கிறார்கள். உண்மையையும் நம்ப மறுக்கிறார்கள். இந்த வகை, மக்களுக்கே எதிராகப் போய் முடியும். அப்படித்தான் போய் முடிந்துகொண்டும் இருக்கிறது.

பொய்யா. கோப்பால்ல்ல்ல்ல்ல்!

பதின்மூன்று குடும்பங்கள் நம்மை ஆளுகின்றன என்பது பொய்யா… மக்களைப் புறக்கணித்துவிட்டு அவர்களுக்கு ஆதரவாகத்தான் அரசுகள் செயல்படுகின்றன என்பதும் பொய்யா… அரசுகளை நிர்ணயிப்பது அவர்கள் என்பதுமா பொய்… நமக்கு வழங்கப்படும் செய்திகள் யாவும் அவர்களின் ஆதிக்கத்தை நிலைநிறுத்தவே என்பது பொய்யா?

எதுவும் பொய்யல்ல. திரிக்கப்பட்டவை. ஓர் உண்மை திரிக்கப்பட்டதால் உருவானவை. நம்மை ஆள்வது பதின்மூன்று குடும்பங்கள் அல்ல; முதலாளிகள்! உலக நாடுகளில் இருக்கும் ஐந்து சதவிகிதத்துக்கும் குறைவான கார்ப்பரேட் நிறுவன முதலாளிகள்!

உலக ஊடகங்கள் பெரும்பாலானவை கார்ப்பரேட்டுகளின் கட்டுப்பாட்டிலேயே இருக்கின்றன. உலக அரசுகளை அவர்களே நிர்ணயிக்கின்றனர். அவர்கள் ஆதிக்கம் நம் கண்களுக்கு நேரடியாகத் தெரிந்துவிடக் கூடாது என்பதாலேயே திசைதிருப்பும் செய்திகள் நமக்கு வழங்கப்படுகின்றன. அரசுகளும் அவர்களுக்கு ஆதரவாகவே செயல்படுகின்றன. மக்களையும் அவர்களுக்காகவே ஒடுக்குகின்றன.

உண்மைக்கும் திரிபுக்கும் இடையில்தான் நம் கழுத்துகள் நெரிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன. நம் கண்கள் கட்டப்பட்டுக்கொண்டிருக்கின்றன. இந்த உலகமும் அழிந்துகொண்டிருக்கிறது.

இலுமினாட்டிக்கும் உண்மைக்கும் இடையிலிருப்பது சிறு கோடுதான்.

%d bloggers like this: