எலும்பு நோய் நீக்கும் உடும்பீசர்

திருமாகறல்

பிரம்மா அகிலத்தின் நான்கு திசைகளையும் ஒரே நேரத்தில் கம்பீரமாக பார்த்தபடி நின்றிருந்தான். தன் காலடியில் இத்தனை பிரபஞ்சமா என கால் மடக்கினான். கோணலாய்ப் பார்த்தான். பார்வையில் கர்வம் எனும் கரும்புள்ளி திட்டாய் தெரிந்தது. அந்தப் புள்ளி வட்டமாய் வளர்ந்தது. நான்கு முகங்களும் மெல்ல . இருண்டன. கர்வம் சிரசின் மீது சிம்மாசனம் போட்டு அமர்ந்தது.

தன்னைத்தானே பார்த்துக்கொண்டான். மெல்ல மெல்ல தன் வேலையைக் குறைத்துக் கொண்டான். தான் எப்படி எப்படி என்று பலபேரிடம் கேட்டு மகிழ்ந்தான். சுத்தமாய் சிருஷ்டி என்கிற விஷயத்தை மறந்தே போனான். கயிலையும், வைகுண்டமும் விழித்துக் கொண்டன. சகல தேவர்களும் திருமாலுடன் சென்று ஈசனிடம் முறையிட்டனர்.

ஈசன் கண்களை மூடினார். பிரம்மனைத் தேடினார். பிரம்மன் கர்வக் கொப்பளிப்பில் முற்றிலும் தன் சக்தியிழந்து திரிந்து கொண்டிருந்தான்.
ஈசனைப் பார்த்ததும் நினைவு வந்தவனாய் வணங்கினான். ஈசன் பிரம்மாவையே உற்றுப்பார்க்க, முதன்முதலாய் தான் சக்தியிழந்த விஷயம் தெரிந்தவனாய் துணுக்குற்றான். ஈசனின் காலடி பற்றினான். கண நேரத்தில் தன் தவறு தெரிந்து தெளிவானான்.

பிரம்மா தன் தவறை உணர்ந்து ஈசனிடம் மன்றாடினான். ஈசனும், ”துண்டீர மண்டலத்தில் உள்ள வேணுபுரம் எனும் தலத்தில் தவம் செய்து வா. சரியான சமயத்தில் உன் பழைய நிலையை திரும்பப் பெறுவாய்’ என ஆதூரத்துடன் கூறினார். அவ்வாறே பிரம்மாவும் சிவதியானத்தில் ஆழ்ந்தான். அகங்காரம் அறுத்தான். அகம் -மலர்ந்து அளவிலா ஆற்றல் பெற்றான். ஈசனின் கருணையை கண்டு கண்ணீர் மல்கினான் பிரம்மன். அங்கேயே அழகான அதிசய பலாமரம் ஒன்றை உருவாக்கினான். ஈசனின் மூன்று கண்கள் போல் நாள்தோறும் மூன்று கனிகளை கொடுத்தது அந்த மரம். மூன்றும் தங்க நிறத்தில் பிரகாசித்தன.

ஒரு யுகத்திற்காக காத்திருந்தது. புராணகாலம் முடிந்து கலியுகம் தன் மையத்தை எட்டியிருந்தது. எட்டு திக்கிலும் சோழர்களின் பொற்காலம் பிரகாசித்தது. ராஜேந்திர சோழன் முன்னிலும் அதிகமாய் கோயில்களை நிர்மாணிக்க ஆரம்பித்தார். இந்த அதிசய பலா மரம் பற்றி அறிந்திருந்தார். ‘மூன்று கனிகளையும் என்ன செய்கிறீர்கள்?’ என்று கேட்டார். ‘ஒன்று கயிலைக்கும், மற்றொன்று தில்லைக்கும், மூன்றாவது…’ என்று தயங்க, ‘தினமும் எனக்கு வந்தாக வேண்டும்’ என கட்டளையிட்டார். வீரர்கள் துரிதமாயினர். எங்கிருக்கிறது அந்த அதிசய பலாமரம் என்று ஆவலாய் விசாரித்தனர்.

குதிரைகளோடு சிறுபடை ஒன்று கங்கைகொண்ட சோழபுரத்திலிருந்து சீறிக்கிளம்பியது.அந்த அழகான கிராமத்திற்கு திருமாகறல் என்று பெயர். மலையன், மாகறகன் எனும் இரு அசுரர்கள் தவம் செய்த இடமாதலால் ‘மாகறல்’ என அழைக்கப்பட்டது. அவ்வூர் எல்லையில்தான் இந்த அதிசய பலாமரம் தனியே வளர்ந்திருந்தது. இது அந்த ஊரின் வளத்திற்கு காரணமாய் இருந்தது. ஊர் மக்கள் அந்த பலா மரத்தை பொன்போல பாதுகாத்தார்கள். அது கொடுக்கும் கனிகளை ஈசனுக்கு அர்ப்பணித்தார்கள்.

கயிலைக்கும், தில்லைக்கும் குழுக்குழுவாய் பிரிந்து பலாப் பழத்தை தலையில் சுமந்து சென்றனர். குறிப்பிட்ட இடம்வரை சென்று வைத்தனர். அதிசயமாய் அந்தப் பழங்கள் சேருவது பார்த்து அதிசயித்தனர். அவர்கள் தலை எப்பொழுதும் முடி நீக்கப்பட்டு முண்டிதம் செய்யப்பட்டிருந்தது. சிகைபட்டால் தோஷம் எனக் கருதினார்கள். காலணி அணியாது வெறும் காலோடு நடந்தார்கள். அப்படி நடக்க அடுத்த தலைமுறையை பழக்கினார்கள். கைப்பிடித்து நடத்திச் சென்றார்கள்.

அதில் ஓர் இளைஞன் பழக மறுத்தான். ஈசனை தன் இடம் கொண்டுவர தீர்மானித்தான். அதற்காக தன்னையே தந்துவிடவும் துணிந்தான். கண்கள் மூடி மனம் குவித்தான். ஈசனின் முழுச் சக்தியும் அந்த கிராமத்தை கவ்வியிருப்பதை உணர்ந்தான். தலைதிருப்பி வானம் பார்த்தான். அந்தப் பலா மரம் உச்சி வெயிலில் மின்னி நாற்புறமும் தெறித்துக்கொண்டிருந்தது. வெகுதொலைவே குதிரைகளின் குளம்படிச் சத்தம் தொடர்ச்சியாய் அதிர்ந்தது.

மக்கள் ஒவ்வொருவராய் வீடுவிட்டு வெளியே வந்தார்கள். தம் தலைவனோடு பெரிய கூட்டமாய் குழுமினார்கள். அந்த சோழ வீரர்கள் கங்கையின் வேகத்தோடு ஊரின் எல்லையைத் தொட்டார்கள். சோழ வீரர்கள் குதிரைகளிலிருந்து குதித்தனர். அவ்வூர் மக்களை இருகரம் கொண்டு வணங்கினர். ”மாமன்னர் ராஜேந்திர சோழர் அதிசயப் பலாப்பழம் தினமும் தனக்கு பிரசாதமாய் வேண்டுமென்கிறார். நீங்கள் உங்களுக்குள் முடிவு செய்து அரசருக்கு சேர்ப்பிக்க வேண்டும். அவர் இருக்கும் இடம்பற்றி அவ்வப்போது தகவல் தெரிவிக்கப்படும். இது மன்னரின் நேரடி ஆணை” என்று சொன்னார்கள். சொன்ன வேகத்தோடு புழுதி பறக்க திரும்பினார்கள்.

அந்த மாகறல் மக்களின் முகம் தூசிபடிந்து சிவந்திருந்தது. எவ்வளவு தூரம் தலையில் சுமப்பது என்று திகைத்தது. இது மன்னரின் ஆணை என்று சொன்ன வீரனின் முகம் நினைத்து மிரண்டது. வேறு வழியில்லாமல் தலையில் தாங்கிய பலாப் பழத்துடன் தினமும் ஒரு குழு என்று சுழற்சி முறையில் ராஜேந்திரனை நோக்கி பயணப்பட்டது. பிரசாதம் உண்ட ராஜேந்திர சோழர் மெல்ல மலர்ந்தார். ஆனால், மாகறல் மக்கள் வாடிப்போனார்கள். வயதானவர்கள் வெயில் தாங்காது சுருண்டார்கள். ஒரு வருடம் இப்படியே உருண்டது.

அந்த வீர இளைஞன் குடிசையிலிருந்து வெளிப்பட்டான். ஈசன் தன் தீக்கண்ணை திறந்தார். அந்த இளைஞன் தீப்பந்தத்தோடு பலா மரம் நோக்கி நடந்தான். மரத்தின் ஒவ்வொரு பகுதியாய் பற்ற வைத்தான். தீ பெருஞ்சுடராய் எரிந்தது. மரம் கருங்கட்டையாய் கருகி சரிந்தது.

ஊரிலுள்ளவர்கள் பயத்தில் உறைந்தார்கள். அந்த இளைஞனை பிடித்து உலுக்கினார்கள். என்ன செய்வது என்று தெரியாமல் மூன்று நாட்கள் அப்படியே யோசித்தபடி கிடந்தார்கள். ராஜேந்திரர் பலாப் பழம் எங்கே என்று கேட்க, அந்த மரத்தை தீயிட்டு கொளுத்திவிட்டதாய் சொல்ல, மாமன்னன் முகம் சிவந்தான். ‘மாகறலுக்கு கிளம்புங்கள்’ என்று தேரில் ஏறி அமர்ந்தான். மாமன்னர் வருவதை அறிந்த மக்கள் கூட்டம் அஞ்சி நடுங்கியது. ஆனால், அந்த இளைஞன் கிஞ்சித்தும் பயமில்லாது இருந்தான்.

ராஜேந்திர சோழர் மிகப்பெரிய படையோடு ஊருக்குள் நுழைந்தார். ஊரார் திரண்டு நின்று வரவேற்றனர். ஆனால், உள்ளுக்குள் பயம் கரும்புகையாய் சுழன்றுகொண்டிருந்தது.ராஜேந்திரர் நேரடியாய் விஷயம் தொட்டார். ”ஏன் எரித்தீர்கள், யார் காரணம்? எரித்தவன் நம் தேசத்தவனா…” என்றெல்லாம் தொடர்ச்சியாய் வினாக்கள் தொடுத்தார். அந்த இளைஞன் மெல்ல வெளியே வந்தான். ”நான்தான் எரித்தேன். இவர்கள் படும் கஷ்டம் பார்த்து இந்த வழக்கத்தை நிறுத்தவே எரித்தேன். நீங்கள் என்னை என்ன செய்தாலும் ஏற்கிறேன்” என்றான். அரசன் முன்பு மண்டியிட்டான். அரசன் அவனையே உற்றுப் பார்த்தார். அருகிலிருக்கும் வீரனை அழைத்தார்.

”இவன் கண்களைக் கட்டி காட்டைத் தாண்டி விட்டுவிட்டு வாருங்கள். அவனைக் கொல்லாதீர்கள். இளைஞனைக் கொன்ற பாவம் நமக்கு வேண்டாம். வாருங்கள், நானும் உங்களுடனேயே வருகிறேன்” மன்னர் படை புயலாய் புறப்பட்டது. விடியும் வரை தொடர்ந்து நடந்தது. விடிந்ததும் அவன் கண்களை அவிழ்த்துவிட்டது. அவனுக்கு அவ்வூரில் விடிந்ததால் இன்றும் அந்த ஊர் ‘விடிமாகறல்’ என்று அழைக்கப்படுகிறது. காட்டுப் பாதையாக இருப்பதால் ஏதேனும் வேட்டைக்கு கிடைக்குமோ என வீரர்கள்தேடினர். ராஜேந்திரரும் உன்னிப்பாய் கவனித்த வண்ணம் பார்த்துக்கொண்டே வந்தார்.

தூரத்தே நீள் ஒளிவட்டம் பார்த்தார். சட்டென்று நகர்ந்தது. உற்றுப் பார்த்தபோது அது உடும்பு என்று புரிந்தது. மன்னன், தங்க நிறத்தில் உடும்பா என்று வியப்பெய்தினான். எப்படியாவது அதைப் பிடியுங்கள் என்று கட்டளையிட்டான். வீரர்கள் ஓடஓட அந்த உடும்பும் துள்ளிக்குதித்து பாய்ந்து சென்றது. வீரர்கள் சோர்வுற்றார்கள். பலர் வலுவிழந்து வீழ்ந்தனர். உடும்பு அந்த இருளில் மிகப் பிரகாசமாய் ஒளிர்ந்தது. ராஜேந்திரன் பிரமித்து நின்றான். ராஜேந்திரனுக்கும் உடும்புக்குமிடையே உக்கிரமான ஓட்டம் நடந்தது. ராஜேந்திரன் அம்பு மழை பொழிய, அம்பைவிட உடும்பு இன்னும் கூர்மையாய் பாய்ந்து சென்றது. அதிவேகமாய் மாகறல் எல்லையை அடைந்தது. ராஜேந்திரன் உடும்பை நெருங்க, உடும்பு ஓரு புற்றுக்குள் புக, உடும்பின் தலைப்பகுதி புற்றுக்குள் நகர்ந்து வால்பகுதியை உள்ளே இழுப்பதற்குள் பட்டென்று சீறி வந்த ஓர் அம்பு வாலைத் தைத்தது. வால் பகுதி புற்றின் வெளியே நின்றது. அதனின்று வெடிச்சிதறலாய் மாபெரும் ஓர் ஒளிப்பிழம்பு வானுக்கும் பூமிக்குமாய் எழுந்தது.

ராஜேந்திரன் நிலைகுலைந்து ‘என் சிவனே… என் சிவனே’ என வாய்விட்டு அலறினான். அந்த சக்தியின் வலிமையைத் தாங்காது மயங்கி விழுந்தான். எழுந்து பார்த்தபோதுதான் அந்த ஊர் சுயம்பு புற்றின் வாயிலில், தான் இருப்பது தெரியவந்தது. புற்றின் மேல் உடும்பின் வால் பகுதி கூர்தீட்டிய தங்கவாள் போல மின்னியது.

ராஜேந்திரர் தளர்வாய் நடந்தார். பொய்யாமொழிப் பிள்ளையார் எனும் கோயிலை அடைந்தார். கோயில் வாயிலில் ஒரு சாது அவர்களை வரவேற்று இரவு நடந்த விஷயத்தை தானாகக் கூற, மன்னன் இன்னும் ஆச்சரியமானான். அந்த சாது அவ்விடத்தில் ஓர் கோயிலொன்றை நிர்மாணிக்கச் சொன்னார். மெல்ல கோயிலுக்குள் சென்று மறைந்தார். ராஜேந்திரன் அயர்ந்தான். மன்னர் குழாம் ‘சிவோஹம்’ என பெருங்குரலில் பிளிறியது.ராஜேந்திரர் அன்றே அக்கோயிலுக்கான வேலைகளைத் தொடங்கினார். வெகுவிரைவாக கட்டியும் முடித்தார். இன்றும் அக்கோயில் மிகப் பொலிவோடு விளங்குகிறது.

ஐந்து நிலை ராஜகோபுரத்தோடு கஜபிருஷ்ட விமானம் எனும் அமைப்போடு கட்டப்பட்டுள்ளது. பிராகாரத்தில் தெற்கு பக்கமாக தட்சிணாமூர்த்தி அருள்பொங்கும் முகத்தோடு காட்சி தருகிறார். துர்க்கையும், பிரம்மாவும் அடுத்தடுத்து கோஷ்ட மூர்த்தியாய் மிளிர்கிறார்கள். ஆறுமுகப் பெருமான் இந்திரனின் வெள்ளையானையில் அமர்ந்து அன்பர்களுக்கெல்லாம் அருள்பாலிக்கும் சிலை இத்தலத்து அற்புதம்.

மூலவர் மாகறலீசர். ஆவுடையாரின் மீது உடும்பின் வால் பகுதியே லிங்கமாய் உள்ளது. ஈசன் அரசருக்கெல்லாம் அரசராக கம்பீரமாய் வீற்றிருக்கிறார். ஓரு மாபெரும் சம்பவத்தின் எதிரொலி இன்னும் அங்கு மின் துடிப்பாய், அதிர்வலையாய் அந்த சந்நதியில் பரவிக் கிடக் கிறது. அருகே வருவோரை ஆட்கொள்கிறது. அந்த உடும்பைப் பார்க்கும் போதெல்லாம் நம் உடல் சிலிர்க்கிறது. ஈசன் எப்படி வேண்டு மானாலும் வருவான் என நினைக்க வைக்கிறது.

உடும்பின் மேல் இன்னும் அந்த தழும்பு மாறாது இருக்கிறது. ஆயுதத்தால் ஏற்பட்ட தழும்பால் பாரத்தழும்பர் எனும் பெயர் பெற்றார். உடும்பு வடிவில் வந்ததால் உடும்பீசர் ஆனார். உடும்பு புற்றில் சென்று மறைந்ததால் புற்றிடங்கொண்டநாதர் என புகழ் பெற்றார். பாரத்தழும்பரான ஈசன் பக்தர்களின் தழும்பை மறையச் செய்கிறார்.

எனவே, இத்தலத்து இறைவன் எலும்பு சம்பந்தமான அத்தனை பாதிப்புகளையும் தன் அருட்பார்வையால் போக்குகிறார். மருத்துவம் முடியாது என விட்டுவிட்டதை மாகறலீசர் கைகொடுத்து தூக்கி நிறுத்தும் அற்புதம் இங்கு சகஜமானது. ஈசனுக்கு அருகேயே அம்பாள் திரிபுவனநாயகி, அருட்பார்வையோடு திகழ்கிறாள். கேட்கும் வரம் தருகிறாள். அம்மனுக்கு அருகே நவகிரக சந்நதியும், பைரவர் திருவுருவமும் காணப்படுகின்றன.

இத்தலத்து விருட்சம் எலுமிச்சை மரமாகும். இங்குள்ள தீர்த்தத்திற்கு அக்னி தீர்த்தம் என்று பெயர். ஞானசம்பந்தப் பெருமான் இக்கோயிலைப்பற்றி பல பதிகங்கள் பாடியுள்ளார். இத்தலம் காஞ்சிபுரம் – உத்திரமேரூர் சாலையில் உள்ளது. திருமாகறல் செல்லுங்கள். திருப்பம் ஏற்படும் பாருங்கள்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

<span>%d</span> bloggers like this: