எடப்பாடியாருக்கு ராமதாஸ் போட்ட போன்.. மேற்கு, வடக்கு வந்து விழுந்த ரிப்போர்ட்! பரபரத்த சேலம் வீடு

தொடர்ந்து சுமார் 5 நாட்கள் வீட்டில் இருந்தபடி தேர்தல் தொடர்பான முழு தகவல்களையும் திரட்டி உள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

ஏப்ரல் 6-ஆம் தேதி எடப்பாடி தொகுதிக்கு உட்பட்ட சிலுவம்பாளையம் கிராமத்தில் தனது பேரனைத் தூக்கிக் கொண்டு வாக்குச்சாவடிக்கு சென்று முதல்வர் வாக்களித்தார்.

உச்சமடையும் கொரோனா… காங்கிரஸ் முதல்வர்களுடன்.. சோனியா காந்தி இன்று அவசர ஆலோசனை
முதல் முறையாக முதல்வர் என்ற அந்தஸ்தில் தேர்தலை சந்தித்த டென்ஷன் உள்ளுக்குள் கொஞ்சம் இருக்கத்தான் செய்தது என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள்.

ஆலோசனை தீவிரம்
ஓட்டு போட்டுவிட்டு சேலம் நெடுஞ்சாலை நகர் வீட்டுக்கு இரவு காரில் சென்றுள்ளார். இன்று வரை முதல்வர் அங்கேதான் தங்கியுள்ளார். மூத்த அமைச்சர்கள் மாவட்டச் செயலாளர்கள் சிலர் அவரது வீட்டுக்கே சென்று தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்தி திரும்பியுள்ளனர். அப்போது வெற்றி எளிதல்ல என்றபோதிலும், ஆட்சியை பிடிக்கும் அளவுக்கு வெற்றி வாய்ப்பு இருக்கத்தான் செய்கிறது என உறுதியளித்துள்ளனர்.

போன் போட்ட ராமதாஸ்
பாமக நிறுவனர் ராமதாஸ் தேர்தல் நாள் அன்று இரவோடு இரவாக எடப்பாடி பழனிசாமியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, வெற்றி நம் கூட்டணி பக்கம் தான் என்று அடித்துச் சொல்லி உள்ளாராம். குறிப்பாக, வட மாவட்டங்களில் பாமக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சி தொண்டர்களும் ஒருங்கிணைந்து சிறப்பாக தேர்தல் பணியாற்றியதாகவும், இரு கட்சிகள் வாக்குகளும் அந்த தொகுதிகளில் இரு கட்சிகளுக்கும் பரிமாற்றம் பெற்றுள்ளதாகவும் நம்பிக்கையோடு தெரிவித்துள்ளார் ராமதாஸ். இதனால் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளார் எடப்பாடி பழனிச்சாமி.

மேற்கு மண்டலம் எப்படி
கோவை, ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களை அடங்கிய மேற்கு மண்டலம் எப்போதுமே அதிமுகவுக்கு கோட்டையாக இருந்துள்ளது. இந்த முறையும் நாம்தான் இங்கு அதிக தொகுதிகளை ஜெயிக்க போகிறோம் என்று மேற்கு மண்டலத்தைச் சேர்ந்த அமைச்சர்கள் சிலர் சேலம் வீட்டுக்கு நேரிலேயே வந்து முதல்வரிடம் உறுதி அளித்து விட்டுச் சென்றனர்.

இமேஜ் கூடியது
லோக்சபா தேர்தலில்போது, சட்டசபை இடைத் தேர்தல்களும் நடைபெற்றதால் நமது கவனம் அங்கேதான் இருந்தது. ஆனால் உள்ளாட்சித் தேர்தலில் நாம் கணிசமான வெற்றியை பெற்றோம். அந்த தேர்தலுக்கு பிறகு தொடர்ந்து உங்கள் இமேஜ் மக்களிடம் கூடிக் கொண்டேதான் சென்றது. எனவே மேற்கு மண்டலத்தில் இந்த முறையும் நாமக்குத்தான் என்று அடித்துச் சொல்லி மகிழ்ச்சிப்படுத்தியுள்ளனர்.

அதிகாரிகள் கருத்து
அரசியல் பிரமுகர்கள் சொன்ன கருத்துக்களை மட்டும் எடுத்துக் கொள்ளவில்லையாம் முதல்வர். தலைமைச் செயலகத்தில் உள்ள சில மூத்த அதிகாரிகளுடன் பேசி உள்ளார். 2016 ஆம் ஆண்டிலும் திமுக வெற்றி பெறும் என்று பல அதிகாரிகள் நம்பிக்கொண்டு இருந்தனர். தங்களுக்கு முக்கிய துறைகளில் பதவி வேண்டும் என்று முன்கூட்டியே துண்டு போட்டவர்களும் உண்டு. ஆனால் சிறு இடைவெளியில் அதிமுக திரும்பவும் ஆட்சியைப் பிடித்தது. எனவே இந்த முறையும் திமுக அவ்வளவு எளிதாக வெற்றி பெறாது எனவே நீங்கள் கவலைப்பட வேண்டாம் என்று முதல்வர் தரப்புக்கு சிலர் தகவல் சொல்லியுள்ளனர்.

போராடி வெற்றி
இதேபோலத்தான் அதிமுகவின் தேர்தல் உத்தி வகுப்பாளர் சுனில், முதல்வருடன் தொலைபேசியில் பேசி உள்ளதாக கூறப்படுகிறது. 100க்கும் மேற்பட்ட இடங்களில் நேரடியாக அதிமுக கூட்டணி வெற்றி பெறும். சில தொகுதிகளில் தான் இழுபறி இருக்கிறது. அதுவும் நமக்கு சாதகமாகி விட்டால் மறுபடியும் ஆட்சியை பிடிப்பது எளிது என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். பல தரப்பில் இருந்து வந்துள்ள பாசிட்டிவ் கருத்துக்களால் முதல்வர் நிம்மதி அடைந்துள்ளார். இதையடுத்து இத்தனை ரிப்போர்ட்களை பெற்றுக்கொண்ட முதல்வர் தனது இல்லத்தில் இருந்து கட்சி பணிகளுக்காக இன்று முதல் வெளியே வரப் போகிறார் என்று தகவல்கள் கூறுகின்றன.

%d bloggers like this: