தமிழக தேர்தல்: 3 ரகசிய அறிக்கைகள்! அமைச்சர்களுக்கு நம்பிக்கையூட்டிய எடப்பாடி

தமிழக சட்டப்பேரவை தேர்தல் வாக்குப் பதிவுக்குப் பிறகு முதல்வர் பழனிசாமி கூடுதல் உற்சாகத்துடன் இருப்பதாக அக்கட்சியின் நிர்வாகிகள் பேசி வருகின்றனர். கருத்துக் கணிப்புகள் எல்லாம் தி.மு.க அணிக்குச் சாதகமாக சொல்லப்பட்ட நிலையில், முதல்வர் உற்சாகமாக இருப்பதற்கு என்ன காரணம்?

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை கடந்த 6 ஆம் தேதி நிறைவடைந்தது. இதன் பிறகு வாக்குப் பெட்டிகள் அனைத்தும் வாக்கு எண்ணிக்கை மையங்களுக்குப் பாதுகாப்பாக எடுத்துச் செல்லப்பட்டன. அங்கு அரசியல் கட்சிகளின் நிர்வாகிகள், வாக்குப் பெட்டி இயந்திரங்களை இரவு பகலாக கண்காணித்து வருகின்றனர். கோடை வெயிலின் தாக்கத்தைப் பொருட்படுத்தாமல் பிரசாரக் களத்தில் வலம் வந்த வேட்பாளர்கள் பலரும், தற்போது ஓய்வெடுத்து வருகின்றனர்

அதிலும், அ.தி.மு.க அமைச்சர்கள் பலரும் தூக்கத்துக்கே அதிகப்படியான நேரத்தை ஒதுக்கி வருவதாகக் கூறப்படுகிறது.

3 அறிக்கைகள்!

சட்டமன்ற தேர்தல் வாக்குப் பதிவுக்கு முன்பு வரையில் அ.தி.மு.க அணிக்கு 40 இடங்கள் முதல் 50 இடங்கள் வரையில் கிடைக்கலாம் என்றே சில கருத்துக்கணிப்புகள் தெரிவித்தன. இதனை விமர்சித்து அ.தி.மு.க அமைச்சர்களும் பதிலடி கொடுத்தனர். இந்நிலையில், தன்னைச் சந்திக்க வந்த அமைச்சர்களிடம் மிகுந்த நம்பிக்கையோடு முதல்வர் பழனிசாமி பேசியிருக்கிறார். இதற்கு ஆதாரமாக 3 முக்கிய அறிக்கைகளை அ.தி.மு.க நிர்வாகிகள் சுட்டிக் காட்டுகின்றனர்.

“வாக்குப் பதிவுக்குப் பிறகு சேலம், நெடுஞ்சாலை நகரில் உள்ள தனது வீட்டில் முதல்வர் ஓய்வெடுத்து வருகிறார். அவரை அமைச்சர்கள் தங்கமணி, எம்.சி.சம்பத், கே.சி.வீரமணி உள்பட பலரும் சந்தித்துப் பேசினர். இந்தச் சந்திப்பின்போது வழக்கத்துக்கு மாறான உற்சாகத்தில் முதல்வர் இருந்தார். இதனை அமைச்சர்களே எதிர்பார்க்கவில்லை” என்கிறார் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த அ.தி.மு.க முன்னணி நிர்வாகி ஒருவர்.

சென்னையும் டெல்டாவும்தான் சிக்கல்!

தொடர்ந்து, பிபிசி தமிழிடம் சில விவரங்களைப் பட்டியலிட்டார்.

“அமைச்சர்களுடனான கூட்டத்தில், `100 முதல் 110 இடங்கள் வரையில் நமக்குக் கிடைக்கும்’ என முதல்வர் பேசியிருக்கிறார். இதற்கு அடிப்படையாக சில விஷயங்களும் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டுள்ளன. அப்போது பேசிய முக்கிய நிர்வாகி ஒருவர், ` தென் மாவட்டங்களில் நாம் எதிர்பார்த்த அளவுக்கு மோசமாகச் செல்வதற்கு வாய்ப்பில்லை. வடக்கில் வன்னியர் வாக்குகள் நல்லபடியாக இந்த அணிக்கு வந்துள்ளதாக நினைக்கிறோம். சென்னையும் டெல்டாவும்தான் நமக்கு அதிகப்படியான சிக்கலைக் கொடுக்கும். அதை நாம் பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை’ எனக் கூறியுள்ளார்.

மேலும், ` தென் மண்டலத்தில் 15 தொகுதிகளும் மேற்கு மாவட்டங்களில் 35 முதல் 40 இடங்களும் வடக்கில் 30 தொகுதிகளும் நமக்கு வந்து சேரும். இவற்றைக் கணக்கிட்டாலே 80 தொகுதிகளுக்கு மேல் அ.தி.மு.க அணிக்கு கிடைக்கலாம். இதன்பிறகு கூடுதலாக எத்தனை தொகுதிகள் கிடைத்தாலும் போனஸ்தான்’ என்ற கணக்கில் முதல்வர் இருக்கிறார். அ.தி.மு.கவுக்குத் தேர்தல் வேலை பார்த்த வல்லுநர் குழுவினர், தொடக்கத்தில் `இந்தத் தேர்தலில் அ.தி.மு.கவுக்கு மோசமான தோல்வி கிடைக்கலாம். தி.மு.க 180 இடங்களைத் தாண்டும்’ எனப் பேசி வந்தனர். குறிப்பாக, `தென்மாவட்டங்களில் 5 இடங்களில் வென்றாலே பெரிய விஷயம்’ எனவும் பேசி வந்தனர். ஆனால், தற்போது எதிர்பார்த்ததை விடவும் நல்லபடியாக வாக்குகள் வந்துள்ளதாகவும் நினைக்கின்றனர். காரணம், தி.மு.க, அ.ம.மு.கவை விட வாக்காளர்களைக் குளிர்விக்கும் வேலைகளை அ.தி.மு.க தரப்பில் சிறப்பாகச் செய்ததுதான்.

தேவேந்திர குல வேளாளர் வாக்குகள்!

இது தவிர, தென்மாவட்டங்களில் தேவேந்திர குல வேளாளர் வாக்குகள் அ.தி.மு.க-பா.ஜ.க அணிக்கு வந்துள்ளதாகவும் நம்புகின்றனர். இதில் தி.மு.கவுக்குச் செல்ல வேண்டிய சமூக வாக்குகளை டாக்டர் கிருஷ்ணசாமி, தனியாக நின்று பிரித்துவிட்டதாகவும் நம்புகின்றனர். `ஒட்டப்பிடாரத்திலேயே அ.தி.மு.க வெல்லும்’ எனவும் முதல்வர் நம்புகிறார். ‘தென்மாவட்டங்களில் அ.ம.மு.க பெரிதாக எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை’ எனவும் அங்குள்ள அமைச்சர்கள் உறுதியாக நம்புகின்றனர்” என்கிறார்.

தொடர்ந்து, வட மாவட்ட நிலவரங்களைப் பட்டியலிட்டார். “ஒரு தொகுதியில் 98,000 ஆண்கள் வாக்களித்திருந்தால் அதில் பெண்கள் 1,02,000 என்ற அளவில் வாக்களித்துள்ளனர். அதாவது, பல தொகுதிகளில் ஆண்களைவிட பெண்கள் அதிகப்படியாக வாக்களித்துள்ளனர். ஆனால், வடக்கில் மட்டும் நிலைமை சற்று மாறுபடுகிறது. அங்கு பெண்களைவிட ஆண்கள் அதிகளவில் வாக்களித்துள்ளனர். பொதுவாக, பெண்கள் அதிகப்படியாக வாக்களித்தால் அ.தி.மு.கவுக்கு சாதகமாக இருக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. ஆறு சிலிண்டர்கள், மாதம் 1,500 ரூபாய், இலவச கேபிள் ஆகியவற்றோடு வாக்குக்கு ஆயிரம் ரூபாய் என்ற அளவில் பல தொகுதிகளில் விநியோகம் நடந்தன. வாக்குக்குப் பணம் வாங்கிவிட்டால் விசுவாசமாக இருக்க வேண்டும்’ என்ற எண்ணமும் பெண்கள் மத்தியில் உள்ளது. அந்த அடிப்படையிலும் பெண்கள் வாக்குகள் அ.தி.மு.க அணிக்கு வந்திருக்கலாம் என நினைக்கின்றனர்.

புரியாத புதிரான `வடக்கு’!

ஆனால், ராணிப்பேட்டை, வேலூர், கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களிலும் பெண்களைவிட ஆண்கள் அதிகப்படியாக வாக்களித்துள்ளனர். வட மாவட்டங்களைப் பொறுத்தவரையில் முதல்வருக்குத் தேர்தல் வேலை பார்க்கும் சுனில் டீம் கொடுத்த அறிக்கையும் தி.மு.கவின் ஐபேக் கொடுத்துள்ள அறிக்கையும் பெரிதாகத் தெளிவைத் தரவில்லை. இது புரியாத புதிராக உள்ளது.

வன்னியர் இடஒதுக்கீட்டின் மூலம் அங்குள்ள இதர சமூகங்கள் அ.தி.மு.க அணிக்கு எதிராகத் திரும்பியிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. ஏனென்றால் இடஒதுக்கீட்டின் பலனை அதிகம் அனுபவிப்பவர்களாக ஆண்கள் உள்ளனர். வடமாவட்டங்களில் ஆண்கள் அதிகப்படியாக வாக்களித்ததையும் இதனோடு தொடர்புபடுத்திப் பார்க்கிறோம். ஆனால், ` வடக்கில் நல்லபடியாக செயல்பட்டுள்ளோம். 60 சதவிகிதமான இடங்களில் வெல்வோம்’ என முதல்வரிடம் அவரது தேர்தல் ஆலோசகர் தெரிவித்துள்ளார். எந்த அடிப்படையில் இதனை அவர் தெரிவித்தார் எனவும் தெரியவில்லை.

வி.சி.க 6; பா.ஜ.க 3..!

அதே நேரம், `வி.சி.க ஆறு இடங்களிலும் வெல்லலாம்’ எனவும் முதல்வருக்கு அளிக்கப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தக் கோபத்தைத்தான் அரக்கோணம் விவகாரத்தில் பா.ம.க தரப்பு காட்டியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்தத் தேர்தலில் 11 முதல் 12 தொகுதிகளில் பா.ம.க வெல்லலாம் எனவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பா.ஜ.கவை பொறுத்தவரையில் நெல்லையில் நயினார் நாகேந்திரன், கோவை தெற்கில் வானதி, அரவக்குறிச்சியில் அண்ணாமலை ஆகியோருக்கு வெற்றி வாய்ப்பு உள்ளதாக நம்புகின்றனர்.

அதிலும், அரவக்குறிச்சியில் அண்ணாமலை கரையேறுவார் என மத்திய உளவுத்துறை அறிக்கை தெரிவித்துள்ளது. தாராபுரத்தில் முருகனுக்கு சற்று சிரமமான சூழலே நிலவுகிறது. மொடக்குறிச்சியில் தி.மு.கவின் சுப்புலட்சுமி ஜெகதீசன் பெரிதாக தேர்தல் வேலை பார்க்கவில்லை. அங்கு பா.ஜ.க வேட்பாளர் சரஸ்வதி நன்றாக தேர்தல் வேலை பார்த்தார். ஆனால் அதையும் மீறி களநிலவரம் உதயசூரியனுக்கு சாதகமாகவே உள்ளதாகவும் முதல்வரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது” என்கிறார்.

முதல்வரின் உற்சாகம்!

மேலும், `மாநிலம் முழுவதும் 86 தொகுதிகள் வரையில் அ.தி.மு.க அணிக்கு உறுதியாகக் கிடைக்கலாம். 20 முதல் 30 தொகுதிகளில் இழுபறி நீடிக்கலாம் ‘ என மத்திய உளவுத்துறை அறிக்கை கொடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. மத்திய உளவுத்துறை, மாநில உளவுத்துறை ஆகியவற்றின் அறிக்கையும் தேர்தல் வல்லுநர் சுனில் டீம் கொடுத்த அறிக்கையும் ஒன்று சேர்ந்து முதல்வருக்கு உற்சாகத்தை அளித்துள்ளதாகவும் அ.தி.மு.க நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.

அ.தி.மு.கவின் வெற்றிக் கணக்கு குறித்து தி.மு.கவின் சட்டத்துறை இணைச் செயலாளர் வீ.கண்ணதாசனிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம். “ புதிய புதிய அறிக்கைகளை வைத்துக் கொண்டு, முதல்வர் தன்னைத்தானே தேற்றிக் கொள்கிறார் என்றுதான் பார்க்கிறேன். களநிலவரம் அப்படியில்லை. 180 தொகுதிகளுக்கும் மேலாக தி.மு.க அணி வெற்றி பெறும் என்பதில் உறுதியாக இருக்கிறோம்” என்கிறார்.

“ கடந்த 2011 ஆம் ஆண்டு தி.மு.க வெற்றி பெறும் என மத்திய உளவுத்துறை அறிக்கை கொடுத்தது. ஆனால், நடந்ததே வேறு. 2019 மக்களவைத் தேர்தலில் அ.தி.மு.க அணி முப்பதுக்கும் மேற்பட்ட இடங்களில் வெல்லும் எனவும் கணித்தனர். இப்படிப்பட்ட உளவுத்துறைகளின் அறிக்கையை அவர்கள் நம்பிக் கொண்டிருக்கின்றனர். வாக்கு எண்ணிக்கை முடியும்போது உண்மை நிலவரம் தெரியவரும்” என்கிறார்.

சாதக, பாதகம் எங்கே?

`களநிலவரம் எந்த அணிக்குச் சாதகமாக வரும்?’ என்பது குறித்து பிபிசி தமிழிடம் பேசிய அரசியல் ஆய்வாளர் ரவீந்திரன் துரைசாமி, “2019 மக்களவைத் தேர்தலுக்கு முன்பாகவே, வடமாவட்டங்களில் ஸ்டாலின் உறுதியாக வெற்றி பெறுவார் என்று கூறினேன். அது நடந்தது. தற்போது கடும் போட்டி இல்லை என்ற சூழலால், தி.மு.க அணியின் வாக்கு சதவிகிதம் சற்றே குறையலாம். அதேநேரம், முதல்வரின் சொந்த சமூக பலமும் வன்னியர் சமூகத்தின் மீதான பாசமும் சேலம், தருமபுரி ஆகிய மாவட்டங்களில் அ.தி.மு.கவின் வாக்கு வங்கியை சற்று மேம்படுத்தலாம்” என்கிறார்.

மேலும், “ நாமக்கல், ஈரோடு மாவட்டங்களில் அ.தி.மு.க அணிக்குப் பாதகமான சூழல் ஏற்படலாம் என நினைக்கிறேன். அந்தியூர், பவானியில் தி.மு.க அணிக்கான வாக்குகள் கூடலாம். சில தொகுதிகளில் எடப்பாடி பழனிசாமியை ஏற்றுக் கொள்ளாத சில சமூகங்கள், நாம் தமிழர் கட்சியை நாடியுள்ளதையும் பார்க்க முடிகிறது. இவர்களில் பலரும் தி.மு.க அணிக்கு எதிரானவர்கள். `ஜெயலலிதா இருந்த அ.தி.மு.க வேறு, தற்போதுள்ள அ.தி.மு.க வேறு’ என்ற மனநிலையிலும் வாக்காளர்கள் உள்ளனர். எனவே, அ.தி.மு.க தலைமையின் எண்ண ஓட்டத்துக்கு ஏற்ப தொகுதிகள் கிடைக்குமா என்பது தேர்தல் முடிவில் தெரியவரும்” என்கிறார்.

வாக்கு எண்ணிக்கை முடியும் வரையில் ஒவ்வொரு கட்சியும் தங்களின் மனநிலைக்கு ஏற்ப சதவிகிதக் கணக்குகளைப் போட்டு வருகின்றன. இவற்றையெல்லாம் தாண்டி, மக்கள் அளித்துள்ள உண்மையான மதிப்பெண்ணைக் காணவும் வேட்பாளர்கள் பதற்றத்துடன் காத்திருக்கின்றனர்.

%d bloggers like this: