தங்கைக்கு பவர்ஃபுல் பதவி! – ஸ்டாலின் திடீர் திட்டம்

கழுகாரிடமிருந்து, “தடுப்பூசி முகாம்களுக்கு விசிட் அடித்துவிட்டு வருகிறேன்” என்று குறுந்தகவல் வந்தது. மதியத்துக்கு மேல் வெயிலின் தாக்கத்தால் சோர்வுடன் வந்த கழுகார், “பல இடங்களுக்கும் சென்று பார்த்தேன்… எங்கு பார்த்தாலும் தடுப்பூசி கிடைக்கவில்லை என்ற குரல்கள் கேட்கின்றன” என்றார். அவரது சோர்வைப் போக்க குளிர்ச்சியான மோரைக் கொடுத்தோம். மோரை உறிஞ்சியவர், “கேள்விகளை நீர் கேளும்… பதிலைச் சொல்கிறேன்” என்றார்.

“அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய முதல்வர் பழனிசாமி பாதிக் கூட்டத்திலேயே வெளியேறினார் என்கிறார்களே?”

“கொரோனா ஊரடங்கு தொடர்பாக, ஏப்ரல் 18-ம் தேதி அரசு அதிகாரிகளுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தினார். அதிகாரிகள் தரப்பில், ‘மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை ஊரடங்கு அமல்படுத்தலாம்’ என்று சொல்லியிருக்கிறார்கள். அதை மறுத்த எடப்பாடி, ‘மக்கள் ரொம்ப சிரமப்படுவாங்க. இரவு 10 மணியிலிருந்து அதிகாலை 4 மணி வரை அமல்படுத்தலாம்’ என்று சொல்லியிருக்கிறார். அதன்படிதான் அரசாணையும் வெளியிடப்பட்டது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பேசிக்கொண்டிருக்கும்போதே, முதல்வருக்கு அடிவயிற்றில் வலி எடுத்திருக்கிறது. ‘உடம்பு சரியில்லை. ஹாஸ்பிடலுக்குக் கிளம்புறேன்’ என்று சொல்லிவிட்டுப் பாதியிலேயே கிளம்பிவிட்டாராம். இதையடுத்து, ஏப்ரல் 19-ம் தேதி அதிகாலையில் சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் எடப்பாடிக்கு, குடலிறக்க அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருக்கிறது.”

“தமிழக சுகாதாரத்துறையில் முறைகேடு நடந்திருக்கிறது என்கிறார்களே?”

“ஆமாம். கடந்த ஆண்டு கொரானா தொற்று பரவத் தொடங்கியபோது, கொரானா பரிசோதனைக்காக ஆர்.சி.பி.ஆர் கிட்களை பிரேசில் நாட்டிலுள்ள ஒரு தனியார் நிறுவனத்திடமிருந்து கொள்முதல் செய்தார்கள். அதன் பிறகு, இந்தியாவிலுள்ள ஏராளமான நிறுவனங்கள் குறைந்த விலைக்கு இந்த கிட்டை தயாரிக்கத் தொடங்கின. அப்படியிருந்தும், தமிழக அரசு பிரேசில் நிறுவனத்திடமிருந்தே தொடர்ந்து கூடுதல் விலைக்கு ஆர்.சி.பி.ஆர் கிட்களைக் கொள்முதல் செய்திருக்கிறதாம். இந்த விவகாரத்தில் பல கோடி ரூபாய் முறைகேடு நடைபெற்றிருப்பதாக சுகாதாரத்துறையில் குரல்கள் எழுந்துள்ளன.”

தேர்தல் ஆணையர் சத்ய பிரதா சாகுவிடமும் சுகாதாரத்துறை தொடர்பாக ஒரு புகார் சென்றிருக்கிறதாமே?”

“உண்மைதான். வாக்குப்பதிவு மையங்களில் பயன்படுத்துவதற்காக சானிடைஸர், தெர்மா மீட்டர் உள்ளிட்ட பொருள்களை தமிழக சுகாதாரத்துறையிடமிருந்து தேர்தல் ஆணையம் கொள்முதல் செய்திருந்தது. இதிலும், முறைகேடு நடந்திருப்பதாகத் தேர்தல் ஆணையரிடம் ஒரு டீம் புகார் செய்திருக்கிறதாம். கடுப்பான சாகு இதுகுறித்து விசாரிக்க உத்தரவிட்டிருக்கிறார்.”

“சுகாதாரத்துறையில் முறைகேடுகளின் நாற்றம் குமட்டுகிறது… கோவையிலும் சர்ச்சை எழுந்துள்ளதே?”

“கோவையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் கட்டப்பட்ட சுவர் ஒன்று சில நாள்களுக்கு முன்பு இடிந்து விழுந்தது. இது தொடர்பாக கோவை போலீஸ் தரப்பிலிருந்து மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பப்பட்டிருக்கும் அறிக்கையில், ‘தரமற்ற முறையில் கட்டப்பட்டதால்தான், கட்டப்பட்ட ஆறு மாதங்களுக்குள்ளாகவே சுவர் இடிந்து விழுந்திருக்கிறது’ என்று குறிப்பிடப்பட்டிருக்கிறதாம். இதையறிந்த அமைச்சர் வேலுமணி தரப்பு அப்செட் என்கிறார்கள். இதையடுத்து, அரசுத் தரப்பிலிருந்தே ஆய்வுக்குழுவை நியமித்துவிட்டால் விவகாரத்தைச் சமாளித்துவிடலாம் என்று திட்டமிட்டதாம் அமைச்சர் தரப்பு. இதன்படி, சென்னை ஐ.ஐ.டி குழுவை ஆய்வுக்கு அனுப்ப அமைச்சர் தரப்பு அழுத்தம் கொடுப்பதாகக் கூறப்படுகிறது.”

“ம்ம்… தி.மு.க-வில் என்ன நடக்கிறது?”

“ஃபாலோஅப் தகவல்தான்… துணை முதல்வர் பன்னீர்செல்வத்துக்கு ஆதரவான கோயம்பேடு கட்டுமான நிறுவனம் குறித்த ஒரு ஃபைலை, தி.மு.க தலைவர் ஸ்டாலினிடம் கொடுத்திருக்கிறது ‘பூ’ பெயரைக்கொண்ட மற்றொரு கட்டுமான நிறுவனம். ‘3,000 கோடி ரூபாய் மதிப்பிலான கணக்கில் வராத சொத்து ஆவணங்கள் கோயம்பேடு கட்டுமான நிறுவனத்திடம் இருக்கிறது. கடந்த ஐந்தாண்டுகளாக நமக்கு வர வேண்டிய பல நிதி ஆதாரங்களைத் தடுத்ததே அந்த கோயம்பேடு நிறுவனம்தான்’ என்று ‘பூ’ நிறுவனம் போட்டுக் கொடுத்ததாம். விஷயம் கேள்விப்பட்டு பதறிப்போன கோயம்பேடு நிறுவனத் தரப்பு, தி.மு.க-வின் கிச்சன் உறவு ஒருவர் மூலம் சமாதானம் பேச முயன்றதாம். அதற்கும் ‘எண்ட் கார்டு’ போட்டுவிட்டதாம் தி.மு.க தலைமை” என்ற கழுகாருக்கு அசோகா அல்வாவை நீட்டினோம். அல்வாவைச் சுவைத்தபடியே செய்திகளுக்குள் நுழைந்தார் கழுகார்.

தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு தி.மு.க மகளிரணிச் செயலாளர் கனிமொழிக்கு தென்மண்டல அமைப்புச் செயலாளர் அல்லது கே.என்.நேரு வகிக்கும் முதன்மைச் செயலாளர் பதவியை இரண்டாகப் பிரித்து தென் மண்டலத்துக்கு கனிமொழியை முதன்மைச் செயலாளராக அமர்த்த ஸ்டாலின் திட்டமிடுகிறாராம்.”

“தங்கைக்கு ‘பவர்ஃபுல்’ பதவி அளிக்கிறாரா… ஆச்சர்யமாக இருக்கிறதே… என்ன நடந்தது?”

“பதவி அளித்தாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் என்கிறார்கள். ‘நவம்பர் 29-ம் தேதி முதல் தேர்தலுக்காக தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்த கனிமொழி, தென் மாவட்டங்களில் தி.மு.க-வின் வாக்குவங்கியை வெகுவாக உயர்த்திருக்கிறாராம். முன்பாக சாத்தான்குளம் சம்பவம், பொள்ளாச்சி பாலியல் சம்பவம் ஆகியவற்றிலெல்லாம் அந்தந்த ஊர்களிலேயே முகாமிட்டு, போராட்டம் நடத்தி கட்சியின் செல்வாக்கை உயர்த்தியிருக்கிறார்’ என்று ஐபேக்கும் ரிப்போர்ட் அளித்திருக்கிறதாம். தவிர, தேர்தலின்போது விடாமல் சுற்றுப்பயணம் செய்ததால்தான், கொரோனாவால் பாதிக்கப்பட்டு கவச உடையுடன் வந்து வாக்களித்தார் கனிமொழி. இதையெல்லாம் எடைபோட்டுப் பார்த்துத்தான், கனிமொழிக்குக் கட்சியில் முக்கியப் பொறுப்பு வழங்க ஸ்டாலின் திட்டமிட்டுள்ளதாக தி.மு.க வட்டாரங்கள் பரபரக்கின்றன.”

”ம்ம்… ஆடிட்டர் குருமூர்த்தி தரப்பு அமித் ஷாவுக்கு ஏதோ ரிப்போர்ட் அனுப்பியிருக்கிறதாமே?”

“அ.தி.மு.க இணைப்பு பல்லவியைத்தான் அந்த ரிப்போர்ட்டில் ஆடிட்டர் தரப்பு பாடியிருக்கிறது என்கிறார்கள். ‘சசிகலா, ஓ.பி.எஸ்., தினகரன் மூவரையும் இணைத்து ஒருங்கிணைந்த

அ.தி.மு.க-வை உருவாக்கினால், பலம் பொருந்திய கட்சியாக அது உருவெடுக்கும். 2024 நாடாளுமன்றத் தேர்தலில் அவர்களுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிடும் பட்சத்தில் பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் பா.ஜ.க-வுக்கு ஏற்படும் சேதாரத்தை தமிழகத்தைக்கொண்டு நிவர்த்தி செய்யலாம்’ என்று அந்த ரிப்போர்ட்டில் சொல்லியிருக்கிறதாம் ஆடிட்டர் தரப்பு. அதேநேரம், ‘சசிகலாவை அ.தி.மு.க-வுக்குள் சேர்ப்பதால் மோடிக்கு எந்தப் பயனும் ஏற்படப்போவதில்லை’ என்று ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த முக்கியஸ்தர்கள் சிலர், தனியாக ஒரு ரிப்போர்ட்டை மோடிக்கு அனுப்பியிருக்கிறார்கள்…” என்றபடி கிளம்ப ஆயத்தமான கழுகார்,

“புதிய தமிழகம் கிருஷ்ணசாமியின் மகன் ஷியாம் கிருஷ்ணசாமி, ‘இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டிலுள்ள கோயில்களின் சொத்துகளை அனுபவிப்பது யார்?’ என்ற கேள்வியை எழுப்பியிருக்கிறார். ‘அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டிலுள்ள 36,850 கோயில்களுக்குச் சொந்தமாக 5.75 லட்சம் ஹெக்டேர் நிலம், 2.5 கோடி சதுரடி பரப்புள்ள வணிகக் கட்டடங்கள் உள்ளன. இவற்றிலிருந்து ஆண்டுக்கு 50 கோடி ரூபாய் மட்டுமே வருமானம் கிடைப்பதாகக் கூறப்படுகிறது. முறையாக வருமானம் பெற்றால், வரியின்றி பட்ஜெட்டே போடலாம். தமிழகத்திலுள்ள பெரிய கோயில்களின் அசையும், அசையா சொத்துகளின் விவரங்களை ஒரு மாதத்துக்குள் தமிழக அரசு வெளியிட வேண்டும்’ என்று சொல்லியிருக்கிறார் ஷியாம். இந்தக் கேள்விக்குப் பின்னால் ஆயிரம் அர்த்தங்கள் புதைந்திருக்கின்றன. கோயில் விவகாரத்தைவைத்து கிருஷ்ணசாமி பெரிய அளவில் போராட்டம் நடத்தவும் ஆயத்தமாகிறாராம்” என்றபடி சிறகுகளை விரித்தார்.

%d bloggers like this: