வலிக்காம அடிங்க!” – டீல் பேசும் அமைச்சர்கள்…

தேர்தல் முடிவுகள் வரும் முன்பே, வழக்கு வம்புகளிலிருந்து தங்களைக் காப்பாற்றிக்கொள்ள தமிழக அமைச்சர்கள் சிலர் தூதுவிடும் படலத்தைத் தொடங்கிவிட்டார்கள். `தி.மு.க ஆட்சியைப் பிடித்தால் தங்களைச் சிறையில் தள்ளிவிடுவார்களோ… ஆஸ்திக்கு ஆபத்து வந்துவிடுமோ’ என்கிற அச்சம் அமைச்சர்களைப் பிடித்து ஆட்டுகிறது என்கிறார்கள் தலைமைச் செயலக

வட்டாரத்தினர். யாரெல்லாம் அந்த அமைச்சர்கள்… தங்களைக் காப்பாற்றிக்கொள்ள அவர்கள் என்னவெல்லாம் செய்கிறார்கள்? கோட்டையை வலம்வந்தோம்.
”வலிக்காம அடிங்க!” – டீல் பேசும் அமைச்சர்கள்…
தூது சென்ற பெண் அதிபர்!

“பெயர் வேண்டாம்” என்கிற கோரிக்கையுடன் அமைச்சர்களின் உதவியாளர்கள், அ.தி.மு.க சீனியர்கள் சிலர் நம்மிடம் பேசினார்கள். “கொங்கு மண்டலத்தின் மூத்த அமைச்சர் ஒருவர் எதிர்க்கட்சித் தலைவரின் ஹிட் லிஸ்ட்டில் முதலிடத்தில் இருப்பதால், அவர் சேர்த்திருக்கும் சொத்துகளுக்கு எந்தச் சிக்கலும் வந்துவிடக் கூடாது என்று பதற்றத்தில் இருக்கிறார். கொங்கு மண்டலத்தின் பிரபல கல்லூரியின் பெண் அதிபர், அமைச்சருடன் நல்ல நட்பில் இருக்கிறார். அமைச்சருக்கு நெருக்கமான காவல்துறை உயரதிகாரி ஒருவர்தான் இந்த நட்புக்குப் பாதை அமைத்துக்கொடுத்தவர். அந்தக் காவல் அதிகாரி எதிர் முகாமுக்கும் நெருக்கமானவர் என்பதால், அவர் மூலம் டீல் பேச முயன்றிருக்கிறார் மூத்த அமைச்சர்.

அதன்படி, கல்லூரியின் பெண் அதிபர் ஐந்து ஸ்வீட் பாக்ஸ்களுடன் சென்னைக்குப் பயணமானார். காவல்துறை உயரதிகாரியின் ஏற்பாட்டில் டீல் பேச நேரமும் குறிக்கப்பட்டது. இந்தச் சந்திப்பு நடைபெறுவதற்கு சில மணி நேரத்துக்கு முன்பாக மூத்த அமைச்சரின் நோக்கம் பற்றியும், இதனால் எதிர் முகாமுக்கு ஏற்படும் பாதகம் பற்றியும் ஒரு டீம் எதிர் முகாமின் தலைமையிடம் விரிவாக எடுத்துச் சொல்லி யிருக்கிறது. இதையடுத்து, மீட்டிங்கை கேன்சல் செய்துவிட்டது எதிர்த் தரப்பு. பெண் அதிபர் தரப்பிலிருந்து, ‘ஸ்வீட் பாக்ஸையாவது வாங்கிக் கொள்ளுங்கள்’ என்று சொன்னதற்கு, ‘பிறகு பார்த்துக்கொள்ளலாம்’ என்று பதில் வந்ததாம்.

இப்படி எதிர் முகாமிடம் டீல் முறிந்துவிட்ட நிலையில், டெல்லி தரப்பின் மாநிலத் துணைத் தலைவர் ஒருவருடன் பேச்சுவார்த்தை நடத்தினார் அமைச்சர். அமைச்சர் சார்பில் வியூக வகுப்பாளர் ஒருவரும், அமைச்சரின் நண்பரும் அந்தத் துணைத் தலைவரைச் சந்தித்துப் பேசியிருக்கிறார்கள். அதற்கு, ‘தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு எங்கள் கட்சியின் மாநிலத் தலைமையில் மாற்றம் இருக்கும். அப்போது உங்கள் பிரச்னைகளை நான் பார்த்துக்கொள்கிறேன்’ என்று நம்பிக்கையளித்து அனுப்பியிருக்கிறார் அந்த துணைத் தலைவர்.

”வலிக்காம அடிங்க!” – டீல் பேசும் அமைச்சர்கள்…
“உடம்புக்கு முடியல!”

கொங்கு மண்டலத்தில் கோலோச்சிய மற்றோர் அமைச்சரும் தன் உறவுகள் மூலம் எதிர் முகாமுடன் உரையாட ஆரம்பித்திருக்கிறார். அவரது துறையில் நடந்த ஏராளமான முறைகேடுகளில், தொழிற்சங்கங்கள் மூலம் ஆதாரங்கள் திரட்டப்பட்டுள்ளன. இதனால் பதற்றத்திலிருக்கும் அந்த அமைச்சர், தன் மருமகனை வைத்து எதிர் முகாமின் வாரிசுப் பிரமுகரை நெருங்க முயன்றார். ஆனால், இதுவரை எந்தவொரு பாசிட்டிவ் சிக்னலும் வரவில்லை. மற்றொருபுறம், கட்சிப் பஞ்சாயத்துகளுக்காக அடிக்கடி டெல்லி சென்ற வகையில், டெல்லியிலுள்ள சில முக்கியப் புள்ளிகளுடன் அமைச்சருக்குத் தொடர்பு ஏற்பட்டது. அந்தத் தொடர்புகள் மூலமாகவும் தனக்கெதிராக வருமான வரித்துறை நடவடிக்கைகள் எதுவும் இருக்கக் கூடாது என்று டெல்லியில் டீல் பேசிவருகிறார் அமைச்சர்.

மத்திய மண்டலத்திலுள்ள அமைச்சர் ஒருவர்மீது, ‘கொரானாவில் கொள்ளை லாபம் பார்த்தவர்’ என்கிற குற்றச்சாட்டு இருக்கிறது. இதனால், ஆட்சிக்கு வந்தவுடன் அவர்மீது நடவடிக்கை எடுக்கத் திட்டமிட்டிருக்கிறது எதிர் முகாம். இதனால் கலக்கத்தின் உச்சத்திலிருக்கும் அந்த அமைச்சர், எதிர் முகாமில் இணைந்திருக்கும் முன்னாள் அமைச்சர் ஒருவர் மூலமாகத் தூதுவிட்டுவருகிறார். இதற்காக இருவரும் சந்தித்து பேச்சுவார்த்தையும் நடத்தியிருக்கிறார்கள். அப்போது, ‘எதிர் முகாமில் எவ்வளவு கேட்கிறார்களோ, அதைக் கொடுத்துவிடுகிறேன். ஆட்சிக்கு வந்தவுடன் என்மீது எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என்று சொல்லுங்கள். ஏற்கெனவே, உடல்நிலை சரியில்லை. என்னால் சிறையிலெல்லாம் இருக்க முடியாது. அப்படியே வழக்கு போட்டாலும் பெருசா வலிக்காத மாதிரியான பிரிவுகளில் போடச் சொல்லுங்க’ என்று உருகியிருக்கிறார் அந்த அமைச்சர்.

அதற்கு, ‘தலைமையிடம் பேசிவிட்டுத்தான் எதையும் சொல்ல முடியும்’ என்று மட்டும் சொல்லிவிட்டு, முன்னாள் அமைச்சர் கிளம்பிவிட்டார். இதுவரை எதிர் முகாமிடமிருந்து சிக்னல் வராததால் பதற்றமான அமைச்சர், தன் கல்லூரி நண்பரான எதிர் முகாம் எம்.பி-யை வைத்து இப்போது தூதுவிடும் படலத்தை ஆரம்பித்திருக்கிறார்” என்றவர்கள் வடக்கு மற்றும் தென் மண்டல அமைச்சர்கள் சிலரது டீல்களைப் பற்றியும் பேசினார்கள்…

“வளமான துறையைக் கையில்வைத்திருந்த வடக்கு மண்டல அமைச்சரைத் தோற்கடிக்க வேண்டும் என்று சொந்தக் கட்சியின் நிர்வாகிகளே ஏகப்பட்ட உள்ளடி வேலைகளைச் செய்திருக்கிறார்கள். இதனால், தேர்தல் முடிவுகள் என்னவாகுமோ என்று அரண்டுபோயிருக்கும் அமைச்சர், தன் வாரிசு மூலம் எதிர் முகாமுக்குத் தூதுவிட்டிருக்கிறார். அவரின் வாரிசும், எதிர் முகாமின் முக்கியப்புள்ளியும் கல்லூரி நண்பர்கள் என்பதால் நம்பிக்கையுடன் காத்திருக்கிறார் அமைச்சர். ஆனால், எதிர் முகாமிலிருந்து எந்த ரியாக்‌ஷனும் வரவில்லை.

”வலிக்காம அடிங்க!” – டீல் பேசும் அமைச்சர்கள்…
“பழசெல்லாம் ஞாபகம் வருதே!”

மத்திய அரசு தொடர்புடைய டெண்டர் விவகாரத்தில் சிக்கியிருக்கும் தென் மண்டல அமைச்சர், தூக்கமில்லா இரவுகளைக் கடத்துகிறார். அடித்த கொள்ளையில் சரி பாதியை காணிக்கை செலுத்தியாவது வழக்கிலிருந்து தப்பிக்க வேண்டும் என்ற முடிவிலிருப்பவர், ரியல் எஸ்டேட் அதிபர் ஒருவர் மூலம் எதிர் முகாமிடம் தூதுவிட்டிருக்கிறார். ஆனால், ‘இந்த விவகாரத்தை முதலில் எழுப்பியதே நாம்தான். நாமே ஒதுங்கிவிட்டால் நன்றாக இருக்காது’ என்று எதிர் முகாமின் தலைமைக்கு சிலர் அட்வைஸ் செய்ததால், தூதுப்படலம் அறுந்துவிட்டது என்கிறார்கள்.

தனது சர்ச்சைக் கருத்துகளால் அடிக்கடி வம்பில் சிக்கிக்கொள்ளும் தென் மாவட்ட அமைச்சர், பஞ்சமில்லாமல் சம்பாதித்துவிட்டார். கடந்தகாலத்தில் அமைச்சர் என்கிற தோரணையில் எதிர் முகாமின் தலைவரைப் பற்றி வம்படியாகப் பேசியதெல்லாம் இப்போது நினைவுக்கு வந்து கதிகலங்க ஆரம்பித்துவிட்டார். இதனால், எதிர் முகாமில் இருக்கும் தன் நெருங்கிய நண்பரும், சீனியருமான இனிஷியல் மனிதர் மூலம் தூதுவிட்டிருக்கிறார். அதேபோல, பா.ஜ.க துணைத் தலைவர் ஒருவரைவைத்து டெல்லிக்கும், பழைய தொடர்புகளைவைத்து சசிகலாவுக்கும் தூதுவிட்டிருக்கிறார் சர்ச்சை நாயகன்!

எம்.எல்.ஏ-க்கள், எம்.பி-க்கள் மீதான புகார்களை விசாரிக்க ஏற்கெனவே தனி நீதிமன்றம் இருக்கும் நிலையில், ‘அ.தி.மு.க அமைச்சர்கள் மீதான புகார்களை விசாரிக்க மட்டும் சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்படும்’ என்று தி.மு.க-வின் தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்டிருக்கிறது. அமைச்சர்களின் பீதிக்கு முக்கியக் காரணம் இதுதான். மே 2-ம் தேதிக்குப் பிறகு, இந்த ஆட்டம் இன்னும் வீரியமடையலாம்.

%d bloggers like this: