இரவில் வந்த ஃபோன்கால்; தெம்பூட்டிய டெல்லி – உற்சாகத்தில் எடப்பாடி!

தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகளில் அ.தி.மு.க-வுக்கு பின்னடைவு ஏற்பட்டிருப்பதை பல்வேறு ஊடகங்கள் தெரிவித்திருக்கும் நிலையில், அ.தி.மு.க தொண்டர்கள்

உற்சாகமிழந்துள்ளனர். அவர்களுக்கு தெம்பூட்டும் விதமாக, அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ்., இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரிடமிருந்து ஏப்ரல் 30-ம் தேதி கடிதம் வந்தது.

பன்னீர் – எடப்பாடி
கடிதத்தில், `2016 சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகும் முன்னர் வெளிவந்த அனைத்துக் கருத்துக் கணிப்புகளும் அ.தி.மு.க-வின் வெற்றியைக் குறிப்பிடவில்லை.

மாற்று அணிதான் வெற்றியடையப் போகிறது என்றனர். ஆனால், அ.தி.மு.க மீண்டும் வெற்றியடைந்து ஆட்சியமைத்தது. இப்போதும் அதுதான் நடக்கப்போகிறது’ என்று அ.தி.மு.க தலைவர்கள் கூட்டாக எழுதியுள்ளனர். ஆனாலும், அ.தி.மு.க நிர்வாகிகளிடம் போதிய உற்சாகம் ஏற்படவில்லை. இந்தச் சூழலில், ஏப்ரல் 30-ம் தேதி இரவு டெல்லியிலிருந்து ஒரு ஃபோன்காலால் எடப்பாடிக்கு வந்ததாகவும், தேர்தல் ரிசல்ட் தொடர்பாக தெம்பூட்டியதாகவும் அ.தி.மு.க வட்டாரங்களில் பரபரப்பு பேச்சு ஓடுகிறது.

“மனுசங்க எப்படி இருக்காங்க பாருங்க” – புலம்பிய எடப்பாடி… தேற்றிய பன்னீர்!

இதுகுறித்து அ.தி.மு.க இரண்டாம் கட்டத் தலைவரும் மூத்த அமைச்சருமான ஒருவரிடம் பேசினோம்.“கருத்துக் கணிப்பு முடிவுகளால் தொண்டர்கள், கட்சி நிர்வாகிகளிடம் சோர்வு ஏற்பட்டிருப்பது உண்மை. இது களத்தில் பிரதிபலித்து, வாக்கு எண்ணும் மையத்திலிருந்து முகவர்கள் பாதியிலேயே வெளியேறிவிடக் கூடாது என்பதுதான் கட்சித் தலைமைக்கு இருக்கும் பெரும் கவலை. வாக்கு எண்ணும் மையங்களுக்குச் செல்லும் முகவர்கள், வாக்கு எண்ணிக்கைக்கு 48 மணிநேரத்துக்கு முன்னதாக தங்களை கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தி, அதற்குரிய சான்றுகளை மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

எடப்பாடி பழனிசாமி
இதற்காக ஏப்ரல் 30-ம் தேதி காலையிலேயே முகவர்களுக்கு பரிசோதனை செய்ய பல்வேறு இடங்களில் பரிசோதனை மையங்கள் அமைக்கப்பட்டன. ஆனால், பல மாவட்டங்களில் எந்த சுறுசுறுப்பும் இல்லாமல் நிர்வாகிகள் இருந்தனர். பல முகவர்கள் பரிசோதனைக்குக் கூட செல்லவில்லை. தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளில் அ.தி.மு.க தோல்வியடைந்துவிடும் என்று ரிசல்ட் வந்ததே, இந்த சுணக்கத்திற்கான காரணம். இதனால் கட்சித் தலைமையும் சஞ்சலமடைய ஆரம்பித்தது. இந்தச் சூழலில்தான், எடப்பாடி பழனிசாமிக்கு மிக நெருக்கமான மூத்த மத்திய அமைச்சரும், டெல்லியில் தனக்கென ஒரு லாபியை வைத்திருப்பவருமான அந்த பா.ஜ.க தலைவரிடமிருந்து ஏப்ரல் 30-ம் தேதி இரவு ஃபோன் வந்தது.

எடப்பாடி பழனிசாமி: சட்டசபை தேர்தல்… ஒரு பார்வை! #TNelections2021

உடைந்த ஆங்கிலத்தில் பேசிய அந்த பா.ஜ.க தலைவர், ‘தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு பற்றியெல்லாம் கவலைப்படாதீங்க. 2016 சட்டமன்றத் தேர்தலின்போதும் இதேமாதிரி தான் குழப்புனாங்க. ஆனால், காலை 10 மணிக்கெல்லாம் இரண்டாவது சுற்றிலேயே அ.தி.மு.க-வுக்கு சாதகமான சூழல் ஏற்பட்டது. அப்போதே பிரதமர் மோடி வாழ்த்து தெரிவிச்சதும், அ.தி.மு.க அசைக்க முடியாத சக்தியாக வெற்றியை உறுதி செய்தது. இந்தத் தேர்தலிலும் அ.தி.மு.க தான் வெற்றியடையும். மோடியோட வாழ்த்து உங்களுக்கு இருக்கு. தைரியமா இருங்க’ என்றிருக்கிறார். அதன்பிறகுதான் எடப்பாடிக்கு நிம்மதி பெருமூச்சே வந்தது. அந்த பா.ஜ.க தலைவர் தந்த உற்சாகத்தில், மே 1-ம் தேதி அனைத்து மாவட்டச் செயலாளர்களுக்கும் ஃபோன் போட்ட எடப்பாடி பழனிசாமி, வாக்கு எண்ணும் மையத்தில் கவனமாக இருக்கும்படி கூறியிருக்கிறார். தேர்தல் முடிவுகள் அ.தி.மு.க-வுக்கு சாதகமாகத்தான் வரும், டெல்லி தன்னை கைவிடாது என்று உறுதியாக நம்புகிறார் எடப்பாடி பழனிசாமி” என்றார்.

மோடி
2016 சட்டமன்ற தேர்தலின் வாக்குகள் இரண்டாவது சுற்றில் எண்ணப்பட்டுக் கொண்டிருக்கும் போதே, அ.தி.மு.க ஜெயித்துவிட்டதாக பிரதமர் மோடி வாழ்த்து சொன்னது அப்போது பெரும் சர்ச்சையானது. மறைந்த தி.மு.க தலைவர் கருணாநிதி,“வாக்குகளை நீங்கள் ஏற்கெனவே எண்ணிப் பார்த்துவிட்டீர்களா? பத்து மணிக்கெல்லாம் ஜெயலலிதாவுக்கு வாழ்த்து தந்தி டெல்லியிலிருந்து பறக்கிறது… இதன் உள் ரகசியம் என்ன?” என்று சீறினார். தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படுவதற்கு முன்னதாகவே வாழ்த்து கூறியதன் மூலம், ‘அதிகாரிகளிடத்தில் அ.தி.மு.க தான் ஜெயிக்கப் போகிறது, அக்கட்சிக்கு மத்திய அரசின் ஆதரவு இருக்கிறது என்பதை மோடி மறைமுகமாக கூறிவிட்டார். இதனால், அதிகாரிகள் மறைமுக அழுத்தத்திற்கு ஆளாகிவிட்டனர்’ என்று இப்போதும் தி.மு.க-வினர் குற்றஞ்சாட்டுவது வழக்கம். இந்தக் காட்சிகள் மீண்டும் அரங்கேறும் என்று அ.தி.மு.க தலைமை எதிர்பார்க்கிறது. `மோடியின் வாழ்த்து உங்களுக்கு இருக்கிறது’ என்று எடப்பாடியிடம் பேசிய அந்த பா.ஜ.க தலைவர் கூறியதன் உள் அர்த்தம் இதுதான் என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.

இன்னொரு புறம் தி.மு.க வட்டாரத்தில் இப்படி ஒரு செய்தி அ.தி.மு.க வட்டாரத்தில் உலவுகிறதே என்று கேட்டோம். “இப்படி எதையாவது சொல்லிக்கொண்டு ஆறுதலடைந்து கொள்வதைத் தவிர அவர்களுக்கு வேறு வழி?” என்று சுருக்கமாக முடித்துக் கொண்டனர்.

இன்னும் சில மணி நேரங்களில் இந்தப் பரமபத ஆட்டத்தில் தாயம் யாருக்கென்று தெரிந்துவிடும்.

ஆட்டத்தைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: