அதிமுகவிலிருந்து வந்தவர்களுக்கு முக்கிய அமைச்சர் பதவிகளா.? திமுகவில் திடீர் சலசலப்பு

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் திமுக வெற்றி பெற்று 6-வது முறையாக ஆட்சியை கைப்பற்றி உள்ளது. மாநிலத்தின் முதல்வராக ஸ்டாலினும், அமைச்சர்களாக 33 பேரும் பதவியேற்றுக் கொண்டுள்ளனர். கொரோனா 2-ம் அலை பரவல் காரணமாக கவர்னர் மாளிகையில் இந்த விழா எளிமையான முறையில் நடந்தது.

அமைச்சர்களாக நியமிக்கப்பட்டவர்களுக்கு ஒதுக்கப்பட்ட துறைகள் திமுகவினரால் மட்டுமின்றி, திமுக ஆதரவு ஊடகங்களாலும் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. இது பொதுவெளியில் பெரும் சலசலப்பையும், பல்வேறு விவாதங்களையும் ஏற்படுத்தி இருக்கிறது.

அமைச்சர்களாக நியமிக்கப்பட்ட இந்த 33 பேரில் 8 பேர் பல ஆண்டுகளுக்கு முன்பும் அண்மைக் காலத்திலும் அதிமுகவிலிருந்து திமுகவுக்கு தாவியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிமுகவிலிருந்து திமுகவுக்கு வந்தவர்களுக்கு கருணாநிதி காலத்திலேயே தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டு திமுக வெற்றிபெற்று ஆட்சியைக் கைப்பற்றியபோது ஒருசிலருக்கு அமைச்சர் பதவியும் கொடுக்கப்பட்டிருக்கிறது. அப்போதுகூட இதுபோன்ற லேசான முணுமுணுப்பு சத்தம் கேட்டது இல்லை. ஆனால் தற்போது இது திமுகவினரே வெளிப்படையாகவே பேசும் விஷயமாகிவிட்டது.

திமுகவின் அமைச்சர்கள் பட்டியலில் இடம்பெற்றிருக்கும் எ.வ.வேலு, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், ரகுபதி, முத்துசாமி, ராஜகண்ணப்பன், அனிதா ராதாகிருஷ்ணன், செந்தில் பாலாஜி, சேகர்பாபு ஆகிய 8 பேர் அதிமுகவிலிருந்து திமுகவுக்கு சென்றவர்கள் என்பது இங்கே குறிப்பிடவேண்டிய விஷயம்.

3 ஆண்டுகளுக்கு முன்பு அமமுகவிலிருந்து திமுகவுக்கு தாவிய சில நாட்களிலேயே செந்தில் பாலாஜிக்கு கரூர் மாவட்ட திமுக செயலாளர் பதவி வழங்கப்பட்டது. இதேபோல் அமமுகவிலிருந்து திமுகவில் இணைந்த தங்கத் தமிழ்ச்செல்வனுக்கு கொள்கை பரப்புச் செயலாளர் பதவி தரப்பட்டது. அவர் தேனி வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளராகவும் நியமிக்கப்பட்டார்.

அதேபோல் குறுகிய காலத்தில் 2019-ல் செந்தில் பாலாஜிக்கு அரவக்குறிச்சி சட்டப்பேரவை இடைத்தேர்தலில் போட்டியிட வாய்ப்பும், 2021 தேர்தலில் கரூர் தொகுதியில் போட்டியிட வாய்ப்பும் வழங்கப்பட்டது. தங்கச் தமிழ்செல்வன் இந்த தேர்தலில் போடி தொகுதியில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வத்துக்கு எதிராக போட்டியிட்டு தோல்வி கண்டார்.
இவர்கள் இருவரும் ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது அதிமுகவில் இரண்டாம் நிலை தலைவர்களாக இருந்தவர்கள் ஆவர்.

மாற்றுக் கட்சியில் இருந்து வெளியேறி, இன்னொரு கட்சியில் இணைபவர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிப்பது இந்தியா முழுவதும் எல்லா கட்சிகளும் கையாளும் அரசியல் ரீதியானதொரு நடவடிக்கைதான். அதேபோல் தேர்தலில் வெற்றி பெறும் செல்வாக்கு மிக்கவர்களுக்கு அமைச்சர் பதவி வழங்குவதும் எல்லாக் கட்சிகளும் பின்பற்றும் ஒரு வழிமுறைதான்.

என்றபோதிலும் அதிமுகவிலிருந்து திமுகவிற்கு சென்றவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள துறைகள்தான் தற்போது பரவலாக பல்வேறு தரப்பினராலும் விமர்சிக்கப்படுகிறது.

எ.வ.வேலுவுக்கு, பொதுப் பணித்துறையும், கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரனுக்கு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையும், ரகுபதிக்கு சட்டத்துறையும்,
முத்துசாமிக்கு வீட்டுவசதித்துறையும், அனிதா ராதாகிருஷ்ணனுக்கு மீன்வளத் துறையும், ராஜ கண்ணப்பனுக்கு போக்குவரத்து துறையும், செந்தில் பாலாஜிக்கு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறைகளும், சேகர் பாபுவுக்கு இந்து சமய அறநிலையத் துறையும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

33 பேருக்கு அமைச்சர் பதவிகள் வழங்கப்பட்டு அவர்களுக்கான துறைகள் ஒதுக்கப்பட்டு இருந்தாலும் நிதித்துறை, மருத்துவ துறை, தொழில்துறை, வேளாண்மை துறை, நகர்ப்புற வளர்ச்சித்துறை, பால் வளத்துறை, உயர்கல்வித்துறை, பள்ளிக்கல்வித்துறை, உணவுத் துறை, தகவல் தொழில்நுட்பத் துறை, சுற்றுலாத்துறை, சமூக நலத்துறை உள்ளிட்ட 20 துறைகள்தான் மிக மிக முக்கியமானவையாக கருதப்படுகிறது. இதில் 8 துறைகள் அதிமுகவில் இருந்து வந்தவர்களுக்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது.

அதேநேரம் 1996 மற்றும் 2006ல் திமுக ஆட்சி அமைந்தபோது கருணாநிதியால் அதிகாரமிக்க துறைகள் வழங்கப்பட்ட திமுகவின் மூத்த மற்றும் இரண்டாம் கட்டத் தலைவர்களுக்கு தற்போது மிகவும் சாதாரண துறைகளே ஒதுக்கப்பட்டிருப்பதாக திமுகவில் முணுமுணுப்பு குரல் கேட்கிறது.

திமுக அரசின் புதிய அமைச்சரவை குறித்து மூத்த அரசியல் விமர்சகர்கள் சிலர் கூறும்போது,
“இந்த அமைச்சரவையில் 15 புது முகங்கள் இடம் பிடித்திருக்கிறார்கள். பழைய முகங்களில் துரைமுருகன், கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, பொன்முடி, தங்கம் தென்னரசு, பெரியகருப்பன், சக்கரபாணி, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் என எல்லோருமே நீண்ட நெடுங்காலமாக திமுகவில் இருப்பவர்கள். ஏற்கனவே அமைச்சர்களாகவும் இருந்தவர்கள்.

குறிப்பாக, துரைமுருகன் 1971-ம் ஆண்டு முதலே தேர்தலை சந்தித்து வருபவர். திண்டுக்கல் ஆத்தூர் தொகுதியில் வென்ற ஐ.பெரியசாமியும் அவருக்கு சளைத்தவரல்ல. இந்த தேர்தலில் அவர்தான் தமிழ்நாட்டிலேயே அதிக ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர். இவர்களுக்கு மிகவும் சாதாரண துறைகள்தான் ஒதுக்கப்பட்டிருக்கிறது.

எம்ஜிஆர் 1972-ல் திமுகவில் இருந்து நீக்கப்பட்டு அதிமுகவை தொடங்கியபோதும் சரி, 1993-ல் வைகோ மதிமுகவை ஆரம்பித்தபோதும் சரி, துரைமுருகன் அவர்களுடன் செல்லவில்லை.
கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, பொன்முடி, எம். ஆர்.கே. பன்னீர்செல்வம் போன்றோரும் 1993-ல் வைகோவுடன் கை கோர்க்காதவர்கள். இதையெல்லாம் விட கருணாநிதி இருந்தவரை அவருடைய அமைச்சரவையில் முக்கிய துறைகள்தான் இவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இப்படி காலங்காலமாக கட்சியில் இருப்பவர்களுக்கு முக்கிய துறைகளை ஒதுக்காமல், அதிமுகவில் இருந்து வந்தவர்களுக்கு அதிக அளவில் ஒதுக்கி இருப்பதைத்தான் 40 ஆண்டுகளுக்கும் மேலாக திமுகவில் உள்ள நிர்வாகிகளாலும், தொண்டர்களாலும் ஜீரணிக்க முடியவில்லை.

இந்த தேர்தலில் எ.வ. வேலு,செந்தில்பாலாஜி, ராஜகண்ணப்பன் மூவரும் தங்களது மாவட்டங்கள் தவிர பக்கத்து மாவட்டங்களிலும் திமுகவுக்காக தீவிர தேர்தல் பணிகளை மேற்கொண்டார்கள். அதனால் அவர்களுக்கு, அமைச்சரவையில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கலாம்.

ஒருவேளை, அமைச்சரவையை ஸ்டாலின் மாற்றம் செய்யும்போது நீண்ட காலமாக திமுகவில் உள்ளவர்களுக்கு முக்கியத் துறைகள் கிடைக்கலாம். இருந்தபோதிலும் புதிதாக ஆட்சி அமைந்த நேரத்திலேயே இது நடந்திருந்தால் திமுகவினரிடம் முணுமுணுப்பு குரல் எழ வாய்ப்பே ஏற்பட்டிருக்காது. பொது வெளியிலும் இது அதிக முக்கியத்துவம் கொடுத்து பரபரப்பாக பேசப்பட்டும் இருக்காது” என்று அவர்கள் குறிப்பிட்டனர்.

%d bloggers like this: