அவர் சொந்தக் காசையா தந்தாரு?” – ஆத்திரப்பட்ட பன்னீர்; கட்டுப்படாத எடப்பாடி

அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் அதிர்வுகளை ஏற்படுத்தும் என்பதை கணித்திருந்தாலும், இவ்வளவு களேபரத்தை உருவாக்கும் என்பதை இலைக்கட்சிக் காரர்கள் நினைத்துப் பார்த்திருக்க மட்டார்கள். ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படத்திற்கு சற்றும் குறையாத விறுவிறுப்பு காட்சிகளுடன் நடந்து முடிந்திருக்கிறது நேற்றைய எம்.எல்.ஏ-க்கள் கூட்டம்.

அதிமுக தலைமை அலுவலகம்
‘யார் எதிர்கட்சித் தலைவர்?’

என்கிற பஞ்சாயத்து அ.தி.மு.க-வில் உஷ்ணத்தைக் கூட்டியிருக்கும் நிலையில், இதுதொடர்பாக ஒரு முடிவெடுக்க, மே 7-ம் தேதி மாலை சென்னை ராயப்பேட்டையிலுள்ள அ.தி.மு.க தலைமையகத்தில் அக்கட்சியின் எம்.எல்.ஏ-க்கள் கூட்டம் நடைபெற்றது. ஓ.பி.எஸ்., எடப்பாடியின் ஆதரவாளர்கள் தனித்தனியாக குழுமியிருந்ததால் பதற்றம் சற்று கூடுதலாகவே இருந்தது. ஏதும் அசம்பாவிதம் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதில் காவல்துறையினர் உஷாராக இருந்தனர். முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தேர்தலில் வெற்றிபெறவில்லை என்பதால் அவர் கூட்டத்திற்கு வரவில்லை. கொரோனா தொற்று காரணமாக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கரும், உடல்நிலை சரியில்லாததால் ஒரத்தநாடு எம்.எல்.ஏ வைத்திலிங்கமும் வரவில்லை. இவர்களைத் தவிர்த்து ஏனைய எம்.எல்.ஏ-க்கள் அனைவரும் கூட்டத்திற்கு வந்தனர்.

“கட்சிக்காக விட்டுக் கொடுங்கண்ணே!” – சமரசம் பேசிய முனுசாமி; உடன்படாத பன்னீர்

எடப்பாடி பழனிசாமிக்கு முன்பாகவே கட்சி அலுவகத்திற்கு பன்னீர் வந்தார். தாமதமாக வந்த எடப்பாடியின் கார் அலுவலகத்தின் வாசலை தொட்டபடி முன் நிறுத்தப்பட்டது. கொதிப்படைந்த பன்னீரின் ஆதரவாளர்கள், “கட்சியோட ஒருங்கிணைப்பாளர் பன்னீர் தான். அவர் கார்தான் முன்னால நிக்கனும். எடப்பாடி காரை எடுத்து பின்னால விட்டுட்டு, பன்னீர் வண்டியை முன்னால விடுங்க” என்று தகராறு செய்தனர். பதிலுக்கு எடப்பாடியின் ஆதரவாளர்கள் எதிர்ப்புக் குரல் எழுப்பவும் ஏரியாவே அமளிதுமளியானது. ஒருவழியாக அங்கேயிருந்தவர்களை மாவட்டச் செயலாளர் ஆதிராஜாராம் அமைதிப்படுத்தினார். தலைவர்கள் வந்தவுடன் முதல்தளத்தில் எம்.எல்.ஏ-க்கள் கூட்டம் ஆரம்பமானது. ஃபோட்டோவுக்கு போஸ் கொடுத்துவிட்டு, தனியாக விவாதித்துவிட்டு வருவதாக பன்னீரும் எடப்பாடியும் தரைத்தளம் வந்தனர். பஞ்சாயத்து அங்கேயிருந்துதான் ஆரம்பமானது.

அ.தி.மு.கழக எம்.எல்.ஏ-க்கள் கூட்டத்தில் நடைபெற்ற களேபரக் காட்சிகள் குறித்து கட்சியின் சீனியர் நிர்வாகிகளிடம் பேசினோம். “இரண்டு தலைவர்களுமே தனித்தனி அறையில் அமர்ந்திருந்தனர். முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி, கடம்பூர் ராஜூ, துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி உள்ளிட்டோர்தான் இரு தலைவர்களுக்கும் இடையேயான பேச்சுவார்த்தையில் முக்கியப் பங்காற்றினர். கொங்கு பகுதியிலிருந்து கணிசமான எம்.எல்.ஏ-க்கள் வென்றிருப்பதால், எதிர்கட்சித் தலைவர் பதவியை விட்டுத்தர முடியாது என்பதில் எடப்பாடி பழனிசாமி உறுதியாக இருந்தார். “கட்சிக்கு அவர் ஒருங்கிணைப்பாளரா இருக்கலாம். ஆனால், தமிழ்நாடு முழுவதும் பிரசாரத்துக்குப் போயி, கட்சிக்கு 65 எம்.எல்.ஏ-க்கள் ஜெயிச்சுக் கொடுத்தவன் நான். ஒவ்வொரு தொகுதிக்கும் எவ்வளவு செலவு செஞ்சிருக்கோம்னு பட்டியலே என்கிட்ட இருக்குது. இந்த வெற்றில யாரும் உரிமை கொண்டாட முடியாது” என்று எடப்பாடி கொதித்துவிட்டார். இதை பன்னீரிடம் நிர்வாகிகள் கூறவும், தன் பங்கிற்கு ஆத்திரத்தைக் கொட்டித் தீர்த்துவிட்டார் அவர்.

“அவர் சொந்தக் காசையா எடுத்துச் செலவு பண்ணினாரு. கட்சிப் பணத்தைத்தானே கொடுத்தாரு. வன்னியருக்கு உள் இடஒதுக்கீடு, தேவேந்திர குல வேளாளர் பெயர் விவகாரம் உள்ளிட்டவற்றால்தான் தென்மாவட்டத்துல நம்ம கட்சி பெரிய சரிவைச் சந்திச்சது. அ.தி.மு.க ஆட்சியை இழந்ததுக்கு காரணம் எடப்பாடிதான். இதை என்னமோ வெற்றி மாதிரியும், அதை அவர் சாதிச்சுட்ட மாதிரியும் பேசுறது தப்புங்க. தவிர, தேர்தலுக்கு முன்னாடி எதிர்கட்சித் தலைவர் யாருக்குங்கறதைப் பத்தியெல்லாம் எந்த உடன்படிக்கையும் நாம ஏற்படுத்திக்கல. இப்ப கட்சிக்காரங்க நான்தான் அந்த பொறுப்பை ஏத்துக்கணும்னு விரும்புறாங்க. முடிவா அவர் என்ன சொல்றாருனு கேட்டுச் சொல்லுங்க” என்று ஆத்திரப்பட்டிருக்கிறார் பன்னீர்.

அ.தி.மு.க எம்.எல்.ஏ
பன்னீரிடம் கே.பி.முனுசாமி சமாதானம் பேச முயன்றபோது, அவர்மீதும் பாய்ந்துவிட்டார் பன்னீர். “என்கூடவே இருந்துகிட்டு எடப்பாடிக்கு ஆதரவாக நீங்க செயல்பட்டது எனக்குத் தெரியாதுனு நினைச்சுகிட்டீங்களா? அமைப்பு ரீதியாக மாவட்டங்களைப் பிரிச்சு, பொதுக்குழுவுல அவர் ஆளுங்க அதிகமாக வர்ற மாதிரி நியமனம் பண்ணியிருக்காரு. இதெல்லாம் எனக்குத் தெரியாதுனு நினைக்க வேண்டாம். எதிர்கட்சித் தலைவர் பதவியைத் தரச் சொல்லுங்க, இல்லை கட்சியை ஒற்றைத் தலைமையாக்கி, என்னை தலைவராக்கிடச் சொல்லுங்க. எல்லாத்தையும் விட்டுக் கொடுக்குறதுக்கு நான் தியாகியில்ல” என்று சற்றுச் சீறலாகவே பன்னீர் கூறவும், முனுசாமியால் மேற்கொண்டு எதுவும் பேசமுடியவில்லை.

பன்னீரின் வாதத்தைக் கேட்ட எடப்பாடி, “இரண்டு பதவியுமே அவருக்குக் கொடுக்க முடியாதுங்க. அவர் கட்டுப்பாட்டுல வர்ற தென்மாவட்டங்கள்ல அதிகப்படியாக எம்.எல்.ஏ-க்களை அவர் ஜெயிக்க வைச்சிருந்தார்னா, அவர் கோரிக்கையை பரிசீலிக்கலாம். இப்போதைக்கு கட்சி இரட்டைத் தலைமைலதான் செயல்படும்” என்று கூறவும், கடம்பூர் ராஜூ உஷ்ணமாகிவிட்டார். “ஏங்க, எப்போதுமே பன்னீர்தான் விட்டுக் கொடுக்கனுமா? இந்தமுறை நீங்க விட்டுக் கொடுத்தா என்னங்க?’ என்று கேட்டதை எடப்பாடி எதிர்பார்க்கவில்லை. தனக்கெதிராக தென்மாவட்டத்தைச் சேர்ந்தவர்களை பன்னீர் அணிதிரட்டியிருப்பது அப்போதுதான் எடப்பாடிக்கு புரிந்தது. அதற்குள்ளாகவே இரவு 8:30 மணியைக் கடந்துவிடவும், காத்திருந்த எம்.எல்.ஏ-க்கள் சிலர் ஒவ்வொருவராக கழன்று வெளியேற ஆரம்பித்தனர். இதற்குமேல் கூட்டத்தை நடத்தி எந்த பிரயோஜனமும் இல்லை என்று முடிவெடுத்த தலைவர்கள், மே 10-ம் தேதி காலையில் மீண்டும் எம்.எல்.ஏ-க்கள் கூட்டத்தைக் கூட்டி முடிவெடுத்துக் கொள்ளலாம் என்று தீர்மானித்துள்ளனர். இதுவரை நடைபெற்ற விவாதங்களின்படிப் பார்த்தால் எடப்பாடியின் கையே ஓங்கியிருக்கிறது. ஆனால், பன்னீர் விட்டுக் கொடுக்கும் மனநிலையில் இல்லை. இழுபறி தொடரவே செய்கிறது” என்றனர்.

மே 10-ம் தேதி காலை முதல் முழு ஊரடங்கு அமலாவதால், அ.தி.மு.கழக எம்.எல்.ஏ-க்கள் கூட்டம் நடைபெறுமா என்கிற சந்தேகம் அ.தி.மு.க வட்டாரங்களில் பரவுகிறது. இதற்கு நம்மிடம் பதிலளித்த மூத்த நிர்வாகி ஒருவர், “அத்தியாவசியப் பணிகளுக்கு அரசு ஒப்புதல் அளித்துள்ளது. சட்டமன்ற எதிர்கட்சித் தலைவரை தேர்ந்தெடுப்பது ஒரு அத்தியாவசிய பணிதான். கண்டிப்பாக கூட்டம் நடைபெறும்” என்றார். எம்.எல்.ஏ-க்கள் கூட்டத்திற்கு உள்ளாக, கட்சி எம்.எல்.ஏ-க்களிடம் தன்னுடைய ஆதரவைப் பெருக்கிக்கொள்ள எடப்பாடி காய் நகர்த்துகிறார். பதிலுக்குப் பன்னீரும் காய் நகர்த்துகிறார். இந்த ஆடுபுலி ஆட்டத்தில் யார் ஜெயிக்கப் போகிறார் என்பது இரண்டு நாளில் தெரிந்துவிடும்.

%d bloggers like this: