அமைச்சரவை பட்டியல்… அதிருப்தியில் சீனியர்கள்!

குறித்த நேரத்துக்கு முன்பே வந்து சேர்ந்த கழுகாரிடம், “என்ன ஆச்சர்யமாக இருக்கிறதே!” என்றோம். “இன்று முதல் தினசரி நண்பகல் 12 மணியிலிருந்து பகுதி நேர ஊரடங்கு அமல்படுத்தியிருக்கிறார்கள். நகரம் எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம் என்று நேரத்திலேயே கிளம்பிவிட்டேன். சாலைகளெல்லாம் வெறிச்சோடியிருக்கின்றன. வேறு வழியில்லை… கொரோனா தீவிர பரவல் காலகட்டத்தில் இப்படி இருப்பதுதான் நல்லது” என்றபடி செய்திகளுக்குள் நுழைந்தார் கழுகார்.

“விறுவிறுவென அமைச்சர்கள் பட்டியலை வெளியிட்டு அசத்தியிருக்கிறார் ஸ்டாலின். அன்றைய தினம் காலையிலிருந்தே பலரும் சித்தரஞ்சன் சாலையில் முகாமிட்டிருந்தார்கள். ஆனால், பட்டியல் வெளியான மே 6-ம் தேதி மாலை 4 மணி வரைக்கும் பதவியை எதிர்பார்த்திருந்த சீனியர்கள் யாருக்குமே தகவல் கசியாமல் பார்த்துக்கொண்டாராம் ஸ்டாலின். பட்டியல் வெளியானதும், சிலர் பட்டாசு வெடிக்காத குறையாகக் கொண்டாட… சீனியர்கள் சிலருக்கோ பட்டியல் அவ்வளவாக மகிழ்ச்சி தரவில்லை என்கிறார்கள்.”

“என்னவாம்?”

“வீட்டு வசதித்துறை அல்லது மின்சாரத் துறையை எதிர்பார்த்திருந்த சீனியரான ஐ.பெரியசாமிக்கு கூட்டுறவுத்துறை ஒதுக்கப்பட்டிருக்கிறது. இதனால், ‘எல்லோரையும்விட அதிக ஓட்டு வித்தியாசத்தில் வெற்றிபெற்ற எனக்கே இந்த நிலைமையா!’ என்று நெருக்கமானவர்களிடம் புலம்பினாராம் ஐ.பெரியசாமி. ‘உள்ளாட்சி வேண்டாம்’ என்று மறைமுகமாகத் தலைமையிடம் உணர்த்தியிருந்தும்கூட கே.என்.நேருவுக்கு அந்தத் துறையை வழங்கியிருக்கிறார்கள். அதேபோல, உயர்கல்வித்துறை வேண்டாமென பொன்முடி கூறியிருந்த நிலையில், அவரிடமே அந்தப் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டதால் மனிதர் அப்செட் என்கிறார்கள். இதுபோக, ஆளுநர் மாளிகைக்கு ஸ்டாலின் செல்லும்போது தன்னை அழைத்துச் செல்லாததால் கூடுதல் மனவருத்தத்தில் இருக்கிறாராம் பொன்முடி. துறைரீதியாக சீனியர்களிடமிருந்து சில விஷயங்களை கட் அண்ட் ரைட்டாகச் சாதித்துக்கொள்ள முடியாது என்பதால்தான் கட்சித் தலைமை இந்த முடிவு எடுத்தது என்றும் ஒரு பேச்சு ஓடுகிறது!”

“ம்ம்… ஸ்டாலினுக்கு திடீரென மு.க.அழகிரி வாழ்த்து சொல்லியிருப்பதை கவனித்தீரா?”

“செல்வியின் அழுத்தம்தான் காரணமாம். மே 6-ம் தேதி காலை அழகிரிக்கு போன் போட்ட செல்வி, ‘நம்ம கட்சி ஜெயிச்சு நாலு நாள் ஆச்சு. இதுவரைக்கும் ஒரு வாழ்த்துகூட நீங்க சொல்லலை. அப்பா இல்லாத நேரத்துல நீங்க ரெண்டு பேரும் ஆளுக்கொரு திசையில போறது நியாயமா? முதல்ல ஸ்டாலின்கிட்ட பேசுங்க’ என்று கண்கலங்கியிருக்கிறார். நெக்குருகிப்போன அழகிரி, அதன் பிறகே ஸ்டாலினிடம் போனில் பேசி வாழ்த்து தெரிவித்திருக்கிறார். இந்த சர்ப்ரைஸ் வாழ்த்தை ஸ்டாலினும் எதிர்பார்க்கவில்லையாம்… அப்போது, தன் பதவியேற்பு விழாவுக்கு வருமாறு ஸ்டாலின் அழைப்புவிடுத்திருக்கிறார். ‘கொரோனாவை வெச்சுகிட்டு நான் எங்கப்பா சென்னைக்கு வர்றது… எல்லாம் நல்லபடியா முடியட்டும், பிறகு வந்து உன்னைப் பார்க்கிறேன். முடிஞ்சா துரையை அனுப்பிவைக்கிறேன்’ என்று வாஞ்சையோடு சொன்னாராம் அழகிரி.’’

‘‘அண்ணன் வாழ்த்து இருக்கட்டும். தங்கை தரப்பு மனம் வெதும்புகிறதாமே?”

“கனிமொழியைத்தானே சொல்கிறீர்… மே 6-ம் தேதி மதியம் வரை ஸ்டாலின் வருவார் என கனிமொழி தரப்பினர் எதிர்பார்த்து ஏமாந்ததுதான் மிச்சம். ‘ஜெயிச்சவுடனே அவர் சி.ஐ.டி காலனி வீட்டுக்கு வருவார்… ராஜாத்தி அம்மாகிட்ட வாழ்த்து பெறுவார்னு எதிர்பார்த்தோம். ஆனா, வரவேயில்லை. ரெண்டு கிலோமீட்டர் தூரத்துல வீட்டை வெச்சுகிட்டு, எட்டிப் பார்க்க மாட்டேன்னுட்டார். தலைவர் இருந்திருந்தா, இந்தக் குடும்பத்தை யாராவது இப்படி ஒதுக்கியிருப்பாங்களா?’ என்று மனம் வெதும்புகிறார்கள் கனிமொழியின் ஆதரவாளர்கள்.”

“சரிதான்… ‘என்னை யாரும் மதிக்கவில்லை. மரியாதைக்குக்கூட சந்திக்கவில்லை’ என்று துரைமுருகன் ஸ்டாலினிடம் புலம்பினாராமே?”

“எல்லாம் உட்கட்சிப் பஞ்சாயத்துதான். ராணிப்பேட்டை, திருப்பத்தூர் உள்ளடக்கிய ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்திலுள்ள 13 தொகுதிகளில் 10 தொகுதிகளை தி.மு.க கூட்டணி கைப்பற்றியிருக்கிறது. இவற்றில், மீண்டும் களமிறங்கிய துரைமுருகன் உட்பட ஏழு சிட்டிங் எம்.எல்.ஏ-க்களும் தங்களது தொகுதியைத் தக்கவைத்துக்கொண்டனர். ஏழு பேரில் துரைமுருகன் மட்டுமே சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றவர். இதனால், மற்ற சிட்டிங் எம்.எல்.ஏ-க்கள் மரியாதை நிமித்தமாகக்கூட துரைமுருகனைச் சந்தித்து வாழ்த்து பெறவில்லையாம். மூத்த நிர்வாகிகள் சிலர் இதைச் சுட்டிக்காட்டி கேள்வி எழுப்பவே சில எம்.எல்.ஏ-க்கள், ‘எங்களுக்குத் தலைவர் ஸ்டாலின்தான் எல்லாமே. துரைமுருகனைப் பார்க்க வேண்டிய அவசியமில்லை’ என்று எடுத்தெறிந்து பேசியிருக்கிறார்கள். இந்தத் தகவல், தன் காதுக்கு எட்டியதால் ஸ்டாலினிடம் புலம்பியிருக்கிறார் துரைமுருகன். ஸ்டாலினும், ‘அட விடுங்கண்ணே… நான் பேசிக்கிறேன்’ என்று ஆறுதல் சொன்னாராம்!”

“கட்சியின் பொதுச்செயலாளரையே ஓரங்கட்டிவிட்டார்களா…” என்றபடி கழுகாருக்கு சூடாக இஞ்சியும் தேனும் கலந்த டீயைக் கொடுத்தோம். டீயைப் பருகியபடி, “தி.மு.க-வில் இப்படியென்றால், அ.தி.மு.க-வில் கட்சியின் ஒருங்கிணைப்பாளரையே ஓரங்கட்டும் வேலைகள் தொடங்கிவிட்டன” என்றபடி அடுத்த செய்திக்குள் நுழைந்தார் கழுகார்.

“அ.தி.மு.க-வில் ‘யார் எதிர்க்கட்சித் தலைவர்?’ என்கிற பஞ்சாயத்து ரணகளமாகியிருக்கிறது. எடப்பாடி பழனிசாமி தேர்தல் ரிசல்ட் வெளிவருவதற்கு முன்பாக ஒரு வழக்கறிஞர் பிரமுகரிடம், ‘ஒருவேளை கட்சி தோத்துடுச்சுன்னா, பன்னீரையே எதிர்க்கட்சித் தலைவரா இருக்கச் சொல்லுங்கப்பா. எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை’ என்று சொல்லியிருக்கிறார். ஆனால் இப்போதோ, ‘கொங்கு ஏரியாவில்தான் அதிக எம்.எல்.ஏ-க்கள் ஜெயித்திருக்கிறார்கள். எங்கள் உழைப்பால்தான் இது சாத்தியமானது. எதிர்க்கட்சித் தலைவர் பதவியை விட்டுத்தர முடியாது’ என்று முரண்டுபிடிப்பதால், பன்னீர் தரப்பு உஷ்ணமாகியிருக்கிறது.”

“இந்த ஆத்திரத்தில்தான், ‘ஒரு சமூகத்துக்கான கட்சியா அ.தி.மு.க?’ என்று பன்னீர் பேசினாராமா?”

“ஆமாம். தன்னிடம் பேச்சுவார்த்தைக்கு வந்த கழக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமியிடம், ‘ஒரு சமூகத்துக்கான கட்சியாக அ.தி.மு.க-வைக் கொண்டு செல்லப் பார்க்குறாங்க. அ.தி.மு.க ஒரு ஜனநாயக இயக்கம். எல்லா சமூகத்துக்குமான பிரதிநிதியாக நான்தான் எதிர்க்கட்சித் தலைவர் பொறுப்பை ஏத்துக்கணும்னு நிர்வாகிகள் எதிர்பார்க்கிறாங்க’ என்று சொல்லியிருக்கிறார் பன்னீர். ஆனால், இதற்கு முன்னதாகவே முனுசாமியிடம் பேசிய எடப்பாடி, ‘அவர்கிட்ட பேசுங்க… ஏதாவது முரண்டு பிடிச்சார்னா, எம்.எல்.ஏ கூட்டத்துல வாக்கெடுப்பு நடத்தி முடிவு செஞ்சுக்கலாம்னு சொல்லிடுங்க’ என்று கட் அண்ட் ரைட்டாகச் சொல்ல… பன்னீரிடம் எதுவும் பேச முடியாமல் முனுசாமியும் கிளம்பிவிட்டாராம். மே 7-ம் தேதி அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் கூட்டம் தொடங்குவதற்கு முன்னதாக பன்னீரைச் சமாதானப்படுத்தும் முயற்சிகள் நடக்கின்றன. இதற்கிடையே சசிகலா முகாமைத் தொடர்புகொண்ட பன்னீர் தரப்பு, அவரது ஆதரவையும் கேட்டதாகக் கூறப்படுகிறது. சசிகலாவை மீண்டும் அ.தி.மு.க-வுக்குள் கொண்டு வரும் முயற்சியை பன்னீர் தரப்பு வேகப்படுத்தியிருப்பதாகவும் தகவல்கள் வருகின்றன” என்று கிளம்ப எத்தனித்தவர்,

“மக்கள் நீதி மய்யத்தின் துணைத்தலைவரான மகேந்திரன் உள்ளிட்ட கட்சியின் சீனியர்கள் அதிருப்தி காரணமாகக் கட்சியிலிருந்து விலகியிருக்கிறார்கள். கமலுக்கு ஆலோசனை கொடுக்கும் வியூக நிறுவனத்தால், தான் கார்னர் செய்யப்படுவதாக மகேந்திரன் கொதிப்பில் இருந்தாராம். தன் ஆதரவாளர்கள் தொடர்ச்சியாக நீக்கப்படுவதும் அவரை ஆத்திரமடையச் செய்திருக்கிறது. எல்லாவற்றுக்கும் மேலாக, தான் போட்டியிட விரும்பிய தொகுதியை, கமலுக்கு வேண்டுமென ரூட்டை மாற்றிவிட்டதே வியூக நிறுவனம்தான் என்று மனமுடைந்து போயிருந்தவர், தற்போது ராஜினாமா செய்திருக்கிறார். இவருக்கு தி.மு.க தரப்பு வலைவிரிக்கிறதாம்’’ என்றபடி சிறகுகளை விரித்தார் கழுகார்.

%d bloggers like this: