உழைத்தது தொண்டர்கள். பெயர் மட்டும் ஐ-பேக்குக்கா?” புலம்பிய நிர்வாகிகள்!

தனிப்பெரும்பான்மையுடன் தி.மு.க ஆட்சியை பிடித்ததற்கு ஐ பேக் நிறுவனத்தின் செயல்பாடுகள் காரணமல்ல, எங்களது கடினமான உழைப்புதான் காரணம்”என்று ஸ்டாலினிடமே ஓபனாக சொல்லியிருக்கிறார்கள் தி.மு.க வின் மூத்த நிர்வாகிகள் சிலர். தி.மு.கவினால் ஐ பேக் லாபம் அடைந்ததே தவிர, ஐ பேக்கினால் தி.மு.க கட்சிக்கு எந்த பலனும் இல்லை என்று இப்போது புலம்புகிறார்கள்.

தமிழக அமைச்சரவை
நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் தி.மு.க கூட்டணி 159 தொகுதிகளில் வெற்றிபெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது.

பத்து ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியைப் பிடித்த உற்சாகத்தில் உடன்பிறப்புகள் இருக்கிறார்கள்.அதே நேரம் வலுவான தலைமை இல்லாத நிலையிலும், அ.ம.மு.க கட்சி பிரித்த வாக்குகளையும் கடந்து , அ.தி.மு.க கூட்டணி 75 இடங்களை வென்று ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக இந்த தேர்தலில் அ.தி.மு.கவின் வாக்கு வங்கியிலும் பெரிதாக சரிவில்லை. அதே நேரம் ஐ-பேக் நிறுவனத்தின் வியூகத்தை செயல்படுத்தியும்கூட கொங்குமண்டலத்தில் தி.மு.கவுக்கு பெரும் சரிவைக் கொடுத்துள்ளது. அந்தச் சரிவு குறித்து விரைவில் விசாரணைகுழு ஒன்றையும் தி.மு.க தலைமை அமைக்க உள்ளது. இந்நிலையில் ஐ-பேக் நிறுவனத்தின் மீது தி.மு.க வினர் பல்வேறு விமர்சனங்களை வைக்கிறார்கள். குறிப்பாக தென் மாவட்ட நிர்வாகிகள் ஸ்டாலினிடம் பேசும் போது “நாங்கள் பெற்ற வெற்றிக்கும் ஐ-பேக் நிறுவனத்திற்கும் சம்பந்தம் இல்லை” என்று ஒபனாகவே சொல்லியிருக்கிறார்கள்.

“தற்போது தி.மு.க தனித்து வெற்றி பெற்ற தொகுதிகள் 125. இதில் சென்னை மண்டலத்தினை முழுமையாக தி.மு.க தக்கவைத்துள்ளது. குறிப்பாக சென்னை, திருவள்ளுர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் உள்ள 37 தொகுதிகளில் ஒரு தொகுதியில் மட்டுமே அ.தி.மு.க வெற்றி பெற்றுள்ளது. அதே போல், வேலுார், ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் தலா ஒரு தொகுதியை மட்டும் அ.தி.மு.க வென்றுள்ளது. இந்த வெற்றி ஐ-பேக் நிறுவனத்தினால் கிடைத்த வெற்றியல்ல, இந்த மாவட்டத்தில் ஏற்கனவே வலுவாக தி.மு.க கால் ஊன்றியிருந்ததுதான் காரணம். அதைத்தாண்டி இந்த மாவட்டங்களில் இருந்த தி.மு.க நிர்வாகிகளின் பணிகளும் மெச்சத்தக்க அளவில் இருந்தது. தி.மு.க வீக்காக உள்ள கொங்குமண்டலத்தில் இந்த முறையும் மண்ணை கவ்வியுள்ளதிலிருந்தே ஐ பேக்கினால் பயனில்லை என்பதைப் புரிந்துகொள்ளலாம். கொங்குமண்டலம் என்பதே கோவை, நீலகரி, ஈரோடு, திருப்பூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல் உள்ளிட்ட பத்து மாவட்டங்களை உள்ளடக்கியது. இந்த மாவட்டத்தில் உள்ள 75 தொகுதிகளில் 44 தொகுதிகளை அ.தி.மு.க கூட்டணியே வெற்றிபெற்றுள்ளது. கடந்த முறையும் அ.தி.மு.க கூட்டணி இந்த பகுதிகளில் கணிசமான வெற்றியை பெற்றது. அதே நிலையே இப்போதும் தொடர்கிறது. குறிப்பாக கோவை, தர்மபுரி மாவட்டங்களை முழுமையாக அ.தி.மு.க கைப்பற்றியுள்ளது.

அதே நேரம் வட மாவட்டங்களில் தி.மு.க கணிசமாக வெற்றியை பெற்றிருந்தாலும், வாக்குவித்தியாசம் மிகவும் குறைவு. அ.தி.மு.க ஆட்சியில் அளிக்கப்பட்ட வன்னியர் இடஒதுக்கீடு அ.தி.மு.க கூட்டணிக்கு முழுமையாகக் கைக்கொடுத்துள்ளது. அதே இடஒதுக்கீடு காரணமாகவே தென் மாவட்டத்தில் தி.மு.க வக்கு பலன் கிடைத்துள்ளது.

இதில் ஐ-பேக் நிறுவனம் என்ன சாதித்தது என்பதையும் பார்க்கவேண்டியுள்ளது. கொங்குமண்டலத்தில் கரூர் மாவட்டத்தில் உள்ள நான்கு தொகுதிகளை தி.மு.க கைப்பற்றியுள்ளது. அதற்குக் காரணம் செந்தில் பாலாஜியின் வேகமும், கட்சியினரின் கடுமையான தேர்தல் களப்பணியுமே. அதேபோல் திருச்சி மாவட்டத்தில் உள்ள ஒன்பது தொகுதிகளையும் தி.மு.க கைப்பற்றியது. இதற்குக் காரணம் ஐ-பேக்கின் வியூகமா அல்லது அந்த மாவட்ட தி.மு.க நிர்வாகிகளின் செயல்பாடா? ஒருவேளை அந்த நிறுவனத்தின் வியூகமே வெற்றிக்குக் காரணம் என்றால் கொங்குமண்டலத்தில் தி.மு.க துடைத்தெறியப்பட்டதற்கும் அந்த நிறுவனம்தானே காரணம்?” என்கிறார் தென் மாவட்டத்தை சேர்ந்த அமைச்சர் ஒருவர். அந்த நிறுவனத்தினால் பணம் செலானவது மட்டுமே எங்களுக்கு மிச்சம் என்று புலம்புகிறார்.

“தற்போது மாவட்ட வாரியாக தி.மு.க வெற்றி பெற்ற தொகுதிகளை எடுத்துப்பார்த்தால் தி.மு.க வலுவாக இருந்த மாவட்டங்களிலும், தி.மு.க வேட்பாளர்கள் களப்பணியில் முன்னின்ற தொகுதிகளிலும் மட்டுமே வெற்றியை பெற்றுள்ளோம்” என்கிறது தி.மு.க தரப்பு.

அதோடு “தலைவர் ஒன்றைப் புரிந்துக்கொள்ளவேண்டும். பல கோடி கொடுத்து பணியில் அமர்த்திய நிறுவனம் என்னதான் வியூகங்களை வகுத்தாலும், தொண்டன் களத்தில் இறங்கினால் மட்டுமே வெற்றி சாத்தியம். கே.என். நேரு, செந்தில் பாலாஜி, பெரியகருப்பன், சேகர்பாபு என மாவட்டப் பொறுப்பாளர்களே அதற்கு உதாரணமாகத் திகழ்கிறார்கள். அதோடு எங்கெல்லாம் தி.மு.க தொண்டன் உற்சாகமாகக் களப்பணியை முழுவீச்சில் செய்தானோ அங்கெல்லாம் தி.மு.க அமோகமாக வென்றுள்ளது. ஒரு வியூக வகுப்பாளரை பணியில் அமர்த்துவதே வீக்கான பகுதிகளில் பலத்தைக் கூட்டத்தான். அதை ஐ பேக் செய்யவில்லை. கடந்த ஆறுமாதமாக கட்சிக்காரனை ஒரு எடுபிடியை போலத்தான் நடத்திவந்தார்கள்.

பல ஆண்டுகளாக தேர்தல் பணிகளைப் பார்த்து அனுபவம் உள்ள மூத்த நிர்வாகிகளைக் கூட ஐ பேக் டீம் புதியவர்களை போல நடத்தியது. ஐ பேக் டீம் ஒரு விளம்பர நிறுவனமாக மட்டுமே கட்சிக்கு செயல்பட்டதே ஒழிய, அதன் வியூகத்தினால் கட்சிக்கு எந்த பயனும் இல்லை. தேர்தல் முடிந்த பிறகு அந்த நிறுவனம் 180 இடங்களை தி.மு.க கைப்பற்றும் என்றது. ஆனால், 160 இடங்களில் மட்டுமே வெற்றி. அதே நேரம் தி.மு.க கூட்டணி பெற்ற இருபது தொகுதிகளில் 2 ஆயிரத்திற்கும் குறைவான வாக்குகளில்தான் வெற்றியை ஈட்டியுள்ளது. இதற்கு எதற்கு இத்தனை கோடி செலவு செய்து ஐ பேக் நிறுவனத்தை பணியமர்த்த வேண்டும்? வெற்றிக்கு முழுமையாக உழைத்தது கட்சியின் தொண்டன். ஆனால் பெயரை தட்டிச்செல்வது அந்த நிறுவனமா?” என்று வருத்தப்படுகிறார்கள் தி.மு.க மூத்த நிர்வாகிகள்.
ஐ-பேக் நிறுவனத்தின் தரப்பிலோ, “எதிர்க்கட்சியின் வலுவான பணபலம், தி.மு.க வின் மீதான எதிர்மறையான விமர்சனம் இவற்றைத் தாண்டி தனிப்பெரும் கட்சியாக தி.மு.க ஆட்சியைப் பிடிக்கக் காரணம் எங்களது வியூகமே. கொங்கு மண்டலத்தில் தி.மு.க அடைந்த சரிவுக்கு அடிப்படைரீதியாக அந்த கட்சியின் கட்டமைப்பு அங்கு வீக்காக இருந்ததும் ஒரு காரணம். எங்களால் தி.மு.கவுக்கு பலன் இல்லை என்று குற்றம் சொல்லமுடியாது” என்கிறார்கள்.

விரைவில் தி.மு.கவில் நிர்வாக ரீதியாக பலமாற்றங்கள் நடக்கப்போகிறது. அது கொங்கு மண்டலத்திலிருந்தே துவங்கப்போகிறது!

%d bloggers like this: