நோட்டாவிடம் படுதோல்வி கண்ட அமமுக வேட்பாளர்கள் : களையெடுக்க முடியாமல் திணறும் தினகரன்!!!

2021 சட்டப்பேரவைத் தேர்தலில், அதிமுகவை தோற்கடித்து, அக்கட்சியை மீட்டு எடுப்பேன் என்று சபதமிட்டு களம் கண்டவர், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்.

161 தொகுதிகளில் போட்டியிட்ட அவருடைய கட்சி, கடைசி நேரத்தில் கூட்டணி அமைத்துக் கொண்ட விஜயகாந்தின் தேமுதிகவுக்கு 60 தொகுதிகளை ஒதுக்கியது. எஞ்சிய 13 சீட்டுகள் சிறு சிறு கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டன. ஆனால் இந்த கட்சிகளின் வேட்பாளர்கள் ஒருவர் கூட வெற்றி பெறவில்லை. மாறாக 210க்கும் மேற்பட்ட தொகுதிகளில் டெபாசிட்டை பறிகொடுத்தனர்.

மூன்றாவது அணியாக போட்டியிட்டு, 4-வது 5-வது இடத்துக்கு தள்ளப்பட்டால் இதுபோல் ஒட்டுமொத்தமாக டெபாசிட் தொகையை பறி கொடுப்பதும், ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியாமல் போவதும் அரசியலில் சர்வசாதாரணமாக நடக்கக் கூடிய நிகழ்வுகள்.

அதனால் இதில் வியப்படைவதற்கு பெரிதாக ஒன்றுமில்லை.

அதேநேரம் யாருக்கும் வாக்களிக்க விருப்பமில்லை என்பதை தெரிவிக்கும் நோட்டாவுக்கு கிடைத்த ஓட்டுகளை விட அமமுக -தேமுதிக கூட்டணி கட்சிகள் வாங்கிய ஓட்டுகள் மிகவும் குறைவாக இருந்ததுதான் மிகவும் அதிர்ச்சி தரக்கூடிய தகவலாகும். குறிப்பாக, வட மாவட்ட தொகுதிகளிலும், கொங்கு மண்டலத்திலும் டிடிவி தினகரனின் அமமுக நோட்டாவிடம் படுதோல்வியை சந்தித்து இருக்கிறது.

கோவை தெற்கு தொகுதியில் தினகரன் கட்சி சார்பில் போட்டியிட்ட சேலஞ்சர் துரை வாங்கிய ஓட்டுகள் 701. ஆனால் நோட்டாவுக்கு கிடைத்தது 901. ராணிப்பேட்டை தொகுதியில் அமமக வேட்பாளர் வீரமணிக்கு கிடைத்த வாக்குகள் 637. நோட்டாவுக்கு விழுந்த ஓட்டுகள் 1,632. திருவண்ணாமலையில் போட்டியிட்ட அமமுக வேட்பாளர் பஞ்சாட்சரம் வாங்கிய ஓட்டுகள் 2,108. நோட்டாவுக்கு கிடைத்ததோ 2,194 ஓட்டுகள்.

இப்படி 20க்கும் மேற்பட்ட தொகுதிகளில் தினகரன் கட்சி வேட்பாளர்கள் நோட்டாவுடன் போட்டிபோட்டு அதற்கும் குறைவான ஓட்டுகளையே பெற்று உள்ளனர். 60 இடங்களில் போட்டியிட்ட தேமுதிகவும் 10-க்கும் அதிகமான தொகுதிகளில் நோட்டாவுக்கு கீழாக வாக்குகளை வாங்கியுள்ளது.

இதில் ஆச்சரியப்பட வைக்கும் விதமாக இன்னொரு சுவாரஸ்ய தகவலும் உண்டு. ஓசூர் தொகுதியில் போட்டியிட்ட அமமுக வேட்பாளர் மாரே கவுடு பெற்ற ஓட்டுகள் 806. இந்த தொகுதியில் நோட்டாவுக்கு விழுந்த ஓட்டுகள் 1,976.

2019 நாடாளுமன்ற தேர்தலின் போது, ஓசூர் சட்டப்பேரவை தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. அப்போது அமமுக சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் புகழேந்திக்கு1,432 வாக்குகள் கிடைத்தது. ஆனால் நோட்டாவுக்கு 4,262 வாக்காளர்கள் ஓட்டு போட்டிருந்தனர்.

அதாவது அடுத்தடுத்து நடந்த இரண்டு சட்டப் பேரவை தேர்தல்களில், நோட்டாவுக்கு கீழாக ஓட்டு வாங்கிய ஒரே அரசியல் கட்சி என்ற அபூர்வ சாதனையை அமமுக தன்வசமாக்கி இருக்கிறது. ஏற்கனவே, தேர்தல் தோல்விகளால் மிகவும் துவண்டு போயிருந்த டிடிவி தினகரன், நோட்டாவுக்கு கீழாக தனது கட்சி வேட்பாளர்கள் ஓட்டு வாங்கி இருப்பது கண்டு விரக்தியின் உச்சத்துக்கே சென்று விட்டார்.

ஓட்டுஎண்ணிக்கை நடப்பதற்கு முன்பாக அமமுக வேட்பாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் குறைவான ஓட்டுகள் பெறலாம் என்று அவர் ஓரளவுக்கு யூகித்து இருந்தார். ஆனால் நிலைமை இவ்வளவு மோசமாக இருக்கும் என்று அவர் கனவில் கூட நினைத்திருக்க மாட்டார்.

இதையடுத்து சரியாக தேர்தல் பணியாற்றாத கட்சி நிர்வாகிகள், மிகக்குறைவான ஓட்டுகள் வாங்கிய வேட்பாளர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியிருந்தார்.

ஆனால் இதுவரை பெரிய அளவில் அவர் யார் மீதும் நடவடிக்கை எடுக்கவில்லை. கட்சியின் நெருங்கிய மற்றும் முக்கிய நிர்வாகிகளிடம் மட்டும் தினகரன் கோபத்துடன் பேசியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இன்னும் சிலரிடம், “உள்ளாட்சித்தேர்தல் வரும்போது, நமது உண்மையான பலத்தை வெளிப்படுத்துவோம்” என்று நம்பிக்கை ஊட்டும் விதமாக ஆறுதலாக பேசியிருக்கிறார். ஆனால் ஒவ்வொரு மாவட்டத்திலும் தினகரனை நம்பிச் சென்ற நிர்வாகிகள் பெருத்த ஏமாற்றமடைந்து, தாய்க் கழகமான அதிமுகவுக்கு திரும்பத் தொடங்கியிருக்கின்றனர். இன்னும் சிலர் அமமுகவிலிருந்து அமைதியாக ஒதுங்கிக் கொண்டுள்ளனர்.

இதுபற்றி பெயர் கூற விரும்பாத அமமுக நிர்வாகிகள் சிலர் கூறும்போது, “2017 ஆர்கே நகர் இடைத்தேர்தலில் டிடிவி தினகரன் சுயேச்சையாக போட்டியிட்டு திமுக வேட்பாளரை மண்ணைக் கவ்வச்செய்ததால், அவரை நம்பி பின்னால் சென்றோம். 2019 நாடாளுமன்ற தேர்தலிலும் வெற்றி கிடைக்கவில்லை. 22 தொகுதிகளுக்கு அப்போது நடந்த சட்டப்பேரவை இடைத்தேர்தலிலும் படுதோல்வியே கிடைத்தது.

இந்த தேர்தலில் நமக்கு 10 தொகுதிகளில் வெற்றி கிடைக்கும் என்று தினகரன் நம்பிக்கையுடன் சொன்னார். ஆனால் 10 தொகுதிகளில்தான் டெபாசிட்டே திரும்ப கிடைத்திருக்கிறது. கடந்த மூன்று தேர்தல்களையும் எடுத்துக்கொண்டால் படிப்படியாக முன்னேற்றம் என்பது இல்லாமல் தோல்விப் பாதைதான் அதலபாதாளமாக உள்ளது.

உள்ளாட்சித் தேர்தலில் பலத்தை காட்டுவோம் என்று தினகரன் கூறுகிறார். ஆனால் கட்சி சாயம் இல்லாமலேயே சொந்த செல்வாக்கை வைத்தே உள்ளாட்சி தேர்தலில் பலரால் வெற்றி பெற்றுவிட முடியும். இதற்கு தினகரன் கட்சி எதற்கு?. எனவே உள்ளாட்சி தேர்தல் வரை எத்தனை பேர் அமமுகவில் நீடிப்பார்கள் என்று தெரியவில்லை. நாங்களும் நீடிப்பது சந்தேகம்தான்.
கட்சியில் சில கணக்கு வழக்குகளை முடிக்க வேண்டி உள்ளது. அதனால்தான் நாங்கள் இன்னும் வெளியேறாமல் இருக்கிறோம்.

தற்போதைய தேர்தல் தோல்விக்காக கட்சி நிர்வாகிகள், வேட்பாளர்கள் யார் மீதும் தினகரனால் எந்த கடும் நடவடிக்கையும் எடுக்க முடியாது. மீறி எடுத்தால் கட்சியில் இருக்கும் எஞ்சியுள்ள சிலரும் அமமுகவிலிருந்து ஓடிவிடுவார்கள். திக்கு திசை தெரியாத காட்டுக்குள் சென்று சிக்கிக் கொண்டதுபோல் தினகரனை நம்பி வந்தவர்களின் நிலை உள்ளது. அதிமுகவை ஒழித்துக் கட்டுவேன் என்று சபதம் எடுத்து கடைசியில் அவர் தொடங்கிய அமமுக அடியோடு தரைமட்டமாகி விட்டது” என்று அவர்கள் குறிப்பிட்டனர்.

விரக்தியோடு மனம் குமுறும் இந்த நிர்வாகிகளும் விரைவில் அதிமுகவிற்கு திரும்பிவிடுவார்கள் என்றே தோன்றுகிறது!

%d bloggers like this: