கொரோனா காலம்… அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்..! சமாளிக்க உதவும் ஹெல்த் பாலிசி டாப்அப்!

நம்மில் பலரும் ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசியை எடுத்து வைத்திருக்கிறோம். ஆனால், நமக்கும் நம் குடும்பத்தினருக்கும் தேவையான கவரேஜ் இருக்கிறதா? பல நேரங்களில் இருப்பதில்லை. இதனால், கொரோனா நோய்த் தொற்று அதிகரித்து வரும் இன்றைய காலகட்டத்தில், ஹெல்த் பாலிசி இருந்தும் கையைவிட்டு பணத்தைச் செலவு செய்தாக வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. இதைச் சமாளிக்க இன்னொரு ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசியை எடுக்க முடியாது. ஏனெனில், பிரீமியம் செலவு அதிகரிக்கும். அதனால், டாப் அப் ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுப்பதுதான் சரியான வழி.

டாப்அப் ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி எப்படி எடுப்பது, அதற்கான வழிமுறைகள் என்ன, டாப்அப் ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசிகளால் நன்மைகள் என்னென்ன, அதற்கான பிரீமியம் எவ்வளவு என்பது போன்ற பல கேள்விகளுடன் ஸ்டார் ஹெல்த் இன்ஷூரன்ஸ் நிறுவனத்தின் துணைத் தலைவர் சி.பாலாஜி பாபுவிடம் பேசினோம்.

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்…

“கொரோனாவின் இரண்டாவது அலை மிக வேகமாகப் பரவிக்கொண்டிருக்கிறது. கொரோனா நோய்த் தொற்று இல்லாமல், இதர உடல் உபாதைகளுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாலும், கொரோனா நோய் சார்ந்த பரிசோதனைகளையும் உடன் எடுக்க வேண்டிய கட்டாயம் இப்போது. சாதாரண நாள்களில் 35,000 ரூபாயாக இருந்த மருத்துவமனைச் செலவுகள் இன்று ரூ.1.5 லட்சமாக அதிகரித்திருக்கிறது. இதனால் ஹெல்த் இன்ஷூரன்ஸ்களுக்கான தேவையும் அதிகரித்திருக்கிறது.
இன்றைய நிலையில், பெரும்பாலான மக்கள் ஒரு ஹெல்த் பாலிசியிலிருந்து அதிகபட்சம் ரூ2 லட்சம் வரை மட்டுமே கிடைக்கும்படி வைத்திருக்கிறார்கள். ஆனால், இன்றைய வாழ்க்கை முறையின் தேவைக்கு ஒருவர் குறைந்தபட்சம் ரூ.5 – ரூ.10 லட்சம் வரை மெடிக்ளெய்ம் பாலிசி வைத்திருப்பது அவசியம்.

அடிப்படை பாலிசி + டாப்அப் பாலிசி!

ஒருவர் ரூ.5 லட்சத்து ஒரு ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசியை எடுத்தால், தோராயமாக ரூ.27,000 பிரீமியம் செலுத்த வேண்டியிருக்கும். ஆனால், அடிப்படை பாலிசி ரூ.3 லட்சம், டாப்அப் பாலிசி ரூ.2 லட்சம் என எடுத்துக்கொண்டால் பீரீமியம் குறையும்.
உதாரணமாக, அடிப்படை பாலிசியில் ரூ.3 லட்சம் ரூபாய் கவரேஜுக்கு பிரீமியம் ரூ.12,000 என்று வைத்துக் கொள்ளுங்கள். கூடுதலாக ரூ.2 லட்சத்துக்கு இன்னொரு பாலிசியை எடுத்தால், அதற்கு தனியாக ரூ.8,000 பிரீமியம் செலுத்த வேண்டியிருக்கும். இதுவே, அடிப்படை பாலிசியுடன் சேர்த்து கூடுதலாக ரூ.2 லட்சத்துக்கு டாப்அப் பாலிசி எடுத்துக்கொண்டால் எக்ஸ்ட்ரா பிரீமியம் வெறும் ரூ.3,000 மட்டும்தான் (இந்த பிரீமியம் ஒவ்வொரு இன்ஷூரன்ஸ் நிறுவனத்துக்கும் வித்தியாசப்படும்).
ரூ.3 லட்சம் கவரேஜுக்கு அடிப்படை பாலிசியையும் ரூ.2 லட்சத்துக்கு டாப் அப் பாலிசியும் வைத்திருக்கிறீர்கள் எனில், உங்களின் க்ளெய்ம் ரூ.4 லட்சம் வரும்போது அடிப்படை பாலிசியில் ரூ.3 லட்சமும், டாப்அப் பாலிசியிலிருந்து ரூ.2 லட்சமும் க்ளெய்ம் செய்யலாம். அடிப்படை பாலிசியின் கவரேஜ் முழுவதும் தீர்ந்த பிறகு மட்டுமே டாப் அப் பாலிசியைப் பயன்படுத்த முடியும். தனிநபர் மற்றும் குடும்பம் (ஃபேமிலி ஃப்ளோட்டர்) என இதை யார் வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம். வயது வரம்பு ஒவ்வொரு நிறுவனத்துக்கும் வித்தியாசப்படும். ஐ.ஆர்.டி.ஏ.ஐ விதிமுறையின்படி, இன்றைய நிலையில் ரூ.1 கோடி வரை டாப் அப் ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசிகளைப் பயனாளர்கள் எடுத்துக்கொள்ள முடியும்.
கவனிக்க வேண்டிய விஷயங்கள்!

* அடிப்படை பாலிசி எடுத்த இரண்டு மாதத்தில் கவரேஜ் தொகை முழுவதையும் நீங்கள் பயன்படுத்திவிட்டீர்கள். அதன் பிறகு, ஏற்படும் மருத்துவச் செலவுகளுக்காக டாப்அப் பாலிசி எடுக்க நினைத்தால், அது முடியாது. அடிப்படை பாலிசியைப் புதுப்பித்த பிறகுதான் டாப்அப் பாலிசி எடுக்க முடியும்.
* அலுவலகத்தில் குரூப் பாலிசி வைத்திருப்பவர்கள் அல்லது கையில் இருக்கும் பணத்தை அடிப்படை பாலிசித் தொகைக்குப் பயன் படுத்திக் கொள்ளலாம் என்றிருப் பவர்கள் அடிப்படை பாலிசியை எடுக்காமலும், டாப்அப் பாலிசியை எடுத்துக்கொள்ளலாம். மேலும், அடிப்படை பாலிசியைப் புதுப்பிப்பதுபோல, ஒவ்வொரு வருடமும் டாப்அப் பாலிசியையும் புதுப்பிக்க வேண்டியது அவசியம்.
*அடிப்படை பாலிசி எடுத்திருக்கும் நிறுவனத்திலோ, வேறு ஒரு நிறுவனத்திலோ டாப்அப் பாலிசி எடுத்துக் கொள்ளலாம். வேறு நிறுவனம் என்கிறபோது, இதில் இருக்கும் சிறப்பு அம்சங்கள் அதிலும் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். எந்தெந்த நோய் களுக்கு கவரேஜ் கிடைக்கும் என்பதைக் கவனித்து அதற்கு ஏற்ப டாப்அப் பாலிசியைத் தேர்வு செய்வது அவசியம்.
* சில டாப்அப் பாலிசிகளில் மருத்துவமனையில் இருக்கும் போது ஏற்படும் செலவுகளுக்கு மட்டுமே க்ளெய்ம் என்பார்கள். கேஷ்லெஸ் முறையில் அடிப்படை பாலிசி வைத்திருந்தீர்கள் எனில், அதைப் போலவே டாப்அப் பாலிசியும் இருப்பது அவசியம்.
இதை எல்லாம் கவனித்து பாலிசியைத் தேர்ந்தெடுப்பது அவசியம். இதுபோன்ற சிக்கல் களைத் தவிர்க்க வேண்டுமெனில், ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுக்கும்போதே, கூடுதலாக டாப்அப் பாலிசியையும் எடுத்து விடுவது நல்லது.
க்ளெய்ம் செட்டில்மென்ட்…

இன்ஷூரன்ஸ் நிறுவனங் களுக்கு ஒரிஜினல் பில் கொடுத்தால்தான் க்ளெய்ம் கிடைக்கும். அடிப்படை பாலிசி எடுத்திருக்கும் நிறுவனத்துக்கு மட்டும் ஒரிஜினல் பில் கொடுத்தால் போதும். அந்த நிறுவனம் டாப்அப் பாலிசி வைத்திருக்கும் நிறுவனத்துக்கு பில்களை நாங்கள் சரிபார்த்துவிட்டோம். அடிப்படை பாலிசியின் கவரேஜ் முழுவதும் உபயோகித்துவிட்டார் எனச் சான்றிதழ் கொடுக்கும். இதனுடன் மருத்துவரின் சான்றிதழ், மருத்துவமனை விவரங்கள் ஆகியவற்றைக் கொடுத்து க்ளெய்ம் வாங்கலாம்.
அடிப்படை பாலிசி மற்றும் டாப்அப் பாலிசி இரண்டும் ஒரே நிறுவனத்தில் எடுத்திருந்தால், க்ளெய்ம் செட்டில் மென்டை அந்த நிறுவனமே பார்த்துக் கொள்ளும். முடிந்தவரை ஒரே இன்ஷூரன்ஸ் நிறுவனத்தில் ஹெல்த் பாலிசியையும், டாப்அப் பாலிசியையும் சேர்த்தே எடுப்பது நல்லது” என்றார் தெளிவாக. நீங்கள் இதுவரை டாப்அப் பாலிசி எடுக்கவில்லை எனில், உடனே எடுங்கள்!

%d bloggers like this: