தேர்தல் தோல்வி… அண்ணனிடம் பேச மறுக்கும் முன்னாள் அமைச்சர்!

விஷ்ஷ்க்க்’ என்ற சப்தம்… சிறகுகள் படபடக்க வந்தமர்ந்தார் கழுகார். எலுமிச்சை கலந்த இளநீர் சர்பத்தை அவருக்கு நீட்டிவிட்டு, “புதுச்சேரியில் பா.ஜ.க-வைச் சேர்ந்த மூன்று பேரை நியமன எம்.எல்.ஏ-க்களாக மத்திய அரசு நியமித்திருக்கிறது. கூட்டணியிலுள்ள என்.ஆர்.காங்கிரஸ், அ.தி.மு.க கட்சிகள் கொந்தளிப்பதை கவனித்தீரா?” என்றோம். சர்பத்தைப் பருகியபடி, நமது நிருபர் அனுப்பியிருந்த புதுச்சேரி நியமன எம்.எல்.ஏ-க்கள் தொடர்பான கட்டுரையில் பார்வையை ஓடவிட்ட கழுகார், “கவனித்தேன். உமது நிருபர்தான் தெளிவாகக் கூறியிருக்கிறாரே… அதைவிடப் பெரிய சர்ச்சை ஒன்று புதுச்சேரி பா.ஜ.க-வில் வெடித்திருக்கிறது” என்றபடி செய்திகளுக்குள் நுழைந்தார்.

“புதுச்சேரி மாநிலங்களவை அ.தி.மு.க எம்.பி கோகுலகிருஷ்ணனின் பதவிக்காலம் வரும் ஜூன் 6-ம் தேதியுடன் முடிவடைகிறது. நியமன எம்.எல்.ஏ-க்களில் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் தரப்படவில்லை என்பதால், எம்.பி பதவியாவது கிடைக்குமென அந்தச் சமூகத்தைச் சேர்ந்த பா.ஜ.க பிரமுகர்கள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால், ஜுடிசியல் கிருஷ்ணமூர்த்திக்கு எம்.பி பதவியை அளிக்க டெல்லி மேலிடம் முடிவெடுத்திருக்கிறதாம்.”

“அவர் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு நெருக்கம் என்பார்களே…”

“அந்த நெருக்கத்தால்தான் பதவி கிடைக்கப்போகிறதாம். ஜுடிசியல் கிருஷ்ணமூர்த்திக்கு நீதித்துறையில் நல்ல தொடர்புகள் உண்டு. சொராபுதீன் ஷேக் என்கவுன்ட்டர் வழக்கில், அமித் ஷா விடுபடுவதற்கு கிருஷ்ணமூர்த்தி உதவியாக இருந்தார் என்கிறார்கள் விவரமறிந்தவர்கள். அப்போதிருந்தே இருவருக்கும் நட்பு இறுகிவிட்டது. 2018, ஜூன் மாதம் சென்னை வந்தபோது, கிருஷ்ணமூர்த்தியின் வீட்டுக்கு அமித் ஷா விஜயம் செய்யும் அளவுக்கு நட்பு பலமாகியிருக்கிறது. இவரைத்தான் மாநிலங்களவை எம்.பி-யாக்க பா.ஜ.க மேலிடம் முடிவு செய்திருக்கிறதாம். இதனால், ‘கட்சிக்காக உழைத்த ஒருவரும் கண்ணுக்குத் தெரியவில்லையா?’ என்று புலம்புகிறது புதுச்சேரி பா.ஜ.க வட்டாரம்.”

“ஓஹோ…”

“எந்தெந்தத் துறைக்கு, எந்தெந்த ஐ.ஏ.எஸ் அதிகாரி பொருத்தமானவர் என்பதை தலைமைச் செயலாளர் இறையன்புவும், முதல்வரின் செயலாளர் உதயச்சந்திரனும்தான் தேர்ந்தெடுக்கிறார்கள். பிறகு பட்டியலை முதல்வரின் பார்வைக்கு அவர்கள் அனுப்புகிறார்கள். மாப்பிள்ளை சபரீசனிடம் கருத்து கேட்கிறாராம் ஸ்டாலின். சபரீசன் எடுக்கும் முடிவே இறுதியானது என்கிறார்கள். கடந்த தி.மு.க ஆட்சிக்காலத்தில் ஸ்டாலினின் நண்பர் ராஜா சங்கர் தான் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமனத்தில் முக்கிய இடத்தை வகித்தார். இப்போது அதிகாரிகள் நியமனத்தை மொத்தமாகக் கையில் எடுத்துவிட்டார் சபரீசன்.”

 

“ம்ம்… சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணனை மாற்றப்போவதாகக் கேள்விப்பட்டோமே, உண்மையா?”

“கடந்த அ.தி.மு.க ஆட்சியில் நான்கு வருடங்களாக முதல்வரின் செயலாளர்களில் ஒருவராக இருந்தவர் செந்தில்குமார். சட்டம்-ஒழுங்கு, ஐ.ஏ.எஸ் நிர்வாகம், கவர்னர் அலுவலகம் என முக்கியத் துறைகளை கவனித்தவர். அத்துடன், பொதுத்துறையையும் கூடுதலாக கவனித்துவந்தார். தி.மு.க அரசில், செந்தில்குமாருக்கு சுகாதாரத்துறையின் சிறப்புப் பணி அதிகாரி என்கிற பதவி தரப்பட்டுள்ளது. உதயச்சந்திரனின் சிபாரிசில்தான் செந்தில்குமாருக்கு இந்தப் பதவி கிடைத்தது என்கிறார்கள். இரண்டு மாதங்கள் வரை சிறப்பு அதிகாரி என்கிற பதவியில் செந்தில்குமார் இருப்பாராம். சமீபத்தில் சென்னை உயர் நீதிமன்றமே ராதாகிருஷ்ணனை மாற்றாததற்கு தமிழக அரசுக்குப் பாராட்டு தெரிவித்தது. அதனால் இப்போதைக்கு மாற்றம் இருக்காது. சில மாதங்களில் ராதாகிருஷ்ணனை மாற்றிவிட்டு சுகாதாரத்துறையின் செயலாளராக செந்தில்குமாரை நியமிக்கும் முடிவில் இருக்கிறதாம் ஆட்சி மேலிடம்.”

“சரிதான்…”

“அதேபோல உதயச்சந்திரன் சிபாரிசில்தான் ஷில்பா பிரபாகர் சதீஷுக்கும் பொறுப்பு கிடைத்திருக்கிறது. ஷில்பாவும் உதயச்சந்திரனின் மனைவியும் நெருங்கிய தோழிகள். அந்தவகையில் உதயச்சந்திரன் ஷில்பாவுக்கு பரிந்துரைக்கவும், ‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ துறையின் சிறப்பு அலுவலர் பொறுப்பு ஷில்பாவுக்கு தரப்பட்டிருக்கிறது. கொரோனா தடுப்புப் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளதால், இப்போதைக்கு மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் இருக்காது என்கிறார்கள்” என்ற கழுகாருக்குச் சூடாக சுண்டலை நீட்டினோம். சுண்டலைக் கொறித்தபடி செய்திகளைத் தொடர்ந்தார் கழுகார்.
 

“2006 தி.மு.க ஆட்சிக் காலத்தில் பொதுப்பணித்துறை அமைச்சராக துரைமுருகன் இருந்தபோது, அவருக்கு நம்பகமான ஒப்பந்ததாரராக இருந்தவர் மதுரை மாணிக்கம். பின்னாளில் பன்னீருக்கும் நம்பிக்கைக்குரியவராக இருந்தார். 2016 சட்டமன்றத் தேர்தலில் சோழவந்தான் தொகுதியில் அ.தி.மு.க சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற மாணிக்கம், தன் குடும்ப நிறுவனம் மூலமாக பொதுப்பணித்துறை ஒப்பந்தங்களை எடுத்து நடத்தினார். நடந்து முடிந்த தேர்தலில் மாணிக்கம் சோழவந்தான் தொகுதியில் போட்டியிட்டுத் தோற்றுப்போன நிலையில், பழைய பாசத்தில் துரைமுருகனை நெருங்கிவிட்டார் என்கிறார்கள். இதையடுத்து, மீண்டும் தமிழக அரசின் ஒப்பந்த வேலைகளை எடுக்கும் முயற்சியில் தீவிரமாகியிருக்கிறாராம் மாணிக்கம்.”

“அரசியலில் பாசம்தான் ஆதாயம் தரும். அ.தி.மு.க செய்திகள் ஏதேனும்?”

”விழுப்புரம் தொகுதியில் தோல்வியைத் தழுவியதால், தன் அண்ணன் ராதாகிருஷ்ணனிடம் பேசாமல் இருக்கிறாராம் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம். இந்த முறை அவர் மைலம் தொகுதியில் போட்டியிட விரும்பினாராம். ஆனால், ‘விழுப்புரம் தொகுதியிலேயே போட்டியிடு. உனக்குச் சாதகமாகத்தான் இருக்கு’ என்று சண்முகத்துக்கு ராதாகிருஷ்ணன் ஆலோசனை கூறியிருக்கிறார். கடைசியிந்ந்ல் மைலம் தொகுதியில் கூட்டணிக் கட்சியான பா.ம.க சுலபமாக ஜெயித்தது. அ.தி.மு.க-விலிருந்து தி.மு.க-வுக்குச் சென்ற ஆர்.லட்சுமணனிடம் விழுப்புரத்தில் தோல்வியைத் தழுவினார் சண்முகம். பரம எதிரியிடம் தோற்றதற்கு அண்ணனின் தவறான வழிகாட்டுதல்தான் காரணம் என்ற வருத்தத்தில் அண்ணனுடன் பேசாமல் இருக்கிறாராம் சண்முகம்.”
 

காலப்போக்கில் வருத்தங்கள் மறைந்துவிடும்…”

“அந்த நம்பிக்கையில்தான் ராதாகிருஷ்ணனும் இருக்கிறார். தேர்தலில் போட்டியிட தலைமை சீட் கொடுக்காததால், பெருந்துறையில் சுயேச்சையாகக் களமிறங்கிய தோப்பு வெங்கடாசலம் 10,000-க்கும் குறைவான வாக்குகளையே பெற்றார். தேர்தல் தோல்விக்குப் பிறகு செந்தில் பாலாஜி, ஈரோடு முத்துசாமி மூலமாக அறிவாலயத்துக்கு தோப்பு தூதுவிட்டிருக்கிறார். ‘10 வருஷமா தொகுதியில சிட்டிங் எம்.எல்.ஏ-வாக இருந்தவர், பத்தாயிரம் ஓட்டுக்கூட வாங்கலை. அவரைச் சேர்த்து நமக்கு எந்தப் பிரயோஜனமும் இல்லை’ என்று தி.மு.க தலைமை மறுத்துவிட்டதாம். பா.ஜ.க-வை தோப்பு அணுகியபோது, ‘அ.தி.மு.க-வுடன் கூட்டணியில இருக்கோம். தேவையில்லாத சங்கடம் வரும். கொஞ்சம் பொறுத்திருங்க’ என்று பதில் வந்ததாம். வேறு வழியில்லாமல் ‘யூ டர்ன்’ அடித்த தோப்பு, எதிர்க்கட்சித் தலைவராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு வாழ்த்து தெரிவிக்கச் சென்றிருக்கிறார். ‘அவரைப் பார்க்க எனக்கு விருப்பமில்லை’ என்று எடப்பாடியும் திருப்பி அனுப்பிவிட்டாராம். நொந்துபோன தோப்பு, வாங்கி வந்த பொக்கேவை எடப்பாடியாரின் வீட்டு வாசலிலேயே வைத்துவிட்டு, கண்கலங்க திரும்பிச் சென்றிருக்கிறார்” என்றபடி சிறகுகளை உலுக்கிய கழுகார்,

“முன்னாள் அமைச்சர்கள் மீதான ஊழல் புகார்களை ஜூலை மாதத்துக்குப் பிறகு கையில் எடுக்கப்போகிறார்களாம். அதன் பிறகு பரபரப்புக்குப் பஞ்சமிருக்காது” என்றபடி ஜூட் விட்டார்.

கழுகார் கான்ஃபிடென்ஷியல் நோட்!

* அமைச்சர்கள் சிவசங்கர், மதிவேந்தனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்ட நிலையில், மேலும் இரண்டு அமைச்சர்களுக்கு கொரோனா அறிகுறிகள் தென்பட்டு, அவர்கள் தங்களைத் தனிமைப்படுத்திக்கொண்டுள்ளனர். அவர்களில் தென்மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர், ‘எனக்கெல்லாம் ஒண்ணுமில்லைப்பா. லேசா தலைவலி’ என்று சொல்லிவிட்டு ஆய்வுக் கூட்டங்களுக்குச் சென்றிருக்கிறார். முதல்வர் அலுவலகத்திலிருந்து எச்சரித்த பிறகுதான் தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டாராம்.

* வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரனின் மருமகன் சிவக்குமார், தன் மாமனாரை யாரும் நெருங்கிவிடாதபடி அணைபோடுவதாக நீலகிரி தி.மு.க-வினர் மத்தியில் குமுறல் எழுந்திருக்கிறது. ‘போன்ல பேசக்கூட விட மாட்டேங்குறாரு. உறவுகளை ஆரம்பத்துலேயே அடக்கிவெக்கலைன்னா பிறகு கஷ்டம்தான்’ என்று கொந்தளிக்கிறார்கள் உடன்பிறப்புகள்.

* தேர்தல் தோல்விக்குக் காரணமான மாவட்டச் செயலாளர்களை மாற்ற வேண்டுமென்ற கோரிக்கை அ.தி.மு.க-வில் வலுத்திருக்கிறது. ராமநாதபுரம் முனியசாமி, சிவகங்கை செந்தில்நாதன், விருதுநகர் ராஜேந்திர பாலாஜி, தேனி சையது கான், மதுரை மாநகர் செல்லூர் ராஜூ ஆகியோருக்கு எதிராகப் புகார்கள் பறக்கின்றன. மா.செ-க்கள் மாற்றப்பட்டால், அ.தி.மு.க-வில் புதிய கலகம் பிறக்கலாம்.

எடப்பாடியைச் சந்திக்காத எம்.எல்.ஏ-க்கள்!

எதிர்க்கட்சித் தலைவராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதற்கு ட்விட்டர் வாயிலாக வாழ்த்து தெரிவித்திருக்கிறார் பா.ம.க நிறுவனர் ராமதாஸ். ஆனால், எடப்பாடியை பா.ம.க எம்.எல்.ஏ-க்கள் யாரும் மே 13-ம் தேதி வரை சந்தித்து வாழ்த்து பெறவில்லை. பா.ஜ.க எம்.எல்.ஏ-க்கள்கூட வாழ்த்து பெற்றுவிட்டனர். அ.தி.மு.க-வின் வாக்குகள் பா.ம.க-வுக்கு மடைமாறாததால்தான், கணிசமாக வெற்றிபெற முடியவில்லை என வருத்தத்தில் இருக்கிறார் ராமதாஸ். இதன் எதிரொலியாகத்தான் எடப்பாடியை பா.ம.க எம்.எல்.ஏ-க்கள் நேரில் சந்திக்கவில்லை என்கிறார்கள்!

%d bloggers like this: