அவப்பெயரை தேடித்தரும் ‘அண்ணா நகர்’ கும்பல்! – எச்சரிக்கையாக இருப்பாரா ஸ்டாலின்?

கையில் சில ஆவணங்களுடன் என்ட்ரி கொடுத்தார் கழுகார். “இந்து அறநிலையத்துறை செய்தியைத்தானே கொட்டப்போகிறீர்?” என்று கண்சிமிட்டினோம். சிரித்தபடி, “அடேங்கப்பா… பெரிய புலனாய்வுப் புலிதான்” என்று நக்கலடித்துவிட்டு, “கோயில்களுக்குச் சொந்தமான நிலங்கள், கட்டடங்கள், ஆவணங்கள் உள்ளிட்டவற்றை இணையத்தில் பதிவேற்ற உத்தரவிட்டிருக்கிறார் இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு. மே 18-ம் தேதி துறை அதிகாரிகளுடன் நடந்த கூட்டத்தில், ‘பணம் சம்பாதிக்கிற எண்ணத்துல யாராவது இருந்தா, இப்பவே டிரான்ஸ்ஃபர்ல போயிடுங்க’ என்று எச்சரித்திருக்கிறார். அதிகாரிகள் சற்று அரண்டுதான் போயிருக்கிறார்கள்” என்றபடி செய்திகளுக்குள் நுழைந்தார் கழுகார்.

இந்து அறநிலையத்துறையில் பல திட்டங்களைச் செயல்படுத்தி, நிதி ஆதாரத்தை அதிகரிக்கத் திட்டமிட்டிருக்கிறது ஆளும் தரப்பு. அறநிலையத்துறையின் ஆணையராகப் பொறுப்பேற்றிருக்கும் குமரகுருபரன் ஐ.ஏ.எஸ்-ஸிடம், கோயில் சொத்துகளை மீட்டு வருவாயை உயர்த்த வேண்டும் என்கிற பொறுப்பை ஆட்சி மேலிடம் ஒப்படைத்திருக்கிறது. இப்படித் திரட்டப்படும் நிதியைக் கொண்டு, தமிழகத்தின் நான்கு முக்கிய ஆன்மிகத் தலங்களில் இந்து அறநிலையத்துறை சார்பில் கல்லூரிகளும், பெரிய கோயில்களில் திருமண மண்டபங்களும் கட்டும் திட்டங்கள் இருக்கின்றனவாம். தவிர, விரைவிலேயே இந்தத் துறையில் நடந்த முறைகேடுகளும் வெளிச்சத்துக்கு வரும் என்கிறார்கள் துறை சார்ந்தவர்கள்.”

“சரிதான்… முதல்வர் அலுவலக பணி நியமனம் தொடர்பான பட்டியல் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலானதே, பார்த்தீரா?”

“பார்த்தேன்… பார்த்தேன்… எல்லாம் வசூல் உத்திதானாம். முதல்வர் அலுவலகத்தின் துணைச் செயலாளர்கள் தொடங்கி, அலுவலக ஓ.ஏ வரை 45 பெயர்களுடன் வலம்வரும் அந்தப் பட்டியல்தான் இப்போது கோட்டையைக் கலக்குகிறது. இந்தப் பட்டியலில் இடம்பெற்ற பலரும் அவர்கள் சார்ந்திருக்கும் துறைகளிலிருந்து இன்னும் விடுபடவில்லை. ஆனால், அதற்கு முன்னதாகவே இந்தப் பட்டியல் ‘லீக்’ ஆகியிருக்கிறது. ‘நாங்கள் முதல்வர் அலுவலகத்தில் தான் பணிபுரிகிறோம். எங்களைத் தொடர்பு கொண்டு கவனித்தால் வேலையை முடித்துக் கொள்ளலாம்’ என்று சில அதிகாரிகள் திட்டமிட்டுச் செய்த வேலை இது என்கிறார்கள்.”

“ஓஹோ… முதல்வர் அலுவலகத்தின் பி.ஆர்.ஓ என்று சொல்லி ஒருவர் லாபி செய்தாராமே?”

“ஆமாம்… முதல்வர் அலுவலக பி.ஆர்.ஓ நியமனத்துக்கு மூன்று பெயர்களை அதிகாரிகள் தரப்பு முதல்வர் பார்வைக்கு அனுப்பியது. அதில் மாறன் என்பவரை மட்டும் முதல்வர் ஓகே செய்துள்ளார். இவர் கிச்சன் கேபினெட்டுக்கு உறவினர் என்கிறார்கள். அதேநேரம், பரிந்துரைப் பட்டியலில் இடம்பெற்றிருந்த மற்றோர் அதிகாரி, மூத்த அமைச்சர் ஒருவருக்கு போன் செய்து, ‘நான் முதல்வரோட பி.ஆர்.ஓ பேசுறேன். நான் சொல்ற அதிகாரியை உங்களுக்கு பி.எஸ்.ஓ-வாக வைத்துக்கொள்ளுங்கள்’ என்று சொல்லியிருக்கிறார். மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி ஒருவரிடமும் இதேபோல பேசி ஒரு ஃபைலில் கையெழுத்து வாங்கினாராம். இதேபோல ஒரு ஃபைலை அமைச்சர் ஒருவரிடமும் கொண்டுபோயிருக்கிறார். சந்தேகமடைந்த அமைச்சர், ‘முதல்வரிடம் கேட்டுவிட்டு கையெழுத்து போடுகிறேன்’ என்று சொல்லிவிட்டு, கிராஸ் செக் செய்ய… அந்த அதிகாரியின் பித்த லாட்டம் வெளிப்பட்டிருக்கிறது. விரைவிலேயே அந்த அதிகாரிமீது நடவடிக்கை பாயலாம்.”

“ம்ம்ம்… முறைகேடு செய்யும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை பாயும் என்று எச்சரித்திருக்கிறார் இறையன்பு. பார்க்கலாம்…”

“இந்த விஷயத்தில் முதல்வர் ஸ்டாலின் கடும் கண்டிப்பு காட்டுகிறார். ‘2ஜி வழக்கில் தேவையில்லாமல் நம்மைக் கோத்துவிட்டதால்தான் பத்தாண்டுகள் வனவாசம் போக வேண்டியதாகி விட்டது. இந்தமுறை அமைச்சர்களோ, அதிகாரிகளோ முறைகேட்டில் ஈடுபட்டால் அடுத்த நிமிடமே அமைச்சர் பதவியிலிருந்து தூக்கிவிடுவேன்’ என்று உறுமினாராம். இறையன்பு எச்சரித்ததன் பின்னணி இதுதானாம்.”

“நீங்கள் இப்படிச் சொல்கிறீர்… ஆனால், கூட்டுறவுத்துறை அமைச்சர் திண்டுக்கல் ஐ.பெரியசாமியின் மருமகளும், பழனி எம்.எல்.ஏ செந்தில்குமாரின் மனைவியுமான மெர்சி, டெண்டருக்கு மேல் டெண்டர் கேட்பதாக திண்டுக்கல்லில் பேச்சு அடிபடுகிறதே?”

“விவரம் உமக்கும் வந்துவிட்டதா… திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா நோயாளிகளுக்கு உணவு வழங்கும் ஆர்டரை, தி.மு.க ஆட்சிக்கு வந்தவுடன் ‘ஆதவன் ஃபுட்ஸ் அண்ட் கேட்டரிங்’ என்ற நிறுவனத்துக்குப் பிரித்துக் கொடுத்தது மாவட்ட நிர்வாகம். மெர்சிதான் ஆதவன் நிறுவனத்தின் உரிமையாளர். ஆட்சிக்கு வந்த சில தினங்களிலேயே அதிகாரிகளை உருட்டி, தனது நிறுவனத்துக்கு ஆர்டர் பெற்றுக்கொண்ட மெர்சி, இப்போது மாவட்டத்தின் மொத்த ஆர்டரையும் தனக்கே தர வேண்டுமெனக் காய்நகர்த்துகிறாராம். ஆனால், ஏற்கெனவே உணவு வழங்கி வந்த ஹோட்டல்கள் பிரச்னை செய்வதால், சில மையங்களுக்கு மட்டும் உணவு வழங்கும் ஆர்டர்களை ஆதவன் நிறுவனத்துக்குக் கொடுத்திருக்கிறது மாவட்ட நிர்வாகம்.”

“ஓஹோ…”

“அடுத்து மெர்சி குறிவைத்திருப்பது, சமூக நலத்துறையின் கீழ் வரும் இலவச சீருடை தைக்கும் ஆர்டர் என்கிறார்கள். இதற்கான டெண்டரைக் குறிவைத்து மெர்சி காய்நகர்த்துவதால், மாவட்ட தி.மு.க-வினரே அரண்டுபோயிருக்கிறார்கள். இன்னொரு பக்கம் திண்டுக்கல் மாவட்டம், சீலப்பாடி பகுதியில் கணிசமான சொத்துகளை மெர்சி தரப்பு வாங்கிவிட்டது என்றும் ஒரு பேச்சு ஓடுகிறது. ஒரு பெரியவர் மட்டும் தனது இடத்தை விற்க மறுத்து, விவகாரம் ஐ.பெரியசாமி வரை சென்றதை அடுத்து மகனையும் மருமகளையும் எச்சரித்துள்ளாராம் பெரியசாமி” என்ற கழுகாருக்கு, சூடாக வெங்காய பக்கோடாவை நீட்டினோம். பக்கோடாவைக் கொறித்தபடி செய்திகளைத் தொடர்ந்தார் கழுகார்.

“கடந்த ஆட்சிக் காலத்தில் முன்னாள் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு நெருக்கமான ஜெ.சேகர் என்கிற சேகர் ரெட்டி முதல்வரைச் சந்தித்தது சர்ச்சையாகியிருக்கிறது. ‘கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பிருந்தே தி.மு.க தலைமைக்கு நெருக்கமானவர்களுடன் சேகர் ரெட்டி கைகோத்துவிட்டாராம். இதனால், மணல் ஒப்பந்தம் மீண்டும் அவருக்கே அளிக்கப்பட்டாலும் ஆச்சர்யம் இல்லை என்கிறார்கள். சேகர் ரெட்டிக்காக, கிச்சன் கேபினெட் தரப்பிடம் ஆந்திரத்தின் உச்ச புள்ளி தரப்பிலிருந்து பேசியிருக்கிறார்கள்’ என்றும் கூறப்படுகிறது. அதேபோல பாஷ்யம் நிறுவனத்தின் இயக்குநர்களும் முதல்வரைச் சந்தித்து நிதி கொடுத்தனர். ஏற்கெனவே ‘சேகர் ரெட்டி மீதான வழக்குகள் என்னவாகின?’ என்று தி.மு.க கேள்வி எழுப்பிய நிலையில், கடந்த மாதம்தான் பாஷ்யம் நிறுவனத்தின் முறைகேடுகளைப் பற்றியும் ஆளுநரிடம் புகார் கொடுத்தது தி.மு.க. அதற்குள் எப்படி இப்படியொரு மாற்றம் என்று புருவம் உயர்த்துகிறார்கள் கோட்டை வட்டாரத்தில்.”

“இந்தச் சந்திப்புகளுக்கான ஏற்பாடுகளை யார் செய்கிறார்கள்?”

“சென்னை அண்ணாநகரைச் சேர்ந்த கட்டட நிறுவனத்தின் ‘மில்க்’ பிரமுகர் ஒருவரும், முருகப் பெருமான் பெயர்கொண்ட ஒருவரும்தான் இதற்கான ஏற்பாடுகளைச் செய்கிறார்கள். முதல்வருடன் சேகர் ரெட்டி சந்திப்பதற்கு முன்னதாக, 10 ஸ்வீட் பாக்ஸ்கள் கைமாறியதாகக் கூறப்படுகிறது. ஈ.சி.ஆர் சாலையிலுள்ள ஒரு தியேட்டரின் பின்பகுதியை ‘மில்க்’ பிரமுகரின் நிறுவனம் குறைந்த விலையில் வாங்கியிருக்கிறது. சாலையை ஒட்டியிருக்கும் முன்பகுதியை அதிக விலைகொடுத்து மற்றொரு கட்டட நிறுவனம் வாங்கியிருக்கிறது. அந்தக் கட்டட நிறுவனத்தின்மீது ஏகப்பட்ட புகார்கள் சி.எம்.டி.ஏ-வில் நிலுவையில் இருப்பதால், வழக்குகளிலிருந்து தப்பிக்க ‘மில்க்’ பிரமுகரை அணுகியிருக்கிறார்கள். அதற்குப் பிரதிபலனாக, தியேட்டரின் முன்பகுதியை அடிமாட்டு விலைக்குக் கேட்கிறதாம் ‘மில்க்’ பிரமுகர் தரப்பு. அரண்டு கிடக்கிறது சம்பந்தப்பட்ட கட்டட நிறுவனம்.”

“கொரோனா நிவாரணத்துக்காக முதல்வர் நிதி வாங்குவதில் தவறில்லைதான்… அதேநேரம் பல்வேறு விஷயங்களில் நல்ல பெயரை சம்பாதித்துவரும் தி.மு.க., அண்ணாநகர் பிரமுகர்கள் விவகாரத்தில் இன்னும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. சரி, ஜக்கி விவகாரத்தில் கடுமையான கருத்துகளைச் சொல்லிவந்த நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிராஜன் திடீரென ஆஃப் ஆகியிருக்கிறாரே!”

“ஆமாம்… தேர்தலுக்கு முன்பு தி.மு.க-வை மறைமுகமாக விமர்சிக்கும் வகையில் ‘கோயில் அடிமை நிறுத்து’ என்ற இயக்கத்தைத் தொடங்கி அறிக்கைவிட்டுக்கொண்டிருந்தார் ஜக்கி வாசுதேவ். இந்தநிலையில்தான் சமீபத்தில் ஒரு பேட்டியில், ஜக்கிக்கு எதிராகக் கடுமையான கருத்துகளைச் சொன்னார் நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன். இது பெரும் விவாதங்களைக் கிளப்பிய நிலையில், சில முக்கியப் புள்ளிகள் மூலம் இந்த விவகாரத்தை முதல்வர் தரப்பிடம் எடுத்துச் சென்றாராம் ஜக்கி. இதையடுத்து, பழனிவேல் தியாகராஜனை தொடர்புகொண்ட முதல்வர் தரப்பு, “பிறகு பார்த்துக்கொள்வோம். இப்போது கொரோனா பணிகளில் கவனம் செலுத்துவோம். தேவையில்லாத விவாதங்கள் வேண்டாம்’’ என்று அவரை ஆஃப் செய்துவிட்டதாம். அதனால்தான், இந்த விவகாரத்தை இத்துடன் விடுவதாக ட்வீட் செய்துள்ளார் பழனிவேல் தியாகராஜன்.”

“சரிதான்… அ.தி.மு.க செய்திகள் ஏதேனும்?”

“கோவை மாநகர போலீஸ் கமிஷனராக தீபக் எம் தாமோர் நியமிக்கப்பட்டுள்ளார். சில ஆண்டுகளுக்கு முன்பு கோவை சரக டி.ஐ.ஜி-யாக அவர் பணியாற்றியபோது, அவரது செயல்பாடுகள் துறைக்குள் இருந்த சில காக்கிகளுக்கும், அப்போதைய ஆளுங்கட்சியினருக்கும் பிடிக்கவில்லை. அதனால், சில காலம் டம்மி பதவிக்குத் தூக்கியடிக்கப்பட்டவர், இப்போது அ.தி.மு.க-வுக்கு செக் வைப்பதற்காகவே கோவை கமிஷனராகப் பணியமர்த்தப்பட்டிருக்கிறாராம். மனிதர் வந்த வேகத்தில், கடந்த ஆட்சியில் அ.தி.மு.க-வினருக்கு விசுவாசமாக இருந்த போலீஸாரின் பட்டியலை எடுக்க ஆரம்பித்திருப்பதால், சம்பந்தப்பட்ட காக்கிகள் உதறலில் இருக்கிறார்கள்” என்றபடி கிளம்ப எத்தனித்த கழுகார்,

“தன் செயலாளர்கள் நான்கு பேரிடமும் அவர்கள் பொறுப்பிலுள்ள துறைகளில், கடந்த பத்தாண்டுகளில் நடந்த முறைகேடுகளை ஆராய்ந்து பட்டியலாக கொடுக்கச் சொல்லியிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். ஜூலை மாதத்துக்கு மேல் இந்தப் பட்டியலை வைத்து ஊழலில் திளைத்த முன்னாள் மாண்புமிகுக்களை வளைக்கத் திட்டமிட்டுள்ளதாம் முதல்வர் அலுவலகம்” என்றபடி ஜூட் விட்டார்.

%d bloggers like this: