கொரோனா 2-ம் அலை… பண நெருக்கடியைச் சமாளிக்கும் ஃபைனான்ஷியல் ஃபார்முலா!

கொரோனா இரண்டாம் அலை, முதல் அலையைவிட பல நூறு மடங்கு மோசமாக உள்ளது. முதல் அலை வரும் முன்பே நம்மிடம் கொஞ்சம் பணம் இருந்ததால், அதிகம் கஷ்டப்படாமல் நாம் அதைக் கடந்துவந்தோம். ஆனால், கொரோனா பாதிப்பு காரணமாக, கடந்த ஓராண்டாக பெரிய அளவில் வருமானம் இல்லாமல் போனதால், இப்போது பல குடும்பங்களும் பண நெருக்கடியில் தவித்துக்கொண்டிருக்கின்றன. இந்த நெருக்கடியைச் சமாளிப்பதற்கு

சிக்கலான தீர்வுகளைத் தேடாமல், எளிதான தீர்வுகள் என்ன என நிதி ஆலோசகர் வித்யா பாலாவிடம் (இணை நிறுவனர், Primeinvestor.in) கேட்டோம். அவர் விளக்கமாக எடுத்துச் சொன்னார்.

நீண்டகால முதலீடு…

‘‘பொதுவாக, நிதி நெருக்கடி வரும்போது, கடன் வாங்குவதற்கு முன்பு கையில் இருக்கிற சேமிப்புகள் மற்றும் முதலீடுகளை எடுத்துப் பயன்படுத்துவதுதான் புத்திசாலித் தனம். 6% வட்டி மட்டுமே தரும் நம் பணம் இருக்க, 12% வட்டி கட்ட வேண்டிய கடனை ஏன் வாங்க வேண்டும்?
சரி, எந்த முதலீடுகளைக் கொண்டு இப்போதைய நிலைமையைச் சமாளிக்கலாம் எனில், இப்போது பத்து வயதாகும் மகளுக்கு அவளின் 25 வயதில் நடக்கவிருக்கிற திருமணத்துக்கென்று சேமித்துவரும் தொகை, இப்போது ஆறு வயதாகும் மகனுக்கு வெளிநாட்டுக்குச் சென்று உயர்படிப்பு படிப்பதற்காகச் சேமித்து வைத்த தொகை போன்றவற்றை முதலில் எடுத்துக்கொள்ளலாம். கொரோனா பாதிப்பு இன்னும் ஒன்று அல்லது இரண்டு வருடங்களில் சரியாகிவிடும். அப்போது மறுபடியும் முதலீடு செய்துகொள்ளலாம்.
வைப்புத் தொகை…

சேமிப்பில் அடுத்து எதை எடுக்கலாம் என்று பார்த்தால், எது நமக்குக் குறைவான லாபம் தருகிறதோ, அதை முதலில் எடுத்துப் பயன்படுத்தலாம். கடந்த சில வருடங்களாக நிலையான வைப்புத் தொகைக்கு (ஃபிக்ஸட் டெபாசிட்) 5 அல்லது 6 சதவிகிதம்தான் வட்டி கிடைக்கிறது. அதனால், வைப்புத் தொகையில் வைத்திருக்கிற பணத்தை இந்த நேரத்தில் எடுத்துக்கொள்ளலாம். முதலீட்டை நிறுத்த விருப்பம் இல்லை என்றால் ஃபிக்ஸட் டெபாசிட் மீது கடன் வாங்கிக்கொள்ளலாம்.

ஆயுள் காப்பீடு பாலிசி சரண்டர் & கடன்

ஆயுள் காப்பீடு என்பது குடும்பத்தின் நிதிப் பாதுகாப்புக்காக எடுப்பது. ஆனால், நம்மில் பலர் அதைப் பணம் திரும்பி வருகிற முதலீட்டு வழியாகப் பார்க்கிறார்கள். எண்டோவ்மென்ட் பாலிசியில் வெறும் 4.5 சதவிகிதம்தான் வருமானம் வரும் என்பதால் அதை சரண்டர் செய்து, அந்தப் பணத்தை எடுத்துக்கொள்ளலாம்.
பாலிசியை சரண்டர் செய்யும் முன் அந்தக் காப்பீட்டுத் தொகைக்கு இணையாக அல்லது அதைவிட கூடுதல் தொகைக்கு குறைந்த பிரீமியத்தில் அதிக ஆயுள் காப்பீடு அளிக்கும் டேர்ம் பிளான் எடுத்துக்கொள்வது அவசியம். இந்தக் காலத்தில் புது பாலிசி எடுக்க இயலவில்லை எனில், இந்தப் பாலிசிகளை அடமானம் வைத்துக் கடன் வாங்கிக் கொள்ளலாம். இந்தக் கடன்களை தொடர்புடைய காப்பீட்டு நிறுவனங்கள் அல்லது வங்கிகளில் பெற முடியும். வட்டி 10 – 12 சதவிகிதமாக இருக்கும்.
தங்க நகை அடமானம் & விற்பனை
பணத்தேவை என்றவுடன் பெரும்பாலோரின் நினைவுக்கு வருவது தங்க நகை அடமானக் கடன்தான். இந்தக் கடனை பொதுத்துறை வங்கிகளில் வாங்குவது நல்லது. கிடைக்கும் கடன் தொகை குறைவாக இருந்தாலும் வட்டி குறைவாக இருக்கும். அதே நேரத்தில், ஒரு கிராமுக்கு அதிக தொகை தரும் நிதி நிறுவனங்களில் வட்டி மிக அதிகம். 20 சதவிகிதத்துக்கு மேல் வட்டி போடுகிறார்கள். மேலும், சரியான நேரத்தில் வட்டிக் கட்டவில்லை, நகையை மீட்கவில்லை எனில், அதிக அபராதமும் இருக்கிறது என்பதை நினைவில்கொள்வது அவசியம்.
நிதி நெருக்கடி மிகுந்த இந்த நேரத்தில், தங்கத்தை அடமானம் வைத்தீர்கள் எனில், அதற்கு வட்டி கட்டுவதே பெரிய சுமை யாகிவிடும். அதனால், தங்கத்தை விற்று தேவைகளைச் சமாளிப்பது தான் சரி. நெருக்கடி நேரத்தில் இன்னொரு கடன் வாங்குவது புத்திசாலித்தனம் அல்ல. இப்போது நகையை விற்று நிலைமையைச் சமாளித்துவிட்டு, பின்னர் நிலைமை சரியான பிறகு தங்கம் விலை இறங்கி இருக்கும் காலத்தில் வாங்கிக்கொள்ளலாம்.
மியூச்சுவல் ஃபண்ட், பங்கு முதலீட்டு லாபம்


மியூச்சுவல் ஃபண்டுகள் மற்றும் நிறுவனப் பங்குகளில் தொடர்ந்து சில வருடங்கள் முதலீடு செய்திருந் தால், அவற்றில் ஓரளவுக்கு நல்ல லாபம் வந்திருக்கும். அந்த லாபத்தை மட்டும் இந்த கொரோனா நெருக்கடி நேரத்தில் எடுத்துக்கொள்ளலாம். உதாரணமாக, 5 லட்ச ரூபாயை ஆறேழு வருடங்கள் மியூச்சுவல் ஃபண்டில் போட்டு வைத்திருந் தீர்கள் எனில், அது இப்போது சுமார் ரூ.8 லட்சமாக வளர்ந்திருக்கும். இதில், லாபமாக இருக்கும் ரூ.3 லட்சத்தை மட்டும் செலவுக்கு எடுத்துக்கொள்ள லாம். மூலதனத்தை எடுக்கக் கூடாது.
வருங்கால வைப்பு நிதி

வங்கிகளில் தனிப்பட்ட கடன் (பர்சனல் லோன்) வாங்கி 12 அல்லது 14% வட்டி கட்டுவதற்குப் பதில், வருங்கால வைப்புநிதியில் (பிராவிடன்ட் ஃபண்ட்) இருந்து கடன் வாங்கலாம். இந்தக் கடனைத் திரும்பக்கட்ட வேண்டும் என்கிற அவசியம் இல்லை. பி.எஃப் பணத்தை தீவிர நோய்க்கான சிகிச்சை, பிள்ளைகளின் கல்வி, கல்யாணம், வீட்டுக் கடனை அடைத்தல் போன்ற காரணங்களுக்காக எடுக்க முடியும். எந்தக் காரணத் துக்காகப் பணம் எடுக்கப்படுகிறது என்பதை பி.எஃப் உறுப்பினர் குறிப்பிட வேண்டி யது அவசியம்.
எடுக்கப்பட்ட தொகைக்கு இணையான தொகையை விருப்ப பி.எஃப் மூலம் நிதி நிலவரம் சரியானதும் கட்டிக் கொள்ளலாம். இப்படிச் செய் வதால் ஓய்வுக்கால தொகுப்பு நிதியில் சிக்கல் ஏற்படாமல் இருக்கும். இதேபோல் பப்ளிக் பிராவிடன்ட் ஃபண்ட் (பி.பி.எஃப்) திட்டத்தில் முதலீடு செய்துவரும் பட்சத்தில் அதிலிருந்து கடன் பெற்றுக் கொள்ள முடியும்.
மியூச்சுவல் ஃபண்ட் கடன்

மியூச்சுவல் ஃபன்ட் யூனிட்கலை அடமானமாக வைத்து சுலபமாகக் கடன் வாங்கலாம். கடன் ஃபண்டுகளில் முதலீட்டின் மதிப்பில் 80% வரை கிடைக்கும்.
பங்குச் சந்தை சார்ந்த ஃபண்ட், கலப்பின ஃபண்டுகள் போன்றவற்றில் முதலீட்டின் மதிப்பில் 50% வரை கடன் கிடைக்கும். இந்தக் கடனை வங்கிகள், நிதி நிறுவனங்கள் மற்றும் மியூச்சுவல் ஃபண்ட் சேவை அளிக்கும் நிறுவனங் களின் மூலம் பெற முடியும். இதற்கான வட்டி தனிநபர் கடன் வட்டியைவிட குறைவாக இருக்கும்.
பங்கு அடமானக் கடன்

மியூச்சுவல் ஃபண்ட் யூனிட்களை அடமானம் வைத்துக் கடன் பெறுவது போலவே, நிறுவனப் பங்குகளையும் அடமானம் வைத்துக் கடன் பெற முடியும். இப்படிக் கடன் பெறும்போது அனைத்து நிறுவனப் பங்கு முதலீட்டின் மீதும் கடன் தர மாட்டார்கள். முன்னணி நிறுவனப் பங்குகளின் மீதுதான் கடன் கிடைக்கும். அதுவும் பங்கின் மதிப்பில் சுமார் 50% அளவுக்குத்தான் கிடைக்கும்.
இந்தக் கடனை வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் பெறலாம். பங்கு முதலீட்டின் மூலம் உங்களுக்கு நல்ல லாபம் இருக்கும்பட்சத்தில் அந்த லாபத்தை எடுத்தும் தேவைக்கு பயன்படுத்தலாம்.
கோல்டு பாண்ட்

சாவரின் கோல்டு பாண்டில் முதலீடு செய்திருக்கும்பட்சத்தில், அதை அடமானம் வைத்துக் கடன் வாங்கலாம். கடன் வாங்கும் நேரத்தில் கோல்டு பாண்டின் மதிப்பில் 35% தொகை கடனாக இருக்கும். குறைந்த பட்சம் ரூ.20,000 முதல் ரூ.20 லட்சம் வரை கடன் வாங்க முடியும்.
பத்திரமாக வாங்கிய கோல்டு பாண்ட் மற்றும் டீமேட் மூலம் வாங்கிய பாண்டாக இருந்தாலும் கடன் வாங்க முடியும். இந்தக் கடனை வங்கிகள் அல்லது நிதி நிறுவனங்கள் மூலம் வாங்கலாம்.
நிதி ஆலோசகரிடம் கலந்து பேசுங்கள்

ஒன்றுக்கும் மேற்பட்ட பல முதலீடுகள் வைத்திருக்கிறீர்கள் எனில், ஒரு நிதி ஆலோசகரிடம் ஆலோசனைப் பெற்று குறைவான லாபம் தருகிற முதலீடுகளை விற்றுப் பணமாக்கலாம். நீங்களாகச் செய்தால், நல்ல முதலீட்டை விற்றுவிட்டு, குறைவான லாபம் தருகிற முதலீடுகளை வைத்திருக்க நேரலாம் என்பதால்தான், நிதி ஆலோசகரிடம் ஆலோசனைக் கேட்கச் சொல்கிறேன்” என்றார் வித்யா பாலா.
உங்களிடம் உள்ள சேமிப்புகள், முதலீடுகள், சொத்துகளை இங்கே சொல்லப்பட்டபடி கையாண்டால், பெரிய இழப்புகள் இல்லாமல் கொரோனா காலப் பண நெருக்கடி யைச் சுலபமாகச் சமாளித்து மீண்டு வரலாம்.

கொரோனா 2-ம் அலை... பண நெருக்கடியைச் சமாளிக்கும்  
ஃபைனான்ஷியல் ஃபார்முலா!

நெருக்கடி சொல்லித் தரும் சேமிப்புப் பாடம்!

உங்களுடைய ஆறு மாத சம்பளத்தை அவசரகால நிதியாக வங்கிச் சேமிப்பு அல்லது லிக்விட் ஃபண்டுகளில் சேமித்து வைக்க வேண்டும் என்பதை இந்த நெருக்கடி நேரத்திலா வது புரிந்துகொள்ளுங்கள். சிக்கனமும் சேமிப்பும் பணத்தை அப்படியேதான் வைத்திருக்கும். அது பெருகாது. முதலீடு செய்தால்தான் பெருகும். இதையும் இந்தக் காலகட்டத்தில் புரிந்து கொண்டால்தான், கொரோனா ஓய்ந்த பிறகு முதலீடுகளில் கவனம் செலுத்த ஆரம்பிப்போம். சிலர் வீட்டிலிருந்து வேலை பார்ப்பதால் பயணச் செலவு, வெளியில் சாப்பிடுகிற செலவு என்று மிச்சமாகிற பணத்தை அவசரகால நிதியாக இப்போதிலிருந்து சேமிக்க ஆரம்பிக்கலாம். இவை எல்லாவற்றையும்விட, இந்த நேரத்தில் எங்கெல்லாம் பணத்தை முதலீடு செய்திருக்கிறீர்கள் என்பதை குடும்பத்தின் முக்கிய உறுப்பினர்களிடம் சொல்லி வைப்பது நல்லது.

தேவையில்லாத பொருள்கள் விற்பனை!

வீட்டில் பல ஆண்டுகளாகப் பயன்படுத்தப்படாமல் கிடக்கும் பொருள்களை விற்பது மூலம் சில ஆயிரம் ரூபாய் கிடைக்கக்கூடும். உதாரணத்துக்கு சிறுவர் சைக்கிள்கள் தொடங்கி இரும்புப் பொருள்கள், அலுமினிய பாத்திரங்கள், பழைய புத்தகங்கள், எலெக்ட்ரானிக் கழிவுகள், கம்ப்யூட்டர் பழுதான பாகங்கள் இப்படி ஏகப்பட்ட பொருள்களை விற்றுக் காசாக்கி தேவைக்குப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

%d bloggers like this: