ஆபரேஷன் ஸ்பைடர்! – பீதியில் முன்னாள் அமைச்சர்கள்…

விஷ்ஷ்க்க்’ என்ற சப்தம்… சிறகுகள் படபடக்க வந்தமர்ந்த கழுகாரிடம், “அ.தி.மு.க-வில் ரகளை களைகட்டுகிறதே” என்றபடி இளநீரை நீட்டினோம். இளநீரை பருகியபடி கவர் ஸ்டோரியில் பார்வையை ஓடவிட்ட கழுகார், “தொண்டர்களுடன் சசிகலா பேசும் ஆடியோ வெளியானதில் எடப்பாடி தரப்பு கடும் அப்செட் என்கிறார்கள். அதுமட்டுமல்ல… சசிகலா விரைவில் தன் ஆதரவாளர்களைச் சந்திக்க முடிவெடுத்திருப்பதாகவும் தகவல். அதன்பிறகு, அ.தி.மு.க-வில் குழப்பங்கள் மேலும் அதிகரிக்கலாம்” என்றபடி செய்திகளுக்குள் நுழைந்தார்.


“தடை செய்யப்பட்ட லாட்டரித் தொழிலை மீண்டும் தொடங்குவதற்கான ஒப்புதலைப் பெற கிச்சன் கேபினெட் ரூட்டில் லாட்டரி அதிபர் ஒருவரின் மருமகன் தீவிரமாக இறங்கியிருக்கிறார். தேர்தலின்போது தி.மு.க-வுக்கு ‘பசை’யான உதவிகளைச் செய்ததால், கைமாறாகத் தொழிலை மீண்டும் திறந்துவிட அனுமதி கேட்டிருக்கிறார்கள். மாப்பிள்ளை தரப்பும் இதற்கான சாத்தியக் கூறுகளை ஆராய்ந்து வருகிறதாம். இதற்கு வலுசேர்க்கும் வகையில், காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரமும், ‘லாட்டரியை அரசே ஏற்று நடத்த வேண்டும்’ என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். இதன் பின்னணியிலும் லாட்டரி அதிபரின் லாபி இருக்கலாம் என்கிறார்கள்.”
“ஓஹோ… அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்கள் பலரும் பதறிப்போயிருக்கிறார்கள்போல!”

“எல்லாம் ‘ஆபரேஷன் ஸ்பைடர்’ கிளப்பி யிருக்கும் பீதிதான். முன்னாள் அமைச்சர்களின் உதவியாளர்கள் குவித்திருக்கும் சொத்துகள், பதுக்கியிருக்கும் ரொக்கம் பற்றிய விவரங்களை எல்லாம் உளவுத்துறை தோண்ட ஆரம்பித் திருக்கிறது. கடந்த ஆட்சியில் சுத்தத்தைப் பராமரித்த அமைச்சரிடம் உதவியாளராக இருந்த முருகப் பெருமான் பெயர்கொண்டவர், பினாமி நிறுவனங்கள் மூலமாக கொரோனா காலத்தில் பல நூறு கோடிகளை குவித்து விட்டாராம். கற்றலைக் கவனித்த வடமாவட்ட அமைச்சரிடம், ஒரு டஜன் உதவியாளர்கள் இருந்தனர். அவர்களில் முருகனின் ஆயுதம் பெயர்கொண்டவர் மட்டுமே சுமார் 200 கோடி ரூபாய் வரை சம்பாதித்திருக்கிறார். ஊர் பெயரை அடைமொழி யாகக்கொண்ட அமைச்சரின் மாங்கனி மாவட்ட உதவியாளர், மண்வளத்தைக் கவனித்த வடமாவட்ட அமைச்சர் ஒருவரின் உறவினர், காடுகளைக் கண்காணித்த வரின் வாரிசுகள் என 12 முன்னாள் அமைச்சர்களின் உதவியாளர்கள், உறவுகளின் பெயர்களைப் பட்டியலிட்டு, அவர்கள் குவித்த சொத்துகளின் விவரங்களை உளவுத்துறை சேகரிக்க ஆரம்பித்திருக்கிறது.”
“என்ன செய்யப் போகிறார்களாம்?”
“வேறென்ன… முன்னாள் அமைச்சர்களுக்கு செக் வைக்கப் போகிறார்கள். நிலோபர் கபில் விவகாரத்தில், அவரின் உதவியாளர் அளித்த புகாரால்தான் நெருக்கடி ஏற்பட்டது. அதே பாணியில், உதவியாளர்களை வைத்தே வியூகத்தை வகுத்திருக்கிறது ஆளும்தரப்பு. இந்தத் திட்டத்துக்கு ஆபரேஷன் ஸ்பைடர் என்று பெயரிட்டிருக்கிறார்களாம். கொரோனா பேரிடர் சற்று ஓய்ந்த பிறகு, ஆக்‌ஷன் ஸ்டார்ட் ஆகலாம் என்கிறார்கள்.”
“சரிதான்… லஞ்ச ஒழிப்புத்துறையிலும் களையெடுப்பு தீவிரமாகியிருக்கிறதே?”
“ஆமாம். துறையின் இயக்குநர் கந்தசாமி களையெடுப்பில் பிஸியாக இருக்கிறாராம். நீண்டகாலம் இந்தத் துறையில் பணியிலிருந் தவர்கள், கடந்த ஆட்சியில் கொங்கு அமைச்சர் களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என்று பட்டியல் எடுத்து மாறுதல் போடுகிறாராம். இதுவரை சுமார் பத்து அதிகாரிகள் டிரான்ஸ்ஃபர் செய்யப்பட்டுள்ளார்கள். அ.தி.மு.க ஆட்சியாளர் களுடன் நெருக்கமாக இருந்த அதிகாரிகள் மிரண்டு கிடக்கிறார்கள்.”
“ம்ம்… துறைச் செயலாளர்கள் நியமனத்தில் அமைச்சர்கள் வருத்தத்தில் இருக்கிறார்களாம். என்னவென்று விசாரித்தீரா?”
“ஆமாம்… கோட்டையில் புலம்பல் சத்தம் தாங்கவில்லை. ‘கடந்த ஆட்சியில் நாம் யார் மீதெல்லாம் புகார் சொன்னோமோ, அவர்களையே நமக்கு அதிகாரிகளாக நியமித்துள்ளனர். தலைவர் கருணாநிதி காலத்தில், இந்த அதிகாரியை உனக்கு போடலாம்னு நினைக்கிறேன். சரியா வருமா? என்று கேட்பார். இப்போது அதிகாரிகளை நியமித்த பிறகுதான் நமக்கே விவரம் தெரிகிறது’ என்று புலம்பித் தீர்க்கிறார்கள் அமைச்சர்கள். தனது துறைக்கு நியமிக்கப்பட்ட செயலாளரை விரும்பாத மூத்த அமைச்சர் ஒருவர் தனக்கு நெருக்கமான எம்.எல்.ஏ-விடம், ‘கொரோனா முடியட்டும், மூன்று மாதத்தில் அந்தச் செயலாளரை ஓட வைக்கிறேன் பார்’ என்று சவால்விட்டிருக்கிறாராம்.”
“துரைமுருகனும் ஏதோ சவால் விட்டிருக் கிறாராமே!”

“உமக்கும் அந்தத் தகவல் வந்துவிட்டதா! அ.தி.மு.க-விலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் நிலோபர் கபில் தி.மு.க-வில் ஐக்கியமாவதற்கு முட்டுக்கட்டைப் போட்டிருக் கிறாராம் துரைமுருகன். முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணியைத் தன்னுடன் இணைத்து, ‘மாமன், மச்சானாகப் பழகுகிறார்கள்’ என்று நிலோபர் சீண்டியது துரைமுருகன் மனதைவிட்டு இன்னும் நீங்கவில்லை என்கிறார்கள். ‘நான் இருக்கும்போது அவர் எப்படிக் கட்சிக்குள் வர்றார்னு பார்க்குறேன்’ என்று சவால் விட்டிருக்கிறாராம் துரைமுருகன். இது ஒருபுறம் இருக்க, வக்பு வாரியத்தில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றிருப்பதாக நிலோபர் மீது புகார் எழுப்பியிருக்கிறார் வக்பு வாரிய முன்னாள் தலைவர் ஹைதர் அலி. நிலோபருக்கு போதாத காலம்தான்” என்ற கழுகாருக்கு சூடாக இஞ்சி டீயை அளித்தோம். டீயைப் பருகியபடி செய்திகளைத் தொடர்ந்தார் கழுகார்.
“நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு, தனது துறை விவகாரங்களில் அதிகம் மூக்கை நுழைப்பதில்லையாம். ‘சில மாதங்களில் உதயநிதி ஸ்டாலினுக்கு அந்தத் துறையை அளிக்கவிருப்பதாகப் பேச்சு அடிபடு கிறது. நேருவுக்கு பவர்ஃபுல்லான வேறு துறையை ஒதுக்குவார்கள் என்றும் கூறப்படுகிறது. அதனால், எதற்கு மெனக்கெட வேண்டும் என்று அவர் நினைக்கிறார் என்கிறார்கள் நேருவின் ஆதரவாளர்கள்.”
“ம்ம்… புதுச்சேரி செய்தி ஏதாவது இருக்கிறதா?”

“ஹாட் நியூஸ் ஒன்று சொல்கிறேன். புதுச்சேரியில் செயல்பட்டு வந்த இரண்டு தனியார் மதுபான தொழிற் சாலைகள், போலி ‘ஹாலோகிராம்’ ஸ்டிக்கர்களைப் பயன்படுத்தி சுமார் 1,000 கோடி ரூபாய்வரை வரி ஏய்ப்பு செய்தது கொரோனா முதல் அலையின்போது கண்டு பிடிக்கப்பட்டது. அந்த இரண்டு தொழிற்சாலைகளுக்கு சீல் வைக்க உத்தரவிட்ட அப்போதைய துணைநிலை ஆளுநர் கிரண் பேடி, வழக்கை சி.பி.ஐ விசாரணைக்கும் பரிந்துரைத்தார். அதில் ஒரு நிறுவனம் தங்கள் தொழிற்சாலை யைத் திறக்க அனுமதிக்கும்படி, துணைநிலை ஆளுநர் மாளிகை யைச் சேர்ந்த ஒரு நபரை அணுகிய தாம். இதையடுத்து, அந்தத் தொழிற்சாலையைத் திறக்க அனுமதி வழங்கப்பட்டுவிட்டதாம். ருசி பார்த்துவிட்ட அந்த நபர், மற்றொரு தொழிற்சாலைக்கும் தூதுவிட்டிருக்கிறார்” என்றபடி கிளம்ப ஆயத்தமான கழுகார்,
“சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி திரிபாதியின் பதவிக்காலம் ஜூன் 30-ம் தேதியுடன் முடிவடைகிறது. தமிழக அரசு தரப்பிலிருந்து 1987 முதல் 1990 வரையில் ஐ.பி.எஸ் பணியில் சேர்ந்தவர்களின் பட்டியலை மத்திய அரசின் உயர் மட்ட ஆலோசனைக் குழுவுக்கு அனுப்பவிருக்கிறார்கள். சீனியாரிட்டிபடி பார்த்தால், சைலேந்திரபாபுவுக்கு சான்ஸ் பிரகாசமாக இருக்கிறது. ஆனால், வேறொருவரைக் கொண்டு வர ஆட்சி மேலிடம் விரும்புகிறது. ஆளாளுக்கு லாபியில் இறங்குவதால், டி.ஜி.பி ரேஸ் சூடுபிடித்திருக்கிறது” என்றபடி ஜூட் விட்டார்.

%d bloggers like this: