ஓ.பி.எஸ் பங்கேற்காத கூட்டம்.. `குழப்பத்தை ஏற்படுத்த சசிகலா ஆடியோ!’ – எடப்பாடி பழனிசாமி சொல்வதென்ன?

`சசிக,லா அதிமுக தொண்டர்கள் உடன் பேசியதாக சொல்கிறீர்கள். ஆனால் அதற்கு என்ன ஆதாரம் இருக்கிறது. எந்த ஆதாரமும் இல்லை. நானும் அதிமுக-வில் தான் இருக்கிறேன். திட்டமிட்டு குழப்பத்தை ஏற்படுத்துவதற்காக இப்படியான ஆடியோக்கள் வெளியிடுகிறார்கள்’ – எடப்பாடி பழனிசாமி

தமிழக எதிர்க்கட்சித் தலைவராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டிருந்தாலும், எடப்பாடி பழனிசாமி, கட்சியின் ஒருங்கிணைப்பாளரான பன்னீர்செல்வம் இடையே பனிப்போர் நிலவி வந்ததாக தகவல்கள் வெளியாகி வந்தது. இந்த நிலையில் எதிர்க்கட்சித் தலைவரான எடப்பாடி பழனிசாமி இன்று சென்னை ராயப்பேட்டை அலுவலகத்தில், சென்னை மாவட்ட நிர்வாகிகளுடன் திடீர் ஆலோசனை நடத்தினார். எனினும் இந்த கூட்டத்தில் கட்சியின் ஒருங்கிணைப்பாளரான ஓ பன்னீர்செல்வம் கலந்துகொள்ளவில்லை. கட்சி நிர்வாகிகளின் கூட்டத்தில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் கலந்து கொள்ளாத நிலையில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற இன்றைய கூட்டம் அதிக கவனம் பெற்றதாக இருந்தது.

அதிமுக நிர்வாகிகள்

இதனிடையே கடந்த சில நாட்களாக சசிகலா, கட்சி நிர்வாகிகள் சிலர் உடன் தொலைபேசி மூலமாக பேசிவரும் ஆடியோக்கள் வைரல் ஆன நிலையில், எடப்பாடி பழனிசாமி மாவட்ட நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியானது. இந்த நிலையில் ஆலோசனை கூட்டம் முடிந்து, செய்தியாளர்களை சந்தித்தார் எடப்பாடி பழனிசாமி. அப்போது அவர், தமிழகத்தில் நிலவும் நீர் பற்றாக்குறை குறித்தும் நதிநீர் இணைப்பு தொடர்பாகவும் பேசினார். குறிப்பாக கோதாவரி – காவிரி இணைப்புக்கு தான் முயற்சித்து வருவதாகவும் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசுகையில், “தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகமாக இருக்கிறது. வைரஸ் பரவலை கட்டுப்படுத்த அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். நான் முதல்வராக இருந்த காலகட்டத்தில் பரிசோதனை நிலையங்கள் அமைக்கப்பட்டன. அனால் தற்போது தமிழகத்தில் இருக்கும் பரிசோதனை நிலையங்களின் எண்ணிக்கையோ பரிசோதனைகளின் எண்ணிக்கையோ போதாது. கடந்த ஆட்சியில் 24 மணி நேரமும் கொரோனா பரிசோதனை முடிவுகள் தெரிவிக்கப்பட்டு வந்தது. தற்போது பரிசோதனை முடிவுகள் வெளியிடுவதில் தாமதம் ஏற்படுகிறது. இதனால் நோய் பரவல் அதிகரிக்கிறது.

அதேபோன்று கடந்த ஆட்சியில் வீடுவீடாக சென்று பொதுமக்களை சந்தித்து, நோய் அறிகுறிகள் இருக்கிறதா என்பதை கண்டறியும் சோதனைகள் நடைபெற்றது. ஆனால் இந்த முறை பொதுமக்களை சந்தித்து நோய் அறிகுறிகள் இருப்பவர்களின் கணக்குகள் எடுக்கபடவில்லை என்ற தகவல்கள் வருகிறது. அதனால் நோயை கட்டுப்படுத்த இந்த அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். தடுப்பூசியை பொறுத்தவரை தமிழகத்திற்கு அதிக அளவில் வழங்க வேண்டும் என பிரதமர் மோடியை கேட்டுக் கொண்டிருக்கிறேன். ஏற்கனவே தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகமாக இருப்பதால் தமிழகத்திற்கு கூடுதல் தடுப்பூசிகளை ஒதுக்கீடு செய்ய வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கிறேன்” என்றார்.

சமீபத்தில், சசிகலா பேசியதாக வெளியான ஆடியோ குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். கேள்விக்கு பதிலளித்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, “முதலில், அந்த அம்மையார்(சசிகலா) அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக கட்சியில் இல்லை. இரண்டாவதாக, நடைபெற்று முடிந்த சட்டமன்ற பொதுத்தேர்தலுக்கு முன்பாக, அந்த அம்மையார் அவர்கள், அறிக்கை மூலமாக ஊடகத்திற்கு செய்தி கொடுத்துவிட்டார். `நான் அரசியலில் இருந்து விலகி விட்டேன்’ என்று. அனைத்து பத்திரிகைகளும் இந்த செய்தி வந்தன. அதனால் அதில் கருத்து சொல்வதற்கு எதுவும் இல்லை.

அவர் அமமுக தொண்டர்களுடன் உரையாடி வருகிறார். இதில் வேறொன்றுமில்லை. சசிகலா அதிமுக தொண்டர்கள் உடன் பேசியதாக சொல்கிறீர்கள். ஆனால் அதற்கு என்ன ஆதாரம் இருக்கிறது. எந்த ஆதாரமும் இல்லை. நானும் அதிமுக-வில் தான் இருக்கிறேன். திட்டமிட்டு குழப்பத்தை ஏற்படுத்துவதற்காக இப்படியான ஆடியோக்கள் வெளியிடுகிறார்கள். அவர்கள் தெளிவாக சொல்லி இருக்கிறார்கள், அவர்களாகவே நான் அரசியலில் இருந்து விலகுகிறேன் என்று.. இன்று அதிமுக பலம்வாய்ந்த எதிர்க்கட்சியாக இருந்து வருகிறது. இதில் சிலர் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சி செய்கின்றனர். அது ஒருபோதும் நடக்காது” என்றார்.

தொடர்ந்து இன்றைய கூட்டத்தில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் கலந்து கொள்ளாதது பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்,

அதற்கு, “அவர் இன்று புது வீடு கிரகப்பிரவேசம் காரணமாக கூட்டத்தில் கலந்து கொள்ள முடியவில்லை. இதில் வேறொன்றும் இல்லை. அனைத்து நிர்வாகிகள் கலந்து கொள்ளும் கூட்டம் இன்று நடைபெறவில்லை” என்றார்.

தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி, பன்னீர் செல்வம் என தனித்தனியே அறிக்கை விடுவது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர், அதற்கு பதிலளித்த அவர், “சில விவகாரங்களில் எதிர்க்கட்சித் தலைவராக நான் பதில் கூற வேண்டியிருக்கும். சில விவகாரங்களில் கட்சியின் ஒருங்கிணைப்பாளராக அவர் சில பதில்களை தெரிவிப்பார். இது அவ்வளவு தானே ஒழிய, எங்களுக்குள் எந்த கருத்து வேறுபாடும் இல்லை. அம்மாவின் ஆட்சி காலத்திலேயே அமைச்சர்கள், நிர்வாகிகள், அவர்கள் தொடர்புடைய விஷயங்களுக்கு அறிக்கையின் மூலம் பதிலளித்த சம்பவங்கள் உண்டு. அப்போதெல்லாம் கேள்வி எழவில்லை. இப்போது வேண்டுமென்றே இது போன்ற கேள்விகளை எழுப்புகிறார்கள்” என்றார்.

தொடர்ந்து செய்தியாளர்கள், மத்திய அரசை ஒன்றிய அரசு என்று தான் அழைக்க வேண்டும் என்று குரல் தற்போது ஒலிக்கிறது. இது குறித்து கருத்துகளை கேட்டார்கள். அப்போது பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, “பொது மக்களின் கருத்துக்கு முக்கியத்துவம் அளிப்போம். தற்போது பொதுமக்கள் மத்திய அரசு, மாநில அரசு என்று தான் அழைக்கிறார்கள். அதனால் மத்திய அரசு என்றே அறிவிக்கலாம்” என்றார்.

%d bloggers like this: