பூஞ்சை தொற்றை ஏற்படுத்தும் காரணிகள்!

மியுக்கர் மைகோசிஸ்’ என்பது பூஞ்சை காளான் வகை. பொதுவாக பூஞ்சை எல்லா இடத்திலும் இருக்கும். குறிப்பாக கெட்டுப் போன உணவுகளில் வளரும்; காற்றிலும் இருக்கும்.. அழுகிய உணவு பொருட்கள் மேல் வெள்ளையாக படியும்.
யாருக்கு வரும்?


எதிர்ப்பு சக்தி யாருக்கு குறைவாக இருக்கிறதோ, அவர்களுக்கு பூஞ்சை தொற்று பாதிக்கும். கேன்சர் நோயாளிகள், மாற்று உறுப்பு அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள், தொடர்ந்து ‘ஸ்டிராய்டு’ மருந்துகள் சாப்பிடுவதால் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும்.
சர்க்கரை நோயாளிகள்
இது புதிய வைரஸ் என்பதால் நம் எதிர்ப்பு சக்தி தன் சக்திக்கு மீறி அதை எதிர்த்து போராடுகிறது. உடம்பின் இந்த போராட்டத்தை குறைப்பதற்கு ஸ்டிராய்டு மருந்துகள் தருகிறோம்.
இந்த மருந்துகள் எதிர்ப்பு சக்தியை மேலும் குறைக்கும்; ரத்த சர்க்கரையின் அளவை அதிகப்படுத்தி விடும். சர்க்கரை கோளாறு, ஸ்டிராய்டு மருந்து இரண்டும் எதிரெதிர் துருவங்கள். வைரஸ் பாதித்தவரை காப்பாற்றிவிட வேண்டும் என்பது முதல் நோக்கமாக இருப்பதால், ரத்த சர்க்கரையின் அளவை பற்றி கொரோனா சிகிச்சையின் போது யாரும் கவலைப்படுவதில்லை
வைரஸ் பாதித்த, 12 – 14 நாட்களில் வைரசின் வீரியம் குறைந்து விடும். அதே நேரத்தில், ரத்த சர்க்கரையின் அளவு ஏகத்துக்கும் அதிகரித்து இருக்கும்.
அறிகுறிகள்
கறுப்பு பூஞ்சை தொற்று, மூக்கிலும் வரலாம்: நுரையீரலிலும் வரலாம். இரவு துாங்கும் போது, எதிர்பாராமல் ஒற்றை தலைவலி வரும். வலி மாத்திரை போட்டாலும் தலைவலி சரியாகாது. சிலருக்கு முகத்தில் ஒரு பக்கம் மரத்து போகும்; தொட்டால் உணர்வு குறைந்து இருக்கும்.
மூக்கடைப்பு, மூக்கில் இருந்து மஞ்சள், பச்சை, சிவப்பு அல்லது கறுப்பு நிறத்தில் சளி வரலாம். இது தான் ஆரம்ப அறிகுறிகள்.
இரண்டாவது நிலை
கண்களை சுற்றி வீக்கம் வரும். கண்கள் புடைத்து முன்னால் வரும். கண்களின் அசைவுகள் குறித்து, பார்வை இரண்டிரண்டாக தெரியும். கண்கள் வரை பாதித்தால், பார்வை இழப்பையும்; மூளைக்கு சென்றால், உயிரிழப்பையும் ஏற்படுத்தலாம்.
அறிகுறி லேசாக தெரிந்ததும் உடனே காது, மூக்கு, தொண்டை டாக்டரிடம் ஆலோசனை பெற வேண்டும். சில மணி நேரம் தாமதித்தால் கூட ஆபத்து தான். காரணம், இந்த பரவல், 48 மணி நேரத்திற்குள் நடக்கும் வாய்ப்புகளும் உள்ளது.
மிதமான அறிகுறிகள் தெரியும் போது, டாக்டரிடம் வந்துவிட்டால், அறுவை சிகிச்சை செய்து, முடிந்தவரை பூஞ்சையை அகற்றிய பின், 21 நாட்களுக்கு இதற்கென்று பிரத்யேகமாக உள்ள மருந்தை, தினமும் மூன்று வேளை ஊசி மூலம் செலுத்த வேண்டும்.
இந்த மருந்து வீரியம் மிக்கது; சிறுநீரகத்தை பாதிக்கலாம் என்பதால், அதன் செயல்பாட்டையும் உன்னிப்பாக கவனிக்க வேண்டும். கவனிக்காமல் விட்டால், உயிருக்கு ஆபத்து என்பது ஒருபுறம், மூக்கு, கண்கள், மூளை என்று உடல் முழுதும் பரவி, தோல் அழுக துவங்கும்.

%d bloggers like this: