முட்டிமோதும் முன்னாள் முதல்வர்கள்!

அ.தி.மு.க-வுக்குள் சத்தமில்லாமல் ஒரு நிலநடுக்கம் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் பதவியை எடப்பாடி பழனிசாமியிடம் பறிகொடுத்த ஓ.பன்னீர்செல்வம் ‘புரட்சிப் புயலாகிக் கிளம்புவார்’ என அவரின் ஆதரவாளர்கள் வழக்கம்போல பெரிதும் எதிர்பார்த்தார்கள். ஆனால், எந்த ரியாக்‌ஷனையும் காட்டாமல், மே 12-ம் தேதி எடப்பாடியின் பிறந்த நாளன்று அவரது இல்லத்துக்கே சென்று நேரில் வாழ்த்தினார் பன்னீர். இதை எதிர்பார்க்காத பன்னீரின் ஆதரவாளர்கள், ‘அவர் மொத்தமாகப் பதுங்கிவிட்டார்’ எனச் சோர்வடைந்து போனார்கள். ஆனால், மீண்டும் தான் பதுங்கியதே பாயத்தான் எனக் காட்ட ஆரம்பித்திருக்கிறார் பன்னீர்.


எடப்பாடிக்கும் அவருக்கும் இடையே அறிக்கைகள் வாயிலாக அரங்கேறிய யுத்தம், இப்போது சட்டமன்றத் துணைத் தலைவர், கொறடா நியமனம் வரை கச்சைக் கட்டுகிறது. வத்தலகுண்டு ரகசியச் சந்திப்பு, உட்கட்சி தேர்தல், சசிகலா ஆடியோ என அடுத்தடுத்து நகரும் காட்சிகளால் அ.தி.மு.க-வில் அனல் வீச ஆரம்பித்திருக்கிறது. பழனிசாமி – பன்னீர் என்கிற இரண்டு தரப்பின் பஞ்சாயத்துகள், கீழ்மட்டத்திலிருந்து மேல்மட்டம் வரை சூடாகி, இப்போது நேருக்கு நேராக முட்டிமோதுகிறார்கள் முன்னாள் முதல்வர்கள்!

“ஏன் வேண்டாத வேலை பார்க்குறாரு?”

அ.தி.மு.க-வின் முன்னாள் அமைச்சர்கள் சிலரிடம் பேசினோம். “அ.தி.மு.க தலைமையிலிருந்து வெளிவரும் அறிக்கைகள் அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவின் படங்களுடன், கட்சியின் பெயருடன்கூடிய லெட்டர் பேடில் வெளிவருவது தான் வழக்கம். இந்த நடைமுறையை உடைத்து, தனி லெட்டர் பேடில் மறைந்த தலைவர்கள் எவருடைய புகைப்படங்களும் இல்லாமல் அறிக்கை வெளியிட்டு யுத்தத்தை ஆரம்பித்து வைத்தது பன்னீர்செல்வம்தான். எதிர்க்கட்சித் தலைவராக எடப்பாடி தேர்வான மே 10-ம் தேதி, ‘கொரோனா தாக்குதலுக்குள்ளாகி உயிரிழந்த மருத்துவர், செவிலியர்களின் குடும்பத்துக்கு இரங்கல் தெரிவித்து’ பன்னீரிடமிருந்து தனி அறிக்கை வந்தது. அன்றைய தினம் தனக்கு வாழ்த்து கூற வந்த தென்மாவட்ட முன்னாள் அமைச்சர் ஒருவரிடம், ‘பன்னீர் ஏன் வேண்டாத வேலையெல்லாம் பார்க்குறாரு’ என்று ஆத்திரப் பட்டிருக்கிறார் எடப்பாடி. ஆனால், தனது வருத்தத்தை பன்னீரிடம் நேரடியாக அவர் பகிர்ந்துகொள்ள வில்லை. தனது தருணத்துக்காகக் காத்திருந்தார்.
மே 15-ம் தேதி, எதிர்க்கட்சித் தலைவருக்கான தனி அரசாங்க லெட்டர் பேடு தலைமைச் செயலகத்திலிருந்து எடப்பாடிக்கு வழங்கப்பட்டது. தமிழக அரசின் லட்சிணை பொறிக்கப்பட்ட அந்த லெட்டர் பேடு கையில் கிடைத்தவுடன், முதல் வேலையாகத் தமிழகத்துக்குக் கூடுதல் ஆக்ஸிஜன், மருந்துகள் கேட்டு பிரதமருக்குக் கடிதம் எழுதினார் எடப்பாடி. மே 20-ம் தேதி, அரபிக் கடலில் காணாமல்போன தமிழக மீனவர்களை மீட்கக் கோரி இரண்டாவது கடிதம் எழுதினார். அரசாங்க லெட்டர் பேடில் எழுதப்பட்ட அவரது முதல் கடிதத்தில், வெறும் எதிர்க்கட்சித் தலைவர் என்று மட்டும்தான் இருந்தது. பிரதமருக்கு எழுதிய இரண்டாவது கடிதத்தில், முன்னாள் முதலமைச்சர் என்கிற வாசகம் எடப்பாடியால் கூடுதலாகச் சேர்க்கப் பட்டிருந்தது. பன்னீர் சும்மா இருப்பாரா… அன்றைய தினமே, ‘கறுப்பு பூஞ்சை நோய்க்குரிய மருந்துகள் உடனடியாகக் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என முதல்வர் ஸ்டாலினை வலியுறுத்தி அறிக்கை வெளியிட்டார் பன்னீர். அந்த அறிக்கையில், ‘தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர்’ என்கிற வாசகம் பன்னீரின் பெயருக்குக் கீழே அச்சிடப்பட்டிருந்தது. அவ்வளவுதான்… முன்னாள் முதல்வர்களுக்கு இடையே முட்டலும் மோதலும் விஸ்வரூப மெடுத்தது.
இந்த விவகாரம் சூடான நேரத்தில், துணை ஒருங்கிணைப்பாளர் ஒருவரிடம் தென்மாவட்ட அமைப்புச் செயலாளர் ஒருவர் பேசியிருக்கிறார். அப்போது, அந்த அமைப்புச் செயலாளரிடம், “ஏன் பன்னீருக்கு இவ்வளவு ஈகோ?” என்று கேட்டிருக்கிறார் அந்தத் துணை ஒருங்கிணைப்பாளர். அதற்கு “அம்மா காலத்திலேயே முதலமைச்சர் ஆனவர்ங்க பன்னீர்செல்வம். மூன்று முறை முதல்வரா இருந்தவர். ஒருமுறை இருந்த எடப்பாடிக்கே இவ்வளவு ஈகோ இருக்குனா, பன்னீருக்கு இருக்காதா?” எனச் சடாரென அமைப்புச் செயலாளர் பதிலளிக்கவும், மறுமுனையில் துணை ஒருங்கிணைப்பாளரிடம் சத்தமே இல்லையாம்.
கட்சியின் ஒருங்கிணைப் பாளராக, மக்களின் பிரச்னை களைப் பற்றிப் பேசுவது நான்தான் என நிறுவிட முயல்கிறார் பன்னீர். எதிர்க் கட்சித் தலைவராக, தன் இருப்பைப் பலப்படுத்திக் கொள்ளப் பார்க்கிறார் எடப்பாடி. மே 21-ம் தேதி, பன்னீரின் தம்பி பாலமுருகனின் மறைவுக்குத் துக்கம் விசாரிக்கச் சென்ற முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி, ஆர்.பி.உதயகுமார், எம்.ஆர்.விஜயபாஸ்கர், கே.பி.அன்பழகன் ஆகியோர் இந்த விஷயம் குறித்துப் பேசி, பன்னீரிடம் சமாதானம் பேசினர். அதன் பிறகுதான், பன்னீரின் அறிக்கைகள் மீண்டும் அ.தி.மு.க-வின் லெட்டர் பேடிலேயே வெளிவர ஆரம்பித்தன. ‘சமூக வலைதளம் வாயிலாகக் கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்’ என மே 23-ம் தேதி இரு தலைவர்களும் கூட்டாக அறிக்கை வெளியிட்டனர். ஆனாலும், இருவர் பெயருக்குக் கீழும் இருந்த ‘முன்னாள் முதலமைச்சர்’ என்கிற வாசகத்தால், இருவருக்குள்ளும் சச்சரவு ஓயவில்லை என்பது புரிந்தது” என்றனர்.
வத்தலக்குண்டு ரகசிய சந்திப்பு… ஆழம் பார்த்த மணிகள்

பன்னீரிடம் துக்கம் விசாரிக்கச் சென்ற வேலுமணியும் தங்கமணியும், பன்னீரைத் தனியாகச் சந்தித்துப் பேசியதாகக் கூறப்படுகிறது. அப்போது, சசிகலா விவகரத்தில் பன்னீரின் நிலைப்பாட்டை அறிய அவர்கள் ஆழம்பார்த்ததாகவும், பன்னீர் உஷாராகக் கழன்றுகொண்டதாகவும் கூறுகிறார்கள்.பன்னீருக்கு நெருக்கமான வடமாவட்ட சீனியர் நிர்வாகி ஒருவர் நம்மிடம் பேசினார், “பன்னீரைச் சந்தித்த வேலுமணியும் தங்கமணியும் பா.ஜ.க தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தங்களிடம் சொன்னதாகச் சில தகவல்களை பன்னீரிடம் கூறியுள்ளனர். ‘வரும் வழியில் வத்தலக்குண்டு அருகே சுப்பிரமணியன் சுவாமிக்கு நெருக்கமான வர்களைச் சந்தித்தோம். சசிகலாவை மீண்டும் கட்சிக்குள் இணைத்துக்கொண்டு செயல்பட்டால் நல்லதுதானே என்று அவர் தரப்பில் கூறினார்கள். கட்சித் தலைமையிடம் பேசிவிட்டுச் சொல்கிறோம் என்று சொல்லிவிட்டு வந்தோம். நீங்க என்ன நினைக்கிறீங்க அண்ணே…’ என்று அவர்கள் கூற, பன்னீர் உடனே உஷாராகி, ‘எடப்பாடியிடம் பேசிட்டு வாங்க, அவர் என்ன சொல்றார்னு பார்ப்போம்’ என்று நைஸாக வழியனுப்பியிருக்கிறார். சசிகலா குறித்துப் பேசி, தன்னை எடப்பாடி தரப்பு ஆழம் பார்ப்பதாக பன்னீர் கருதுகிறார்.
எதிர்க்கட்சித் துணைத் தலைவர், அ.தி.மு.க கொறடா நியமனம் இன்னும் செய்யப்படவில்லை. மே 10-ம் தேதியே, ‘இந்த நியமனங்களையும் எடப்பாடியே செய்யட்டும்’ என்று கோபத்துடன் சொல்லிவிட்டார் பன்னீர். இது எடப்பாடிக்கு பன்னீர் வைத்த செக்!
எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்குப் பட்டியலினத்தைச் சேர்ந்த தனபாலை முன்னிறுத்தினார் பன்னீர். ஆனால், அந்தப் பதவியைத் தான் எடுத்துக்கொண்டதால், பட்டியலினத்தைச் சேர்ந்த ஒருவருக்குப் பதவி அளித்தாக வேண்டிய நெருக்கடிக்கு உள்ளாகி யிருக்கிறார் எடப்பாடி. முக்குலத்தோர் சமூகத்தைச் சேர்ந்த வைத்திலிங்கமும் வன்னியர் சமூகத்தைச் கே.பி.முனுசாமி மற்றும் கே.பி.அன்பழகனும் பதவி எதிர்பார்க்கின்றனர். இதுபோக, வேலுமணி, தங்கமணிக்குப் பதவி கொடுக்க வேண்டுமென்ற கோரிக்கையும் கட்சிக்குள் வலுத்திருக்கிறது. இரண்டு பதவிக்கு 14 பேர் சண்டையிடுகிறார்கள். இவர்களில் யாருக்குப் பதவி கொடுக்கவில்லை என்றாலும், அவர்கள் சார்ந்த சமூகத்தின் கட்சி நிர்வாகிகள் எடப்பாடியுடன் கோபித்துக்கொண்டு பன்னீர் பக்கம் சாய்வார்கள். இதைத்தான் எதிர்பார்க் கிறார் பன்னீர்” என்றார்.

சூட்டைக் கிளப்பிய சசிகலா ஆடியோ… பின்னணியில் பன்னீர்?

இந்தக் களேபரங்களுக்கு மத்தியில் சசிகலாவின் இரண்டு தொலைபேசி உரையாடல் ஆடியோக்கள் வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தின. இதில் ஒரு தொலைபேசி உரையாடல், சமீபத்தில் சசிகலா பேசியபோது பதிவுசெய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. கட்சித் தொண்டர் ஒருவரிடம், “ரொம்ப கஷ்டப்பட்டு வளர்த்த கட்சி வீணாவதை என்னால் பார்த்துக்கொண்டிருக்க முடியாது. அவர்கள் சண்டை போடுவது மனதுக்குக் கஷ்டமாக இருக்கிறது. விரைவில் வந்துவிடுவேன். எல்லாவற்றையும் சரிசெய்துவிடலாம்” என்கிறார் சசிகலா. ‘அரசியலிலிருந்து ஒதுங்குகிறேன்’ என்று மார்ச் 3-ம் தேதி அறிவிப்பு வெளியிட்ட சசிகலா, இப்போது, ‘விரைவில் வந்துவிடுவேன்’ என்று கூறுவது என்ன அரசியல் கணக்கு என்பதுதான், அ.தி.மு.க-வில் அனலைக் கிளப்பியிருக்கிறது. மே 31-ம் தேதி செய்தியாளர்களைச் சந்தித்த அ.தி.மு.க துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, “சசிகலாவின் பேச்சுக்கு ஒரு அ.தி.மு.க தொண்டர் கூட செவிசாய்க்க மாட்டார், தொண்டர்களைக் குழப்ப சசிகலா முயற்சி செய்கிறார். அவரது எண்ணம் ஈடேறாது. எந்தத் தொண்டரும் சசிகலாவிடம் பேசவில்லை. மாறாக சசிகலாதான் அவர்களிடம் பேசி வருகிறார்” என்றார். முனுசாமி இப்படி சொன்னதில் ஆயிரம் அர்த்தங்கள் புதைந் திருப்பதாகச் சொல்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.
கொங்கு மண்டல அ.தி.மு.க எம்.எல்.ஏ-க் கள் இருவர் நம்மிடம் பேசுகையில், “சசிகலா தரப்புடன் பன்னீர் தொடர்பிலிருப்பது எல்லோ ருக்கும் தெரிந்த ரகசியமாகிவிட்டது. இதனால், ‘என்னை மட்டுமே நம்பியிருக்காமல், நீங்களே கட்சி நிர்வாகிகளிடம் பேசி வழிக்குக் கொண்டு வாருங்கள். நான் உங்களுடன் வருகிறேன்’ என சசி தரப்பிடம் பன்னீர் கூறிவிட்டார். இதைத் தொடர்ந்துதான், கட்சி நிர்வாகிகளுக்கு போன் போட்டு சசி பேசுவதும், அந்த உரையாடல் ஆடியோக்களாக வலம் வருவதும் ஆரம்பித் திருக்கிறது. தாமதமாகப் பதவியேற்ற அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் மூன்று பேர் சசியிடம் போனிலேயே வாழ்த்து வாங்கியிருக்கிறார்கள்.
உட்கட்சித் தேர்தல்… பன்னீருக்கு எடப்பாடி செக்!

விரைவில் உட்கட்சித் தேர்தலை நடத்திட ஆயத்தமாகிறார் எடப்பாடி. கிளை, ஒன்றிய, நகர, பகுதி, வட்ட, மாவட்டச் செயலாளர்கள் பதவிக்குத் தேர்தல் நடத்தப்படுவதோடு, ஒருங்கிணைப்பாளர் பதவிக்கும் சேர்த்தே தேர்தலை நடத்தி பன்னீருக்கு செக் வைக்கத் தீவிரமாகிறார் அவர். இந்தாண்டு நடைபெற விருக்கும் பொதுக்குழுவில், இதற்கான அறிவிப்பை செய்துவிட வேண்டும் என்றும் விரும்புகிறார். ஒருவேளை பன்னீர் இதற்குச் சம்மதிக்கவில்லை என்றால், பொதுக்குழு உறுப்பினர்கள் அத்தனை பேரின் கையெழுத் தையும் பெற்று பன்னீருக்கு நெருக்கடி கொடுக்கலாம் என்கிற எண்ணமும் எடப்பாடிக்கு இருக்கிறது. கட்சிக்குள் ஒற்றைத் தலைமையாகும் முடிவோடு பயணிக்கிறார் எடப்பாடி. இது தெரிந்ததால்தான், சசிகலா மூலமாகக் கட்சிக்குள் தன் இருப்பை வலுப்படுத்திக்கொள்ளப் பார்க் கிறார் பன்னீர். கட்சி நிர்வாகிகளிடம் சசிகலாவை நேரடியாகப் பேசவிட்டால், கட்சிக்குள் குழப்பம் ஏற்படும், அதில் மீன் பிடிக்கலாம் என்பது பன்னீரின் திட்டம்” என்றனர்.
அ.தி.மு.க-வில் நடக்கும் இந்தக் களேபரங்கள் குறித்து அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமியிடம் பேசினோம். “அ.தி.மு.க-வில் நடக்கும் இந்தக் களேபரங்கள், 2024 நாடாளு மன்றத் தேர்தல் வரை தொடரும். அந்தச் சமயத்தில் பா.ஜ.க தலையிட்டு ஏதாவது பேசினால் ஒழிய, இந்தக் களேபரங்கள் முடிய வாய்ப்பில்லை. கட்சியைவிட்டு பன்னீர் வெளியேறினால், இரட்டை இலை சின்னம் முடக்கப்பட வாய்ப்பிருக்கிறது. அதைக் கட்சிக்குள் யாரும் விரும்பவில்லை. 2026 சட்டமன்றத் தேர்தலில், மீண்டும் முதல்வர் வேட்பாளராகுவதுதான் எடப்பாடியின் மாஸ்டர் பிளான். அதே திட்டத்தோடுதான் பன்னீரும் பயணிக்கிறார். இந்தக் களேபரத்தில், சசிகலாவை மீண்டும் கட்சிக்குள் இணைத்துக் கொள்ள வாய்ப்பே இல்லை. அதை எடப்பாடி தரப்பு ஒருபோதும் அனுமதிக்காது” என்றார்.
அ.தி.மு.க-வில் ‘ஒற்றைத் தலைமையாவது யார்?’ என்கிற பஞ்சாயத்து, அறிக்கைப் போர் மூலமாக ஆரம்பித்து இன்று கிளைபரப்பி விஸ்வரூபம் எடுத்திருக்கிறது. இம்முறையும் விட்டுக்கொடுத்தால் முதலுக்கே மோசமாகிவிடும் என்பதால், ரொம்பவே உஷாராகியிருக்கிறார் பன்னீர். சூடுபிடித்திருக்கும் இந்த ஆட்டத்தில் வெல்லப்போவது யார் என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

****

ஈகோவைக் கிளறும் ஸ்டாலின்!

அ.தி.மு.க-வில் எழுந்திருக்கும் இந்த அறிக்கை யுத்தத்தைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ளப் பார்க்கிறாராம் முதல்வர் ஸ்டாலின். சமீபத்தில், சென்னை மாநகராட்சியிலுள்ள களப்பணியாளர்களை நீக்கச் சொல்லி தி.மு.க-வினர் மிரட்டுவதாக பன்னீரிடமிருந்து அறிக்கை வந்தது. உடனே, அப்படி யாரையும் நீக்கப்போவதில்லை என்று சென்னை மாநகராட்சியின் ஆணையர் மூலமாக பன்னீருக்கு தெரியப்படுத்தினார் ஸ்டாலின். கொரோனா தொற்றால் பெற்றோர்களை இழந்த குழந்தைகளைப் பாதுகாக்கச் சொல்லி கோரிக்கை வைத்தார் பன்னீர். அதற்கான நடவடிக்கையும் எடுத்தார் ஸ்டாலின். தனது அறிக்கைகளுக்கு உடனுக்குடன் ஸ்டாலினிடமிருந்து கிடைக்கும் ரெஸ்பான்ஸுக்கு பன்னீரும் உடனுக்குடன் நன்றி சொல்ல, கடுப்பானார் எடப்பாடி. பன்னீரின் அறிக்கைகளுக்கு ஸ்டாலின் உடனடியாக நடவடிக்கை எடுப்பது, பதில் தருவது உள்ளிட்ட நடவடிக்கைகள், எடப்பாடியின் ஈகோவைக் கிளறிவிடுவதற்காகத்தான் என்கிறார்கள்.

%d bloggers like this: