ஜம்பம் காட்ட வேண்டாம்! – கடுகடுத்த ஸ்டாலின்… கப்சிப் நிதியமைச்சர்

மறைந்த தி.மு.க தலைவர் கருணாநிதியின் 97-வது பிறந்தநாளையொட்டி, ஜூன் 3-ம் தேதி தமிழ்நாடு அரசு வழங்கியிருக்கும் கொரோனா நிவாரணப் பொருள்கள் பையில் எந்தத் தலைவரின் படமும் இடம்பெறாதது வரவேற்பைப் பெற்றிருக்கிறதே?’’ -கழுகார் என்ட்ரி கொடுக்கும்போதே, அவரைச் செய்திக்குள் இழுத்தோம். ஆமோதித்தபடி தான் கொண்டுவந்திருந்த சமோசாக்களை நமக்கும் பகிர்ந்தளித்தவர், ‘‘அ.தி.மு.க ஆட்சியை ஸ்டிக்கர் ஆட்சி என்று நாம் விமர்சித்தோம். அந்த விமர்சனம் நம்மீதும் வந்துவிடக் கூடாது என்று முதல்வர் ஸ்டாலின் கட்டளையிட்டதால், அரசு நிர்வாகம் உஷாராக இருந்திருக்கிறது’’ என்று சமோசாவைக் கொறித்தபடி செய்திகளுக்குள் நுழைந்தார் கழுகார்

‘‘நிவாரணப் பொருள்கள் வழங்குவதில் எந்த முறைகேடும் நடந்துவிடக் கூடாது என்பதில் தலைமைச் செயலாளர் இறையன்பு கவனமாக இருக்கிறாராம். 2018-ல் கஜா புயல் நிவாரணப் பொருள்கள் வழங்கியபோது, தஞ்சாவூரிலுள்ள குடோனில் வைத்துதான் பேக்கிங் செய்தார்கள். மக்கள் வீட்டுக்குச் சென்று பேக்கிங்கைத் திறந்தபோதுதான், பல பொருள்கள் விடுபட்டது தெரியவந்தது. அந்தச் சமயத்தில் இந்த விவகாரம் சர்ச்சையானது. அதுபோல இம்முறை ஏதும் நடந்துவிடக் கூடாது என்பதற்காக, 14 வகையான பொருள்களையும் மக்களுக்குக் காண்பித்துவிட்டு துணிப்பையில் போட்டு அளிக்கும்படி இறையன்பு உத்தரவிட்டிருக்கிறாராம்.’’

‘‘பாராட்டப்பட வேண்டிய விஷயம்தான்!’’

‘‘சென்னை கிங் இன்ஸ்டிட்யூட் வளாகத்தில் புதிய மருத்துவமனை, கருணாநிதி பெயரில் நூலகம், இலக்கிய மாமணி விருதுகள், எழுத்தாளர்களுக்குக் கனவு இல்லம், திருவாரூர் மாவட்டத்தில் நெல் கொள்முதல் முனையம் மற்றும் திருநங்கை, மாற்றுத் திறனாளிகளுக்கு இலவசப் பேருந்துப் பயணம் என ஜூன் 3-ம் தேதி ஆறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார் முதல்வர் ஸ்டாலின். இதில், மருத்துவமனை அமைக்கப்படுவது என்பது மத்திய அரசுக்கான செக்காம். மதுரையில் எய்ம்ஸ் கிளை அமைக்கப்படும் என அடிக்கல் நாட்டியதோடு சரி, அதற்கான வேலைகளை மத்திய அரசு தொடங்கவில்லை. அதைக் குத்திக்காட்டுவதுபோல, தான் அறிவித்த மருத்துவமனையைக் கட்டி விரைவில் திறந்துகாட்ட வேண்டும் என ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளாராம். கருணாநிதி நினைவிடம் கட்டுவது தொடர்பான அறிவிப்பு, ஆளுநர் உரையில் இடம்பெறும் என்கிறார்கள். எளிமையானவர், திறமையானவர் என ஸ்டாலினின் இமேஜை உயர்த்தும் அளவுக்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்ப ட்டாலும், சில பிரச்னைகளும் இருக்கின்றன.’’

‘‘என்னது அது?’’

‘‘ஊரடங்கால் ஊரே முடங்கிப்போயிருக்கிறது. ஆனால், முதலமைச்சர் ஸ்டாலினின் கார் கான்வாய் செல்வதற்காக, இப்போதும்கூட சென்னையில் பத்து நிமிடத்துக்குக் குறையாமல் போக்குவரத்தை நிறுத்துகிறார்கள். பத்தடிக்கு ஒரு போலீஸ், வெடிகுண்டு சோதனை என எடப்பாடி பழனிசாமி என்ன பந்தா காட்டினாரோ, அதையேதான் ஸ்டாலினும் செய்கிறார். எளிமையை விரும்புகிறவர், இதிலும் பந்தா இல்லாமல் செயல்படலாம் என்பதே பலரது கருத்து.’’

‘‘ஆள்பவர் கவனத்தில் எடுத்துக்கொண்டால் சரி…’’

‘‘சென்னை மாநகராட்சியில் பணிபுரியும் ‘நந்தவன’ அதிகாரியும், ‘தமிழ்க்கடவுள்’ அதிகாரியும் முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு நகமும் சதையும் போன்று இருந்தவர்கள். ஆட்சி மாறிய பின்னரும் அவர்கள் அதே அதிகார பலத்துடன் பவனி வருவது தி.மு.க ஆதரவு அதிகாரிகளிடத்தில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த விஷயங்களை யெல்லாம் தாமதமாகத் தெரிந்துகொண்ட மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் பேடி, அந்த இருவர் சம்பந்தப்பட்ட புகார்கள்மீது தீவிர விசாரணைக்கு உத்தரவிட்டிருக்கிறாராம்.’’

‘‘அ.தி.மு.க-வின் அதிகாரபூர்வ நாளிதழ், தொலைக்காட்சிக்குச் சிக்கல் ஏற்பட்டுள்ளதாமே?’’

‘‘ஆமாம். அ.தி.மு.க ஆட்சியில் இருந்தவரை அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள், நிர்வாகிகள் கொடுக்கும் விளம்பரங்களை வைத்து ‘நமது அம்மா’ நாளிதழ் செயல்பட்டு வந்தது. எஸ்.பி.வேலுமணியும் அவரின் நண்பர் சந்திரசேகரும்தான் நாளிதழை நடத்திவந்தார்கள். தற்போது ஆட்சியில் இல்லாததால், பத்திரிகை நடத்துவதற்கு வேலுமணி நிதியை இறக்க மறுக்கிறாராம். பிரின்டிங்கை இன்னும் நிறுத்தவில்லை, ஆனாலும் சிக்கல் நீடிக்கவே செய்கிறது. அதேபோல, கட்சியின் அதிகாரபூர்வ தொலைக்காட்சியான ‘நியூஸ் ஜெ’-வும் கடும் நிதிநெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தின் மூத்த சகோதரர் ராதாகிருஷ்ணன், தங்கமணியின் மருமகன் தினேஷ் ஆகியோர் நிர்வாகத்தைக் கவனித்துவந்தனர். தேர்தலில் சண்முகம் தோல்வியடைந்ததால், அவரும் கரன்சி இறக்குவதை நிறுத்திவிட்டாராம். ஆட்சி கைமாறிய ஒரே மாதத்தில், இப்படிக் காட்சிகளும் மாற ஆரம்பித்திருக்கின்றன.’’

‘‘எடப்பாடி பழனிசாமியிடம் சி.வி.சண்முகம் வருத்தப்பட்டதாகச் சொல்கிறார்களே?’’

‘‘ம்ம்… பா.ம.க-வின் வாக்குவங்கி, விழுப்புரம் தொகுதியில் தனக்கு ஆதரவாக மடை மாறவில்லை என வருத்தப்பட்டிருக்கிறார். ‘விழுப்புரத்தில் மீண்டும் நான் ஒரு சக்தியாக உருவாகிவிடக் கூடாது என்பதற்காக எனக்கு ஆதரவாக பா.ம.க-வினரை வேலை செய்யவிடாமல் ராமதாஸ் தடுத்துவிட்டார். அவரால்தான் பா.ம.க வாக்குகள் விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட சில இடங்களில் அ.தி.மு.க-வுக்கு விழவில்லை’ எனப் புலம்பித் தீர்த்துவிட்டாராம். எடப்பாடியும் சமாதானம் செய்து அனுப்பிவைத்திருக்கிறார்” என்ற கழுகாருக்குச் சூடாக ஃபில்டர் காபியை நீட்டினோம். காபியைப் பருகியபடி செய்தியைத் தொடர்ந்தார்.

‘‘அரசு வழக்கறிஞர்கள் நியமனத்தில், தி.மு.க வழக்கறிஞர் அணியைச் சேர்ந்தவர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளார்களாம். சமீபத்தில் வெளியான சென்னை உயர் நீதிமன்றத்துக்கான அரசு வழக்கறிஞர்கள் நியமனப் பட்டியலில், தி.மு.க-வைச் சேர்ந்தவர்கள் நால்வர்தான் இருந்திருக்கிறார்கள். முன்னாள் நீதிபதிகளின் வாரிசுகள், கட்சிக்குத் தொடர்பே இல்லாதவர்களின் பெயர்களெல்லாம் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. இதேபோல மாவட்ட நீதிமன்றங்களில் நியமிக்கப்படும் அரசு வழக்கறிஞர்கள் பட்டியலிலும் மாவட்டச் செயலாளர்கள், தங்களுக்கு வேண்டப்பட்டவர்களையும், வைட்டமின் ‘ப’வை இறக்குபவர்களையும் பரிந்துரை செய்கிறார்களாம். இதில், தி.மு.க வழக்கறிஞர்கள் எல்லோரும் கடும் அதிருப்தியில் உள்ளனர்.’’

“நிதியமைச்சரிடம் முதல்வர் கடுகடுத்தாராமே…”

“ஆமாம்… பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் மீது ஏககடுப்பிலிருக்கிறார் ஸ்டாலின். அமைச்சரின் ‘லூஸ் டாக்’ பேட்டிகளால், கட்சியின் பெயர் டேமேஜ் ஆவதாகக் கட்சியின் மூத்த தலைவர்கள் சிலரே ஸ்டாலினிடம் வருத்தப்பட்டிருக்கிறார்கள். இதைத் தொடர்ந்து, பழனிவேல் தியாகராஜனை அழைத்துக் கண்டித்த ஸ்டாலின், ‘பட்ஜெட் கூட்டத்தொடரில் உங்கள் திறமையைக் காண்பியுங்கள். ட்விட்டரிலும், மீடியாக்கள் முன்பாகவும் ஜம்பம் காட்ட வேண்டாம்’ என்று கண்டிப்புடன் கூறியிருக்கிறார்” என்றபடி கிளம்பத் தயாரான கழுகார்,

‘‘மே மாதம் 31-ம் தேதி, டி.ஜி.பி தமிழ்ச்செல்வன், ஐ.ஜி மஞ்சுநாதா, முன்னாள் முதல்வர் எடப்பாடியின் செக்யூரிட்டி எஸ்.பி ராஜா ஆகியோர் ஓய்வுபெற்றிருக்கிறார்கள். ஏப்ரல் 2020-லேயே ஓய்வுபெற்றுவிட்ட ராஜாவுக்குப் பணி நீட்டிப்பு அளித்து அருகிலேயே வைத்திருந்தார் எடப்பாடி. சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க ஜெயித்ததும், பதவி நீட்டிப்பில் இருந்த 10 உயர் அதிகாரிகள் தாங்களாகவே பதவியை ராஜினாமா செய்துவிட்டனர். ஆனால், ராஜா மட்டும் பல்வேறு சேனல்கள் மூலமாக, பதவி நீட்டிப்பு பெற சித்தரஞ்சன் சாலையைத் தொடர்புகொள்ள முயன்றாராம். அது முடியாததால் மே 31-ம் தேதியோடு மூட்டையைக் கட்டியிருக்கிறார் ராஜா’’ என்றபடி சிறகுகளை விரித்தார் கழுகார்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: