முதல்ல சின்ன கட்சி.. பிரபலமான பிறகு.. பெரிய கட்சிகளுக்கு ஜம்ப்.. டிரெண்டாகும் “நூதன கட்சி தாவல்”

தமிழகத்தில் சட்டசபை தேர்தலை, தலைமை தேர்தல் கமிஷன் அறிவித்தது முதலே பரபரப்பிற்கு பஞ்சமில்லாமல் போனது. அதிலும் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு சீட் வாங்குவதற்காக அனைத்து கட்சிகளிலும் பாரபட்சமின்றி நடந்த அக்கப்போர்களுக்கு அளவே இல்லை. சீட் கொடுக்காததால் கட்சிக்கு எதிராக

கோஷமிட்டவர்கள் ஒரு பக்கம் என்றால், கட்சியை விட்டே விலகி சுயேட்சையாக நின்று பலத்தை காட்டியவர்கள் ஒரு பக்கம்.

இன்னும் சில பேர் கோபத்தில் வேறு கட்சிக்கு போல் இணைந்தனர்.

அந்த கட்சிகளும் மற்ற கட்சியின் முக்கிய புள்ளிகளை தங்கள் பக்கம் இழுப்பதற்காக, அரசியலில் பழம் தின்னு கொட்டை போட்டவர்கள் சீட்டுக்காக மல்லுக்கட்டிக் கொண்டு இருக்கையில் புதிதாக கட்சியில் இணைந்தவர்களுக்கு சீட் கொடுத்து அரவணைத்தனர். சிலர் வாரிசுகளை உள்ளே நுழைக்க தீவிரம் காட்டினர்.

அரசியலில் புதிய டிரெண்ட்

கட்சி தாவல், அதிலும் தேர்தல் சமயத்தில் கட்சி தாவல் என்பது அரசியலில் ஒன்றும் புதிதல்ல. முக்கிய பிரமுகர்கள் முதல், அடிமட்ட தொண்டர்கள் வரை இதற்கு விதிவிலக்கும் இல்லை. அரசியலில் காலம் காலமாக இது நடப்பது என்றாலும் சமீப காலமாக கட்சி விட்டு, கட்சி தாவி குறுகிய காலத்தில் பிரபலமாவது அதிகரித்து வருவது புதிய டிரெண்டாகவே மாறி வருகிறது.

குறுகிய காலத்தில் பிரபலம்

மிக குறுகிய காலத்திலேயே மீடியாக்கள் அனைத்தும் நம்மையே சுற்றி வர பலர், சின்ன மீனை போட்டு பெரிய மீனை இழுக்கும் டெக்னிக்கை கையில் எடுத்து, சாதித்தும் வருகின்றனர். வளர்ந்து வரும் கட்சி ஏதாவது ஒன்றில் சேர்ந்து முக்கிய பொறுப்பை கேட்டு வாங்கிக் கொள்கிறார்கள். சில மாதங்களுக்கு பிறகு, கட்சி தலைமைக்கு எதிராக போர்க்கொடி உயர்த்துகிறார்கள். பரபரப்பான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து மீடியாக்களில் வரிசையாக பேட்டி கொடுத்து பிரபலமாகின்றனர்.

புதியவர்களுக்கு முக்கிய பதவி

இப்படி பரபரப்பை கிளப்பி, பிரபலமாக பேசப்படுவதால் மற்ற கட்சிகளின் கவனத்தையும் தங்கள் பக்கம் ஈர்க்கின்றனர். பிறகு தாங்கள் இழுக்கும் கட்சியில் இருந்து விலகுவதாக ஒரு பேட்டி அல்லது அறிக்கை விடுகின்றனர். அதைத் தொடர்ந்து பெரிய கட்சி ஒன்றில் போய் இணைவதாக அறிவிப்பு வெளியிட்டு, ஆதரவாளர்களுடன் சென்று பெரிய கட்சியில் இணைந்து விடுகின்றனர். அந்த பெரிய கட்சியை சேர்ந்தவர்களும் புதிதாக வந்தவருக்கு கிடைத்திருக்கும் விளம்பரத்தை கணக்கு போட்டு, ஏதாவது ஒரு முக்கிய பதவியை கொடுத்து விடுகின்றனர்.

எந்த கட்சியும் விதிவிலக்கல்ல
தேர்தலுக்கு பிறகு நாம் தமிழர், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், மக்கள் நீதி மய்யம், அதிமுக, காங்கிரஸ், பாஜக என அனைத்து கட்சிகளிலும் உள்ளனர். இப்படி வளரும் கட்சியில் இருந்து வளர்ந்த கட்சிக்கு தாவி, குறுகிய காலத்தில் பிரபலம் ஆவது சமீப நாட்களில் அதிகரித்து, புதிய அரசியல் டிரெண்டாகவே மாறி வருகிறது. நேரடியாக பெரிய கட்சியில் இணைந்தால் தங்களுக்கு மவுசு இல்லாமல் போய் விடும் என கருதி, இந்த புதிய யுக்தியை பலர் கையில் எடுத்து வருகின்றனர்.

நூதன அரசியல் யுக்தி

இந்த நூதன அரசியல் யுக்தியால் இளைஞர்கள் அரசியலுக்கு வருவது அதிகரித்து வருகிறது. இளைஞர்களின் வருகை ஆரோக்கியமானதாக பார்க்கப்பட்டாலும், இந்த புதிய அரசியல் டிரெண்டால் அனுபவம் வாய்ந்த பல மூத்த அரசியல்வாதிகள் கட்சியில் ஓரங்கட்டப்பட்டு, அவர்களின் ஆக்கப்பூர்வமான யோசனைகளுக்கு கட்சியில் மதிப்பிலாமல் போவதாக பலர் வேதனை தெரிவித்து வருகின்றனர்.

ரிசல்ட் எப்படி இருக்கும்

புதியவர்களின் இவர் அரசியல் யுக்தி பெரிய கட்சிகளுக்கு கூடுதல் பலமாக இருக்குமா, புதியவர்கள் சார்ந்த தொகுதிகளில் பெரிய கட்சியின் செல்வாக்கை உயர்த்துமா அல்லது அனுபவ அரசியல்வாதிகள் ஓரங்கட்டப்படுவது கட்சிக்கு பலவீனமாகுமா என்பதை வரும் உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் காட்டி விடும்.

%d bloggers like this: