“நேராக வீட்டுக்குச் செல்லவும்!” – அறிவுறுத்திய துர்கா… அமைதியான ஸ்டாலின்…

ஸ்டாலின் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு குடும்பத்தினருடன் குலதெய்வக் கோயிலுக்கு வந்து வழிபடுவதாக துர்கா வேண்டியிருந்தாராம்.

‘‘குலதெய்வக் கோயிலுக்குப் போனா நேரா வீட்டுக்குத்தான் போகணுமா?’’ என்று யாருடனோ போனில் பேசியபடியே வந்தமர்ந்தார் கழுகார். ‘‘என்ன விஷயம்’’ என்று நாம் கேட்க, ‘‘முதலில் சூடான ஃபில்டர் காபியைக் கொடுக்கவும்’’ என்று கேட்டு வாங்கிப் பருகியபடியே செய்திகளுக்குள் நுழைந்தார் கழுகார்.

‘‘முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு மு.க.ஸ்டாலின் முதன்முறையாக திருவாரூருக்குக் குடும்பத்தினருடன் சென்றார். சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் ஜூலை 6-ம் தேதி மாலை திருச்சி சென்றவர், அங்கிருந்து காரில் திருவாரூர் சென்றார். அங்கு நிகழ்ச்சிகளை முடித்துவிட்டு, கருணாநிதியின் சொந்த ஊரான திருக்குவளைக்குப் புறப்பட்டார். கருணாநிதி நினைவு இல்லத்துக்குச் சென்று மரியாதை செய்வதுதான் திட்டம். இதற்காகக் கட்சியினரும் அங்கு காத்திருந்தனர். ஆனால், திருக்குவளையிலுள்ள குலதெய்வமான அங்காளம்மன் கோயிலுக்குச் செல்ல வேண்டுமென ஸ்டாலினிடம் துர்கா கேட்கவே, மறுப்பு தெரிவிக்காமல் அமைதியாகச் சம்மதித்திருக்கிறார். கோயிலுக்குச் சென்ற ஸ்டாலினுக்கு பூரண கும்ப மரியாதை கொடுத்து வரவேற்பு அளிக்கப்பட்டது.’’

மிஸ்டர் கழுகு: “நேராக வீட்டுக்குச் செல்லவும்!” – அறிவுறுத்திய துர்கா… அமைதியான ஸ்டாலின்…
“கோயில் விசிட் பிளானின் பின்னணி என்னவோ…”

“எல்லாம் துர்காவின் வேண்டுதல்தான்… ஸ்டாலின் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு குடும்பத்தினருடன் குலதெய்வக் கோயிலுக்கு வந்து வழிபடுவதாக துர்கா வேண்டியிருந்தாராம். குலதெய்வ கோயில் வழிபாடு திட்டத்தை ஸ்டாலினிடம் சொல்லாமல், திருவாரூர் சென்ற பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று குடும்ப உறுப்பினர்கள் சிலரிடம் மட்டும் இது பற்றிப் பேசியிருந்தாராம். அதன்படி திருவாரூர் சென்ற பிறகு பக்குவமாகப் பேசி குலதெய்வக் கோயில் வழிபாட்டை முடித்துவிட்டார் என்கிறார்கள். தொடர்ந்து கருணாநிதி நினைவு இல்லத்துக்குச் சென்று கருணாநிதி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். பிறகு அவர் குத்தாலம், கும்பகோணம், ஜெயங்கொண்டம் ஆகிய இடங்களில் பல்வேறு கட்சி நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதாக இருந்தது. ஆனால், ‘குலதெய்வம் கோயிலுக்குச் சென்ற பிறகு வேறு எங்கும் செல்லக் கூடாது; நேராக வீட்டுக்குத்தான் செல்ல வேண்டும்’ என்று ஐதிகத்தைச் சுட்டிக்காட்டி துர்கா அறிவுறுத்தியதால், கட்சி நிகழ்ச்சிகள் கேன்சல் செய்யப்பட்டன. ஆனாலும் திருவெண்காட்டில் இருக்கும் துர்காவின் வீட்டுக்குச் சென்று உணவருந்திய பிறகே சென்னை திரும்பினார்.’’

‘‘ஓஹோ…’’

‘‘இன்னுமொரு கோயில் செய்தி இருக்கிறது கேளும்… சென்னை நுங்கம்பாக்கத்தில் அம்மன் கோயில் ஒன்றைப் பரம்பரையாக ஒரு குடும்பத்தினர் நிர்வகித்துவருகிறார்கள். அங்கு உண்டியல் வசூல் களைகட்டியதைப் பார்த்த தி.மு.க லோக்கல் நிர்வாகிகள், அதைத் தங்கள் கன்ட்ரோலில் எடுப்பதற்காக அந்தக் குடும்பத்தினரை மிரட்டியிருக்கிறார்கள். இந்தத் தகவல் உளவுத்துறை மூலம் முதல்வர் காதுக்குச் செல்லவும் கடுப்பாகிவிட்டாராம்… ‘இனியும் இது போன்ற புகார்கள் வந்தால், சொந்தக் கட்சியினர் என்று பார்க்க மாட்டேன்… கம்பி எண்ண வேண்டிவரும்’ என்று கடுமையாக எச்சரித்திருக்கிறார் ஸ்டாலின்.”

‘‘கூட்டணிக் கட்சி ஒன்றிலும் இதேரீதியில் பேச்சு அடிபட்டதே!”

‘‘ஆமாம். வி.சி.க-வினர் சிலரும் இதே போன்ற பஞ்சாயத்துகளில் ஈடுபடுவதாக உளவுத்துறை ஸ்டாலினுக்கு நோட் போட்டுள்ளது. உடனடியாக வி.சி.க தலைவர் திருமாவளவனிடம் பேசிய ஸ்டாலின், ‘கட்சியினரைக் கண்டித்துவையுங்கள்’ என்று கேட்டுக்கொண்டாராம். கவனமாக கேட்டுக்கொண்ட திருமாவும், ‘கட்சிரீதியாக நானும் நடவடிக்கை எடுக்கிறேன். போலீஸ் மூலம் நீங்களும் நடவடிக்கை எடுத்துக்கொள்ளுங்கள்’ என்று சொல்லிவிட்டாராம்” என்று நிறுத்திய கழுகாருக்கு, மாம்பழத் துண்டுகளைத் தட்டில் வைத்துக் கொடுத்தோம்.

ருசித்துச் சாப்பிட்டவரிடம் “ஊர்ச் செய்திகள் எதுவும் உண்டா?” என்று கேட்டோம்.

மிஸ்டர் கழுகு: “நேராக வீட்டுக்குச் செல்லவும்!” – அறிவுறுத்திய துர்கா… அமைதியான ஸ்டாலின்…
‘‘அது இல்லாமலா! கடற்கரை பெயரைக் கொண்ட பெண் அதிகாரி ஒருவர் மலைகளின் ராணி மாவட்டத்தின் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அதிகாரியாக, கடந்த ஆண்டு வரை பொறுப்பில் இருந்தார். இவர் பழங்குடி‌ மக்களுக்குக் கறவை மாடுகள் வழங்கும் திட்டத்தில் முறைகேடுகளைச் செய்து பல லட்சங்களை வாரிச் சுருட்டிவிட்டார். இவரது முறைகேடு விவகாரம் பூதாகரமான‌ நிலையில், சிலருக்கு ‘முறைசெய்து’ கவனித்ததால், நடவடிக்கை எதுவும் எடுக்காமல் டிரான்ஸ்ஃபர் என்கிற பெயரில் மத்திய மண்டல மாவட்டம் ஒன்றுக்கு மாற்றிவிட்டார்கள். இந்தநிலையில்தான் அவர் செய்ததாக மேலும் சில முறைகேடுகளும் அம்பலமாகியிருக்கின்றன.’’

“சொல்லும்… சொல்லும்…’’

‘‘பழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளிகளில் சமையலர் பணிக்கு 26 பணியிடங்களை மட்டுமே நிரப்ப அரசாணை வெளியிட்டிருந்த நிலையில், அந்த அதிகாரி போலியாக காலிப் பணியிடங்களை உருவாக்கி 30-க்கும் மேற்பட்டோரிடம் லஞ்சத்தைப் பெற்றுக்கொண்டு அப்பாயின்மென்ட் ஆர்டரையும் வழங்கியுள்ளார். இதை நம்பி ஏமாந்தவர்கள் ‘நமக்கும் சம்பளம் வரும்’ என்று கடந்த ஏழு மாதங்களாகக் காத்திருக்கிறார்களாம். இந்த முறைகேட்டைக் கண்டறிந்த மாவட்ட ஆட்சியர், துறையின் செயலாளர் கவனத்துக்கு இந்த விவகாரத்தைக் கொண்டு சென்றுள்ளார். விரைவில் நடவடிக்கை பாயலாம்.’’

‘‘மக்கள் நீதி மய்ய முன்னாள் துணைத் தலைவர் கோவை மகேந்திரன் தி.மு.க-வில் ஐக்கியமாகிவிட்டாரே!’’

‘‘நாம்தான் டாக்டர் மகேந்திரன் தி.மு.க-வில் இணையப்போவதாக முதலில் சொன்னோம். அது நடந்துவிட்டது. மே மாதமே இணைந்திருக்க வேண்டியது… முதல்வர் பிஸியாக இருந்ததால் தேதி தள்ளிப்போனது. ஒருவழியாக ஜூலை 8-ம் தேதி அண்ணா அறிவாலயத்தில் ஸ்டாலினைச் சந்தித்து கட்சியில் சேர்ந்துவிட்டார். அவருடன், சமீபத்தில் ம.நீ.ம-விலிருந்து விலகிய பத்மப்ரியா உள்ளிட்ட 25 நிர்வாகிகள் தி.மு.க-வில் இணைந்துள்ளனர். இது ஆரம்பம்தானாம்… ம.நீ.ம நிர்வாகிகள், உறுப்பினர்கள் உட்பட தி.மு.க-வில் இணைவதற்காகச் சம்மதம் தெரிவித்திருக்கும் 10,000-க்கும் மேற்பட்டவர்களின் பெயர் பட்டியலையும் மகேந்திரன் கொடுத்திருக்கிறார். அநேகமாக மகேந்திரனுக்கு தி.மு.க ஐடி விங் மாநிலச் செயலாளர் பொறுப்பு கொடுக்கப்படலாம் என்ற பேச்சும் அடிபடுகிறது’’ என்றபடி கிளம்பத் தயாரான கழுகார்,

‘‘பெயர் கேட்கக் கூடாது. நீரே யூகித்துக்கொள்ளும்… தமிழகத்தின் மத்திய மண்டலத்தைச் சேர்ந்த அமைச்சர் ஒருவர் சமீபத்தில் மேற்கு மண்டல ஏற்றுமதி தொழில் நகரத்துக்கு ஆய்வுக்குச் சென்றிருந்தார். அங்குள்ள ஆலை அதிபர்களை அழைத்தவர், ‘ஆலைகள் மீது நிறைய புகார்கள் வருகின்றன’ என்று எச்சரித்துவிட்டு, ‘எல்லாம் நான் பார்த்துக்கொள்கிறேன். ஆனால், சென்னையில் மேடத்தை கவனிக்க வேண்டும்’ என்று பிட்டைப் போட்டிருக்கிறார். இப்படிச் சொல்லியே 200-க்கும் மேற்பட்டவர்களிடம் முதற்கட்டமாக 100 ஸ்வீட் பாக்ஸ்களை வசூலித்திருக்கிறார். அது மட்டுமன்றி, மாதந்தோறும் பெரும் தொகை ஒன்று மாமூலாகக் கிடைக்கும்படி ஏற்பாட்டையும் செய்துவிட்டுத்தான் அங்கிருந்து கிளம்பினாராம்!”

“மெய்யாலுமா… ஸ்டாலின் கவனத்துக்கு இவையெல்லாம் செல்வதில்லைபோல!”

“இன்னுமொரு வசூல் மேட்டரும் சொல்கிறேன்… பெரிய தொகுதியின் பிரதிநிதி ஒருவரின் அட்ராசிட்டி தாங்க முடியவில்லையாம். சென்னையிலிருக்கும் இவரது தொகுதிக்குள்தான் பெரும் ஐடி நிறுவனங்களும், வணிக வளாகங்களும் இருக்கின்றன. மற்றொருபுறம் நெடுஞ்சாலைத்துறை மூலமாகவும் பெரிய திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. சில நாள்களுக்கு முன்பு தொகுதிக்குள் பணிகளைச் செய்யும் மாநகராட்சிப் பொறியாளர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்களுடன் பேசிய அந்தப் பிரதிநிதி, பெரும் தொகையை கமிஷனாகக் கேட்டாராம். ஆனால், ஏற்கெனவே கோட்டையில் வரவு வைத்ததை அவர்கள் சொன்னபோது, ‘உள்ளூர் சாமியை கவனிக்காம, வெளியூருக்குப் போனாலும் வரம் கிடைக்காது’ என்று அதிரவைத்தாராம். விவகாரம் இப்போது மத்திய மண்டல அமைச்சர் வரை சென்றிருக்கிறது” என்றபடி சிறகுகளை விரித்தார் கழுகார்.

%d bloggers like this: