அமைச்சர்கள் பாஸா… ஃபெயிலா? – முதல்வருக்குச் சென்ற புராகிரஸ் ரிப்போர்ட்…

மின்சாரத்துறையில் தனக்குத் தெரியாமல் அதிகாரிகள் எந்த ஃபைலையும் நகர்த்திவிடக் கூடாது என்று துறையின் அமைச்சர் செந்தில் பாலாஜி, சிறப்பு அதிகாரி ஒருவரைப் பணியில் அமர்த்தியிருக்கிறாராம்.

மழையில் நனைந்துகொண்டே அலுவலகம் வந்த கழுகாருக்குச் சூடாக ஃபில்டர் காபி கொடுத்தோம். கவர் ஸ்டோரியில் பார்வையை ஓடவிட்டவர், ‘‘பட்ஜெட் தள்ளிப்போகும் தகவலைச் சொல்லவிட்டீர்… பட்ஜெட் தொடருக்குப் பிறகு நடக்கப்போகும் மாற்றங்கள் பற்றித் தெரியுமா?’’ என்று கேள்விக்கணையை வீசினார்.

‘‘அமைச்சர்கள் மீது ஆக்‌ஷன், அதிகாரிகள் மாற்றம்… இவையெல்லாம் இருக்கும் என்கிறார்கள்…’’ என்றதும், ‘‘சரியான தகவல்தான். அதிலிருக்கும் உள் விவரங்களைச் சொல்கிறேன், கேளும்…’’ என்றபடி தொடர்ந்தார்.

‘‘தி.மு.க அமைச்சர்களின் செயல்பாடுகள் குறித்த புராகிரஸ் ரிப்போர்ட்டை முதல்வர் ஸ்டாலின் அவ்வப்போது கேட்டுப் பெறுகிறாராம். தி.மு.க ஆட்சிக்கு வந்து 70 நாள்களைக் கடந்த நிலையில், சமீபத்தில் உளவுத்துறை முதல்வரிடம் மற்றொரு ரிப்போர்ட்டைக் கொடுத்துள்ளது. அதில், ‘தலைமைச் செயலகத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பனின் அலுவலகத்தில் மட்டும் தினமும் கூட்டம் நிரம்பி வழிகிறது. கட்சிக்காரர்கள், வி.ஐ.பி-க்கள், தனியார் பேருந்து உரிமையாளர்கள் என யார் வந்தாலும் நன்றாக ‘உபசரித்து’ அனுப்பிவைக்கிறார்’ என்று குறிப்பிட்டுள்ளார்கள். இதை முன்வைத்து, ‘இது ராஜகண்ணப்பனுக்குச் சிக்கலா… சிறப்பா?’ என்று அவரது துறைக்குள்ளே பட்டிமன்றமே நடக்கிறதாம்.’’

‘‘மின்சாரத்துறையில் தனக்குத் தெரியாமல் அதிகாரிகள் எந்த ஃபைலையும் நகர்த்திவிடக் கூடாது என்று துறையின் அமைச்சர் செந்தில் பாலாஜி, சிறப்பு அதிகாரி ஒருவரைப் பணியில் அமர்த்தியிருக்கிறாராம். அவரது வேலையே எந்த ஃபைல், எங்கு மூவ் ஆகிறது என்ற தகவலை அமைச்சரிடம் சொல்லி, கஜானாவை நிரப்புவதுதானாம். அதையும் ரிப்போர்ட்டில் சுட்டிக்காட்டியிருக்கிறது உளவுத்துறை. தலைமைச் செயலகத்தில் மட்டுமல்ல… அமைச்சர்களின் சென்னை இல்லங்கள், சொந்த மாவட்டத்திலுள்ள வீடுகளிலும் உளவுத்துறையின் பார்வை கூர்மையாக இருப்பதால், பதற்றத்தில் இருக்கிறார்கள் அமைச்சர்கள். 100 நாள்களுக்குப் பிறகு இந்த ரிப்போர்ட்டைவைத்து அமைச்சரவையில் கூட்டல் கழித்தல்கள் இருக்குமாம்!’’

‘‘பாஸா, ஃபெயிலா… முதல்வர் என்ன தீர்ப்பு சொல்கிறார் என்று பார்ப்போம்!”

‘‘ம்! சென்னை உள்ளிட்ட பல்வேறு மாநகராட்சி, நகராட்சிகளில் இன்டர்நெட் சேவையை வழங்கும் தனியார் நிறுவனங்கள் இரும்புக் கம்பங்கள் மூலமும், பூமிக்கு அடியில் கேபிள்களைப் பதித்தும் இணைய சேவையை வழங்கிவருகின்றன. ஆனால், பல இடங்களில் அனுமதி பெறாமலேயே இந்த வேலைகளைச் செய்தவர்கள், கடந்த இரண்டு ஆண்டுகளாக கம்பம் நடவும், கேபிள்களைப் பதிக்கவும் அரசுக்குக் கட்டணமே செலுத்தவில்லையாம். மாறாக, கொங்கு மண்டலத்தின் முன்னாள் உச்சப் புள்ளி ஒருவரின் அண்ணன் நிறுவனத்துக்கு இந்தத் தொகையை கைம்மாறாக செலுத்திவந்ததாகச் சொல்கிறார்கள். இப்படி சென்னை மாநகராட்சிக்கு மட்டுமே சுமார் 40 கோடி ரூபாய்க்கு மேல் கட்டண வருவாய் நஷ்டமாகியிருக்கிறது. ஆட்சி மேலிடம் தற்போது இந்த விவகாரத்தை தூசுதட்டி வருவதால், அண்ணன் நிறுவனம் தரப்பு அப்செட் என்கிறார்கள்!”

‘‘சென்னை பெருநகரத்துக்கு புதிய காவல்துறை ஆணையர் நியமிக்கப்படுவார் என்று பேச்சு ஓடுகிறதே?’’

‘‘ஓடுகிறதுதான்… ஆனால், மாற்றம் இருக்காது என்கிறார்கள். தற்போது ஏ.டி.ஜி.பி-க்களாக இருக்கும் விஸ்வநாதன், சீமா அகர்வால், சங்கர் ஜிவால், ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் விரைவில் டி.ஜி.பி-களாகப் பதவி உயர்வு பெறவிருக்கிறார்கள். ஏ.டி.ஜி.பி அந்தஸ்தில் இருப்பவர்கள்தான் சென்னை போலீஸ் கமிஷனராக பணியமர்த்தப்பட்டுவருகிறார்கள். இதனால்,

‘டி.ஜி.பி கேடருக்கு சங்கர் ஜிவால் பதவி உயர்வு பெற்றுச் சென்றுவிட்டால், அவரால் கமிஷனராகத் தொடர முடியுமா?’ என்ற கேள்வி எழுந்துள்ளது. இதையடுத்து இந்த நிர்வாகச் சிக்கலை சரிசெய்து, தங்களுக்கு விசுவாசமாகவுள்ள சங்கர் ஜிவாலே தொடர்ந்து சென்னை ஆணையராகத் தொடர ஆலோசித்துவருகிறதாம் தமிழக அரசு.”

‘‘சென்னையிலுள்ள மற்ற காவல் அதிகாரிகளுக்கு பணியிட மாற்றம் இருக்கும் என்கிறார்களே?”

‘‘ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு நடந்த காவல்துறை அதிகாரிகள் இடமாற்றத்தில் ஆளும்தரப்புக்கு சில நெருடல்கள் இருக்கின்றன என்கிறார்கள். அதோடு, சென்னை போலீஸ் கமிஷனர் கட்டுப்பாட்டிலிருக்கும் 12 காவல் சரகங்களில் பணியாற்றும் ஐ.பி.எஸ் அதிகாரிகள் பலர் இதுவரை மாற்றப்படவில்லை. இதற்கெல்லாம் காரணம், முன்னாள் ஐ.பி.எஸ் ஒருவர்தானாம். இந்த விவரங்களையெல்லாம் ஆளும்தரப்புக்குக் கொண்டுபோயிருக்கிறது ஒரு டீம். இதனால், சென்னை காவல்துறைக்குள்

ஐ.பி.எஸ் அதிகாரிகள் இடமாற்றம் விரைவில் இருக்கும் என்கிறார்கள்.’’

கே.சி.வீரமணி
கே.சி.வீரமணி
‘‘முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணிக்குப் புதிய சிக்கல் எழுந்துள்ளது தெரியுமா?’’

‘‘ஆமாம். ‘வீரமணியின் வில்லங்க சொத்துகள்! அமைச்சரைச் சுற்றும் புகைச்சல்கள்…’ என்ற தலைப்பில் 24.1.2021 தேதியிட்ட ஜூ.வி-யில் கட்டுரை வெளியானது. தொடர்ந்து கடந்த சட்டமன்றத் தேர்தலில் ஜோலார்பேட்டை தொகுதியில் போட்டியிட்ட வீரமணி தோற்றுப்போனார். இந்தநிலையில், வேலூரைச் சேர்ந்த ராமமூர்த்தி என்பவர், தேர்தலுக்காக வீரமணி தாக்கல் செய்திருந்த மனுவில் சில தகவல்களை மறைத்துவிட்டதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். மனுவை விசாரித்த நீதிமன்றம், வேட்பாளர்கள் அளிக்கும் தவறான தகவல்கள் குறித்துத் தேர்தல் கமிஷன் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறது. இதையடுத்து, வீரமணியிடம் விசாரணை நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டிருக்கிறதாம்.’’

‘‘ஒருவழியாக மக்கள் மன்றம், ரசிகர் மன்றமாக மாறிவிட்டதே?’’

‘‘அமெரிக்காவிலிருந்து சென்னை திரும்பிய ரஜினி, இப்போதுதான் நிம்மதியாக இருக்கிறார் என்கிறார்கள். ரஜினி அமெரிக்காவில் இருந்தபோது, அவரின் விசுவாசிகள் சிலருடன் காணொலிக் காட்சியில் பேசிய லதா, பொதுவான விஷயங்களைப் பற்றி ஆலோசனை செய்தாராம். அதைவைத்து, ‘அரசியலில் ரஜினி குதிக்கப்போகிறார்’ என்று மீண்டும் அவரின் விசுவாசிகள் சிலர் துள்ளிக் குதித்திருக்கிறார்கள். இன்னொரு பக்கம், மன்றத்தின் மாநிலப் பொறுப்பாளர் சுதாகர், அவருக்கு வேண்டப்பட்ட பழைய மாவட்டச் செயலாளர்களை உள்ளடக்கிய மன்ற நிர்வாகிகளைக் கட்டுப்படுத்தும் வேலையில் இறங்கியிருக்கிறார். இந்தக் குழப்பங்களுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கவே, ரஜினி தனது மக்கள் மன்றத்தைக் கலைத்துவிட்டாராம்!’’

‘‘கொங்கு மண்டலத்தைக் குறிவைத்துக் காய்நகர்த்துகிறாரோ பா.ஜ.க-வின் புதிய தலைவர்?’’

“அவரது அரசியல் கோவையை மையப்படுத்தியே இருக்குமாம். கடந்த சட்டசபைத் தேர்தலில் ‘அரவக்குறிச்சியா… கோவை சிட்டியா?’ என்ற குழப்பத்தில் கடைசியாக அரவக்குறிச்சியில் போட்டியிட்டு படுதோல்வியைத் தழுவினார். அப்போதே, ‘கோவையில் போட்டியிட்டிருந்தால் வெற்றியை நெருங்கியிருக்கலாம்’ என்று தன் சகாக்களிடம் புலம்பிவந்தார். தற்போது தன் மாமனார் வீடும் கோவையில் இருப்பது, அங்கு அரசியல் செய்ய தனக்கு வசதியாக இருக்கும் என்று அவர் நினைக்கிறார். தற்போது கோவை ராமநாதபுரம் பகுதியில் தனி அலுவலகம் திறந்திருப்பவர், லட்சுமி மில்ஸ் பகுதியில் ஒரு அபார்ட்மென்ட்டில் வீட்டை வாடகைக்கு எடுத்துள்ளார். 2024 நாடாளுமன்றத் தேர்தலில் கோவையில்தான் போட்டி என்பதில் உறுதியாக இருக்கிறாராம் புதிய தலைவர்’’ என்றபடி சிறகுகளை விரித்தார் கழுகார்.

%d bloggers like this: