மாஜி அமைச்சர் மீது நடவடிக்கை வேண்டாம்!’ – தூதுபோன லாட்டரி வாரிசு

‘‘வாட்ஸ்அப்பில்கூட இனி ரகசியமாகப் பேசிக்கொள்ள முடியாதுபோல…’’ என்று செல்போனில் பேசியவாறே அலுவலகத்துக்குள் நுழைந்தார் கழுகார். சில்லென்ற பாதாம் பாலை நீட்டினோம். செல்போனை சுவிட்ச் ஆஃப் செய்துவிட்டு, ‘‘எல்லாம் பெகாசஸ் பீதிதான்!’’ என்றபடி பாதாம் பாலைப் பருகி முடித்தவர், ‘‘பெகாசஸ் குறித்த தனிக் கட்டுரையை உமது நிருபர் கொடுத்திருப்பதால், நான் வேறு செய்திகளுக்குச் செல்கிறேன்” என்று ஆரம்பித்தார் கழுகார்.

‘‘ப்ளஸ் டூ பொதுத்தேர்வுகள் கொரோனா தொற்று காரணமாக நடத்தப்படவில்லை. அதற்கு பதிலாக `மாணவர்களின் முந்தைய மதிப்பெண்கள், இன்டர்னல் மதிப்பெண்களைக்கொண்டு ப்ளஸ் டூ மதிப்பெண்கள் வெளியிடப்படும்’ என்று தமிழக அரசு அறிவித்தது. அதன்படி, ஜூலை 19-ம் தேதி பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ப்ளஸ் டூ மதிப்பெண்களை வெளியிட்டார். மதிப்பெண்கள் குறைவாக இருப்பதாக நினைத்தால், தனியாகப் பள்ளியில் விண்ணப்பித்து தேர்வு எழுதிக்கொள்ளலாம் என்று அரசு சொல்லியிருப்பது நல்ல விஷயம். தேர்வு முடிவுகள் வந்துவிட்டதால், இனி கலை அறிவியல் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள் களத்தில் இறங்கிவிடும். அவர்கள் காட்டில் இனி கரன்சி மழைதான்!’’

‘‘ஆகஸ்ட் 1-ம் தேதிக்குப் பின்னர்தானே சேர்க்கையைத் தொடங்க வேண்டும்?’’

‘‘விவரம் தெரியாத ஆளாக இருக்கிறீரே… பல கல்லூரிகளில் சேர்க்கை தொடங்கப்பட்டு, 50 சதவிகித சீட்களை ஃபில் செய்துவிட்டனர். சில முக்கியமான பெரிய கல்வி நிறுவனங்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கச் சொல்லிவிட்டு, அரசு தேதி அறிவிக்கும்போது சேர்க்கை நடைபெறும் என்று கூறிவிட்டது. மருத்துவக் கல்லூரிகள்போலவே, கலைக் கல்லூரிகளிலும் ஒரு சீட் லட்சக்கணக்கில் விற்கப்படுகிறது. இதற்கெல்லாம் எப்போதுதான் கடிவாளம் வருமோ தெரியவில்லை.’’

முதல்வர் மு.க.ஸ்டாலின் மீண்டும் டெல்லி சென்றிருக்கிறாரே!’’

‘‘ஆகஸ்ட் மாதம், தமிழகச் சட்டப்பேரவையில் கருணாநிதி படத்தைத் திறந்துவைக்கவும், சென்னை மாகாணத்தின் சட்டமன்றப் பேரவை நூறாவது ஆண்டுக் கொண்டாட்டத்தில் பங்கேற்கவும் குடியரசுத் தலைவருக்கு அழைப்பு விடுத்திருக்கிறார் முதல்வர். சுதந்திர தினத்துக்குப் பிறகே குடியரசுத் தலைவரின் சென்னை விசிட் இருக்கும் என்கிறது டெல்லி தரப்பு.’’

சசிகலாவின் வீடியோ பேட்டியைப் பார்த்தீரா?’’

‘‘ம்… தன்னைப் பற்றி நீண்ட ஒரு பேட்டி வரவேண்டும் என்று சசிகலா தரப்பிலிருந்தே சம்பந்தப்பட்ட தொலைக்காட்சி நிறுவனத்திடம் பேசி, இந்த மூன்று மணி நேரப் பேட்டியை ஓகே செய்திருக்கிறார்கள். இதன் மூலம் ஜெயலலிதா, எம்.ஜி.ஆர் ஆகியோருக்கும் தனக்கும் இடையிலிருந்த நெருக்கத்தைச் சொல்லி, கட்சியினர் மத்தியில் ஒரு பிம்பத்தைக் கட்டமைக்க சசிகலா முயல்கிறார் என்ற எண்ணம் எடப்பாடி பழனிசாமியிடம் உள்ளது. குறிப்பாக, தேர்தல் தோல்வி தொடர்பாகவும், தற்போதைய அ.தி.மு.க தலைமை குறித்தும் சசிகலா சொன்ன பதில்களை எடப்பாடி தரப்பு ரசிக்கவில்லை. ‘சசிகலா சொன்னது சரிதானா அல்லது பொய்யாகச் சொல்கிறாரா?’ என்று கட்சியின் சீனியர்களிடம் பழைய சம்பவங்களைப் பற்றி விசாரித்துவருகிறார்கள். கூடிய விரைவில், பதிலடி கொடுக்கத் தயாராகிவருகிறார்கள். அதேசமயம், குடும்ப உறுப்பினர்களை சசிகலா ஒதுக்குவதாக ஒரு பேச்சு கிளம்பியதால், ஆங்காங்கே உறவுகளின் பெயர்களைச் சொல்லி ஆசுவாசப்படுத்தியிருக்கிறார் சசிகலா.’’

‘‘ரோல்ஸ் ராய்ஸ் கார் விவகாரத்தில் நீதிபதி தெரிவித்த கருத்துகளால், நடிகர் விஜய் நொந்துபோயிருக்கிறாராமே?’’ என்று கேட்டபடியே சூடான பஜ்ஜியை கழுகாருக்கு நீட்டினோம்…

வாங்கிச் சுவைத்தபடியே தொடர்ந்தார், ‘‘இந்திய அரசியல் சட்டப்படி, இறக்குமதி வரி செலுத்தியவர்கள் நுழைவு வரி செலுத்துவதிலிருந்து விலக்கு கேட்கலாம் என்று கேரள உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. அதோடு, விஜய் வாங்கிய ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு விலக்கு கேட்டதுபோலப் பலரும் வரிவிலக்கு கேட்டு நீதிமன்றத்தை அணுகியிருக்கிறார்கள். ஆனால், விஜய் விவகாரத்தில் மட்டும்தான் நீதிமன்றம் இவ்வளவு கடுமை காட்டியிருக்கிறது. ‘வரி கட்டாமல் ஏமாற்றியது போன்ற தோற்றத்தை உருவாக்கிவிட்டார்கள்’ என்று விஜய் தரப்பு வழக்கறிஞர்கள் ஆட்சேபனை தெரிவித்ததோடு, ‘நாங்கள் அரசியலமைப்புச் சட்டம் 226-படியே இந்த மனுவை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தோம். ஆனால், நீதிபதியின் தீர்ப்பில் மனம் வருந்தும் அளவுக்கு சில வார்த்தைகளைப் பயன்படுத்தியிருக்கிறார். அதைத் தீர்ப்பு நகலிலிருந்து அகற்ற வேண்டும்’ என்று தனி நீதிமன்ற உத்தரவை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருக்கிறார்கள்.’’

‘‘மாஜி அமைச்சர்மீது அடுத்து ஒரு சிக்கல் எழுந்துள்ளதே?’’

‘‘கொங்கு மண்டல முன்னாள் உச்ச அமைச்சர்மீது ஆளும்தரப்பு கடும் கோபத்திலிருக்கிறது. வழக்கு பாயும் நடவடிக்கை ஆரம்பமானால், தனக்குத்தான் முதல் குறி என்று அரளும் மாஜி அமைச்சர், புதிய ரூட்டில் ஆளும்தரப்புக்குத் தூதுவிட்டிருக்கிறார். ஆளும்தரப்புக்கு நெருக்கமான லாட்டரி குடும்பத்தின் வாரிசுக்கும், மாஜியின் உறவுக்காரரான ‘பூவான’ நபருக்கும் நல்ல நட்புண்டு. இந்த ‘பூவான’ நபரும், மாஜி அமைச்சரின் சகோதரரும் சென்னையில் 1,400 கோடி ரூபாய் மதிப்பீட்டில் குடிநீர் சுத்திகரிப்பு ஆலையை அரசு உதவியோடு அமைத்திருக்கிறார்கள். ‘இதில் நடைபெற்ற முறைகேடுகளைத்தான் ஆளும்தரப்பு முதலில் எடுக்கப்போகிறது, அப்போது எல்லோரும் சேர்ந்து மாட்டிக்கொள்வோம்’ என்று ‘பூவான’வரை எச்சரித்தது மாஜி அமைச்சர் தரப்பு. இதனால் அதிர்ந்தவர் உடனடியாக ஆளும் தரப்பிடம், ‘மாஜி மீது நடவடிக்கை வேண்டாம். அவருடன் சேர்ந்து நானும் சிக்குவேன்’ எனப் பேசியிருக்கிறாராம்.’’

‘‘ஓஹோ!’’

‘‘விழுப்புரம் மாவட்ட மாஜி அமைச்சருக்கு அந்த மாவட்டத்தில் நடக்கும் அனைத்து அரசு நடவடிக்கைகளும் உடனுக்குடன் தெரிந்துவிடுகிறதாம். காரணம், அந்த மாவட்டத் திட்ட அதிகாரிக்கு ஆல் இன் ஆலாக இருக்கும் ‘விஜய’மான உதவி அதிகாரி, அ.தி.மு.க மாவட்டப் புள்ளிக்கு நெருக்கமான உறவினர். இதனால், திட்ட அதிகாரி தீட்டும் திட்டங்களையெல்லாம் ‘விஜய’மானவர் எதிர் முகாமுக்கு உடனடியாகக் கொண்டுபோகிறாராம். ‘உள்ளாட்சித் தேர்தல் வரும் நேரத்தில் இப்படித் தகவல்களைக் கசியவிட்டால் என்ன செய்வது?’ என்று புலம்புகிறார்கள் அரசுக்கு ஆதரவான அதிகாரிகள்.’’

“பொள்ளாச்சி பாலியல் வழக்கு விசாரணை மீண்டும் தீவிரமடைந்திருக்கிறதே?”

“ஆமாம்… தேர்தல் பரபரப்பு, கொரோனா இரண்டாம் அலை ஆகியவற்றுக்குப் பிறகு, சி.பி.ஐ அதிகாரிகள் பொள்ளாச்சியில் முகாமிட்டுள்ளனர். புதிதாக மூன்று பெண்கள் வாக்குமூலம் கொடுத்துள்ளனர் என்பதால், விரைவில் அடுத்தகட்ட கைது நடவடிக்கைகளுக்கு வாய்ப்புள்ளதாம். இதனால், சில கரைவேட்டிகள் கலக்கத்தில் உள்ளனர். அ.தி.மு.க முன்னாள் கவுன்சிலரான ஒரு ‘ராஜ’புள்ளி, கட்சிப் பணிகளில் அமைதியாகிவிட்டு, சாதிரீதியாக ஆக்டிவாகியிருக்கிறார். அவரது சாதி சார்பாக இயங்கும் சங்கத்தைத் தனது புதிய அடையாளமாக வைத்து பேனர், போஸ்டர்கள் என ஊரெல்லாம் ஒட்டிக்கொள்கிறார். கட்சி கைவிட்டாலும், சாதி மூலம் தப்பித்துவிடலாம் எனக் கணக்கு போடுகிறார் அந்தப் புள்ளி.”

புதுச்சேரிப் பஞ்சாயத்துகள் ஏதும் உண்டா?”

“புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியின் எடுபிடிகளின் ஆட்டம் பழையபடி அதிகமாகிவிட்டதாம். அவருக்கு அருகிலிருந்து, யார் அவரது சீட்டைத் துடைத்துவிடுவது என்பதில் ஆரம்பித்து, பல்வேறு விஷயங்களில் அவர்களுக்குள் கடும் போட்டி நிலவுகிறதாம். அந்தப் போட்டியில், கடந்த சில நாள்களுக்கு முன்பு திண்டிவனத்தைச் சேர்ந்த முதல்வரின் உறவினர் ஒருவரும், அவரின் கடிகார நண்பரின் மகனும் சட்டப்பேரவைக்குள்ளேயே அடித்துக்கொண்டு உருண்டிருக்கிறார்கள். அவர்களை விலக்கிவிட்ட சட்டப்பேரவைக் காவலர்கள், ‘அமைதிப்படை அண்டர்வேர்’ காமெடி லெவலுக்குப் போய்விட்டார்களே என்று தலையிலடித்துக்கொண்டிருக்கிறார்கள்” என்று சிரித்தபடியே சிறகுகளை விரித்தார் கழுகார்

%d bloggers like this: