அதிமுக அவைத்தலைவர் பதவியில் டிவிஸ்ட்..? அரசியல்-தேர்தல் என பல கோணத்தில் ஆராயும் இ.பி.எஸ்..!

மதுசூதணன் மறைவை தொடர்ந்து அதிமுகவில் காலியாக உள்ள அவைத்தலைவர் பதவியை இஸ்லாமியர் ஒருவருக்கு வழங்குவது குறித்தும் ஆலோசனை நடந்திருக்கிறது.

இதன்மூலம் மீண்டும் இஸ்லாமியர்களின் வாக்குகளை கவர்வதோடு திமுக செய்யாததை நாங்கள் செய்திருக்கிறோம் என எதிர்வரும் தேர்தல்களில் இஸ்லாமிய மக்களிடம் பரப்புரை செய்யவும் இ.பி.எஸ்.

திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அந்த வகையில் எம்.ஜி.ஆர். காலத்து சீனியரான தமிழ் மகன் உசேன் பெயர் இதில் பேசு பொருளாக உள்ளது.

அதிமுக அவைத்தலைவர்

அதிமுக அவைத்தலைவர் பதவி என்பது கட்சியின் பொதுக்குழு, செயற்குழு கூட்டங்களை வழிநடத்தக் கூடிய அதிகாரம் பெற்றது. இதேபோல் வேட்பாளர் தேர்வின் போது தலைமையுடன் ஒன்றாக அமர்ந்து நேர்காணல் நடத்தும் பெருமையும் அதிமுக அவைத் தலைவர் பதவிக்கு இருக்கிறது. இதனால் இந்தப் பதவிக்கு அதிமுக சீனியர்கள் மத்தியில் கடும் போட்டி நிலவுகிறது.

யாரெல்லாம் போட்டி

யாரெல்லாம் அதிமுக அவைத் தலைவர் பதவிக்கான போட்டியில் இருக்கிறார்கள் என்று பார்த்தால் பெரிய பட்டியலே நீள்கிறது. செங்கோட்டையன், செம்மலை, திண்டுக்கல் சீனிவாசன், ஜெயக்குமார், தமிழ்மகன் உசேன், அன்வர் ராஜா என சீனியர்கள் பெயர் வரிசை கட்டி நிற்கின்றன. இதில் குறிப்பிட்ட சமுதாயத்தினருக்கு மட்டுமே அதிமுகவில் முன்னுரிமை என்ற வாதத்தை உடைத்தெறியும் வகையில் செயல்பட விரும்புகிறது அதிமுக தலைமை.

சீனியர்கள்

அந்த வகையில் எம்.ஜி.ஆர். காலத்து சீனியரும், ஓ.பி.எஸ். மற்றும் இ.பி.எஸ். ஆகிய இருவருக்கும் இசைந்து நடப்பவருமான தமிழ்மகன் உசேனின் பெயர் அதிமுக அவைத்தலைவர் ரேஸில் பரிசீலிக்கப்பட்டு வருகிறது. அன்வர் ராஜாவை பொறுத்தவரை சற்று தடாலடி கருத்துக்களை கூறுபவர் என்பதால் தமிழ் மகன் உசேன் போட்டியில் முந்துகிறார்.

ஆலோசனை

இஸ்லாமியர் ஒருவருக்கு அதிமுகவில் உயர்ந்த பதவியை கொடுப்பதன் மூலம் அதை வைத்து திமுகவுக்கு எதிரான அரசியல் ஆட்டத்தை நடத்தலாம் என கணக்குப் போடுகிறார் எடப்பாடி பழனிசாமி.இஸ்லாமியர்களையும் அவர்களது வாக்குகளையும் விட்டு அதிமுக விலகிச் செல்வதாக ஏற்கனவே விமர்சனங்கள் உள்ள நிலையில் அவைத் தலைவர் பதவிக் கொடுப்பதன் மூலம் அதனை சரிகட்ட முடியுமா என ஆலோசிக்கிறார் இ.பி.எஸ்.

வாய்ப்பு

தமிழ் மகன் உசேனை பொறுத்தவரை ஏற்கனவே வக்பு வாரியத் தலைவராக இருந்தவர். வக்பு போர்டு கல்லூரி பணி நியமன விவகாரத்தில் அவரது பெயர் சர்ச்சையில் சிக்கியது மட்டும் அவருக்கான மைனஸாக பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக அதிமுக தலைமை வேறு முடிவெடுத்தால், முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார் அல்லது செம்மலைக்கு வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

தேர்வு செய்யும் அதிகாரம்

இதனிடையே இன்னொரு தகவலும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. அதிமுக ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் இ.பி.எஸ்., ஓ.பி.எஸ். ஆகிய இருவராலும் அதிமுக அவைத்தலைவரை நியமிக்க முடியுமா என்பது தான். இந்த விவகாரத்தில் பெங்களூரு புகழேந்தியும், கோவை கே.சி.பழனிசாமியும் மேற்கொண்டு வரும் சட்டப்போராட்டத்தையும் கவனிக்க வேண்டியுள்ளது.

%d bloggers like this: