ஓபிஎஸ்ஸை வைத்து சசிகலா போடும் மறைமுக திட்டம்?.. அடுத்த 10 நாட்கள்.. அதிமுகவில் என்ன நடக்கும்?

அதிமுகவில் அடுத்த 10 நாட்கள் மிக முக்கியமானதாக இருக்கும் என்று அரசியல் வட்டாரத்தில் பேச்சுக்கள் அடிபடுகின்றன.

சிறையில் இருந்து வெளியே வந்ததும் தமிழ்நாடு அரசியலில் பெரிய புயலை கிளப்புவார் என்று எதிர்பார்க்கப்பட்டவர் சசிகலா. ஆனால் ஏனோ சரியாக தேர்தல் நடக்கும் நேரம் பார்த்து அரசியலில் இருந்து ஒதுங்கி இருப்பதாக அறிவித்தார். அதிமுகவின் வாக்குகளை சிதறடிக்க கூடாது என்ற எண்ணத்தில் இவர் இந்த முடிவை எடுத்ததாக அப்போது கூறப்பட்டது.

கணித்தபடியே தேர்தலுக்கு பின் மீண்டும் அரசியலுக்குள் காலடி எடுத்த வைத்த சசிகலா அதிமுகவை மீட்க வேண்டும் என்று போன் கால் மூலம் நிர்வாகிகள் பலரிடம் பேசி வந்தார். அதிமுக, அமமுக நிர்வாகிகள் பலரிடம் இவர் பேசிய ஆடியோக்களும் இணையத்தில் வைரலாகியது. அதிமுகவை மீட்க வேண்டும், கட்சியை காக்க வேண்டும் என்று சசிகலா ஒவ்வொரு போன் காலிலும் சொன்னார்

ஆனால் சசிகலா அதிமுகவில் பெரிய பூகம்பம் எதையும் கிளப்பவில்லை. தினமும் ஒரு ஆடியோ என்று கொரோனா காலத்தில் பல ஆடியோ லான்ச்களை சசிகலா நிகழ்த்திவிட்டார். தொடக்கத்தில் வெளியான சில ஆடியோக்களை தவிர வேறு எதுவும் பெரிதாக அதிமுக தரப்பில் சலசலப்பை ஏற்படுத்தவில்லை. அவரின் போன் கால் ஆடியோ எதுவும் பெரிதாக அதன்பின் கவனிக்கப்படவில்லை. அரசியல் சுற்றுப்பயணம் மேற்கொள்வேன் என்று இவர் கூறியது எல்லாம் புலி வருது கதையாக கடைசி வரை நடக்கவே இல்லை.

எடப்பாடி, சிவி சண்முகம் போன்றவர்கள் எதிர்ப்பு

அதிமுகவிலும் இவருக்கான கிரீன் சிக்னல் கிடைக்கவில்லை. ஓ.பி.எஸ் கொஞ்சம் சசிகலாவுக்கு ஆதரவு போல இருக்கிறார் என்று தகவல்கள் வந்தாலும் அவர் வெளிப்படையாக எதுவும் தெரிவிக்கவில்லை. மற்றபடி எடப்பாடி பழனிச்சாமி, சிவி சண்முகம், ஜெயக்குமார் உள்ளிட்ட பலரும் சசிகலாவை வெளிப்படையாக எதிர்த்தனர். சசிகலாவோடு போனில் பேசிய எல்லோரும் அடுத்தடுத்து கட்சியில் இருந்தும் நீக்கப்பட்டனர். இதனால் சசிகலாவிற்கு அப்போது அதிமுகவில் கதவுகள் அடைக்கப்பட்டன.

நெருக்கம் ஆனார்

அதன்பின் ஒதுங்கி இருந்த சசிகலா தற்போது மீண்டும் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கி உள்ளார் என்று கூறப்படுகிறது. ஓ பன்னீர்செல்வம் மனைவி விஜயலட்சுமி மரணத்தின் போது ஓபிஎஸ்ஸை மருத்துவமனைக்கே சென்று சசிகலா சந்தித்தார். அப்போது சசிகலாவின் வருகை தெரிந்து ஓ பன்னீர்செல்வம் சில நிமிடம் மருத்துவமனையில் கூடுதலாக காத்து இருந்ததும் குறிப்பிடத்தக்கது. இந்த சந்திப்பு ஓ பன்னீர்செல்வம் சசிகலா இடையே கொஞ்சம் கசப்பை மறந்து, பிணைப்பை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. அதிமுகவின் சில முக்கிய நிர்வாகிகள் சிலரும்.. சசிகலாவை மீண்டும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று முணுமுணுத்ததாக கூறப்படுகிறது.

கிரீன் சிக்னல்

ஓ பன்னீர்செல்வம் ஆதரவாளர்களிடம் மட்டுமின்றி கட்சி மீது அதிருப்தியாக இருக்கும் வேறு சில நிர்வாகிகள் மத்தியிலும் சசிகலாவின் மதிப்பு உயர்ந்து உள்ளதாக பேச்சு அடிபடுகிறது. திமுக அரசு கேஸ் மேல் கேஸ் போடுகிறது. ஆனால் இபிஎஸ், ஓபிஎஸ் எதுவுமே செய்யவில்லை. சசிகலா இருந்தாலாவது ஏதாவது செய்து இருப்பார் என்ற மனநிலைக்கு சில அதிமுக தலைகள் சென்றுவிட்டதாகவும் கூறப்படுகிறது. இபிஎஸ்ஸே கோடநாடு வழக்கு டென்ஷனில் இருக்கிறார். அவர் எங்கே நம்மை காப்பாற்ற போகிறார் என்று அதிமுக மாஜி அமைச்சர்கள் சிலர் புலம்பி வருகிறார்களாம். இந்த அதிருப்தியை பயன்படுத்திதான் அதிமுகவிற்குள் நுழைய முடியுமா என்று சசிகலா நினைக்கிறாராம்.

சசிகலா பிளான் என்ன?

கட்சிக்குள் தலைமைக்கு எதிராக நிலவும் அதிருப்தியை பயன்படுத்தி கட்சிக்குள் நுழைய வாய்ப்பை எதிர்பார்த்துக்கொண்டு இருக்கிறார். எல்லோரும் ஒற்றுமையாக இருந்தால் கட்சியை காத்து ஆட்சியை பிடிக்கலாம். நமது எதிரி திமுகதான்.. நமக்குள்ளேயே சண்டை போட கூடாது என்று சசிகலா அதிமுக தலைகளுக்கு தகவல் அனுப்பி வருவதாகவும் கூறப்படுகிறது. இம்மாதம் 16ஆம் தேதி ஜெயலலிதா நினைவிடம் செல்லும் சசிகலா தனக்கு அந்த நாளில் இருந்து அதிமுகவில் மவுசு கூடும் என்று எதிர்பார்த்துக்கொண்டு இருக்கிறாராம். அக்டோபர் 17ம் தேதி அதிமுக தொடங்கி 50 வருட விழா நடக்கிறது. இந்த நாளில் சென்னை தியாகராயநகரில் உள்ள எம்.ஜி.ஆர். நினைவு இல்லத்திற்கும், ராமாவரத்தில் உள்ள எம்.ஜி.ஆர். இல்லத்திற்கும் சசிகலா செல்கிறார்.

10 நாட்களில் சுற்றுப்பயணம்

இதன் மூலம் அதிமுக நிர்வாகிகள் கவனத்தை தன் பக்கம் திருப்பலாம் என்ற நினைப்பில் சசிகலா இருப்பதாக கூறப்படுகிறது. அதோடு ஓ பன்னீர்செல்வம் மூலம் அதிமுகவிற்கு நுழைய மறைமுக திட்டங்கள் சிலவற்றையும் சசிகலா தீட்டி வருவதாக அரசியல் வட்டாரத்தில் பேச்சுக்கள் அடிபடுகின்றன. ஓ பன்னீர்செல்வம் நம்மை ஏற்றுக்கொள்ள வாய்ப்பு உள்ளது. அவர் மூலமாக கட்சிக்குள் கண்டிப்பாக இணைய முடியும். 17ம் தேதிக்கு பின் இது நடக்கும் என்று சசிகலா தீவிரமாக நம்பி இருக்கிறாராம்.

ஓபிஎஸ் பிளான் என்ன?

ஆனால், சசிகலா வருவதில் சிக்கல் இல்லை. ஆனால் அவர் மீண்டும் கட்சிக்குள் மொத்தமாக ஆதிக்கம் செலுத்த கூடாது. அவரும் ஒரு தலைவராக இருக்கலாம். அதிகார பகிர்வு இருக்கும். ஆனால் அவர் மட்டுமே அதிகாரம் பொருந்திய நபராக இருக்க முடியாது ஓ பன்னீர்செல்வம் தரப்பு கருதுகிறதாம். இதற்கெல்லாம் ஒப்புக்கொண்டால் சசிகலாவுக்கு கிரீன் சிக்னல் கொடுக்கப்பட வாய்ப்பு உள்ளதாக பேச்சுக்கள் அடிபடுகின்றன.

எடப்பாடி பிளான் என்ன?

சசிகலாவை தொடக்கத்தில் கடுமையாக எதிர்த்த எடப்பாடி பழனிசாமியும் இப்போது கொஞ்சம் அமைதியாகிவிட்டார். சசிகலா விஷயம் என்று இல்லை பொதுவாகவே கடந்த சில நாட்களாக எடப்பாடி ஏனோ அமைதியாக இருக்கிறார். அதிமுகவின் 50ம் ஆண்டு விழாவின் போது இவர் முக்கிய விஷயங்களை பேசுவாரா என்பதை பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும். இதனால் அதிமுகவில் அடுத்த 10 நாட்கள் மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. சைலன்ட் மோடில் இருந்த சசிகலா இனி வரும் நாட்களில் மீண்டும் முக்கியமான சில அரசியல் மூவ்களை செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

%d bloggers like this: