நம் சாப்பாட்டு வரிசையின் ரகசியம் என்ன ….? தமிழர்களின் உணவில் அறிவியல்….. முழு விளக்கம் இதோ….!!

கிடைத்ததை சாப்பிடும் வழக்கம் மற்றும் சுவைக்காக மட்டுமே உண்ணக்கூடிய வகையில் அமைக்கப்பட்டது இல்லை நம் தமிழ் பண்பாட்டு உணவு முறை. முதலில் எதை உண்ண வேண்டும்? இறுதியில் எதை உண்ண வேண்டும்? அதனால் உடலில் ஏற்படும் மாற்றங்கள் என்ன? என்று ஆராய்ந்து அதற்கேற்ப உணவு முறைகளை நம் முன்னோர்கள் வகுத்துள்ளனர்.

அதன்படி, தேரையர் சித்தர் எழுதிய, “பதார்த்த குண சிந்தாமணி” என்ற நூலில் நாம் குடிக்கும் தண்ணீரிலிருந்து, பால், தயிர், பருப்பு, அரிசி, தானியங்கள் என ஒவ்வொன்றிற்கும் என்னென்ன உணவு? ஒவ்வொன்றிலும் எத்தனை வகை உள்ளது? என்று வகுத்து கூறியிருக்கிறார்கள். நம், அனைவருக்கும் சாப்பிட்டு முடித்தவுடன் ஏதாவது ஒரு இனிப்பு சாப்பிட வேண்டும் என்று தோன்றும்.

ஆனால், அது எவ்வளவு பெரிய தவறு? என்று நமக்கு தெரிவதில்லை.

நாம் உணவு உட்கொள்ளும் போது, இனிப்பை, எப்போது சாப்பிட வேண்டும்? என்று பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றான ஆசாரக்கோவையின் 25-வது பாடலில், புலவர் பெருவாயின் முள்ளியார் கூறியிருக்கிறார். தமிழர்களின் உணவு சூட்சமம், வாதம், பித்தம் மற்றும் கபம் என்ற மூன்றை அடிப்படையாகக் கொண்டது.

இந்த மூன்றும் தான், நம் உடலின் ஒவ்வொரு அசைவையும் நகர்த்தக்கூடிய உயிர்த்தாதுக்கள். இவை சரியான அளவில் இருந்தால் தான் உடல் ஆரோக்கியமாக இருக்கும். இந்த வாதமானது, தசை, மூட்டுக்கள் மற்றும் எலும்பு போன்றவற்றின் பணி, சீரான சுவாசம் மற்றும் சரியாக மலம் கழிப்பது போன்றவற்றை செய்கிறது.

பித்தம் என்பது, அதன் வெப்பத்தை வைத்து உடலை காப்பது, இரத்த ஓட்டம், மன ஓட்டம் மற்றும் சீரண சுரப்புகள் போன்றவற்றை கவனிக்கிறது. கபம், உடல் முழுக்க தேவையான இடத்தில் நீர்த்துவத்தை கொடுத்து, அனைத்து பணியையும் தடையில்லாமல் செய்ய உதவி புரிகிறது. இந்த மூன்றின் அளவு அதிகமானால் அல்லது குறைந்தால் அதற்குரிய நோய்கள் நம் உடலில் உண்டாகிறது.

நாம் உட்கொள்ளும் ஒவ்வொரு சுவையும், ஒவ்வொரு தாதுக்களை உருவாக்கும். எனவே தான், நம் முன்னோர்கள், அறுசுவைகளான, இனிப்பு, புளிப்பு, கார்ப்பு, துவர்ப்பு, கசப்பு மற்றும் உவர்ப்பு என்று அனைத்தையும் சேர்த்து சாப்பிட்டு வந்திருக்கிறார்கள். அனைத்து சுவைகளையும், உணவில் சேர்த்துக் கொண்டால், கபம், வாதம் மற்றும் பித்தம் போன்ற திரி தோஷங்கள் சரியான அளவில் உற்பத்தியாகி நம் உடலை ஆரோக்கியமாக வைத்து கொள்ளும்.

ஆசாரக்கோவையின் 25-வது பாடலில் எந்த சுவையை முதலில் உண்ண வேண்டும்? எந்த சுவையை இறுதியில் உண்ண வேண்டும்? என்று வரையறை செய்துள்ளனர். இப்பாடலில் கூறப்பட்டிருக்கும் “கைப்பன எல்லாம் கடை” என்பது கசப்பான உணவுகளை இறுதியில் உண்ண வேண்டும் என்பதாகும். “தலை தித்திப்பு” என்றால் இனிப்பை முதலில் உண்ண வேண்டும் என்பதாகும். மேலும், மற்ற சுவைகளை இடையில் உண்ண வேண்டும். இது எதற்காக? எனில், எச்சில் எனப்படும் நம் உமிழ் நீர், செரிமானத்திற்கு உதவும்.

எனவே தான், நன்கு மென்று உமிழ்நீருடன் கலந்து உண்ண வேண்டும் என்று கூறுகின்றனர். அதாவது, இனிப்பை பார்த்தால், நம்மை அறியாமல், நமக்கு உமிழ்நீர் சுரக்கும். அதற்காகத்தான் இனிப்பு சுவையை முதலில் சாப்பிட வேண்டும் என்று நம் முன்னோர்கள் கூறுகிறார்கள். உணவுக்கு பின், நம் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரித்துவிடும். அதை குறைப்பதற்காக கசப்பான உணவை இறுதியில் சாப்பிட வேண்டும் என்ற மருத்துவ உண்மை தான் இதற்கு காரணம்.

நமது உணவு பரிமாறும் முறையில், இலையில் முதலில் இனிப்பு வைக்க காரணமும் இது தான். ஆனால், நாம் வயிறு நிறைய சாப்பிட்டாலும், இறுதியாக இனிப்பு வகைகளுக்கு என்று எப்போதும் ஒரு இடம் வைத்திருக்கிறோம். உணவின் இறுதியில் இனிப்பை எடுத்து கொண்டால் ரத்தத்தின் சர்க்கரை அளவு அதிகமாகும்.

அது மட்டுமல்லாமல், செரிமானத்தையும் தாமதப்படுத்தும். நாளடைவில், சர்க்கரை நோய், உடல் பருமன், இதய நோய் வரக்கூடிய வாய்ப்புகள் இருக்கிறது. மேலும் உணவுக்குப் பிறகு இனிப்பை சாப்பிடும் பழக்கம் கொண்டவர்கள், அந்த பழக்கத்திற்கு அடிமையாகி விடுவார்களாம். அதிலிருந்து விடுபடுவது சிரமம் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

அதாவது, இந்த பழக்கம் மேல்நாட்டிலிருந்து வந்தது. நமது வழக்கங்களை விட்டு, இந்த மேல்நாட்டு கலாச்சாரத்திற்கு அடிமையாகியுள்ளோம் என்பது வேதனையானது. நமது வழக்கப்படி, வாழை இலையில் தான் உணவு பரிமாறுவார்கள். இதில் உணவு எப்படி பரிமாற வேண்டும்? என்பதற்கு ஒரு நிகழ்ச்சி நிரல் நடக்கும்.

குறுகலான நுனிப்பகுதி சாப்பிடுபவர்களின் இடதுப்பக்கத்திலும், விரிந்த பகுதி வலதுப்பக்கமும் வருமாறு இலையை போட வேண்டும். உப்பு, ஊறுகாய், இனிப்பு, அப்பளம் போன்றவை இலையின் குறுகலான பகுதியில், அதாவது இடப்பக்கம் பரிமாறப்படும். ஏனெனில், இவையெல்லாம் அதிக அளவில் எடுத்துக்கொள்ளக் கூடாத உணவுகள்.

அதாவது, ஒரே இடத்தில் வைத்து வலது கையால், நாம் சாப்பிடும் போதும் ஒவ்வொரு முறையும் இடப்பக்கம் கை போகாது என்று சிந்தித்திருக்கிறார்கள் நம் முன்னோர்கள். காய்கறிகள், கூட்டு, அன்னம் போன்ற உணவுகள் அதிகமாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக அகலமாக உள்ள வலப்புறத்தில் பரிமாறப்படுகிறது.

இலையை, நன்றாக நாம் கவனித்துப் பார்த்தால், அதன் அகலமான இடத்தில் குளோரோபில், என்ற பச்சயம் அதிகமாக இருக்கும். அது, உணவை எளிதில் ஜீரணமடைய செய்வதுடன் வயிற்றுப்புண்களை ஆற்றும் தன்மை உடையது. சூடான உணவுகள் பரிமாறப்படும் போது, அந்த இடத்தில் அதிக அளவில் உள்ள பாலிபினால்ஸ் உணவோடு கலந்து, ஆண்டி-ஆக்ஸிடென்டாக செயல்பட்டு, நம் உடம்பில் உள்ள நச்சுத் தன்மையை குறைத்து உடல் செல்களை சிதைவு ஏற்படாமல் அதிக நாட்கள் இளமையோடு இருக்க செய்யும்.

இதையெல்லாம் எப்படி நம் முன்னோர்கள் அறிந்தார்கள் என்ற ஆச்சரியம் ஏற்படுகிறது. பல காலங்களாக, நாம் உண்ணும் போது ஆரம்பத்தில் சாதத்துடன் பருப்பும் நெய்யும் கலந்து சாப்பிட்டு, பிறகு கூட்டு, குழம்பு, ரசம் என்று உண்டு, இறுதியாக தயிர் சோறு சாப்பிடுகிறோம். எதற்காக இந்த வரிசையில் சாப்பிடுகிறோம்? இதற்கு பதிலளிக்கிறது, “பதார்த்த குண சிந்தாமணி”.

நம் உடலின் சீரண மண்டலத்தை படிப்படியாக தூண்டும் விதமாகதான் நம் உணவு பரிமாறும் முறை அமைந்திருக்கிறது. செரிமானத்திற்கு தேவையான உமிழ்நீரைச் சுரக்கச் செய்யும் இனிப்பை முதலில் பரிமாறி, செரிக்கும் தன்மை குறைந்த பொருட்கள் மற்றும் உணவு குழாயைத் தடுக்கும் பொருட்களான பருப்பு மற்றும் நெய் அடுத்ததாக பரிமாறப்படுகிறது.

நீர் பற்றுள்ள மலைநாட்டு துவரம்பருப்பை சமைத்து, பசு நெய்யுடன் கலந்து உண்டால் பிடி அன்னத்திற்கு பிடி சதை வளருமாம். எப்போதும், பருப்பை எதற்காக நெய்யோடு சேர்த்து பரிமாறுகின்றனர்? அதற்கு காரணம் இருக்கிறது. உண்ணத் தொடங்கும் போது, நெய் சேர்த்து உண்பதால், துவரம்பருப்பின் சூடு, மலக்கட்டு அனைத்தும் நீங்கி, நினைவாற்றல், அழகு மற்றும் கண்களுக்கு ஒளி உண்டாகும்.

இதற்கு அடுத்து பரிமாறப்படும் காய்கறி மற்றும் குழம்பு வகைகள், வயிற்றை நிரம்பச் செய்யும். இதுவரை சாப்பிட்ட உணவுகளில் ஏதேனும் பிழை ஏற்பட்டாலோ அல்லது ஒன்றாக சேர்த்து சாப்பிடக் கூடாத உணவுகளை சாப்பிட்டாலோ, அதில் குறிப்பிட்ட ஒரு உணவை அதிகமாக உண்டாலோ நம் உடலில் மாறுபாடுகள் ஏற்படும். அதை சரி செய்வதற்காகத்தான் ரசம் பரிமாறப்படுகிறது.

பதார்த்த குண சிந்தாமணி:1377-வது பாடலில், வாழை, பலா, மா போன்ற முக்கனிகளையும், பால், நெய் மற்றும் கறிகளையும் அளவுக்கு மீறி புசித்தால், அக்கினி மாந்தம் உண்டாகும். அதாவது, வயிறு பொருமல், செரிமான கோளாறு போன்ற தொந்தரவுகள் ஏற்படும். அதனை சரி செய்வதற்காக துவரம்பருப்பை, வடித்த நீரில் பூண்டு, மிளகு சேர்த்து வைக்கப்பட்ட ரசத்தை நல்ல காய்களுடன் சேர்த்து உண்டால் அக்கினி மாந்தமும், வாதமும் நீங்கும் என்பது இப்பாடலின் பொருள். இறுதியாக, தயிரை எதற்காக பரிமாறுகிறார்கள்? என்பதை அழகாகக் கூறுகிறது பதார்த்த குண சிந்தாமணி: 1395-வது பாடல்.

அதாவது, அதிகமாக மசாலாக்கள் சேர்க்கப்பட்ட உணவால், குடல் மற்றும் இரைப்பையில் புண் ஏற்படும். அதனால் தான் உணவின் இறுதியில் புளித்த தயிரும், உப்பும் சேரும்போது வெப்பத்தை உண்டாக்கி அந்த தயிருக்கு, முதலில் சாப்பிட்ட நெய்யுக்கும் இடையிலான சகல பதார்த்தங்களையும் ஜீரணமடைய செய்யும்.

தற்போதைய மருத்துவர்களின் கூற்று படி, தயிரில் பாக்டீரியா என்னும் நுண்ணுயிரிகள் உள்ளது. அவை நாம் உண்ணும் உணவின் செரிமானத்திற்கு உதவும். காரமான உணவுகளை உட்கொள்ளும் போது, நமக்கு நெஞ்செரிச்சல் உருவாகலாம். அதை கட்டுப்படுத்தி, அல்சர் போன்ற நோயிலிருந்து நம்மை காத்துக் கொள்வதற்காகத்தான் தயிரை உணவின் இறுதியில் உண்கிறோம்.

நாம் சாப்பிடும் உணவு எதுவாக இருந்தாலும், அதில், எண்ணெய், நெய் அல்லது தண்ணீர் போன்ற ஏதேனும் ஒரு ஈரப்பசை கலந்திருக்கும். அதாவது, நாம் உண்ணும் அன்னத்தில் சாம்பார், ரசம் தயிர் என்று ஏதேனும் திரவ ஆதாரங்களை கலந்து தான் உண்கிறோம். மற்ற உணவு வகைகள் மற்றும் சிற்றுண்டிகளும் அவ்வாறு ஈரப்பசை கொண்டதாகத்தான் இருக்கும்.

அவ்வாறு இருந்தால் தான், அது உணவுக்குழாயில் இயல்பாக பயணித்து வயிற்றுக்குப் போகும். ஆனால், இன்று நாம் விரும்பி உண்ணும் துரித உணவுகளின் தன்மை, தொண்டைக்கு கீழ் இறங்குவதற்கு சிரமப்படுகிறது. எனவே தான், அவ்வாறான உணவுகளை விற்பனை செய்யும் நிறுவனங்கள், அந்த உணவை விழுங்குவதற்கு உதவி செய்ய குளிர்பானங்களையும் சேர்த்து ஆஃபர் என்று இலவசமாக தருகிறார்கள்.

இதனை அறியாமல் நாம், இலவசமாக கிடைக்கிறது என்று வாங்கிவிடுகிறோம். உண்பதற்கு எப்படி தயாராக வேண்டும்? எந்த வரிசையில் உண்ண வேண்டும்? என்பதை நம் முன்னோர்களே அழகாக கூறியிருக்கிறார்கள். அதன் படி உண்டு, ஆரோக்கியமான வாழ்வை வாழ்வோம்

%d bloggers like this: