அ.தி.மு.க நமக்கு தேவை! – ஸ்டாலின் புதுக்கணக்கு…

அலுவலகத்தில் ஆயுத பூஜை நடந்துகொண்டிருந்தபோது என்ட்ரி கொடுத்த கழுகாரிடம், பொரி கடலையைத் தட்டில் நீட்டியபடியே ‘‘உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளால் அ.தி.மு.க-வுக்குள் கடும்

புகைச்சல்கள் கிளம்பியுள்ளன போலவே?’’ என்று கேட்டோம். ‘‘அது குறித்துத்தான் உமது நிருபர் படை கவர் ஸ்டோரியில் விரிவாக அலசியிருக்கிறார்களே… அலசிய அலசலில் வேட்டியே டார் டாராகக் கிழிந்து தொங்கியிருக்கிறதே!” என்ற அட்டை ஓவியத்தைக் காட்டி சிரித்தபடியே செய்திகளுக்குள் தாவினார் கழுகார்…

“ஊரக உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு பன்னீர் தனக்கு நெருக்கமான ஒருவரிடம், ‘இனியாவது கட்சிக்கு நல்ல காலம் பிறக்கட்டும்’ என்று சொல்லியிருக்கிறார். எதற்காக இப்படிச் சொன்னார் என்று அந்த நபரும் புரியாமல் விழித்திருக்கிறார். ஆனால் ஆளும் தரப்பிலோ, ‘அ.தி.மு.க-வை மொத்தமாக வீழ்த்திவிடக் கூடாது; அந்தக் கட்சி நமக்குத் தேவை… பலமிழந்த எதிர்க்கட்சியாக வைத்திருந்தால்தான் பா.ஜ.க-வின் வளர்ச்சிக்கு செக் வைக்க முடியும்’ என்று கருணாநிதி பாணியில் சாணக்கியக் கணக்கு போடுகிறார்கள். அதேநேரம் எடப்பாடி, வேலுமணி மீதான ஆக்‌ஷனிலும் மாற்றம் இல்லையாம். கேட்டால், ‘அது வேறு கணக்கு… இது வேறு கணக்கு…’ என்று கண்சிமிட்டுகிறார்கள்.’’

‘‘ஓ… அதுதான் வேலுமணிக்கு நெருக்கடி ஆரம்பித்துவிட்டதோ!’’

‘‘ம்ம்… ‘எனக்கும் டெண்டர் முறைகேடுகளுக்கும் தொடர்பில்லை; வழக்கைத் தள்ளுபடி செய்ய வேண்டும்’ என்று வேலுமணி நீதிமன்றப் படியேறியிருக்கிறார். கடந்த அ.தி.மு.க ஆட்சியின்போது, ‘சென்னை, கோவை மாநகராட்சிகளில் பல்வேறு பணிகளுக்கு டெண்டர் வழங்கியதில் முறைகேடுகள் நடந்திருப்பதால், வேலுமணிக்கு எதிராக வழக்கு பதிவுசெய்ய வேண்டும்’ என்று அறப்போர் இயக்கம் சார்பிலும், தி.மு.க சார்பிலும் உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகளை விசாரித்த உயர் நீதிமன்றம், ஐ.பி.எஸ் அதிகாரி பொன்னி தலைமையில் குழு அமைத்து விசாரித்து, அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தது. அந்த விசாரணை முடிவில், வழக்கு பதிவுசெய்ய ஆரம்பகட்ட முகாந்திரம் ஏதுமில்லை என்று அறிக்கை அளிக்கப்பட்டது.’’

‘‘அதுதான் தெரியுமே…’’

‘‘இன்னும் முடியவில்லை கேளும்… அப்போதிருந்த ஆளும் தரப்பின் அழுத்தத்தாலேயே பொன்னியால், வேலுமணிக்கு எதிராக அறிக்கை தாக்கல் செய்ய முடியவில்லை என்று தி.மு.க-வுக்குத் தகவல் கிடைத்துள்ளதாம். கோவையில் விசாரணை நடந்தபோது, பொன்னியை கார்னர் செய்யும் வகையில் அவரின் சகோதரரை கோவை மாவட்டத்தில் போஸ்ட்டிங் போட்டு, அவர் மூலம் நெருக்கடி கொடுத்து வழக்கை ஒன்றுமில்லாமல் செய்துவிட்டார் வேலுமணி என்கிற தகவலும் தி.மு.க-வுக்கு எட்டியுள்ளது. ஆட்சி மாறிய பின்னர், லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநர் கந்தசாமி இந்த வழக்கு குறித்து சில விவரங்களை பொன்னியிடம் கேட்க, அவரும் அனைத்தையும் போட்டு உடைத்துவிட்டார். இதன் பிறகே இந்த வழக்கில் மீண்டும் விசாரணையைத் தொடங்க அரசு முடிவெடுத்தது. இதை எதிர்த்துத்தான் வேலுமணி நீதிமன்றத்துக்குப் போயிருக்கிறார். வேலுமணிக்கு இந்த வழக்கு வேட்டாக அமையும் என்கிறார்கள் லஞ்ச ஒழிப்புத்துறையினர்.’’

ஓஹோ!’’

‘‘ஒருபுறம் வேலுமணிக்கு எதிராக வேலைகள் நடந்துவரும் நேரத்தில், தங்கமணிக்கு எதிராகவும் சில ஆவணங்கள் தயாராகிவருகின்றனவாம். கடந்த ஆட்சியில் மின் உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு கணக்கு வழக்கில்லாமல் பணம் சென்றுள்ளது. ‘மின்துறையே நஷ்டத்தில் இருக்கும் நேரத்தில், இந்த நிறுவனங்களுக்குப் பணம் சென்றது எப்படி… செயல்படாத நிறுவனங்களுடன் அரசுத் தரப்பு போட்ட ஒப்பந்தங்கள் எதற்காக நீட்டிக்கப்பட்டன?’ என்ற விசாரணையை ஆரம்பித்துள்ளது தி.மு.க அரசு. இது தொடர்பாக தங்கமணிக்கும் வில்லங்கம் காத்திருக்கிறது என்கிறார்கள்.’’

‘‘முன்னாள் ஆட்சியாளர்களின் குளறுபடிகளை விசாரிப்பது இருக்கட்டும்… இந்த ஆட்சியில் எல்லாம் ஒழுங்காக நடக்கின்றனவா என்ன?”

‘‘நெடுஞ்சாலைத்துறையிலிருந்து கிளம்பும் புகார்களைத்தானே சொல்கிறீர்கள்… ஏற்கெனவே கமிஷன் விவகாரம் பெரிதாக எழுந்த நிலையில், இப்போது பொறியாளர் பணியிடங்களுக்கான நியமனம் மற்றும் இடமாற்றங்களுக்கான டீலிங்குகள் கனஜோராக நடக்கின்றன. முருகக் கடவுள் பெயரைக்கொண்ட அதிகாரி, சென்னையில் இருந்துகொண்டு மற்ற மாவட்டங்களுக்கு வான்டடாக போன் செய்து ‘டிரான்ஸ்ஃபர் வேண்டுமா?’ என்று கேட்டுவருகிறாராம். நியமனங்களுக்கு 20 ‘எல்’ முதல் ஒரு ‘சி’ வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முருகக் கடவுள் அதிகாரி மூலம் விண்ணப்பித்த பிறகு, அடுத்ததாகத் துறை முக்கியஸ்தரின் உதவியாளரான பேக்கரியைப் புனைபெயராகக் கொண்ட ஒருவரிடம் அனுப்புகிறார்கள். கிண்டி ‘பவன்’ இல்லத்துக்கு எதிரிலுள்ள ஒரு கடையில்தான் பேக்கரி நபர் இருப்பாராம். அங்கு சென்று அவரிடம் பேசிவிட்டால் போதுமாம்… கைநீட்டும் இடத்தில் துறை முக்கியஸ்தர் கையெழுத்து போட்டுவிடுவாராம்.’’

‘‘வாரியப் பதவிகளுக்கான அறிவிப்பு விரைவில் வரப்போகிறதாமே?’’

‘‘தி.மு.க ஆட்சிக்கு வந்து ஐந்து மாதங்களைத் தாண்டிவிட்டதால், ‘இனியும் வாரியப் பதவிகளைத் தள்ளிப்போட வேண்டாம்’ என்று முதல்வர் முடிவெடுத்துள்ளார். கூட்டணிக் கட்சிகளுக்கும் பதவிகளில் பங்கு உண்டாம். குறிப்பாக, மனக்கசப்பிலிருக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினரைச் சாந்தப்படுத்த அவர்களுக்கு வாரியப் பதவி ஒன்றையும், தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் துணைத் தலைவர் பதவியையும் கொடுக்க தி.மு.க தயாராகிவிட்டது’’ என்று கழுகார் சொன்னபோது, நிருபர் ஒருவரின் மொபைலில், ‘காக்கிநாடா உனக்கு… பாவாடை நாடா எனக்கு’ என்கிற விவேக்கின் காமெடி டயலாக் ரிங் டோனாக ஒலித்தது! அவரை ஏற இறங்கப் பார்த்தபடியே செய்திகளைத் தொடர்ந்தார் கழுகார்…

இந்த டயலாக்கை கேட்டதும்தான் நினைவுக்கு வருகிறது… பாகம் பிரிப்பதில் சென்னை காக்கிகளுக்குள் பஞ்சாயத்து இன்னும் முடியவில்லை. சென்னை ஏர்போர்ட்டையும், புழல் சிறையையும் தக்கவைப்பதில் பிடிவாதமாக இருக்கிறது சென்னை காவல் ஆணையரகம். இன்னொரு குரூப்போ ஏர்போர்ட் தாம்பரத்துக்கும், புழல் சிறை ஆவடிக்கும் பங்கு பிரிக்கப்பட வேண்டும் என்று ஒற்றைக்காலில் நிற்கிறது. ‘பாரம்பர்யப் பெருமை… ஈகோ’ என்றெல்லாம் இந்த பாகம் பிரிக்கும் பஞ்சாயத்து இழுத்துக்கொண்டே போவதால் முதல்வர் தரப்பு தலைவலித் தைலம் தேடி தவிக்கிறதாம்!’’

‘‘ஐ.ஏ.எஸ் அதிகாரியை ஒருவழியாக தமிழகத்துக்கு வரவழைக்கிறார்கள்போல!’’

‘‘பிரதமர் அலுவலக இணைச் செயலாளராக உள்ள ஐ.ஏ.எஸ் அதிகாரியான அமுதாவைத் தமிழகத்துக்குத் திரும்ப அழைத்து, உள்துறை அல்லது சுகாதாரத்துறையைக் கொடுக்க முதல்வர் முடிவெடுத்துள்ளாராம். கருணாநிதி மறைவின்போது அமுதா மேற்கொண்ட பணிகளை மறக்காமல் நினைவில்வைத்திருந்த முதல்வர், இந்த முடிவை எடுத்திருக்கிறார் என்கிறார்கள். அமுதாவைத் தமிழகத்துக்கு அனுப்ப பிரதமர் அலுவலகத்திலும் பேசி ஒப்புதல் பெற்றுவிட்டதால், அடுத்த வாரமே சென்னை வருகிறார் அமுதா’’ என்ற கழுகார் கிளம்பும்போது வாட்ஸ்அப்பில் வந்த ஒரு தகவலைப் பார்த்துவிட்டு…

‘‘உள்ளாட்சியில் சீட் கிடைக்காத தி.மு.க நிர்வாகிகள், கூட்டுறவுப் பதவிகளுக்கான பந்தியில் அமர முட்டிமோதத் தொடங்கியிருக்கிறார்கள். அநேகமாக சங்கங்கள் கலைக்கப்படலாம். ‘சங்கமே அபராதத்துலதான் ஓடுது’ என்கிற காரணத்தைச் சுட்டிக்காட்டியே ஆளுங்கட்சியினர் நேரடியாக ஆதிக்கம் செலுத்துவதற்கான ஏற்பாடுகள் நடந்துவருகின்றன’’ என்றபடி சிறகுகளை விரித்தார் கழுகார்.

%d bloggers like this: