ஸ்டாலினின் சேலம் விசிட்… தாண்டவமாடிய அமைச்சர் நேரு!

ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படைத் தளபதி பிபின் ராவத் மற்றும் ராணுவ அதிகாரிகளுக்கு நாடாளுமன்றத்தில் மெளன அஞ்சலி செலுத்தும் காட்சிகள் டி.வி-யில் ஓடிக்கொண்டிருந்தன. அமைதியாக நுழைந்த கழுகார், இரண்டு நிமிடங்கள் மெளனமாக நின்று அஞ்சலி செலுத்தினார். தொண்டையைக்

கனைத்துக்கொண்டு அமர்ந்தவரிடம், “விபத்து பற்றி விரிவான கட்டுரை வருகிறது” என்று சொல்லிவிட்டு, “மூத்த அமைச்சர்கள் சிலர்மீது முதல்வர் அதிருப்தியில் உள்ளார் என்கிறார்களே?” என்று கேட்டோம்.
‘‘ஆமாம். மூத்த அமைச்சர்கள் சிலர் தங்கள் துறைகளில் சரிவரப் பணியாற்றவில்லை என்ற வருத்தம் சில மாதங்களாகவே முதல்வரிடம் இருக்கிறது. வெண்மைத்துறை அமைச்சர், மலையடிவார அமைச்சர், கொங்கு மண்டல பெண் அமைச்சர், முன்னொரு காலத்தில் தனக்காக கட்சிப் பதவியை விட்டுக்கொடுத்தவர் உள்ளிட்டவர்கள் துறைரீதியான பணிகளில் ஈடுபாடு காட்டவில்லையாம். இந்த நிலையில் மூத்த அமைச்சர் ஒருவர், ‘ஆட்சிக்கு வந்து ஆறு மாதங்களைக் கடந்துவிட்டோம். இனியும் அமைச்சரவை மாற்றம் நடக்கும் என்ற நம்பிக்கை இல்லை’ என்று தனக்கு நெருக்கமானவர்களிடம் சொல்ல, அந்தத் தகவல் முதல்வருக்கும் சென்றிருக்கிறது. ஏற்கெனவே அந்த அமைச்சர்மீது அதிருப்தியில் இருந்த முதல்வர், அவரை அழைத்து சூசகமாக ‘உள்ளாட்சித் தேர்தல் முடியும் வரை கொஞ்சம் பொறுங்கள். அதன் பிறகு ஓரிரு மாதங்களில் உதயநிதியை அமைச்சரவைக்குள் கொண்டுவரும்போது துறைகள் மாற்றப்படும். அப்போது உங்கள் துறையையும் மாற்றிவிடுகிறேன்’ என்று சொன்னாராம். இதையடுத்து, ‘ஏற்கெனவே சுமாரான துறையிலதான் அந்த அமைச்சர் இருக்காரு. அதைவிட டம்மியான துறையைக் கொடுக்கப் போறாங்க’ என்று நக்கலடிக்கிறார்கள் கட்சி நிர்வாகிகள்.”
‘‘அந்த அமைச்சருக்கு ‘பிபி’ எகிறாமல் இருந்தால் சரிதான்… நல்லம நாயுடு வீட்டில் திருட்டாமே!’’
‘‘ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் விசாரணை அதிகாரியாக இருந்த நல்லம நாயுடுவின் வீடு முதல்வரின் கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பெரவள்ளூரில் இருக்கிறது. நவம்பர் 16-ம் தேதி அன்று உடல்நலமின்றி நல்லம நாயுடு இறந்துபோக, அஞ்சலி செலுத்திய பிறகு அவரது உடலைச் சொந்த மாவட்டமான தேனிக்குக் கொண்டுசென்று அடக்கம் செய்தார்கள். இந்த நிலையில்தான், பூட்டியிருந்த வீட்டைச் சுத்தம் செய்ய, கடந்த வாரம் உறவினர்கள் சிலர் சென்றிருக்கிறார்கள். வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ந்தவர்கள், நல்லம நாயுடுவின் குடும்பத்தினருக்குத் தகவல் தெரிவித்திருக்கிறார்கள். பத்து பவுன் நகை, ஒரு லட்ச ரூபாய் பணம் திருட்டுப் போயிருந்தனவாம். நல்லம நாயுடு வாங்கிய மெடல்களும் களவாடப்பட்டதால், அவரின் மனைவி நொந்துவிட்டார். சாமி படத்துக்குப் பின்னால் வைத்திருந்த பீரோ சாவிகளை எடுத்து பீரோவைத் திறந்திருப்பதால், தெரிந்த நபர்கள்தான் இதைச் செய்திருக்க வேண்டும் என்று காவல் துறையினர் சந்தேகிக்கிறார்கள்.’’
‘‘சேலத்தில் தாண்டவமாடிவிட்டாராமே அந்த அமைச்சர்?”
அமைச்சர் நேருவின் ஆக்‌ஷனைப் பற்றித்தானே கேட்கிறீர்! சமீபத்தில் சேலத்துக்குச் சென்ற கட்சியின் முதன்மைச் செயலாளர் நேரு, ஒருங்கிணைந்த சேலம் மாவட்ட நிர்வாகிகளின் கூட்டத்தைக் கூட்டியிருக்கிறார். வீரபாண்டி ஆறுமுகம் மறைந்ததிலிருந்து பல காலமாகவே ஒருங்கிணைந்த சேலம் மாவட்ட தி.மு.க-வினர் எதிரும் புதிருமாகத்தான் இருக்கிறார்கள். மத்திய மாவட்டச் செயலாளர் வழக்கறிஞர் ராஜேந்திரன், மேற்கு மாவட்டப் பொறுப்பாளர் டி.எம்.செல்வகணபதி, வீரபாண்டி ஆறுமுகத்தின் வாரிசு பிரபு, வீரபாண்டி ஆறுமுகத்தின் உறவினர் பாரப்பட்டி சுரேஷ், வீரபாண்டி ஆறுமுகத்தின் குடும்பம் என இத்தனை கோஷ்டிகளும் ஆளுக்கொரு பக்கம் அரசியல் செய்துகொண்டிருந்தன. இவற்றையெல்லாம் சரிசெய்ய முதலில் செந்தில் பாலாஜிக்கு அசைன்மென்ட் கொடுக்கப்பட்டது. ஆனால், சமூகரீதியாக அவர்மீது சில விமர்சனங்கள் வரவே… சேலம் மாவட்டத்தை கவனிக்கும் பொறுப்பு நேருவிடம் ஒப்படைக்கப்பட்டது. டிசம்பர் 11-ம் தேதி ஸ்டாலின் சேலத்துக்குச் செல்லவிருக்கும் நிலையில்தான், சேலத்தில் கட்சியின் மூன்று மாவட்ட நிர்வாகிகளை அழைத்து லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கியிருக்கிறார் நேரு. அப்போது கூட்டத்தில் பலரும் தே.மு.தி.க-விலிருந்து தி.மு.க-வுக்கு வந்த சேலம் எம்.பி பார்த்திபன்தான் குழப்பத்துக்குக் காரணம் என்று சொல்லியிருக்கிறார்கள். கண்சிவந்த நேரு, பார்த்திபனையும் வறுத்தெடுத்துவிட்டாராம். ‘இனி தனித்தனி கூட்டங்கள் நடத்தக் கூடாது. ஒருங்கிணைந்த மாவட்டம்போலத்தான் செயல்பட வேண்டும்’ என்று எச்சரித்துவிட்டுக் கிளம்பியிருக்கிறார்’’ என்ற கழுகாருக்கு சூடான இஞ்சி டீயை நீட்டினோம். டீயைப் பருகியபடியே செய்திகளைத் தொடர்ந்தார் கழுகார்…
சென்னை அம்பத்தூரில் மூடிக்கிடக்கும் ஒரு நிறுவனத்தின் இடத்தை விற்றுக் கொடுக்க வட மாவட்ட அமைச்சர் தரப்பு மூவ் செய்துவருகிறது. அம்பத்தூர் காவல் நிலையம் அருகிலுள்ள கொன்னூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் அதற்கான வேலையை, அந்த அமைச்சரின் நிழலாக வலம்வரும் எம்.எல்.ஏ ஒருவர் செய்துவந்திருக்கிறார். இடத்தின்மீது ஏற்கெனவே வில்லங்கங்கள் இருந்ததால், பதிவுசெய்தால் சட்டச் சிக்கல்கள் வரும் என்று பதிவுத்துறை அதிகாரி தரப்பில் பின்வாங்கியிருக்கிறார்கள். இதையடுத்து, ‘இவர் இதுக்குச் சரிப்பட்டு வர மாட்டார்’ என்று நினைத்த அமைச்சர் தரப்பு, பதிவுசெய்ய மறுத்தவரை விடுப்பில் அனுப்பிவிட்டு இன்னொருவரைவைத்து பதிவுசெய்ய முயற்சி செய்திருக்கிறது. இந்த விஷயத்தை மோப்பம் பிடித்த அமைச்சரின் எதிர்த்தரப்பினர், சித்தரஞ்சன் சாலைக்குப் புகாரைத் தட்டிவிடவே விவகாரத்தைத் தற்காலிகமாக நிறுத்திவைத்திருக்கிறதாம் அமைச்சர் தரப்பு.”
“அடங்க மாட்டார்கள்போல… இருக்கட்டும், அதிகாரிகள் சிலர் புதிதேதான் வாங்க வேண்டும் என்று அடம்பிடிக்கிறார்களாமே?”
“கோட்டை தகவல்தானே… கலைவாணர் அரங்கத்தில் தி.மு.க அரசின் முதல் பட்ஜெட்டை பேப்பர் இல்லா இ-பட்ஜெட்டாகத் தாக்கல் செய்தார்கள் அல்லவா… இதற்காக எம்.எல்.ஏ-க்கள் பயன்பாட்டுக்கென கம்ப்யூட்டர் மானிட்டர்கள், டேப்கள் வாங்கப்பட்டன. தற்போது சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையிலேயே சட்டமன்றம் நடப்பதற்கான ஏற்பாடுகள் தடதடக்கின்றன. இங்கும் டிஜிட்டல் தொழில்நுட்பத்தைப் புகுத்த மீண்டும் கம்ப்யூட்டர் மானிட்டர்கள், டேப்கள் புதிதாக வாங்க பொதுத்துறை அதிகாரிகள் முடிவெடுத்திருக்கிறார்களாம். ‘ஏற்கெனவே வாங்கியதை ஏன் பயன்படுத்தக் கூடாது?’ என்று சில நேர்மையான அதிகாரிகள் கேள்வி எழுப்பியதற்கு, ‘அந்த டேப்களை எம்.எல்.ஏ-க்களின் சொந்தப் பயன்பாட்டுக்குக் கொடுத்துவிடலாம். மானிட்டர்களை வேறு துறைகளுக்கு அளித்துவிடலாம்’ என்று மழுப்பியிருக்கிறார்கள். இதையடுத்து, ‘கமிஷனுக்காக என்ன வேண்டுமென்றாலும் செய்வார்களா?’ என்று முணுமுணுக்கிறது கோட்டை வட்டாரம்.’’
‘‘ஆளும்தரப்பின் பெண் வாரிசுக்கு எதிராக வாள் சுழற்ற ஆரம்பித்திருக்கிறாரே தென் மாவட்டப் பெண் அமைச்சர்?”
‘‘ஆமாம். பெண் வாரிசும், தென் மாவட்ட பெண் அமைச்சரும் சகோதரிகள்போல நெருக்கமாகத்தான் பழகிவந்தார்கள். பலமுறை அந்த அமைச்சர் சர்ச்சைகளில் சிக்கியபோதெல்லாம், அவரைக் காப்பாற்றியது வாரிசுதான். இந்த நிலையில் யார் கண்பட்டதோ தெரியவில்லை… வாரிசுக்கு எதிராக வாள் சுழற்றியிருக்கிறார் அமைச்சர். ‘மேடம் என்னைச் செயல்படவிடுவதில்லை. கட்சி விவகாரம் முதல் நிர்வாகம் வரை தலையிடுகிறார்’ என்று முதல்வர் ஸ்டாலினிடமே புகார் வாசித்திருக்கிறாராம் பெண் அமைச்சர். சபரீசன் மூலம் இதைக் கேள்விப்பட்டபோதும், பெண் வாரிசு அலட்டிக்கொள்ளவில்லையாம்!”
‘‘அது சரி, முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பெயரையே அகற்றிவிட்டார்களே?”
‘‘அதுவா..? ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் தஞ்சாவூரில் கட்டப்பட்ட பேருந்து நிலையம், வணிக வளாகத்தை முதலமைச்சர் ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் டிசம்பர் 8-ம் தேதி திறந்துவைத்தார். வணிக வளாகத்துக்கு ‘முத்துவேல் கருணாநிதி’ என்று பெயரிட்டு, பெயர்ப் பலகையும் வைத்தனர். ஆனால், அ.தி.மு.க-வினர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து சமூக வலைதளங்களில் பதிவிடவே… சில மணி நேரங்களில் அந்தப் பெயர்ப்பலகை அகற்றப்பட்டது. ‘மாநகராட்சி சார்பில் தீர்மானம் நிறைவேற்றாமல் கருணாநிதி பெயரைவைக்க தி.மு.க-வினர் ஏற்பாடு செய்ததாலேயே அகற்றப்பட்டது’ என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கிறார்கள். அதேசமயம், ‘அ.தி.மு.க ஆட்சியில் கொண்டுவரப்பட்டு, 90 சதவிகிதப் பணிகள் முடிக்கப்பட்ட திட்டத்துக்கு திறப்புவிழா மட்டும் செய்துவிட்டு, கருணாநிதியின் பெயரை வைக்கலாமா?’ என்று அ.தி.மு.க-வினர் கொந்தளிக்கிறார்கள்’’ என்றபடியே சிறகுகளை விரித்தார் கழுகார்.

%d bloggers like this: