ஆளுநரிடம் அண்ணாமலை கொடுத்த ஃபைல்! – டென்ஷனில் அறிவாலயம்…

கையில் ஃபைலுடன் என்ட்ரி கொடுத்த கழுகார், ‘‘ஆளுநர் மாளிகைக்கு அண்ணாமலை சென்றபோது கையில் கொண்டு சென்ற ஃபைல் விவகாரம் குறித்த தகவல்கள் இப்போது கசியத் தொடங்கியிருக்கின்றன. அது தொடர்பாக சோர்ஸ் ஒருவர் கொடுத்த ஃபைல் இது’’ என்று ஃபைலைப் புரட்டியபடியே உரையாடலைத் தொடங்கினார்…
‘‘ஆளுநர் சந்திப்புக்கு முன்னரே அண்ணாமலை, ‘பா.ஜ.க ஆதரவாளர்களைத் தமிழக அரசு குறிவைத்துக் கைதுசெய்கிறது’ என்று எதிர்ப்பு தெரிவித்திருந்தார். மத்திய அரசையும், பிரதமர் மோடியையும் சமூக

வலைதளங்களில் தி.மு.க ஆதரவாளர்கள் விமர்சிப்பதைச் சுட்டிக்காட்டி, ‘17 மாநிலங்களில் எங்கள் ஆட்சி நடக்கிறது. இவர்கள்மீது நடவடிக்கை எடுக்காவிட்டால், நாங்கள் நடவடிக்கை எடுப்போம்’ என்று அவர் சொன்னது ஆளும் தரப்பைச் சூடாக்கியுள்ளது. இந்த நிலையில்தான், ஆளுநரைச் சந்திக்க அண்ணாமலை நேரம் கேட்க, உடனடியாக அனுமதியும் வழங்கப்பட்டது. தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகு பா.ஜ.க-வுக்கு ஆதரவான 22 பேர்மீது வழக்கு தொடரப்பட்டதையும், அந்த வழக்குகளுக்கான காரணங்களையும் ஆளுநரிடம் விளக்கியிருக்கிறார் அண்ணாமலை. கூடவே, பிரதமரையும், மத்திய அரசையும் விமர்சித்து சமூக வலைதளங்களில் பதிவிட்ட 300 நபர்கள் குறித்த விவரங்கள் அடங்கிய ஃபைலை ஆளுநரிடம் கொடுத்து, ‘இவர்கள்மீது தி.மு.க அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை’ என்பதைச் சுட்டிக்காட்டியிருக்கிறார்.’’
‘‘முக்கியமான ஃபைல் விவகாரத்துக்கு இன்னும் வரவில்லையே?’’
“வருகிறேன்… இந்தப் பேச்சுவார்த்தைகள் முடிந்ததும், அண்ணாமலை தனியாக வைத்திருந்த ஒரு ஃபைலை ஆளுநரிடம் கொடுத்திருக்கிறார். ‘ஆளுநரிடம் தனியாகப் பேச வேண்டும்’ என்று அண்ணாமலை சொல்ல… உடன் சென்ற பா.ஜ.க நிர்வாகிகள் கரு.நாகராஜன், கராத்தே தியாகராஜன் உள்ளிட்டவர்கள் வெளியே வந்துவிட்டார்கள். அண்ணாமலையும் ஆளுநரும் மட்டும் அரை மணி நேரம் தனியாக அந்த ஃபைலைவைத்து ஆலோசனை நடத்தியுள்ளார்கள். அந்த ஃபைலில் தமிழக அமைச்சர்கள் நான்கு பற்றிய ஆவணங்கள் இருந்துள்ளன என்கிறார்கள். சி.பி.ஐ தரப்பிலிருந்து சமீபத்தில் உதயநிதி குறித்த ஒரு விவகாரத்தை விசாரித்திருக்கிறார்கள். அது தொடர்பான ஆவணத்தையும் ஆளுநரிடம் அண்ணாமலை கொடுத்துவிட்டு வந்திருக்கிறாராம். இந்தத் தகவல் தி.மு.க தரப்புக்கு லீக்கானதும் ஏக டென்ஷனில் இருக்கிறது அறிவாலயம். பா.ஜ.க தரப்பிலோ, ‘கூடிய சீக்கிரம் சி.பி.ஐ வளையத்துக்குள் முக்கியப்புள்ளி வருவார்’ என்கிறார்கள்.’’
‘‘ஆனால், டெல்லி நிலைமை வேறு மாதிரியாக அல்லவா இருக்கிறது?’’
‘‘ஆமாம். தி.மு.க எம்.பி-க்கள், மத்தியில் ஆளும் தரப்போடு நட்புடன் இருக்கிறார்கள். சமீபத்தில்கூட பிரதமரைச் சில தி.மு.க எம்.பி-க்கள் சந்தித்துப் பேசியிருக்கிறார்கள். டி.ஆர்.பாலு உள்ளிட்ட சில மூத்த எம்.பி-க்கள் நிர்மலா சீதாராமன், அமித் ஷா உள்ளிட்டவர்களை நாடாளுமன்ற அலுவலகத்தில் சந்தித்துப்

பேசியிருக்கிறார்கள். கேட்டால், ‘மாநில அரசியல் வேறு… டெல்லி அரசியல் வேறு… ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என்ற பாகுபாடு பார்க்காமல் பழகுவதுதான் டெல்லி ஸ்டைல்’ என்கிறார்கள்.’’

‘‘அது சரி, சட்டமன்றக் கூட்டத்தொடர் அறிவிப்பு வந்துவிட்டதே?’’

‘‘வரும் ஜனவரி 5-ம் தேதி பழையபடி சென்னை ஜார்ஜ் கோட்டையிலேயே சட்டமன்றக்

கூட்டத்தொடர் தொடங்குகிறது.இதை நேரடி ஒளிபரப்பு செய்யும் முடிவில் தமிழக அரசு இருக்கிறது. ஒரு வாரம் வரை கூட்டத்தை நடத்திவிட்டு, பொங்கலுக்கு முன்பாக நிறைவு செய்யத் திட்டமிட்டுள்ளனர். குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1,000 ரூபாய் வழங்கும் திட்டம் அநேகமாக வரும் கூட்டத்தொடரில் அறிவிக்கப்படலாம். அதற்கு முன்பாக தி.மு.க நிர்வாகிகள் கூட்டம் டிசம்பர் 18-ம் தேதி சென்னையில் நடக்கவிருக்கிறது. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் குறித்த ஆலோசனைக்காகக் கூட்டப்பட்டுள்ள அந்தக் கூட்டத்தில், ஒவ்வொரு மாவட்டத்திலும் அந்தந்த மாவட்டப் பொறுப்பாளர்களே கூட்டணிக் கட்சிகளுக்கான இடங்களை முடிவு செய்துகொள்ளலாம் என்கிற அறிவிப்பு வெளியாகலாம். தி.மு.க வேட்பாளர்கள் தேர்வு பற்றியும் ஆலோசனை நடக்கவிருக்கிறது” என்ற கழுகாருக்கு சூடாக இஞ்சி டீயை நீட்டினோம். ரசித்துச் சுவைத்தபடி செய்திகளைத் தொடர்ந்தார் கழுகார்…
ஸ்டாலினின் மருமகன் சபரீசன் பெயரைச் சொல்லி, ‘வாரியப் பதவிகளை வாங்கித் தருகிறேன்’ என்று வலைவீசிவருகிறார் ஒருவர். கடந்த ஆட்சியில் ஆளும் தரப்பினர் சிலருக்கு நெருக்கமாகச் செயல்பட்டு பல்கலைக்கழக வட்டாரத்தில் பல கோடியை ஏப்பமிட்ட இந்த ‘விசுவாச’ நபர், இந்த ஆட்சியிலும் மாப்பிள்ளையின் பெயரைச் சொல்லி வலைவீசும் விவகாரம் முதல்வர் வீடு வரை செல்ல… கண் சிவந்துவிட்டாராம் மருமகன். ஏற்கெனவே இந்த நபர், சுத்தமான துறையை கவனித்த மாஜி அமைச்சரின் உதவியாளரோடு சேர்ந்து டெண்டரில் அள்ளிக்குவித்த கதையை முதல்வர் காதுகளுக்குக் கொண்டுசென்றுள்ளது ஒரு டீம். விரைவில் இந்த விவகாரம் வெடிக்குமாம்.’’
‘‘ம்க்கும்… இதுவரை ஒரு வெடியும் வெடித்ததாகத் தெரியவில்லை. அது சரி, ஆளும் தரப்பில் மூத்தவர்கள் இருவரின் பஞ்சாயத்து ஓயாதுபோலிருக்கிறதே!”
துரைமுருகனுக்கும் எ.வ.வேலுவுக்கும் இடையே நடக்கும் ஈகோ உரசலைத்தானே சொல்கிறீர்கள்? தனது மாவட்டத்துக்குள் தலையிடுவதாக எ.வ.வேலு மீது ஏற்கெனவே கோபத்தில் இருக்கிறார் துரைமுருகன். இந்த நிலையில், துரைமுருகன் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் திருப்பத்தூர் மாவட்ட தி.மு.க நிர்வாகிகளிடம், ‘என்னைக் கேட்காமல் கட்சியில் எதுவும் செய்யக் கூடாது’ என்று சொல்லியிருக்கிறாராம் வேலு. இந்தத் தகவல் துரைமுருகன் தரப்புக்குச் செல்ல… வேலுவிடம் தனது வழக்கமான பாணியில் நக்கலாக மகாபாரதக் கதையைச் சொல்லி, மறைமுகமாக எச்சரித்தாராம் துரைமுருகன். இந்த ஈகோ உரசல் எங்கு சென்று முடியுமோ என்று கவலைப்படுகிறார்கள் கட்சி நிர்வாகிகள்!’
‘‘தமிழ்த்தாய் வாழ்த்தை தூக்கிப் பிடித்திருக்கிறாரே மதுரை ஆதீனம்?”
‘‘ஆமாம். திருப்பரங்குன்றத்தில் நடந்த தமிழ்ச் சங்க மாநாட்டில் பேசிய மதுரை ஆதீனம் ஹரிஹர ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், ‘தமிழ்த்தாய் வாழ்த்து பாடும்போது எழுந்து நிற்க வேண்டும் என சட்டரீதியான உத்தரவு இல்லை என்று உயர் நீதிமன்றம் கூறியுள்ளது. ஆனால், நான் எழுந்து நிற்பேன்’ என்று தடாலடியாகப் பேசினார். சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட காஞ்சி சங்கராச்சாரியார் விஜயேந்திரர், தமிழ்த்தாய் வாழ்த்து ஒலித்தபோது எழுந்து நிற்கவில்லை. அவர் தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதித்துவிட்டார் என்று விவகாரம் நீதிமன்றம் வரை சென்றது. உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி, ‘தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்து நிற்க வேண்டும் என நிர்வாகரீதியாகவோ, சட்டரீதியாகவோ உத்தரவு எதுவும் இல்லை’ என்று சொல்லியிருந்தார். இந்த நிலையில்தான், சங்கர மடத்துக்குச் சங்கடம் வருவதுபோல மதுரை ஆதீனம் பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது’’ என்றபடி சிறகுகளை விரித்தார் கழுகார்.

%d bloggers like this: