வருமான வரிக்கு மாற்றாக செலவு வரி அமலாகிறதா!

வருமான வரி ரத்து’ என்கிற அரசல், புரசல் செய்திகள், அவ்வப்போது விவாதப் பொருளாகவும், பேசுபொருளாகவும் இருப்பதை, சில ஆண்டுகளாக பார்க்கிறோம். மத்திய பட்ஜெட் பிப்., 1ல் தாக்கலாக உள்ள நிலையில், ‘செலவு வரி அறிமுகப்படுத்தப்பட்டு, வருமான வரி நீக்கப்படலாம்’ என்ற ஊடக யூகங்கள் வலம் வருகின்றன.
‘இனி, வருமான வரி இல்லை’ என்ற அறிவிப்பு மத்திய

அரசிடமிருந்து வந்தால், பொதுமக்கள் தெருவில் பட்டாசு வெடித்து கொண்டாடுவர் என, பொருளாதார நிபுணர் ஒருவர் கூறியது தான் நினைவுக்கு வருகிறது. இந்தியாவின் ஆண்டு மொத்த வரி வருவாயில், 54 சதவீத வருவாய் ஈட்டித்தரும் வருமான வரியை ரத்து செய்வது சாத்தியமா என்ற கேள்வி எழுகிறது அரசை நடத்துவதில் பெரும்பங்கு வகிப்பது வரி வருவாய். கடந்த, 2020- – 21ம் ஆண்டில், மொத்த வரி வருவாயான 24.2 லட்சம் கோடி ரூபாயில், கார்ப்பரேட் வரியாக, 6.80 லட்சம் கோடியும், மற்ற நேரடி வருவாயாக, 6.38 லட்சம் கோடி ரூபாயும் வசூலாகிஉள்ளது. இன்றளவில் 6.4 கோடி பேர் வருமான வரி செலுத்துபவர்களாக இருந்து வருகின்றனர்.

உலக நாடுகளில் எப்படி?

சர்வதேச அளவில், வளர்ந்த நாடுகள், வளரும் நாடுகள், ஏழை நாடுகள் என்ற பாகுபாடின்றி, 95 சதவீத நாடுகளில் வருமான வரி என்பது இன்றும் உள்ளது. எண்ணெய் வளம் மிக்க வளைகுடா நாடுகள் மற்றும், ‘வரி சொர்க்க நாடுகள்’ என்றழைக்கப்படும் சைப்ரஸ், கேமன் தீவு, மொரீசியஸ், பகாமா, மால்டா போன்ற இயற்கை வளம்மிக்க குறு நாடுகளில் தான், வருமானவரி நடைமுறையில் இல்லை.
வரி சொர்க்க நாடுகளின் பிராதன வருமானம், அந்நாடுகளில் நிறுவப்படும் கம்பெனிகளின் சேவை கட்டணம் மற்றும் பரிவர்த்தனை கட்டணங்களே. ஏனைய அனைத்து பெரிய பொருளாதார நாடுகளிலும், வருமான வரி என்பது அமலில் உள்ளது. செலவு வரிசெலவு வரி அறிமுகப்படுத்தலாம் என்கிற ஒரு சாரார், வருமான வரிக்கு மாற்று ஏற்பாடாக பொதுமக்களின் வங்கி பரிவர்த்தனைகள் மீது, ஒரு சதவீத வரி விதிப்பு செய்யலாம் என்ற உத்தியை தருகின்றனர்.
இதனால், மத்திய அரசுக்கு ஆண்டுக்கு 15 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் வரி வருவாய் வரும் என கணக்கிடப்படுகிறது. இது, வருமான வரியிலிருந்து கிடைக்கும் வருவாயை விட மிக அதிகம்.வருமான வரி என்பது, முற்போக்கான வரிவிதிப்பு. அதாவது, அதிக வருமானம் ஈட்டுபவர்கள் அதிக வரியும், குறைந்த வருமானம் சம்பாதிப்பவர்கள் குறைந்த வரியும் செலுத்த வேண்டும். தற்போதைய 10, 20 மற்றும் 30 சதவீத வரியும் அதற்கு மேல் செலுத்தப்படும் உபரி வரியையும் உதாரணமாக சொல்லலாம். ஆனால், மறைமுக வரி என்பது அம்பானி, அதானி முதல் ஆட்டோ டிரைவர் வரை செலுத்தும் வரி விகிதம் ஒன்று தான்.

வாய்ப்பிருக்கிறதா?

பெரும்பான்மையான உலக நாடுகளில், இரு ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக, நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியான ஜி.டி.பி.,யானது, தொகை அளவில், 10 முதல் 20 சதவீதம் வரை ஸ்டிமுலஸ் என்ற துாண்டுதல் தொகுப்பாக கொடுக்கப்பட்டுள்ளது. இது ஒரு விதமான பணவீக்கத்தை அதிக நாடுகளில் ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சூழ்நிலையில், வருமான வரிக்கு பதிலாக செலவு வரி அறிமுகம் செய்தால், நாட்டுக்கு பலன் அளிக்கும் என்ற சிந்தனையும் இருக்கிறது. வருமான வரி என்பதில், தனி நபர் வரி, கார்ப்பரேட் வருமான வரி அடங்கும். தனி நபர் வரி மட்டும் ரத்தாகலாம் என்றும் கூறப்படுகிறது.
வரவேற்பரா?
தாங்கள் சுயமாக சம்பாத்தித்த பணத்துக்கு, வருமான வரி செலுத்துவதை, பெரும்பான்மை மக்கள் முழு மன

மன நிறைவோடு செய்வதில்லை. வருமான வரி ரத்து என்ற அறிவிப்பு, வரி செலுத்த வேண்டியது இல்லை என்பது தவிர, வரித்துறையில் இருந்து பெறப்படும் நோட்டீஸ், செலுத்திய வரியை ரீபண்டாக பெறுவதில் தாமதம். புதிய ‘ஆன்லைன்’வரித்தளத்தில் திண்டாட்டங்கள், அப்பீல் இதற்கு மேலாக முகமற்ற வரி மதிப்பீடு போன்ற சிரமங்களிலிருந்து விடுதலை போன்ற காரணங்களால், பெரும் வரவேற்பு கிடைக்கும்.
இது தவிர, வருமான வரி ரத்து என்ற சூழலில், கணக்கில் காட்டப்படாத கறுப்புப்பணம் அல்லது கருப்பு சொத்து என்று இருக்காது. இதனால், வங்கிகள், நிதி அமைப்புகள், பங்கு சந்தைகளில் அதிக அளவு முதலீடுகள் நடக்கும்.இது, நாட்டின் வளர்ச்சிக்கு குறுகிய காலத்துக்கு அதிக அளவு உதவும். வருமான வரி இல்லாத நிலையில், கம்பெனிகளின் அசையாச் சொத்துக்கள் மார்க்கெட் விலைக்கு கொண்டு வரப்பட்டு பங்கு விலைகள் உயர்ந்து, பங்குதாரர்கள் உடனடி பலனைக் காணும் நிலையும் ஏற்படும்.

சவால்கள் என்ன?

வருமான வரி என்பது, வரி வருவாய் மட்டுமல்லாமல், இந்தியாவில் மற்ற தீய நோக்கங்களையும் கட்டுப்படுத்துகிறது. உதாரணமாக, பயங்கரவாதிகள், தேச விரோத சக்திகள் பணப்பரிமாற்றங்களை கண்காணித்து தேசப்பாதுகாப்பிற்கும் வரித்துறை முக்கிய அங்கம் வகிக்கிறது.

பினாமி சட்டம், பணச்சலவை சட்டம், அன்னிய செலாவணி சட்டம் ஆகிய சட்டங்களுக்கு வருமான வரி சட்டம் ஓர் ஆணிச்சக்கரம் போல செயல்பட்டு வருகிறது. இதற்கு மாற்றுத்திட்டம் என்னவாக இருக்கும் என்பதை கவனிப்பது அவசியம். மேலும், தற்போது விவசாயிகளுக்கு வருமான வரி கிடையாது. ஆனால், செலவு வரி என்று கணக்கிட்டால், நாட்டின் முதுகெலும்பான விவசாயத்தை காக்கும் விவசாயிகளும், செலவு வரி செலுத்த வேண்டி வரலாம்.
தற்போது குறிப்பிட்ட பிரிவில், பதிவு பெற்ற அறக்கட்டளைகளுக்கு வருமான வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.அறக்கட்டளைகளும் செலவு வரி செலுத்த வேண்டி வரும். ஏற்றுமதி நிறுவனங்களுக்கும் செலவு வரி காரணமாக பாதிப்பு இருக்கும். இதுதவிர நஷ்டத்தில் இயங்கும் நிறுவனங்களும், ‘ஸ்டார்ட்- அப்’ நிறுவனங்களுக்கும் ஏற்படும் செலவுகளுக்கு வரிச்சுமை ஏற்படலாம்.
மேலும் வருமான வரி சட்டப்படி, குறிப்பிட்ட அளவுக்கு மேல் ரொக்கமாக கொள்முதல், செலவு அல்லது கடனாக பெற, தருவதற்கு அனுமதிக்கப்படுதில்லை. வருமான வரி ரத்து செய்யப்பட்டால் பணப்பரிவர்த்தனை, வங்கி வாயிலாக செயல்படுத்துவது எப்படி என்பது கேள்விக்குறியே.
தவிர, புழக்கத்தில் இருக்கக்கூடிய கரன்சி நோட்டுக்களை வங்கி வாயிலாக தான் பரிவர்த்தனை செய்ய வேண்டும் என்ற நிர்பந்தத்தை அரசு செய்ய முடியாது. இவையெல்லாம் செலவு வரி என்று ஒன்று அறிமுகம் செய்தால் காத்திருக்கும் சவால்கள். அதீத தைரியத்துடன், அதிரடி சீர்த்திருத்தங்களை அறிமுகம் செய்யும் மோடி அரசு, வருமான வரி ரத்து குறித்து என்ன செய்யப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
ஆடிட்டர்
ஜி .கார்த்திகேயன்

%d bloggers like this: